கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், அக்டோபர் 10, 2011

என் வீட்டு கொலு பொம்மைகள்...

இரண்டு தம்பதிகள் சத்யநாராயணா பூஜை செய்கிறார்கள். பக்கத்திலேயே பெண்கள் அம்மனிடம் மாங்கல்ய பூஜை செய்கிறார்கள். மேற்க்கூரையே இல்லாமல் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. ராவணன் தனக்கு உட்கார இருக்கை தராததால் தன் வாலையே இருக்கையாக்கி அனுமார் அமர்ந்திருக்கிறார். சிங்கம், காண்டாமிருகம், யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக காட்டில் உலாவுகின்றன.


பாவம், செட்டியார் மளிகை பொருட்களை சந்தையில் விரித்து 'சிவனே' என்று உட்கார்ந்திருக்கிறார். ஒருத்தர் கூட அவரிடம் போனி பண்ணவில்லை. சந்தையில் கடை விரித்தால் மட்டும் போதுமா? யார் கூவி விற்பது? ஆனால் செட்டியாருக்கு வாயிருந்தும் கூவி விற்கமுடியவில்லை. அவரென்ன ஊமையா? தெரியலையே. காரணம்? இப்போது நான் சொன்ன எல்லாருமே என் வீட்டு கொலு பொம்மைகள்.

சிறுவயதில் என்னுடைய பாட்டி வீட்டில் தான் கொலு பொம்மைகளின் அறிமுகம் கிடைத்தது. நரிக் குறவர், நேரு, ராஜா ராணி, விவசாயி போன்ற பொம்மைகளை அந்த சின்ன வயதில் கண்கள் விரிய பார்த்து வியந்தேன். பள்ளிக் கூட நண்பர்களிடம் 'எங்க பாட்டி வீட்டுல கொலு வச்சிருக்காங்க தெரியுமா?' என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.
பொதுவாகவே நம் பண்டிகைகள் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து விடும். ஆனால் இந்த கொலு மட்டும் விதிவிலக்கு. மொத்தமாக ஒன்பது நாட்கள் நடைபெறும். இருபது வருடங்களுக்கு முன்பு யார் வீட்டிலாவது கொலு வைத்தால், அந்த வீட்டு வாண்டுகளுக்கு நேரு, காந்தி, டீச்சர் போன்ற வேடமிட்டு அவர்களை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துப் போய் 'எங்க வீட்டுல கொலு வச்சிருக்கோம். எல்லாரும் வந்திருங்க' என்று அந்த குழந்தைகளின் மூலமாக அழைப்பார்கள்.

பெரும்பாலான வீடுகளில் கொலு பார்க்க வரும் உறவினர்கள் ஏதாவது ஒரு கொலு பொம்மையை வாங்கி வந்து பரிசளிப்பார்கள். ஏற்கனவே ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் மொத்தமாக இடங்களை ஆக்கிரமித்திருக்கும். அந்த இடங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உறவினர் கொடுத்த பொம்மையை வைப்பார்கள். இந்த விஷயத்தில் எங்கள் வீடும் விதிவிலக்கல்ல.

கொலு வைத்திருக்கும் வீடுகளில் கண்டிப்பாக சுண்டல் கிடைக்கும். நம்பிப் போகலாம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சுண்டல். அங்கே பெண்களுக்கு உள்ள ஒரே கண்டிஷன், ஏதாவது ஒரு பக்தி பாடல் பாட வேண்டும். திரைப்பட பக்தி பாடல்களென்றால், நோ ப்ரோப்ளம். சாயங்காலம் ஆறரை மணியானால் ஒரு பெரிய வாண்டுக் கூட்டங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று 'மாமி, கொலு மாமி' என்று கேட்டு உள்ளே வருவார்கள்.
வந்த அனைவரும் பொறுமையாக கொலுவை சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே ரசித்து விட்டு பின்னர் பாட ஆரம்பிப்பார்கள். என் அம்மாவுக்கு நன்றாக பாடத்தெரியும். என் அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. ஆனால் என் தங்கைக்கு சுத்தமாக பாடத்தெரியாது. 'இது நம்ம ஆளு' படத்தில் வரும் பாக்யராஜ் மந்திரம் தெரியாமல் 'ச்வாஹா' என்று சொல்லி தப்பிப்பதை போல அவளும் ஆரம்பத்தில் கொஞ்சம் பாடிவிட்டு பின்பு வாயசைக்க ஆரம்பித்து விடுவாள்.

எங்கள் வீட்டில் கொலு வைத்தால் முதலில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? என் அப்பா தான். மனிதருக்கு வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களெல்லாம் ஞாயிறு தான். அசைவப் பிரியரான அவர் தான் ரொம்பப் பாவம். அடுத்தது, எங்கள் வீட்டில் நாங்கள் செல்லமாக வளர்க்கும் இரண்டு நாய்கள். இரண்டையும் ஒரு ரூமில் போட்டு அடைத்து விடுவோம். அதுவும் கொலு பொம்மைகளில் இருக்கும் ஒரு பூனை பொம்மையை இரண்டும் முறைத்துக் கொண்டே இருக்கும். அது தான் செம காமெடி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் அம்மா இப்படி சொன்னார்கள், 'வீட்டுல கல்யாண கொலு செட் வச்சா அந்த வீட்டுல கல்யாணம் ஆகாம இருக்கறவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்' என்று. அவர் சொன்னது என்னுடைய காதலியிடம். அவள் அவசர அவசரமாக சென்னை பாரிசில் உள்ள குறளகம் போய் ஒரு கல்யாண கொலு செட் வாங்கி எங்கள் வீட்டுக் கொலுவில் வைத்தாள். சீக்கிரம் அவளுக்கும் எனக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
கல்யாணமும் நடந்தது. எங்களுக்கல்ல. எங்களைத் தவிர ஊரில் கல்யாணம் ஆகாமல் இருந்த பலபேருக்கு திருமணங்கள் நடந்தது. அது தான் ஹை லைட். இதை மூட நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. 'காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை'யாக எங்காவது ஒரு கொலு வீட்டில் கல்யாண கொலு செட் வாங்கி வைத்தவுடன் திருமணம் நடந்திருக்கலாம். ஆனால் அதையே தொடர நினைப்பது தான் அபத்தம்.

எங்கள் வீட்டில் கொலு வைப்பதென்பது கடந்த ஆறேழு வருடமாகத்தான் நடைபெறுகிறது. கொலு வைப்பது ஒன்றும் சாதாரணம் விஷயம் இல்லை. கொஞ்சம் அதிகப்படியான வேலை கொடுக்கும் இந்த கொலு. வருஷத்திற்கு ஒரு முறை அனைத்து பொருட்களையும் பத்திரமாக பரனையிலிருந்து இறக்கி கொலுப் படிகளில் சரியாக அடுக்க வேண்டும்.

ஒரு சில பொம்மைகள் வர்ணம் போய் சற்று செம்மண் கலர் தெரியும். அதற்க்கு தோதான வர்ணத்தை வாங்கி பெயிண்ட் அடிக்க வேண்டும். அப்படி சரியாக பராமரித்துக் கொண்டால் ஐம்பது வருடமானாலும் புதுசு போல அழகாக இருக்கும். எங்கள் வீட்டில் உள்ள பல பொம்மைகள் மூன்று தலைமுறையை சார்ந்தவை. ஒவ்வொன்றும் 'பாட்டி காலத்து பொக்கிஷங்கள்'.
கொலு முடிந்து அவற்றை சரியாக அடுக்கி பெட்டியில் வைக்க வேண்டும். முக்கியமாக உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது தான் ரொம்ப முக்கியம். இந்த இரண்டு வருடம் வெளிநாட்டில் வேலைக்கு வந்த பிறகு தொலைபேசியில் 'கொலு எப்படி போச்சி?' என்ற என் கேள்விக்கான பதிலில் தான் கொலு என் மனக்கண்ணில் தெரிகிறது. என்னதான் நாம் கை நிறைய சம்பாதித்தாலும் அதை நம் மக்களோடு செலவழிப்பதே ஒரு தனி சுகம்.

சில பண்டிகைகள் பொதுவானது. பொங்கல், தீபாவளி போல. ஆனால் சில பண்டிகைகள் ஒரு சிலரால் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த கொலு போல. நேற்று என் தந்தை செய்தார், இன்று நான் செய்கிறேன். நாளை என் பிள்ளைகள் செய்வார்களா என்பது சந்தேகமே. அவர்களுக்கு ஆசை இருந்தாலும் சோம்பல் படாமல் செய்ய வேண்டுமே. அது தான் புரியவில்லை.

இன்று திருமணங்கள் ஏக கதியில் நடைபெறுகின்றன. சடங்கு சம்பிரதாயங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறுத்து வருகிறோம். அதற்க்கு நாம் சொல்லும் காரணம், 'நேரமில்லை' என்பது தான். நம் சம்பிரதாயங்களை, சடங்குகளை, நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களை நாம் தான் செய்ய வேண்டும். அதற்க்கு நாம் 'நேரமில்லை' என்று சொன்னால் நம் பிள்ளைகளுக்கு நாமே சொல்லித் தரவேண்டிய வாழ்வின் நெறிகளை சொல்லத்தவறிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


படங்கள்: என் வீட்டு கொலுவில்
எடுத்தது.
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
என்றும் அன்புடன்

Post Comment

3 comments:

Mohamed Faaique சொன்னது…

இன்னைகுத்தான் இப்படி ஒரு விஷயம் இருக்குரதே தெரியும்... இலங்கைல கொண்டாடாங்களானு தெரியல.. ஆமா அது எதுக்கு கொண்டாடுராங்க??

ஆமா...கம்பாலா`ல என்ன பண்ரீங்க??? எண்ணை கிணறா???

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நம் சம்பிரதாயங்களை, சடங்குகளை, நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களை நாம் தான் செய்ய வேண்டும். அதற்க்கு நாம் 'நேரமில்லை' என்று சொன்னால் நம் பிள்ளைகளுக்கு நாமே சொல்லித் தரவேண்டிய வாழ்வின் நெறிகளை சொல்லத்தவறிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

படங்கள்: என் வீட்டு கொலுவில் எடுத்தது.// சூப்பர்.,

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக