ஞாயிறு, அக்டோபர் 23, 2011

எனக்கும், சென்னைக்குமான தொடர்பு...

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி. அனைவரும் புது துணி, பட்டாசு, ஏழாம் அறிவு படத்தின் முன்பதிவு டிக்கெட் என்று பிஸியாக இருப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு 'எங்கேயும் எப்போதும்' படத்தை பார்த்தேன். படத்தை விட, நான் பிறந்து வளர்ந்த சென்னையை பார்த்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.


இப்போதெல்லாம் 'எப்படா நாம ஊருக்கு போவோம்?' என்று அடிக்கடி தோன்றுகிறது. காரணம், இன்னும் இரண்டு மாதங்களில் சென்னைக்கு செல்கிறேன். எதற்கு என்றால், அதை கடைசியில் சொல்கிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தான் நான் உகாண்டாவிற்கு வந்தேன். இந்த தீபாவளிக்கு நான் சென்னையில் இல்லாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. என்ன பண்றது?

இந்த இரண்டு வருடங்கள் சென்னையை ரொம்பவே மிஸ் செய்திருக்கிறேன். உண்மையில் நான் சென்னையில் நிறைய இடங்களுக்கு போனது இல்லை. ஆனால் சென்னை, Something Special. பொதுவாகவே 'அனுபவப் பாடம்' என்று ஒரு வார்த்தை சொல்லுவார்கள். அதை எனக்கு 'பளார்' என்று என் தவடையில் அடித்து சொல்லிக் கொடுத்தது சென்னை தான்.
நான் படித்தது B.B.A. ஆனால் 'இந்த படிப்புக்கு கூட நல்ல வேலை கிடைக்கும், ட்ரை பண்ணு' என்று எனக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்தது இந்த சென்னை. 'மனிதர்கள் பல விதம்' என்று எனக்கு பலரின் முகத்திரையை கிழித்துக் காட்டியது இந்த சென்னை தான்.

நான் பிறந்தது சென்னை KMC மருத்துவமனையில். பத்தாவது வரை படித்தது சென்னையில். பின்பு +1, +2 படித்தது திருத்தணியில். அங்கே நான் வேகமாக பிரபலமானது 'சென்னை' என்ற நகரத்தால் தான். பின்பு கல்லூரிப் படிப்பு சென்னை, முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில். கல்லூரிப் படிப்பு முடிந்து இரண்டரை வருடங்கள் சென்னையில் தான் வேலை செய்தேன்.

எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டம் கிடையாது. அதனால் ஊர் சுற்றுவது என்பது என் அகராதியிலேயே இல்லை என்று சொல்லலாம். இதனால் 'வேலை விட்டால் வீடு' என்று தான் இருந்தேன். 'கொஞ்சமாச்சும் வீட்டை விட்டு வெளியே போயிட்டு வாடா, அப்பத்தான் நாலு விஷயம் தெரிய வரும்' என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.
ஆனால் எனக்கு பெரிதாக நண்பர்கள் இல்லாததால் அவ்வளவாக வெளியே செல்ல மாட்டேன். பொறுத்துப் பொறுத்து பார்த்த என் தந்தை ஒரு நாள், 'உனக்கு கண்டிப்பா ஊரை சுத்துற மாதிரி தான் வேலை கிடைக்கும் பாரு' என்று கோபமாக சாபமிட்டார். அவரிட்ட சாபம் போலவே எனக்கு கிடைத்த வேலை, Medical Executive வேலை.

பொதுவாகவே நான் ஒரு தனிமை விரும்பி. அவ்வளவு சீக்கிரம் நான் யாரிடமும் பழகிட மாட்டேன். இன்றும் அப்படித்தான். ஆனால் இந்த பழக்கத்தை அடியோடு மாற்றியது இந்த மார்க்கெட்டிங் வேலை தான். மார்க்கெட்டிங் வேலைக்கு சேரும் முன்பு எனக்கு நன்றாக தெரிந்த ஏரியாக்கள் மூன்று தான்.

ஒன்று நான் வசிக்கும் வில்லிவாக்கம், மற்றொன்று முகப்பேர், கடைசியாக அமைந்தகரை. அவ்வளவு தான் எனக்கு தெரிந்த இடங்கள். ஆனால் மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்த பிறகு சென்னையின் மொத்த இடத்தையும் நன்றாக தெரிந்து கொண்டேன். திருவோற்றியுரிலிருந்து தாம்பரம் வரை நான் சுத்தாத இடமே இல்லை என்று சொல்லலாம்.
சென்னையில் நான் மார்க்கெட்டிங் வேலை செய்யும்போது மதியம் சாப்பாடு என்பது ரொம்ப அரிது. கையில் காசிருக்காது, அப்படியே இருந்தாலும் அதை பெட்ரோலுக்கு வைத்துக் கொண்டு ஒரு டீ அடித்துவிட்டு என் பசியை ஆற்றிக் கொள்வேன்.

காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை கூட வேலை செய்திருக்கிறேன். ஆனால் வருமானம் ஒன்றாம் தேதியிலிருந்து பத்தாம் தேதி வரைக்கும் கூட வராது. பல சமயங்களில் எனக்கு சம்பளம் கூட சரியாக வராது. பெட்ரோல் போட காசில்லாமல் பாதி வழியிலேயே வண்டி நின்று போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

'காலம் மனிதனை பக்குவப்படுத்தும்' என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரை காலம் மட்டுமல்ல, அவன் வாழும் இடமும் அவனை பக்குவப்படுத்தும் என்று சொல்வேன். அந்த வகையில் சென்னை என்னை பக்குவப்படுத்தியது மட்டுமல்ல, சமுகத்தில் புத்திசாலித்தனமாகவும் பிழைக்க கற்றுத் தந்தது.
'என்னடா இவன் ரொம்ப பேசுறானே, சென்னையில இவன் எத்தனை வருஷம் வேலை பார்த்தான்?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் சென்னையில் வேலை பார்த்தது வெறும் மூன்று வருடங்கள் தான். ஆனால் அதில் நான் கற்றுக் கொண்ட படிப்பினைகள் நிறைய.

என்னைப் போன்ற வெளிநாட்டில் வேலைக்கு வருபவர்களுக்கும், வேடந்தாங்கல் வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கும் மத்தியில் இரண்டு வித்தியாசங்கள் இருக்கிறது. அங்கே பறவைகள் வருவது 'இன' விருத்திக்காக. இங்கே நங்கள் வருவது 'பண' விருத்திக்காக. அவைகள் குடும்பத்தோடு வரும். நாங்கள் எங்கள் குடும்பத்தை விட்டு வருகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

சரி. சென்னைக்கு எதற்காக வருகிறேன் என்பதை கடைசியில் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதை க்ளுவாக தருகிறேன். அது என்னன்னா, 'ஒரு ஆட்டை மஞ்சள் நீர் தெளித்து, மாலையிட்டு பலி கொடுக்கப் போகிறார்கள்'. முடிந்தால் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

13 கருத்துகள்:

  1. என்ன தலீவா, இது கூட தெர்யாது...அதான் கண்ணாலம்-பா...அந்த பொண்ணு வந்தாதான் உனக்கு பொயப்பே...அதால ஆடு, பலி-னு உதார் விட்டுகினு திரியாத...என்னா?!

    பதிலளிநீக்கு
  2. அடடா உங்கள கிணத்தில தள்ளப் போறாங்களா?...
    வாழ்த்துக்கள் .இப்பவே நீந்தக் கத்துக்கோங்க சகோ .
    ஹா ..ஹா ..ஹா ...
    மிக்க நன்றி உங்க உனுபவப் பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  3. ///என்னைப் போன்ற வெளிநாட்டில் வேலைக்கு வருபவர்களுக்கும், வேடந்தாங்கல் வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கும் மத்தியில் இரண்டு வித்தியாசங்கள் இருக்கிறது. அங்கே பறவைகள் வருவது 'இன' விருத்திக்காக. இங்கே நங்கள் வருவது 'பண' விருத்திக்காக. அவைகள் குடும்பத்தோடு வரும். நாங்கள் எங்கள் குடும்பத்தை விட்டு வருகிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்///

    உண்மைதான்... இந்தப் பதிவு எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு.. அழகாக உங்கள் கதையை சொல்லி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. (திருமண) வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. முதலில் வாழ்த்துக்களை புடிங்க, நீங்களும் நம்ம ஜாதியில வந்து சேரப்போறீங்க அதாவது புருஷன்னு ப்ரமோஷன் வாங்க போறீங்க.
    நீங்க சொன்னது எல்லாம் எல்லோருக்கும் நடக்கும், உங்கள் பதிவு என்னை 10 வருடங்கள் பின் இழுத்துச்சென்றது..

    பதிலளிநீக்கு
  6. நல்ல விடயத்தை நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்துள்ளீர்கள்.
    ஊரில் தீபாவளிக்கு ஆடுக்கறி என்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. உண்மையில் மார்க்கெட்டிங்க தொழில் தான் ஒருத்தனை அதிகம் ஊர் சுற்ற வைக்கும் நானும் அந்தத் துறையில் இருந்ததால் அதிகம் பிடிக்கும். உங்கள் பயணங்களை அனுபவப் பதிவாக தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா.

    பதிலளிநீக்கு
  8. உகாண்டா பற்றியும் நல்ல விடயங்களை பகிருங்கள் உல்லாசப்பிரியர்களுக்கு பார்க்க வேண்டிய இடங்கள் என பலதைச் சொல்லுங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  9. பலியாட்டுக்கு வாழ்த்துக்கள் :-))

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா24 அக்டோபர், 2011 19:32

    இங்க கல்யாணம் கட்டிகிறத்துக்கு இடி அமீன் குடும்பத்துல போய் பொண்ணு எடுத்துக்கலாம்

    பதிலளிநீக்கு