திங்கள், செப்டம்பர் 14, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் 4 - சுஜாதா & பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள்...

மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
சுஜாதாவின் 'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளிவந்தது. தொலைபேசியில் ஒரு அவசரக்குரல், 'என்னை கொல்ல சதி நடக்கிறது. உடனே புறப்பட்டு வா' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டிற்கு செல்லும் போது தொலைபேசியவர் கொலை
செய்யப்பட்டு கிடக்கிறார். உறவினர் ஒருவரை கொலையாளி என்று போலீஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தன் உதவியாளர் வசந்துடன் சேர்ந்து உண்மையான கொலையாளியை கண்டுபிடிப்பதே கதை. வழக்கம்போல கணேஷின் துப்பறிவும், வசந்தின் விளையாட்டுத்தனமும் கதையில் சுவாரஸ்யம் சேர்கிறது. ஆனால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை என்பதே உண்மை.

ஒரே ஒரு துரோகம் - சுஜாதா
இந்த நாவல், 1983 இல் சாவி பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. நான் சமீபத்தில் தான் படித்தேன். கதைப்படி, ராஜி என்ற கல்லூரி இளம் பேராசிரியைக்கும், சம்பத் என்ற பக்கா பிராடுக்கும் பெற்றோர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. தன் வசீகரமான பேச்சாலும், அழகாலும் ராஜியை அழகாக ஏமாற்றுகிறான் சம்பத். சம்பத் உண்மையிலேயே நல்லவன் என்று தன் கணவனை கண்மூடித்தனமாக நம்புகிறாள் ராஜி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ராஜிக்கு சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சம்பத்தின் மேல் சந்தேகத்தை விளைவிக்கின்றன. ராஜி, சம்பத்தை பற்றிய உண்மையை கண்டறிந்தாளா? சம்பத்தின் சுயரூபம் தெரிந்தவுடன், ராஜி எடுக்கும் முடிவென்ன? என்பதை மிகவும் எதார்த்தமான தன் எழுத்து நடையில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. இந்த நாவலில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. கதை மாந்தர்களான ராஜி மற்றும் சம்பத் இருவரும் ஒவ்வொரு பகுதிக்கு ஒருவர் விதம் அவரவர்களின் பார்வையில் கதையை சொல்லுகின்றனர் ('விருமாண்டியில்' கமலும் பசுபதியும் ஒரே சம்பவத்தை அவரவர் கோணத்தில் சொல்வது போல). ஆனாலும் கொஞ்சம்கூட அலுப்பு தட்டவிடவில்லை. Really i Enjoyed this Novel.

மனைவி கிடைத்தாள் - சுஜாதா
அன்னாசாமியும் கிருஷ்ணமூர்த்தியும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள். அன்னாசாமிக்கு பெண் பார்க்கப் போன இடத்தில் கிருஷ்ணவேணியை பார்க்கிறான் கிருஷ்ணமூர்த்தி. ரொம்பவே சுமாராக இருக்கும் அண்ணாசாமிக்கு இப்படி ஒரு அழகான பெண்ணா? என்ற பொறாமை, கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணவேணியின் மேல் வெறியாக மாறுகிறது கிருஷ்ணமூர்த்திக்கு. இருவரும் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணமூர்த்தியோடு ஒரே வீட்டில் தங்குகிறார்கள் அண்ணாசாமி-கிருஷ்ணவேணி தம்பதியினர். மிகவும் பொறுமையோடு, திட்டமிட்டு கிருஷ்ணவேணியை அடைய நினைக்கிறான் கிருஷ்ணமூர்த்தி. உண்மையில் அதை அவன் சாதித்தானா என்பதே நாவலின் கிளைமாக்ஸ். அக்மார்க் சுஜாதா ஸ்டைல் நாவல். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இது ஒரு குறுநாவல் தான். ஆனால், Extraordinary.


வசந்தகாலக் குற்றங்கள் - சுஜாதா
என்னை மிகவும் ஆர்வமாக படிக்கச் செய்த நாவல் எனலாம் இதை. போனில் ஆபாசமாக பேசி, குழந்தையை கடத்தும் பெரிய இடத்துப் பையன் சுனில், குழந்தைக்காக போராடும் பிரேமா, பூட்டுக்களை லாவகமாக திறக்கும் ஆறுமுகம், அவனுக்கு உதவ வரும் விலைமகள் குமாரி, அவர்களை பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் நவநீத்குமார், உதவி கமிஷனர் பிரபாகர் ராவ் என்று பல கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆபாச போன் கால், அதை தொடர்ந்து குழந்தை கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் கதை என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபிசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பெங்களுர் சூழலில் எழுதப்பட்ட இந்த நாவலுக்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார். 'Awesome' என்ற சொல்லுக்கு பொருத்தமான நாவல் இது என்று சொல்லலாம்.

கமிஷனருக்குக் கடிதம் - சுஜாதா
நாவலின் தொடக்கம் ஒரு விபத்தோடு ஆரம்பிக்கிறது.  டி. ஜி. பியான சுதாகர் மனைவியை பிரிந்து வாழ்பவர். பயிற்சி ஏ. எஸ். பியாக மாயா என்ற பெண் அவரின் டிவிஷனில் சேருகிறாள். சுதாகருக்கும் அவரின் மனைவிக்குமுண்டான ஊடல், குழந்தை பாசம், பெண் போலீசான மாயா மீது எஸ்.பி ரமேஷுக்கு உண்டான காதல் என்று போகிறது கதை. போலீஸ் என்றால் க்ரைம் மட்டுமே அல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் சொல்லியிருக்கிறார் சுஜாதா. வழக்கம் போல சுஜாதாவின் நடையில் நாவல் இருந்தாலும், எதிர்பார்த்ததுக்கு மாறாக இருந்ததால் நாவல் என்னை பெரிதாக ஒன்றும் கவரவில்லை என்பதே உண்மை.

நிலா நிழல் - சுஜாதா
இந்த நாவல் தினமணி கதிரில் முன்பு தொடராக வெளிவந்தது. முகுந்தன் என்ற மிடில் கிளாஸ் மாணவனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். தேசிய அளவில் நடத்தப்படும் பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் செலக்ட் ஆகிறான். ஆனால் வீட்டில் அவனின் அப்பாவுக்கு இவன் படிப்பிற்கே முக்கியத்துவம் தரவேண்டும், அதனால் பம்பாய் போய் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சுத்த டைம் வேஸ்ட் என்கிறார். ஆனால் முகுந்தனும் சில தகிடுதத்தங்கள் செய்து மும்பைக்கு பயணமாகிறான். அங்கே அவனுக்கு லல்லி என்ற பருவப் பெண் அறிமுகமாகிறாள். அவளின் அழகில் அவன் வந்த நோக்கத்தையும் மறந்து அவள் பின்னால் சுற்றுகிறான். கடைசியில் அவனின் கிரிக்கெட் கனவு என்னானது? அவன் காதல் என்னானது? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. கதையில் வரும் கிரிக்கெட் வார்த்தைகளான Pitch, LBW போன்றவை சுத்தமாக எனக்கு புரியவில்லை. மழைகாகவாவது கிரிக்கெட்டில் ஒதுங்கியிருந்தால் தானே? ஆனாலும் எனனை ரொம்பவே ரசிக்கவைத்தது இந்த நாவல். ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் பாக்கி இருக்கு. இந்த நாவலுக்கு ஏன் 'நிலா நிழல்' என்று பெயர் வைத்தார் சுஜாதா?

கோட்டைபுரத்து வீடு - இந்திரா சௌந்தராஜன்
இந்த நாவல் ஆனந்த விகடனில் 31 வாரங்கள் தொடராக வெளிவந்த சஸ்பென்ஸ் நிறைந்த மர்ம நாவல். கோட்டைபுரத்து அரச குடும்பத்தின் ஆண்  வாரிசுகளுக்கு தொடர்ச்சியாக 30 வயதில் மரணம் ஏற்படுகிறது. இதற்க்கு காரணம், கோட்டைபுரத்தின் முந்தைய ராஜாக்களின் சிலரால் கொல்லப்பட்ட வஞ்சியம்மாவின் சாபம் தான் என்று அந்த சமஸ்தானத்து ஜனங்கள் சொல்கிறார்கள். யார் இந்த வஞ்சியம்மா? யார் இவளின் மரணத்திற்கு காரணம்? உண்மையில் இந்த மரணங்கள் சாபத்தால் தான் ஏற்படுகிறதா? இல்லை, யாரோ சிலரின் சதியா?. இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடுகிறார்கள் சமஸ்தானத்தின் இளைய ராஜாவான விசுவும், அவரின் காதலி அர்ச்சனாவும். நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை நல்ல விறுவிறுப்பான நடை. இந்திரா சௌந்தராஜனின் நாவல்களில், இது போன்ற நாவல்கள் எல்லாமே ஒவ்வொரு Master Piece எனலாம். நல்ல சுவாரஸ்யமான நாவல். குறிப்பாக யார் அந்த மூலகாரணி? என்பது தெரியவரும்போது, 'அட' என்று சொல்ல வைக்கிறார் இந்திரா.


க்ரைம் - ரா. கி. ரங்கராஜன்
ஒரு பெரிய கதைக்குள் சில சின்ன கதைகள் என்ற கான்செப்டில் திரு. ரா. கி. ரங்கராஜன் அவர்கள் எழுதிய கோஸ்ட் நாவலைப் போலவே வந்திருக்கும் இந்த நாவல் தான் க்ரைம் . செய்தி வாசிப்பாளரான பாலாவுக்கு ஒரு மிரட்டல் போன் வருகிறது. மாஜி போலீசான அவள் அப்பா தான் சந்தித்த சில முக்கியமான வழக்குகளை தொகுத்து புத்தகமாக போடவிருப்பார். அதில் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவன் அதில் தன் வழக்கு சம்பந்தப்பட்டவை வரக்கூடாது, மீறினால் உன் அப்பா சாவு என் கையில்' என்று மிரட்டுகிறான். தன் அப்பா என்ன விதமான புத்தகம் எழுதவிருக்கிறார்? தன்னை மிரட்டிய அந்த மர்மநபர் யார் என்பதை தன் முறைப் பையனான சுதீரோடு சேர்ந்து எப்படிக் கண்டுபிடிக்கிறாள் என்பதே இந்த நாவலின் கதை. ஒரு ஆறு சிறு க்ரைம் கதைகளோடு சேர்த்து, வாசிப்பதற்கு மிக ஏதுவாக இருக்கிறது இந்த நாவல். மிகவும் ரசித்து படித்தேன்.திரு. ரா. கி. ரங்கராஜனின் எழுத்து நடையில் கற்பனையும் எதார்த்தமும் சரியான அளவில் கலந்து நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு குறை வைக்கவில்லை இந்த நாவல்.

மந்திர மோகினி - கோட்டயம் புஷ்பநாத்
கோட்டயம் புஷ்பநாத்தின் சிறப்பு என்று பார்த்தால் பில்லி சூன்யம், மாந்திரீகம், அமானுஷ்யம் போன்றவற்றை அவருக்கே உரிய பாணியில் மிக அழகாக சொல்லுவார். இந்த நாவலும் மாந்திரீகம் சம்பந்தப்பட்ட கதையே. உன்னி கிருஷ்ணன் என்ற வாய் பேசாத, காது கேட்காத ஒருவனுக்கு, மந்தாகினி என்ற மோகினி அவனை ஊனத்திலிருந்து விடுவித்து அவனுக்கு சகலமுமாக இருக்கிறது. ஒரு காலத்தில் அவனது குடும்பத்தாரை ஏமாற்றி, அவர்களின் சொத்துக்கள் முழுவதையும் அபகரித்துக் கொள்கிறார் புவனேஸ்வரன் நாயர். அவர்களை மந்தாகினியின் துணை கொண்டு உன்னி கிருஷ்ணன் எப்படி பழி வாங்குகிறான் என்பதே இந்த நாவலின் கதை சுருக்கம். மாந்திரீகம், அமானுஷ்யம் என்று படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருக்கிறது இந்த மந்திர மோகினி.

கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்:
நிகழ்காலம், சரித்திரம் மற்றும் இதிகாசமும் சேர்த்து, நிறைய Science Fictions கலந்த கலவையான கதை. சோழ வம்சாவளியினர், கௌரவர்கள், வெளிநாட்டவர்கள், சூப்பர் ஹீரோக்கள் என்று பல கதாபாத்திரங்கள். இவ்வளவு கதாபாத்திரங்களும் இந்திரன் கவர்ந்து சென்று 'கர்ணனின் கவசத்தை' எப்படி அடைகிறார்கள் என்பதே கதை. இந்த சயின்ஸ் Fiction நாவலை படிக்க ஆரம்பித்தபோது இருந்த ஆர்வம், முடியும்போது குறைந்து போனதென்னவோ உண்மை. அதற்க்கு காரணம், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது நான் வேறுவிதமாக கதையின் போக்கை எதிர்பார்த்திருந்தேனா என்றே தெரியவில்லை. ஆனால் நிறைய விஷயங்களை இந்த நாவல் மூலமாக தெரிந்து கொண்டேன். மகாபாரதத்தை படிக்கவும், கபாடபுரத்தை பற்றியும், கடலுக்கடியில் இருக்கும் அட்லாண்டிஸ் நகரத்தை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலை தூண்டியிருக்கிறது இந்த 'கர்ணனின் கவசம்'. கண்டிப்பாக ஒரு முறை வாசிக்கலாம்.

பைனல் கிக்:

இந்த பாடல் என்னை விட என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தான் சொல்வேன். தெலுங்கு படமான மனம் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. அனூப் ரூபன் என்பவரின் இசையில் வந்த இந்த படத்தில், குறிப்பாக  இந்த பாடல் என் Favorite. இந்த பாடலை பாடியவர்களான இணையதுல்லா கான் என்ற பெண்ணின் குரல் Simply Awesome. 




Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக