ஞாயிறு, மே 29, 2011

முதல் சீரியல் கொலைகாரன் David Berkowitz - ஒரு பார்வை

என் கடந்த பதிவுகளான Necrophilia, டேட் பண்டி போன்ற பதிவுகளின் கருத்துரைகளில் சிலர், இது மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்திலிருந்த தகவல்கள்' என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் இங்கே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நான் என் முதல் பதிவிலேயே இந்த சைசோ கில்லர் தொடர் பதிவு
எழுத காரணம், மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகம் தான் என்று முன்பே சொல்லியிருக்கின்றேன். அந்த புத்தகத்தில் மதன் இரண்டே இரண்டு சைகோ கொலைகாரர்களை பற்றியே விரிவாக குறிப்பிட்டிருந்தார். மற்ற சீரியல் கில்லர்களை ஆங்காங்கு கொஞ்சம் சொல்லியிருப்பார். நான் அவர்களை பற்றிய தகவல்களை அனைத்தையும் சேகரித்து என் ப்ளாக்கில் எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை நான் என் பதிவுகளிலும் எழுதுகிறேன். இந்த 'சில வரிகளுக்காக' நான் மதனின் பெயரை மெனக்கெட்டு குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன். சரி, இப்போது நாம் தெரிந்து கொள்ளப்போகும் இந்த சீரியல் கொலைகாரனின் பெயர் டேவிட். அவனுக்கு பத்திரிக்கைகள் வைத்த பெயர் 'son of sam'.
David Richard Berkowitz என்பவன் 1 ஜூன் 1953 அன்று நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரத்தில் பிறந்தான். இவனை ஒரு தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தார்கள். இவனை பெற்ற தாய் யாரென்று அவனுக்கு வாலிப வயது வரும்வரை தெரியாது. இவன் வளர, வளர இவனிடம் முரட்டுத்தனமும் வளர ஆரம்பித்தது. இவன் சிறு வயதிலிருந்தே யாருடனும் நெருங்கி பழக மாட்டான். எப்போது தனிமையிலே இருக்க ஆசைப்படுவான். இவன் 'தான் ஒரு அநாதை' என்ற மனப்பான்மை இவனின் மனதில் சிறுவயதிலிருந்தே வளர்ந்து கொண்டே வந்தது. இவன் வீட்டை விட்டு வெளியே வருகிறான் என்றால், அது இவனுக்கு பிடித்த Baseball விளையாடத்தான். அதே சமயம் இவனின் வளர்ப்பு தாய்க்கு மார்பக புற்று நோய் தாக்கி அவதிப்பட்டு கொண்டிருந்தாள். சில நாட்களில் அந்த தாய் இறந்து விட்டாள். தன்னை வளர்த்த தாய் இறந்ததை நினைத்து தன் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதாக நினைத்து வருந்தினான் டேவிட். மனைவி இறந்த இரண்டு வருடங்களில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் டேவிட்டின் வளர்ப்பு தந்தை. புது மனைவியோ கணவனை வளர்ப்பு மகனிடமிருந்து பிரித்து, ப்ளோரிடாவுக்கு தன் கணவனை அழைத்து சென்று விட்டாள்.
யாருமே இல்லாமல் பொழுதை தனிமையில் கழித்தான் டேவிட். அப்போது வாலிப வயதை எட்டியிருந்தான் அவன். அந்த தனிமையிலிருந்து விடுபட நினைத்து ராணுவத்தில் சேர்த்தான் டேவிட். மூன்று வருடங்கள் கழித்து ராணுவத்திலிருந்து வந்தான் டேவிட். வந்த வேகத்தில் தன்னை பெற்றெடுத்த தாயையும் கண்டுபிடித்தான். அவனுக்கு ஒரு தங்கையும் இருந்தாள். ஆனால் அவன் அவர்களை தொடர்ந்து சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தான் டேவிட். பெரும்பாலான நேரங்களை தனிமையில் செலவிட்ட டேவிட்டின் மூளையை அந்த தனிமையே மிருகமாக மாற்றியதேன்று சொல்லலாம். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் ஒரு பெண்ணை கத்தியால் கொலை செய்ய பார்த்தான். அதற்கு காரணம், அவன் தன்னை தானே சாத்தானாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அவனுடைய காதில் 'Sam' எனபவரின் குரல் அடிக்கடி 'கொலை செய்' என்று கட்டளையிடும். முதலில் அந்த குரலின் கட்டளை மனநிலையிலிருந்து விடுபட நினைத்த டேவிட், பின்பு அவனே விரும்பி அந்த 'sam' இன் கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பித்து 'Son of sam' ஆனான்.
ஜூன் 29, 1976 அன்று ஒரு ஜோடி, வீட்டின் வெளியே இருக்கும் பார்க் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவர்களை ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றான். அதே போல மாதத்திற்கு ஒரு ஜோடி கொலை செய்யப்பட்டார்கள். நியூயார்க் போலீஸ் உஷாரானார்கள். சீரியல் கொலைகாரனை தேடும் பணி துரிதமாக செயல்பட்டது. இதற்கிடையில் ஏப்ரல் 17, 1977 அன்று ஒரு ஜோடி கொலையுண்டார்கள். அப்போது அவர்களின் பிரேதத்திற்கு பக்கத்திலேயே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் 'என் தந்தை சாம் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இந்த கொலைகளை செய்துகொண்டிருக்கிறேன். நானே நேரம் வரும்போது உங்களிடம் (போலீசிடம்) சரணடைகிறேன். அதுவரை நீங்கள் என்னை பின்தொடர வேண்டாம். மீறி தொடர்ந்தால், என் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாவீர்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் கடைசியில் 'Son of sam' என்று எழுதப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இது போன்ற 'ஒரே ஸ்டைல் தொடர் கொலைகள்' நடப்பது அதுவே முதல்முறை.

இந்த சீரியல் கொலைவழக்கிற்கு 'Operation Omega' என்று நியூயார்க் போலீசார் பெயர் சூட்டினார்கள். இந்த வழக்கிற்காக சுமார் 200 துப்பறியும் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றார்கள் போலீசார். இதற்கிடையில் ஒரு பார்க்கில் திரும்பவும் ஒரு கொலை நடந்தது. அப்போது போலீசார் அந்த பூங்காவிற்கான கார் பார்க்கிங் டிக்கெட்டை பரிசோதித்து பார்த்தார்கள். ஒவ்வொரு டிக்கெட்டிலும் காரின் நம்பர் எழுதப்பட்டிருக்கும். அதன்படி கொலை நடந்த நேரத்திற்கு முன்பு வந்த கார்களின் உரிமையாளர்களின் வீட்டு விலாசத்தை தெரிந்து கொண்டு அவர்களை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். அப்படி விசாரிக்கப்போன ஒரு வீட்டில், ஒரு சில தகவல்கள் சந்தேகத்திற்கிடமாக இருந்தது., ஒரு வேளை இந்த வீட்டில் இருப்பவன் தான் அந்த கொலைகாரனாக இருக்குமோ? என்று சந்தேகப்பட்டு போலீசார் அவனுக்காக வீட்டின் வெளியே மறைந்திருந்து காத்திருந்தார்கள். அப்போது ஒருவன் தன் வீட்டை நோக்கி சாவதானமாக நடந்து போய்க்கொண்டிருந்தான். போலீசார் பிடிக்க நினைத்தது அவனை தான். குற்றவாளி கொஞ்சம், கொஞ்சமாக போலீசாரின் எல்லைக்குள் நெருங்கியதும், 'Freeze' என்று ஒரு போலீசார் அவன் பின் மண்டைக்கு குறிவைத்து கொன்னார். அந்த மனிதன் அப்படியே நின்றான். மெதுவாக அவனை நெருங்கிவந்த போலீசார், வேகமாக அவனின் இரு கைகளையும் பின்னாடி வைத்து கட்டியபடியே அவனை கேள்வி கேட்டார், 'நான் உன்னை பிடிச்சிட்டேன். நான் யாரை பிடிச்சிருக்கேன்னு தெரியுமா? என்று கைது செய்யப்பட்டவனை கேட்க, 'நீங்க யாரை பிடிச்சிருக்கிங்கன்னு உங்களுக்கே தெரியும்' என்று மரியாதையாக சொன்னான் அவன். 'எனக்கு தெரியாது. நீயே சொல்லு' என்று போலீசார் திரும்பவும் அவனிடம் கேட்க, அவன் மெலிதாக ஒரு புன்முறுவல் பூத்தபடி, 'Son of Sam. David Berkowitz' என்று அவனிடமிருந்து பதில் வந்தது.

டேவிட் இதுவரை ஆறு பேரை கொன்றும், ஏழு பேரை கொலை செய்ய முயன்று காயப்படுத்தியும் இருக்கிறான். இவன் தான் உலகின் முதல் சீரியல் கொலைகாரன் என்ற 'பெருமைக்கு' உரியவன். இவனை பிடிப்பதற்கு பெரும் காரணமாக இருந்தவர் FBI யில் இருந்த புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் ராபர்ட் Ressler. இவர் தான் ஒரே ஸ்டைல் கொலை செய்பவர்களுக்கு 'சீரியல் கில்லர்' என்று முதன்முதலாக பெயர் சூட்டியவர். டேவிட் நியூயார்க் பூங்காக்கள், தெருக்கள் என எங்கேயாவது காதல் ஜோடி தென்பட்டால் போதும், 'Excuse me' என்று ஒரு புன்னகையுடன், தனது இடது கையால் காரின் கதவு கண்ணாடியை தட்டுவான். கண்ணாடியை இறக்கியவுடன், டேவிட்டின் வலது கையில் உள்ள துப்பாக்கி வெளிப்படும். இருவரின் மூளையையும் சிதற அடித்துவிட்டு, தான்பாட்டுக்கு போய்விடுவான். இப்படித்தான் இவன் பல கொலைகளை செய்தான் டேவிட். டேவிட்டிற்கு 'son of sam' என்ற பெயரை தவிர இன்னொரு பெயரும் இருக்கு. அவனை '44 Caliber Killer' என்றும் சொல்லுவார்கள். அவன் கொலை செய்ய உபயோகப்படுத்தியது இந்த '44 Caliber' ரக கைத்துப்பாக்கி தான். நீதிமன்றத்தில் டேவிட்டிற்கு 365 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. இன்றும் டேவிட் என்கிற Son of Sam நியூயார்க் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் அவன்.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்

2 கருத்துகள்:

  1. தொடர் கொலைகாரர்களைப் பற்றிய நிறைய படங்கள் உண்மையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்தேன்.

    தமிழில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என தேடினேன். புதையலே கிடைத்துவிட்டது.

    தமிழில் இதனை தந்தமைக்கு என்னைப் போன்ற சில தேடல்வாதிகள் உங்களுக்கு மிகவும் கடைமைப் பட்டிருக்கின்றார்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு