கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், மே 07, 2014

அஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...

ரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளியிடவேண்டியது. எழுத நேரம் சரியாக அமையவில்லை. எப்போது எழுதினால் என்ன? தல ரசிகர்கள் இருக்கும்வரை என் பதிவிற்கு எப்போதுமே வரவேற்பு கண்டிப்பாக
இருக்கும். ஒரு முக்கியமான விஷயம். அஜித் ரசிகர்கள் அல்லாத மற்ற ரசிகர்கள் இந்த பதிவை படிக்க நேர்ந்தால், கொஞ்சம் பொறுமையோடு படிக்கவும். படிக்க பிடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. ஆனால், பின்னூட்டத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க கூடாது. Because, இது 'தல' ஏரியா.

பொதுவாக அஜித் படங்கள் நான் பல பார்த்திருந்தாலும், எனக்கு 'மாஸ்' அஜித் படம் என்று பார்த்தால் தீனா படத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. படம் வெளியானது ஒரு பொங்கல் பண்டிகை தினத்தில். கொளத்தூர் குமரன் தியேட்டரில் இந்த படத்தை திரையிட்டிருந்தார்கள். முதல் நாள், முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுக்கலாம் என்று பார்த்தால், அல்ரெடி எல்லா டிக்கெட்டும் Reserved. சரியென்று மாலை காட்சிக்கு டிக்கெட் Reserve செய்து விட்டு பக்கத்திலிருந்த கொளத்தூர் கங்கா தியேட்டரில் விஜய், சூர்யா நடித்த 'Friends' படத்திற்கு போய் சிரித்து விட்டு வந்தேன். மாலை காட்சி 'தீனா' படம் பார்த்தபோது பெரிதாக என்னை கவரவில்லையென்றாலும், படம் எனக்கு பிடித்திருந்தது. முக்கியமாக அந்த அரிவாள் எடுக்கும் காட்சி. செம மாஸ் காட்சி அது. அதற்க்கப்பறம் வந்த படம் தான், 'சிட்டிசன்'. சிட்டிசன் படம், பல நாள் தயாரிப்பில் இருந்த படம். அதனால், நிறைய எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். படம் வெளிவந்த அன்றே என்னால் படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இரண்டுநாள் கழித்துதான் படத்தை பார்த்தேன். மொத்த தியேட்டரும் Full. ஸ்க்ரீன் முன்னால் இருக்கும் சேர்களில் நான்காவது வரிசையில் உட்கார்ந்து பார்த்தேன். படம் எனக்கு பிடித்திருந்தது.
காரணம், படத்திற்கு இருந்த Opening, படத்தின் Making என்று என்னைப் போன்ற அஜித் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இந்த படத்தை பார்த்ததும் கொளத்தூர் கங்கா தியேட்டரில் தான். நான் கங்கா தியேட்டரை தேர்ந்தெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, வில்லிவாக்கத்தில் இருந்த ராயல், நாதமுனி போன்ற தியேட்டரில் அவ்வளவாக அஜித் படங்கள் வெளிவராது. இரண்டு, கொஞ்சம் பக்கத்தில் இருந்த கங்கா தியேட்டர்காரர்கள் அஜித் படத்திற்கு First Preference கொடுப்பார்கள். அதனால் எந்த அஜித் படமாக இருந்தாலும் சரி, நம்பி கங்கா தியேட்டரை அணுகலாம். மூன்று, கங்கா தியேட்டர் அஜித் ரசிகர்களின் கோட்டை. அஜித் படத்திற்கு First day, First Show பார்க்க போவது வெறும் படம் பார்க்க மட்டும் அல்ல, அஜித் ரசிகர்களின் மாஸை கண்கூடாக பார்க்கலாம். கங்கா எவ்வளவோ பரவாயில்லை. ஆனால், அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் 'ஆனந்த பூங்காற்றே' வெளியான சமயம். தியேட்டரில் 'Houseful' போர்டு மாட்டியும், 'எனக்கு டிக்கெட் குடுக்குறியா, இல்ல என்கிட்ட வெட்டு வாங்கிறியா?' என்று அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க, அஜித் படங்கள் வெளியான பல திரையரங்குகளில் நடந்திருக்கிறது. சும்மாவா? தல ரசிகர்களாச்சே.

சிட்டிசன் படத்திற்கு பிறகு 'பூவெல்லாம் உன் வாசம்' படம் வெளிவந்தாலும், எங்களை பொருத்தவரை அது அக்மார்க் அஜித் படம் கிடையாது. தல,  'காதல் மன்னன்' அஜித்திலிருந்து, 'அமர்க்களம்' அஜித்தாக மாறிய பிறகு நாங்கள் அதிரடி அஜித்தையே அதிகமாக விரும்பினோம். திரும்பவும் செண்டிமெண்ட் அஜித்தா?  என்று வந்தபோது எங்களால் இதை அஜித் படம் என்றே ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தானோ, என்னவோ இந்த படம் பெரிய லெவலில் ஹிட்டடிக்காமல், சொல்லிக்கொள்ளுபடியாக வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வந்தது தான் 'ரெட்'. படத்தில் அஜித்தின் கெட்டப்பே, படத்தின் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை. Because, அன்றைய காலகட்டத்தில் ரவுடி, தாதா கதாபாத்திரங்கள் போன்றவை சரியாக ஹீரோக்களுக்கு பொருந்த வேண்டும். அப்படி பொருந்திய ஹீரோக்கள் என்றால், அது சூப்பர் ஸ்டாரும், கலை ஞானியும் தான். அவர்களுக்கு பிறகு சரியாக பொருந்தியது எங்கள் தலக்கு  மட்டும் தான். மொட்டை தலை, நெற்றியில் குங்குமம் என்று தல ஒரு பக்கா 'வடசென்னை தாதா' போலவே இருந்தார். அதனாலேயே படத்திற்கு மிகப்பெரிய Opening கிடைத்தது.இந்த படத்தை நான் தியேட்டரில் பார்க்கப் போய், டிக்கெட் கிடைக்காமல் பக்கத்தில் இருந்த தியேட்டரில் வேறு படம் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அங்கு படம் பார்க்க வந்த பல பேர், அஜித் படம் பார்க்க வந்து டிக்கெட் கிடைக்காமல் இந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தான். படத்தை 'Over Heroism' என்று விமர்சித்தார்கள் பலர். உண்மைதான். ஆனால், இந்தப்படம் தான் அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்தது. படம் வெளிவந்த சமயத்தில், யாராவது மொட்டை போட்டு, குங்குமம் வைத்தால், 'நீங்க அஜித் ரசிகரா?' என்று கேட்பார்கள். எங்கள் அண்ணன் ஒருவர் பிசியோதெரபிஸ்ட் டாக்டர். அவர் வேண்டுதலுக்காக ஒருமுறை திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுக்கொண்டு, கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருக்கிறார். சில நாட்கள் கழித்து இவரிடம் சில பேஷண்டுகள் 'டாக்டர், நீங்க அஜித் ரசிகரா?' என்று இவரை கேட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த ரெட் கெட்டப் பிரபலம். தெலுங்கு திரைப்படமான 'கப்பர் சிங்' படத்தில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யான் தன்னை பற்றி ஒரு டயலாக் சொல்லுவார். 'நான் மத்தவங்க Trend Follow பண்ண மாட்டேன். எனக்குன்னு ஒரு Trend செட் பண்ணுவேன்' என்று. இந்த வசனம், கண்டிப்பாக அஜித்துக்கும் பொருந்தும்.

ரெட் படத்திற்கு பிறகு வெளிவந்த படம், ராஜா. அந்த படமும் பெரிதாக ஹிட்டடிக்காமல் போக, நாங்கள் அடுத்த படத்திற்கு காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்போது வந்த படம் தான், 'வில்லன்'. அதே கங்கா தியேட்டர், அதே அட்டகாசமான ஆர்ப்பாட்டத்தோடு படம் பார்த்தோம். கே.எஸ். ரவிகுமாரின் அட்டகாசமான திரைக்கதையில் அஜித்திற்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது வில்லன் திரைப்படம். ஆனால், அதற்க்கப்பறம் ஆரம்பமானது தான் கொடுமையிலும் கொடுமைகள். சரியாக ஒரு வருடம் வரைக்கும் அஜித் படங்கள் ஒன்று கூட வெளிவரவில்லை. அஜித் கார் ரேசிற்கு போய்விட்டார். ஒரு வருடம் கழித்து ஒரு படம் வந்தது. அது தான் ஆஞ்சநேயா.பதினோரு மணிக்குத் தான் படம் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைத்து, கடைசியில் படம் பத்து மணிக்கே ஆரம்பமாகி எங்கள் முதல் காட்சி மிஸ்ஸாகி விட்டது. என்னடா பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து தியேட்டரில் விஜய் நடித்த 'திருமலை' ஓடிக் கொண்டிருந்தது. ப்ளாக்கில் டிக்கெட் இருந்தும் நாங்கள் போகவில்லை. என் நண்பன், டிக்கெட் விற்பவரிடம் 'நீ ப்ரீயா குடுத்தாலும் நாங்க இந்த படமெல்லாம் பார்க்கமாட்டோம்; என்றான். இந்த திமிர் தான் ஒவ்வொரு அஜித் ரசிகர்களிடமும் இன்றுவரைக்கும் இருக்கிறது. இனியும் இருக்கும்.
ஆஞ்சநேயா தோல்விக்குப் பிறகு வந்த திரைப்படமான ஜனா படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். அதுவும் பப்படமாகிவிட அஜித்தோடு சேர்ந்து அவரது ரசிகர்களான நாங்களும் அதிகமாக அவமானப்பட்டோம். அப்போது விஜய்க்கு பெரிய லெவலில் வெற்றிப் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம். விஜய் ரசிகர்கள் சும்மாவே சீன் போடுபவர்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பார்களா? ரொம்பவே கலாய்த்தார்கள் அவர்கள். அதனால் பல இடங்களில் வாய்சண்டை கைகலப்பாக மாறியது. கைகலப்பு, கத்திகுத்தாகவும் சில இடங்களில் மாறியது. அந்த சமயத்தில் எங்களுக்காக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான், அட்டகாசம். உண்மையில் 'அட்டகாசம்' திரைப்படம் எங்களுக்கு ஒரு Pain Relief Movie என்றே சொல்லலாம். இந்த படம், கண்டிப்பாக அஜித் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்க்காகவே எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். அதனால் தான், 'தல' என்ற Key Word, அஜித்திற்கு 'Brand Name' ஆக மாறியது. இந்த படத்தை நான் கங்கா தியேட்டரில் பார்த்தபோது, எங்களோடு வந்திருந்த விஜய் ரசிக நண்பன் எங்களிடம் பட்டபாடு எங்களுக்குத் தான் தெரியும். ஒவ்வொரு காட்சிக்கும் அவனை அடித்துவிட்டு 'இப்போ தெரியுதா எங்க தல யாருன்னு' என்று சொல்லிக்கொண்டு படத்தை பார்த்தோம். அன்று தியேட்டரில் நான் போட்ட கூச்சல், இரண்டு நாட்களுக்கு தொண்டை கட்டிக் கொண்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு வெறித்தனமான Opening, Mass Opening, எத்தனை தோல்விகள் வந்தாலும் போன படத்தை விட, புதிதாக வெளிவரும் தல படத்திற்கு கெத்தான Opening கொடுப்பதற்கு எங்களை விட்டால் வேற யாரு இருக்கா?

அட்டகாசத்திற்கு பிறகு வெளிவந்த படம், 'ஜி'. வழக்கம்போல இந்த படத்தை கங்கா தியேட்டரில் பார்க்க போனேன். பெரும்பாலும் நான் தல படம் பார்க்கப் போவது, என்னைப் போன்ற அஜித் ரசிக நண்பர்களோடு தான். இந்த முறை என் விஜய் ரசிக நண்பர்களும் என்னோடு படம் பார்க்க வந்திருந்தார்கள். தியேட்டரில் ஸ்லைடு போட ஆரம்பித்ததிலிருந்து அஜித் ரசிகர்களின் ஆரவாரங்களை பார்த்து வாயடைத்துப் போனார்கள். படத்தின் இடைவேளை வரும்போது தியேட்டர்காரர்கள் ஏதாவது ஒரு Upcoming படத்திற்கான ட்ரைலரை போடுவார்கள். இது பொதுவான வழக்கம். ஆனால், ஜி படத்தின் இடைவேளையில் அவர்கள் போட்ட ட்ரைலர், விஜய் நடித்து வெளிவரவிருந்த 'சுக்ரன்'. அவ்வளவு தான், மொத்த கூட்டமும் டென்ஷனாகி விட்டது. 'யோவ் ஆபரேட்டர், ட்ரைலரை நிறுத்து' என்று மொத்த கூட்டமும் கத்தியும் அவர்கள் கேட்கவில்லை. 'A. M. ரத்னம் வழங்கும் ஸ்ரீ சூர்யா மூவீஸ்' என்று முடிவதற்குள் பால்கனியில் இருந்த நான்கைந்து ரசிகர்கள் அவர்களது சட்டையை கழட்டி ப்ரொஜக்டர் ஒளி வரும் துவாரத்தில் வைத்து ட்ரைலரை நிறுத்தினார்கள். அன்று மட்டும் அவர்கள் ட்ரைலரை நிறுத்தாமல் இருந்திருந்தால், தியேட்டரின் கதை கந்தல் தான்.'ஜி' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வருடம் இடைவெளி. அஜித் ஜரூராக படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. பரமசிவன், திருப்பதி என்று வரிசையாக படங்கள் பண்ணிக் கொண்டிருந்தார் அஜித். இதில் ஆச்சர்யமான விஷயம், குண்டாக இருந்த அஜித் ஒரேயடியாக 18 கிலோ எடை குறைத்து பார்ப்பதற்கு 'அமராவதி' அஜித் போல மாறினார். மேற்குறிப்பிட்ட படங்களில் முதலில் வெளிவந்தது 'பரமசிவன்'. பரமசிவனோடு வெளிவந்த மற்றொரு படம், விஜய் நடித்த 'ஆதி'. ஆரம்பத்தில் இந்த இரண்டு படங்களையும் இருவரின் ரசிகர்களும் 'சூப்பர் ஹிட்' என்று கொண்டாடினாலும், பின்னர் இரண்டு படங்களும் தோல்விப் படங்களாயின. அதே சமயம், ஆதியை விட பரமசிவன் பரவாயில்லை என்ற பேச்சும் வராமல் இல்லை. அடுத்து வந்த படமான 'திருப்பதியும்' பெரிதாக ஹிட்டடிக்காமல், சுமாரான வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்தது, சென்னை ஆல்பர்ட் தியேட்டரில்.

திருப்பதி படம் பார்த்துவிட்டு, தியேட்டரில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது இரண்டு அஜித் ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். அதில் ஒருவன், 'படம் நல்லா தானே இருக்குது?' என்று சொல்ல, அதற்க்கு மற்றொருவன் 'எங்கடா நல்லாயிருக்குது? 'திருப்பாச்சி, சிவகாசி' படம் பார்த்தேல்ல? அத எப்படி பண்ணியிருந்தான் பேரரசு?' இந்த படத்தை பார்த்தியா? எப்படி சொத்தப்பியிருக்கான்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அஜித்திற்கு 'வில்லன்' படத்திற்கு பிறகு ஹாட்ரிக் வெற்றிப்படம் என்று வரவே இல்லை. வில்லன் படத்திற்கு பிறகு வெளிவந்த அஜித்தின் 6 படமும் 'சுமார், பரவாயில்லை, நல்லாயில்லை' என்ற ரீதியிலேயே இருந்திருக்கிறது. அதே சமயம் அஜித்தோடு பணிபுரிந்த இந்த 6 படங்களின் இயக்குனர்களும் சாதாரண இயக்குனர்கள் அல்ல. அன்றைய தேதியில் அவர்களும் பெரிய இயக்குனர்கள் தான். ஆனால் அவர்கள் கெட்ட நேரமோ இல்லை அஜித்தின் கெட்ட நேரமோ, எந்த படமும் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. ரசிகர்களாகிய நாங்களும் பெரிய ஹிட் இல்லாமல் ரொம்பவே துவண்டு போயிருந்தோம். அப்படி ஒரு சமயத்தில் வெளிவந்த படம் தான் 'வரலாறு'.
வரலாறு திரைப்படம், கிட்டத்தட்ட 2 வருடம் தயாரிப்பில் இருந்த படம். பைனான்ஸ் பிரச்சனை, தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி, படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் வரி பிரச்சனை என்று நிறைய Problems. அனைத்தையும் தாண்டி இந்த படம் 2006, தீபாவளியில் வெளிவந்தது. வழக்கம் போல இந்த படத்தையும் நான் கங்கா தியேட்டரில் தான் பார்த்தேன். தீபாவளி தினத்தில் வெளிவந்த இந்த படத்தை பார்க்க ஏகப்பட்ட கூட்டம். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போனால், Seats Already Full. வேறு வழியே இல்லாமல் தரையில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது, தல கலக்கியிருந்தார் படத்தில். திரையில் அஜித்தை யாராவது ஒரு கதாபாத்திரம் திட்டினால், அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் பச்சையாக திட்டுவார்கள். இந்த படத்தில் நிறைய காட்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களான சந்தான பாரதி, கனிகா, பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரப் பெண் என்று பலர் அஜித் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்த ஒவ்வொரு ரசிகனும் 'ஹைய்யா, எங்க படம் ஹிட்டாயிருச்சி' என்ற சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில், அந்த சந்தோஷத்தையும் கெடுக்க வந்த படம் தான், ஆழ்வார்.

உண்மையில் ஆழ்வாரெல்லாம் 'ஏண்டா பார்த்தோம்' என்று நினைக்க வைத்த படம். விஜய்க்கு எப்படி ஒரு 'சுறாவோ', அதே போல அஜித்திற்கு ஒரு 'ஆழ்வார்' என்று தான் நான் சொல்வேன். அதே சமயம் எனக்கும் ஆழ்வார் படத்தோடு First day, First Show கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. இந்த படத்திற்கு பிறகு வெளிவந்த படங்களான கிரிடம், பில்லா, ஏகன் போன்ற படங்களை வேலையின் காரணமாக First day, First Show பார்க்க வாய்ப்பு அமையவில்லை. ஏகனுக்குப் பிறகு அஜித் படங்கள் வெளிவந்தபோது நான் இந்தியாவிலேயே இல்லை. வெளிநாட்டில் வேலைக்கு வந்த பின் முதல் நாள், முதல் காட்சிக்கேல்லாம் ஏது வேலை?

அஜித் ரசிகர்கள்:
மனைவி ஷாலினியும், அவரது மகள் அனோஷ்காவும் அஜித்தை இந்தளவுக்கு நேசிப்பார்களோ என்று வியக்கும் அளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை வெறித்தனமாக நேசிக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மை. அஜித் ரசிகர்கள் யாரும் அஜித்தை வெறும் படங்கள் மூலமாக மட்டும் ரசிக்கவில்லை. திரைக்கு வெளியே அவர் ஒரு நல்ல மனிதராக, ஒரு நல்ல Role Model ஆக அவரை பார்க்கிறார்கள் ரசிகர்கள். மன்றம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 'தல தல தான்' என்று சொல்லும் அஜித் ரசிகர்களின் அன்பு சாதாரணமானதல்ல. ஒரு காலத்தில் திரையுலகம், மீடியா என்று பலரும் அஜித்திற்கு எதிராக இருந்தபோது, ஆதரவாக இருந்த ஒரே கூட்டம் அவரின் ரசிகர்கள் தான். இந்த மனிதரை தாக்கி பேசினால் கண்டிப்பாக அடி விழும். அவரின் சட்டையில் கை வைத்தால் கொலையே விழும். எதற்கும் அஞ்சாதவர்கள் இவர்கள். பல நூறு ஜாதிகளை போல இவர்களும் 'அஜித் குமார்' என்ற மிகப்பெரிய ஜாதியை சேர்ந்தவர்கள்.

தமிழில் 'கொலைவெறி, மிருகவெறி' என்ற சொற்கள் உண்டு. அதோடு சேர்த்து இனி 'தல வெறி' என்று சேர்த்துக் கொள்ளலாம். மரியாதை தெரிந்தவர்கள் தல பேன்ஸ். எப்போதுமே அஜித்தை எம்.ஜி.ஆரோடும், ரஜினியோடும் ஒப்பிட விரும்பாதவர்கள். முதல் நாள் தியேட்டருக்குள் அஜித் படம் ஓடும்போது போலீஸ்காரர்கள் கூட உள்ளே வர யோசிப்பார்கள். விஜய் படத்திற்கு போனால் அவரது ரசிகர்கள் அவரின் நடன காட்சிகள் வரும்போது மட்டும் ஆர்பரிப்பார்கள். ஆனால், அஜித் ரசிகர்கள் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அடித்து தூள் கிளப்புவார்கள். 'கப்பலில்லாமல் துறைமுகமா? தல இல்லாமல் திரையுலகமா?, ராவணனுக்கு பத்து தல, ரசிகர்களுக்கு ஒரே தல, ஆண்டவனை கண்டவனுமில்லை, எங்கள் அஜித்தை வென்றவனுமில்லை', என்று அஜித்தை புகழும் இந்த வாசகங்கள் வெறும் துதி பாடும் வரிகள் அல்ல. அனைத்தும் அவர்களின் வெறித்தனமான ரசிகர்களின் வார்த்தைகள். சமூக சேவை, அரசியல் என்று தேவையில்லாத விஷயங்களை செய்யாதவர்கள். என்றும் இவர்கள் தன்னடக்கம், தன்னம்பிக்கை, தல வழி என்று வாழும் அஜித்தின் 'முரட்டுத்தனமான பக்தர்கள்'.


Post Comment

7 comments:

பெயரில்லா சொன்னது…

super boss......nice article ......thala thalan........

சீனு சொன்னது…

இந்தளவுக்கு அஜீத் ரசிகரா வொண்டெர்...வொண்டெர்...

சமீபத்தில் வெளிவந்த எந்த அஜீத் படங்களையும் குறிப்பிடவில்லையே...?

கிட்டத்தட்ட நானும் அப்படித்தான் படங்களையும் முதல்நாள் முதல் காட்சி பார்த்ததாக வேண்டும் இருந்தும் அஜீத்தின் முக்கயமான படங்களான ஆழ்வார் ஜி ஜனா முதலியவற்றை தவறவிட்ட பாக்யவானாகிவிட்டேன் :-)

vivek kayamozhi சொன்னது…

அதெல்லாம் சரி...
நான் வீரம் படத்தை குவைத் ல் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்காது ..
வீரம் ரிசர்வ் செய்து ஜில்லா படம் காட்ட ஆரம்பித்தார்கள் .. கொதித்து எழுந்த ரசிகர்கள் குவைத்தி மேனேஜரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டனர்.
ஷோ வை நிறுத்தி டோக்கன் கொடுத்து அடுத்த நாள் படம் போட்டனர் .
குவைத்தி ரெண்டும் தமிழ் படம் தானே ! பார்க்க வேண்டியது தானே. ..என்று சொன்ன போது "இதுவே எங்கள் ஊராக இருந்தால் இந்நேரம் தியேட்டர் எறியும் " என்று எச்சரித்தனர் ..
really diehard fans...

Arjith thala சொன்னது…

நண்பா அப்படியே என்னை போன்று தல படத்த கொண்டாடி இருக்கீங்க

தனிமரம் சொன்னது…

ஆஹா தலபுராணம் பட்டியலில் நீ வருவாய் என உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் என்று அவரின் குணச்சித்திரவேடம் எல்லாம் பேசவில்லையே! அருமையான தொகுப்பு!

Thava Kumaran சொன்னது…

kalakkiddinga boss..thala thala-than.super pathivu..nandri

Balas Sun சொன்னது…

Nice explaination about the ajith fans.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக