கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், பிப்ரவரி 17, 2016

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...


ஒரு சிறந்த நடிகனின் தேர்ந்த நடிப்பு என்பதற்கான அர்த்தம் என்ன? சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு சில உன்னத மனிதர்களை காலம் அதிக நாள் விட்டு வைக்காது. அப்படி காலமான அந்த உத்தமர்களை, நம்முன் திரும்பவும் ரத்தமும், சதையுமாக உலாவவிடுபவர்கள் திரைத்துறையினர் தான். அதிலும் நடிகர்கள் நடிக்கும் அந்த நடிப்பு தான் மக்கள் மனதில் 'ஒரு வேளை அந்த உத்தம மனிதர்கள் இப்போது வாழ்திருந்தால் இப்படித்தான் பேசியிருப்பார்கள், இப்படித்தான் எதிரிகளை எதிர்த்திருப்பார்கள், இப்படித்தான் வீரமரணம் அடையும் முன் ஒரு எழுச்சிமிகு வீர உரையை ஆற்றியிருப்பார்கள்' என்ற எண்ணம் கொள்வர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் என்று உலகமே ஏற்றுக்கொள்ளப்பட்டவர் தான் நம் பெருமைமிகு அமரர். சிவாஜி கணேசன் அவர்கள். அவர் நடித்த கதாபாத்திரங்களான சிவபெருமான், வ.உ.சி, கர்ணன் போன்ற பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், தமிழர்களின் முதல் விடுதலை போர்வீரர் என்ற பெயர் பெற்றவரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடம் காலத்தால் மறக்க முடியாததும், காலம் கடந்த நிற்கக்கூடியதும் கூட. இது போன்ற சரித்திரப் படங்களை விமர்சனம் செய்ய என் மனம் ஒத்துக்கொள்ளாது. காரணம், நான் திரைப்படத்தை விமர்சனம் செய்வதாக எண்ணமாட்டேன். சரித்திரத்தையே விமர்சனம் செய்வதாகவே எண்ணுவேன். இந்த பதிவை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன சவால். உங்களால் கண்டிப்பாக சிவாஜி அளவிற்கு நடிக்க முடியாது. அது உங்களுக்கே தெரியும். குறைந்த பட்சம், அவர் பேசிய வசனங்களையாவது மனப்பாடம் செய்து பேசிப்பாருங்கள். எந்தளவுக்கு நாம் நம் மொழியை மறந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கே புரியும்...காட்சி: ஆங்கிலேய அரசுக்கு கட்டவேண்டிய வரி தொடர்பாக ஜாக்சன் துரையும், வீரபாண்டியனும் காரசாரமாக வார்த்தை மோதல் வசனங்கள்
கதாபாத்திரங்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஜாக்சன் துரை
இடம்: ராமநாதபுரம்

ஜாக்சன் துரை: ம், நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?
வீரபாண்டிய கட்டபொம்மன்: நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?
ஜாக்சன் துரை: ஏது, வெகுதூரம் வந்துவிட்டீர்?
வீரபாண்டிய கட்டபொம்மன்: நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன். அதே விரும்பி நானும் வந்துள்ளேன்.
ஜாக்சன் துரை: நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: கற்றுக்கொடுக்கும் இடம் தமிழ் இனம். நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவியினம்.
ஜாக்சன் துரை: நவாபிடமிருந்து நாட்டுரிமை பெற்றிருப்பது நாங்கள். நீயாக ஏன் பேட்டி காண வரவில்லை?
வீரபாண்டிய கட்டபொம்மன்: ஹா...! ஹா...! பேட்டி கொடுப்பவர் நாங்கள். இல்லாவிட்டால் நீ இந்த நாட்டுக்குள்ளே நுழைந்திருக்க முடியாது.
ஜாக்சன் துரை: இறுமாப்பு இன்னும் ஒழியவில்லை உன்னிடம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: எல்லாம் உடன்பிறந்தவை, ஒழியாது.
ஜாக்சன் துரை: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: என்னவென்று?
ஜாக்சன் துரை: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.
வீரபாண்டிய கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்.
ஜாக்சன் துரை: எனக்கா எண்ணிக்கை தெரியாது? அகம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை. எங்கள் பேரரசுக்கு கீழரசாய் இருக்க திறைப்பணம் செலுத்தவில்லை. வெகுகாலமாக வரிப்பணம் வந்து சேரவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன்: ஹா ஹா ஹா ஹா. கிஸ்தி, திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் களையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்க்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை.
ஜாக்சன் துரை: Shut up. அதிகார முத்திரையிட்டு உன்னை கையோடு அழைத்து வர ஆள் அனுப்பினேனே?

வீரபாண்டிய கட்டபொம்மன்: அப்படியா? ஹா...ஹா...ஹா...ஹா... பலே, நீ அனுப்பிய ஆள் மிகவும் புத்திசாலி. என்னை அழைத்து வரும் நோக்கத்தோடு எவனும் தலைகாட்டியதில்லை அந்தப்பக்கம். எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன். ஆனால், இது போன்ற ஒரு கடிதத்தை எழுதவும் இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. எழுதிவிட்டதாக என் முன்னே கூறிய உன்னை, இனியும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது மீசை, அடக்கு, அடக்கு என்று நட்பு நாடி வந்த உறவு முறை தடுக்கிறது.

ஜாக்சன் துரை: என்ன? மீசையை முறுக்குகிறாயா? அது ஆபத்தின் அறிகுறி. உன்னை சிறைபிடிக்க உத்தரவிடுகிறேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்: என்ன? வரச்சொல் பார்க்கலாம். ஆ..! மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு. மடியிலே கை வைத்த உன் தலை உருண்டு போகட்டும்...!
காட்சி: கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடும் முன் பேசும் வீர வசனம்
கதாபாத்திரங்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேய அதிகாரி பானர்மென், எட்டப்பர்
இடம்: கயத்தாறு, திருநெல்வேலி மாவட்டம்.

சங்கிலியிடப்பட்டு கட்டபொம்மனை அழைத்து வருகிறார்கள். கட்டபொம்மனை பார்த்ததும் மற்ற பாளையக்கார மன்னர்கள் பயத்தில் எழுந்து நிற்கிறார்கள். அதைப்பார்த்த பானர்மென் அவர்களை உட்கார சொல்கிறான். அதற்கு கட்டபொம்மன் சிரித்த பின் பேசும் வசனக்காட்சிகள் பின்வருமாறு:

கட்ட பொம்மன்: உயிருக்கு பயந்தவர்களே, உட்காருங்கள்... உட்காருங்கள்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: அகமழியவில்லை உனக்கு

கட்ட பொம்மன்: உன்னை அழித்திருந்தால் என் அகமும் அழிந்திருக்கும்.அல்லது எட்டப்பனும் தொண்டைமானும் எங்கில்லையே பிரவாதிருந்திருந்தாலும் உனக்காவது அகம் உண்டாகாது இருந்திருக்கும்.

எட்டப்பன்: ஹ, நல்லவர்களை திட்டாதே

கட்ட பொம்மன்: இன்னும் ஏன் பயப்படுகிறாய்? உண்மையை கூறு, நாய்களை திட்டாதே என்று

எட்டப்பன்: ஹ ஹ, துரை அவர்களே, நன்றி உள்ளது நாய் ஒன்று தான்.அதுவும் நமக்கு பெருமை தான்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: ஹம், இருந்தாலும் இவன் யார் அதை சொல்ல?

எட்டப்பன்: அதுவும் சரி தான். அடக்கியாளும் உங்களை சொல்ல அடிபட்ட இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கட்ட பொம்மன்: ஏ எட்டப்பா, ஈனச்சொல் பேசாதே, நாவை எடுத்தெறி. வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய், இனி நீ வாழ்ந்துகொள். வீரம் விலையற்றதென்றாய், வீணரை வணங்கினாய், வேண்டுவதை வாங்கிக்கொள். கூலி கேட்டாய், கும்பிட்டாய், கோழையானாய், கூலியை பெற்றுக்கொள். ஆனால் அந்நியன் உன்னை போற்றவேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக்கொடுத்தாய், நான் காட்டிக்கொடுக்கப்பட்டேன். நாம் இருவரும் இதே மண்ணில் விளைந்தவர்கள் தான். உன்னை கேடு சூழினும், ரத்தத்தில் இனச்சத்து எங்கோ ஒன்றித்தான் இருக்கும். ஆதலில், நம்மிடையே என் பேச்சுக்குத்தான் இடமுண்டு. ஏற்பது உனக்கு இழிவென்று, காரணம் உரிமை ஒன்று. ஆனால் அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: நிறுத்து, போதும் உன் பேச்சு. குற்றவாளியாகிய நீ ஏதேனும் சமாதானம் கூறி குற்றத்தை குறைத்துக்கொள்ள முடியுமா என்று பார். நாங்கள் ஒரு நாயை கொல்வதானாலும், சட்டப்படி குற்றம் காணாமல் கொல்லமாட்டோம். We Believe in the Rule of law.

கட்ட பொம்மன்: ஆ, எத்தர்கள் நல்லவர்களாக நடிக்க ஏற்பட்ட எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று. அறிவேன். ஆகப்போகும் முடிவையும் உடனறிவேன். ஊருக்கு, பேருக்கு உன் நாடகத்தை நடத்திக்காட்டு.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: நீ குற்றவாளி தானே?

கட்ட பொம்மன்: ஆம் உன்னை கொல்லத் தவறிய குற்றவாளி.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: அ, எடக்கு பேச்சு வேண்டாம். நேர்மையான பதில் தேவை. கும்பெனியாரின் கட்டளைக்கு நீ ஏன் அடங்கவில்லை?

கட்ட பொம்மன்: கும்பெனி என்பது வாங்கவும், விற்கவும் வந்த ஒரு வர்த்தக ஸ்தாபனம். அதற்குள் அடங்கவேண்டுவது பொருள்கள், புருஷர்கள் அல்ல.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: கடைசியாக நாங்கள் வாங்கியிருப்பது, அரசுரிமை.

கட்ட பொம்மன்: உரிமையை வாங்குவதோ விற்பதோ எங்களுக்கு பழக்கமில்லை. எவனாவது விற்றிருந்தால், அவனிடம் போய் கேட்டிருக்க வேண்டும் இந்த கேள்வியை.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: அவன் தான் ஆற்காட்டு நவாப். அவன் உங்களை கேட்கச் சொல்லுகிறான்.

கட்ட பொம்மன்: அவனையே கேட்கச் சொல்லுகிறேன் நானென்று, நீ அவனிடமே போய் கேள்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: மீண்டும் மடக்கு பேச்சு. அது என் கோபத்தை குத்துவதாகும்.

கட்ட பொம்மன்: உணர்ச்சி உடையவனுக்குத் தான் கோபம் வரும். உனக்கு வருவதாகக் கூறுவது பொய்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: எடக்கு, மடக்கு, இறுமாப்பு, ஏளனம் இத்யாதி இத்யாதி உனக்கு மிக மிக அதிகம்.

கட்ட பொம்மன்: எல்லாம் உடன் பிறந்தவை.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: அது ஒடுக்கப்பட்டது.

கட்ட பொம்மன்: நடக்காது. நா இருக்கும்வரை எக்காலும் இறங்காது. உரக்க உரக்க மேலெழும்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: எரிக்கும் சூரியன் இருக்கிறதே, அது கூட எங்களை கேட்டுத்தான் எழும், விழும்.

கட்ட பொம்மன்: அ, அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே, சூரியனே வேண்டாமென்று ஆண் கூட அல்ல, ஒரு பெண் விரட்டியிருக்கிற கதையெல்லாம் இங்கு ஏற்கனவே ஏராளமாக இருக்கிறது. வேறு ஏதாவது இருந்தால் கூறு.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: ஏனைய பாளையக்காரர்கள் எல்லோரும் பணிந்துவிட்டார்கள், பலனடைகிறார்கள். நீ ஒருவன் மட்டும் பணிய மறுப்பதால், அது உனக்கு ஒரு லாபமா?

கட்ட பொம்மன்: எல்லோரும் பணிந்த பிறகு நான் ஒருவன் பணியாததால், அது உனக்கு ஒரு நஷ்டமா?

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: சே, இவன் பேசத்தெரிந்தவன்.

கட்ட பொம்மன்: ஆம் பேசத்தெரிந்தவன். வெறும் பேச்சல்ல, மானத்தில் பாசமுள்ளவன், வல்லவன், வாள் வீசத்தெரிந்தவன். அதனால் தான் வாள் பிடித்து வாழவேண்டுமென்று இல்லாதிருப்பவன்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: 'இரும்புத் தலையன்' என்று எனக்குப் பெயர். என்னிடமே பேசுகிறாய்.

கட்ட பொம்மன்: உருக்கவேண்டிய பொருள். அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறு தான். புல்லனே, பொசுங்கல் அல்ல நான். காதல், மானம், வீரம் என்று இந்தக் கட்டுக்கோப்பிலே வளர்ந்தவன். எங்கள் நாடோ எல்லா வளங்கள் படைத்த நாடு, எதற்கும், எவரிடத்தும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் இல்லாத நாடு. வையமும், வானமும் ஒத்துழைக்கும் நாடு. இங்கு பிறந்தவன் பேடியாவதில்லை .

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: பேடியாயிருப்பவன்?

கட்ட பொம்மன்: இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாக இருப்பான். பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போரென்றால் புலி குணம், பொங்குமின்பக் காதலென்றால் பூமணம், புகழுக்குரிய மானமேன்றால் உலகிற்கே ஒரே இனம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள். எங்களை அடக்கியாள ஆண்டவனும் எண்ணியதில்லை. விரும்பினால், அன்பைக்காட்டி நண்பர்களாய் எங்களோடு வாழ்ந்ததுண்டு. அந்த புண்ணிய பூமியிலே, நாடு பிடிக்க வந்த நீங்கள் நரி வேஷம் கட்டி வாலையாட்டி நிற்கிறீர்கள். காலம் உங்களுக்கு கருணை காட்டினும், நல்லவர்கள் உங்கள் காலை பிடித்து வாழமாட்டார்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: போதும் உன் புத்திமதி. மேலும் மேலும் குற்றங்களை கூடுதலாக்கிக் கொண்டே போகிறாய். நான் இப்போதே தீர்ப்புக் கூறப் போகிறேன். உயிர் மேல் ஆசையிருந்தால் உனக்காக ஒரு வினாடி ஒதுக்குகிறேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்.

கட்ட பொம்மன்: ஹ, நான் மன்னிப்பு கேட்பதா? என் கை கட்டப்பட்டது இதுவரை உன் கழுத்து கழட்டப்படாமல் இருக்க. என் தாய் கேட்டிருக்கவேண்டும் இதை. அவள் தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உன் மீது பாய்ந்திருப்பாள்.என் தம்பி கேட்டிருக்க வேண்டுமிதை, இந்நேரம் உன் பரங்கித் தலை உன் சீதனசீமையை நோக்கி பறந்தே போயிருக்கும். என் தமிழ்ப்புலவன் மட்டும் இங்கு இருந்திருந்தால், அறம் பாடியே உன் ஆவியை கருக்கியிருப்பான். வீரத் தமிழ்குலப் பெண்மணி, என் மனைவிக்கு மட்டும் இது புரிந்திருந்தால், இந்நேரம் உன் உடல் தீப்பற்றி எரிந்திருக்கும். ஆனால் இங்கோ, நாய்களும், பேய்களும், நயவஞ்சக பூனைகளும், வேசித் தனமும், ஆசைகுணமும் கொண்ட அடிவருடிகளும், குடிக்கேடர்களும் கூடியிருக்க நீயும் கூசாமல் கேட்டுவிட்டு ஒதியவரம்போல், இழித்துப் பேசிவிட்டு ஓணான்குஞ்சு போல் உயிருடலில் ஊசலாட நின்று கொண்டிருக்கிறாய். என்ன செய்வேன்? என்நாடே, இந்த இழிவு உனக்கா, எனக்கா? அடே எட்டப்பா, நான் இறக்கப்போகிறேன். என் புகழ் இருக்கும். ஆனால் உனக்கோ? ஊரே சொல்லட்டும் போ.

ஆங்கிலேய அதிகாரி பானர்மென்: இவனை கொண்டுபோய் அந்த புளியமரத்திலே தூக்கிலிடுங்கள்.

கட்ட பொம்மன்: ஹா... ஹா... ஹா... ஹா...!Thanks and Regards

Post Comment

2 comments:

Arun Prasadh சொன்னது…

One of the best dialogues in tamil cinema.

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

பொறுமையாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்!!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக