ஞாயிறு, அக்டோபர் 02, 2011

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - சில நினைவுகள்


இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல.
சிவாஜி கணேசன் மறையும் போது எனக்கு வயது 16. அந்த வயதிற்கு அது ஒரு நியூஸ். அதற்குப் பிறகுதான் சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது? என்பதை அவரின் திரைப்படங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
நடிப்பு என்பது நடிக்கக்கூடியது அல்ல, அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி வெளிக்கொணர்வதே நடிப்பு. ஒரு காலத்தில் உணர்ச்சிப்பூர்வமான கதைகளோ கதாபாத்திரங்களோ நம் தமிழ் திரையுலகில் உலவவில்லை. தெய்வ நம்பிக்கைகளும், மூட நம்பிக்கைகளும் கொண்ட படங்களே வந்து கொண்டிருந்தன அன்றைய காலகட்டத்தில். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சமூகக் கருத்துக்களைக் கொண்டு படங்கள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் தான் சிவாஜி சினிமாவில் கால் பதிக்க ஆரம்பித்தார். இவர் அறிமுகமான முதல் படமே சமுக அவலங்களை சொல்லும் படம் தான். அதற்குப் பிறகு தான் பலவகையான திரைப்படங்கள் வெளிவர தொடங்கின. அப்படிப் பட்ட படங்களை இயக்கிய இயக்குனர்களின் ஒரு சாய்ஸ், நடிகர் திலகம் தான். எந்த ஒரு கதாபாத்திரமாகட்டும், வெளுத்து வாங்கிவிடுவார்.

கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சிவா பெருமான் போன்ற பாத்திரங்கள் இன்றைக்கு வரைக்கும் இப்படித்தான் இருக்கும் என்று கண்டுகொண்டது சிவாஜியின் நடிப்பில் தான். சில விஷமிகள் அவரின் நடிப்பை 'மிகையான நடிப்பு (Over Acting)' என்று கூறுகிறார்கள். அன்றைய இயக்குனர்களுக்கு அப்படிப்பட்ட நடிப்பு தான் தேவைப்பட்டது. அன்று சிவாஜி மட்டுமல்ல, பல நடிகர்கள் அவ்வாறு தான் நடித்தார்கள். அப்போதிருந்த மக்கள் அதைத்தான் ரசித்தார்கள். அதே சமயம், சிவாஜி நடித்த இரண்டு படங்களான முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் படங்களில் பாரதிராஜாவும், கமல்ஹாசனும் அவரை சரியாக கையாண்டிருக்கிறார்கள். சிவாஜி ஒரு இயக்குனர்களின் ஹீரோ என்பதற்கு இதுவே சாட்சி.ரஜினிகாந்த் என்றால் ஸ்டைல், கமல்ஹாசன் என்றால் நடிப்பு என்று இன்றிருப்பவர்கள் பொதுவாக சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டும் கலந்தது தான் சிவாஜி. அவரின் நடிப்பும் ஸ்டைலும் என்றும் தனித்துவம் மிக்கவை. இன்றைய ஹீரோக்களுக்கு சிவாஜியை மிஞ்சி நடிப்பதென்பது இயலாத காரியம். அவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு நடித்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் சிவாஜியின் நடிப்பு தனியாக தெரிந்து விடும். அது தான் நடிகர் திலகத்தின் தனித் திறமை. மார்லன் பிராண்டோ போன்ற நடிகர்கள் கூட 'சிவாஜியைப் போல் என்னால் நடிக்க முடியாது, அவரால் என்னைப் போல் நடிக்க முடியும்' என்று சொல்ல வைத்தவர் நம் சிவாஜி.சிவாஜி இறந்தபோது பல ஊர்களில் அவரின் ரசிகர்கள் அவரின் படத்திற்கு மாலை போட்டிருந்தார்கள். ஆனால் எதோ ஒரு ஊரில் 'நடிப்பு' என்று ஒரு போர்டில் எழுதி அதற்க்கு மாலை போட்டிருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கையில் தோல்வியடைந்ததற்கு காரணம், அவருக்கு மக்களிடத்தில் அரசியல்வாதியாக நடிக்கத் தெரியவில்லை. ஆம். ஒரு சிறந்த நடிகனுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியவில்லை. சிவாஜி வாழ்ந்த காலத்தில் சினிமாவில் இருந்த முக்கால் வாசிப் நடிகர்களுக்கு நடிக்கத் தெரியும். ஆனால் இன்று தமிழ் சினிமாவில் நடிக்கும் கால்வாசி பேருக்குக் கூட சரியாக நடிக்கத் தெரியவில்லை. ஒரு வேளை சிவாஜி என்று நடிகர் இறந்து விட்ட தைரியத்தில் தான்தோன்றித்தனமாக நடிக்கிறார்களோ என்னவோ?

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்



4 கருத்துகள்:

  1. அருமையான நினைவஞ்சலிப் பகிர்வு. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. திரை உலகின் ஜாம்பவான்...

    மறக்கமுடியாத நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  3. தற்ப்போது சிவாஜி இருந்திருந்தால் தற்போதைய நடிகரிகளின் நடிப்பைப்பார்த்து ரத்தகண்ணீர் வடித்திருப்பார்...


    சிவாஜியின் நடிப்பை ஈடுசெய்ய தற்போதைக்கு யாரும் இல்லை...

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.. சிறந்த நினைவஞ்சலி

    பதிலளிநீக்கு