கற்க கற்க கள்ளும் கற்க...

செவ்வாய், ஜனவரி 05, 2016

2015 இல் அதிகம் எதிர்ப்பார்த்த 10 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்வை...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடமான 2015 இல் நிறைய ஆங்கிலப் படங்கள் வெளிவந்திருந்தாலும், சில முக்கியமான படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆங்கில சினிமா ரசிகர்கள் முதல் சராசரி சினிமா ரசிகர்கள் வரை பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் வெளியாகியது. அதில் முக்கியமான 10 படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

FIFTY SHADES OF GREY:
உண்மையில் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்களா என்றால், 'ஆம்' என்று தான் சொல்ல வேண்டும். உதாரணம், படத்தின் முதல் ட்ரைலர் மட்டும் இன்றைய தேதிவரைக்கும் கிட்டத்தட்ட 77 மில்லியன் views தாண்டியிருக்கிறது. Erotic + Romantic படமான இதில் 'காமமே' கண்ணாக படத்தில் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனரான Sam Taylor - Johnson என்ற 48 வயது லேடி. 2011 இல் வெளியிடப்பட்டு, இன்று வரை கிட்டத்தட்ட 125 மில்லியன் பிரதிகள் விற்பனையான புத்தகத்தை தழுவி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் Universal Pictures. வன்மமான காமத்தை விரும்பும் ஹீரோவுக்கும், மெல்லிய உணர்வுகளை கொண்ட ஹீரோயினுக்கும் இடையே நடக்கும் ஸ்பரிசமான காதல் தான் திரைக்கதையே. எனக்குத் தெரிந்து இதுவரை வெளிவந்த ஆங்கில படங்களிலேயே காமத்தை கூட இவ்வளவு அழகாக காதலோடு சொன்ன படத்தை இதுவரை பார்த்ததில்லை என்பதே உண்மை.

CINDERELLA:
நம்மூர் அம்புலிமாமா கதைகள் நமக்கேப்படியோ, அது போல Cinderella கதையும் அங்கே Kids Bed Time கதைகள் போலத்தான். 1950 களிலேயே வால்ட் டிஸ்னியின் வெளியிட்டில் அனிமேஷன் படமாக வெளிவந்திருந்தாலும், நேரடி திரைப்படத்தை பார்க்கும் ஆவல் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததென்னவோ உண்மை. கதை முன்னமே தெரிந்தபடியால், Visualization எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் பெரிதாக இருந்தது. 15 ஆம் நூற்றாண்டு லண்டன் வீதிகள், அரண்மணைகள், பூசணிக்காய் தேராக மாறுவது, அன்றைய பாரம்பரிய உடைகள் என்று ஒரு அருமையான விஷுவல் ட்ரீட் கொடுத்தது இந்த Cinderella என்றே சொல்லலாம்.

FURIOUS 7:
ஏற்கனவே வெளிவந்த 6 பாகங்களை விட இந்த படத்திற்கு இருந்த அதீத எதிர்பார்ப்புக்கு காரணம், மறைந்த பால் வாக்கரின் கடைசி படம். அது மட்டும் இல்லாமல் Jason Statham வில்லனாக களமிறங்கியது கூடுதல் எதிர்பார்ப்புக்கு காரணம். வழக்கம் போல இந்த படத்திலும் ரேஸ் கார்களை வைத்து அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். வின் டீசலின் Action, 'தி ராக்' Dwayne Johnson சாகச சண்டைகாட்சிகள், விமானத்தில் இருந்து காரோடு பாரசூட் கட்டி குதிப்பது, துபாயில் மூன்று வானுயர கட்டிடங்களுக்கிடையே ஒன் பை ஒன்னாக 'ஜஸ்ட் லைக் தட்' பறப்பது என்று பரபரப்பாக பறக்க விட்டிருக்கிறார்கள் திரைக்கதையை. ஆனால் என்ன இருந்தாலும், We miss you Paul...

PITCH PERFECT 2:
இந்த படத்தின் Sequel எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு காரணம், இதுவும் முதல் பாகத்தை போலவே Musical Drama Subject. படத்தில் நிறைய பாடல்கள் மிக அருமையாக இருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்த படம் பிடித்திருந்தது. படத்தின் கதையென்று பார்த்தால், Barden Bellas டீம் ஒரு பெரிய விழாவில் 'எசகுபிசகாக' சொதப்பிவிட, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடும் பெண்கள் குழுவினரின் காதல், நட்பு என்று படத்தை காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். Fat Amy யாக நடித்திருக்கிற Rebel Wilson இந்த பாகத்தில் பிரதானமாக நடித்திருந்தாலும், படத்தின் முக்கிய கதாநாயகியான Anna Kendrick தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல பெல்லாஸ் டீமுக்கு புதிதாக வரும் Hailee Steinfeld நடிப்பும் நன்று. பொதுவாக இது போன்ற டீன் காமெடி படங்களில் காமமும் கொஞ்சம் 'அதிகமாகவே' வழிந்தோடும். ஆனால் இந்த படம் அதற்க்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறது. மொத்தத்தில், ஆடலுடன், பாடலும் சேர்ந்து ஒரு ஹாலிவுட் படம் பார்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக இந்த படத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

JURASSIC WORLD:
22 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த Jurassic Park படத்தின் தாக்கம் இன்னும் நமக்கு மறையவில்லை என்பதை நான் இந்த படம் பார்த்து கைதட்டி, விசிலடிக்க முயற்சி செய்தபோது தான் முழுதாக உணர்ந்தேன். Technical & Technology யின் மேம்பாடு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தாலும், பழைய Jurassic Park படத்தின் சில காட்சிகள் இந்த படத்திலும் கொஞ்சம் ரிப்பீட் ஆனதேன்னவோ உண்மை. அதே போல பயிற்சி பெற்ற டைனோசர்கள், முதலை வகை டைனோசர் என்று ரசிகர்களுக்கு நிறைய விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள் படக் குழுவினர். ஆனால் என்ன தான் நாம் வளர்ந்து, பல உலக சினிமாக்கள் பார்த்து 'இது சொத்தை, அது நொள்ளை' என்று சொன்னாலும் நமக்குள் நமக்கு தெரியாமலே நம்மோடு இருக்கும் அந்த குழந்தத்தனமான ரசிகன் வெளிப்படுவது இது போன்ற படங்கள் வரும்போது தான் என்பதே நிதர்சனம்.

TERMINATOR GENISYS:
இது வரை வெளிவந்த Terminator படங்களில் முதல் இரண்டு பாகங்களை தவிர, அடுத்து வெளிவந்த இரண்டு பாகங்களும் ரொம்பவும் மொக்கை என்பதே என் கருத்து. ஆனால் இந்த பாகத்தை பொருத்தவரை, முதல் இரண்டு பாகத்தை போல சூப்பராகவும் இல்லாமல், அடுத்த இரண்டு பாகத்தை போல மட்டமாகவும் இல்லாமல் நடுநிலை வகிப்பதே சற்று ஆறுதலான விஷயம். Time Machine, பெற்ற அம்மாவையும், அப்பாவையும் கொல்ல வரும் Genisys ரோபாட், அந்த ரோபாட்டிடமிருந்து ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றும் Terminator என்று கற்பனைக்கு எட்டாத கதையை சொல்லி புரியவைக்க முயற்சித்த படக்குழுவினரை ஒரு முறையாவது பாராட்டலாம். எது எப்படியோ, படத்தின் ஒரு காட்சியில் பழைய கட்டுமஸ்தான அர்னொல்டையும், இன்றைய வயதான அர்னால்டையும் மோதவிட்டு எடுத்த காட்சிக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

BAAHUBALI:
இது எப்படி ஹாலிவுட் பட லிஸ்டில் வரும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. 'டோலிவுட் ஷங்கர்' என்று அழைக்கப்பட்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் படைப்பான 'பாஹுபலி' படத்தின் வெற்றியின் வீரியம் நம்ம ஊரு ஷங்கர் படங்களை தாண்டி, 'இது அதுக்கும் மேல இல்ல, எல்லாத்துக்கும் மேல' என்று சொல்ல வைத்த படம். வழக்கமான கதையில் திறமையான திரைக்கதை அமைத்து, வலுவான காட்சிகளாலும், நேர்த்தியான சி ஜி கலந்து சரியான விகிதத்தில் செய்த காக்டெயில் இந்த பாஹுபலி. இதை ஹாலிவுட் படத்திற்கு நிகர் என்பதை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்ல எதிர்பார்க்க முடியும்?

MISSION IMPOSSIBLE 5: ROGUE NATION:
படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து விசிலடிக்க வைத்த படம். 53 வயது 'இளைஞர்' Tom Cruise படத்தில் செய்த சாகசங்கள் எல்லாமே நம்மை ஸ்க்ரீன் பக்கத்திலேயே இழுத்துவிடும் அளவுக்கு நிறைய விஷுவல் ட்ரீட் இருந்தன படத்தில். ஒரு பக்கா Action Package படம் என்று சொல்லும்போது அந்த சொல்லுக்கு அர்த்தம் உள்ள படமாக இருக்க வேண்டும். அதில் கொஞ்சமும் தவறவில்லை இந்த M I 5. அடுத்த பாகம் எப்போது என்று இப்போதே வழக்கம் போல  எதிர்பார்க்க வைத்துவிட்டார் 'ஈதன் ஹண்ட்'. 

HOTEL TRANSYLVANIA 2:
அனிமேஷன் படங்களில் சில Sequel படங்களாக வரும்போது, முந்தைய பாகத்தின் சுவாரஸ்யத்தின் அளவை சற்று குறைத்து விடும். சில படங்கள் மட்டும் படத்தின் மூலக் கதையை வைத்து திரைக்கதையை திறம்பட மாற்றி வெற்றி பெறுவார்கள். இந்த படமும் அது போல தான். முதல் பாகத்தில் தன் மகளை மனிதர்கள் நிழல் படாமல் பாதுகாக்கும் டிராகுலா, இந்த பாகத்தில் தன் மகளுக்கு பிறந்த மனித பேரனை டிராகுலாவாக மாற்ற போராடுவதே கதை. படத்தின் டீசரே ஏகத்தும் எதிர்ப்பார்ப்பை கிளப்ப, இந்த படமோ சத்தமில்லாமல் வெளிவந்து பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். கண்டிப்பாக குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பார்த்து ரசிக்கும்படியாக இருக்குகிறது இந்த படம்.

SPECTRE:
அது என்னவோ தெரியவில்லை. எனக்கு Daniel Craig ஐ சுத்தமாக பிடிக்காது. அவர் Jamesbond ஆக நடித்த எந்த படமும் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. அதில் இந்த படமும் தப்பவில்லை. படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்த பிரம்மாண்டமான Opening அதற்கடுத்த காட்சிகளில் இல்லாமல் போனது பெரிய ஏமாற்றம். குறிப்பாக Ian Fleming நாவல்களை படமாக பார்த்தபோது இருந்த சுவாரஸ்யம், இப்போது உள்ள இயக்குனர்கள் எழுதும் மட்டமான திரைக்கதைகள் சொதப்பி, பாண்ட் கதாபாத்திரத்திற்கு மரியாதை குறைந்துகொண்டிருக்கிறது என்பதும் நிதர்சனம். அடுத்து பாண்ட் படத்தை எடுக்கும் இயக்குனர் இதை கருத்தில் கொண்டு படம் எடுப்பது நல்லது. ஆமா, அடுத்த பாண்டு யாரு பா?Thanks and Regards

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக