கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, ஜூன் 03, 2011

ஒரு சிம்பிளான ஆவி - அமானுஷ்ய தொடர் பகுதி - 1

எனக்கு 'பேய்' என்றாலே கொஞ்சமல்ல, நிறையவே பயம். ஆனால் பேய் கதைகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமோ ரொம்ப அதிகம். குறிப்பாக 'சினிமா பேய்களை' அறவே ஒதுக்கி விடுவேன். காரணம், அதில் பேய்களை சற்று மிகைபடுத்தி காட்டியிருப்பார்கள். எனக்கு பேய்களை பற்றிய நிஜக்கதைகளை கேட்பதும், படிப்பதும் ரொம்ப இஷ்டம். ஏற்கனவே நான்
சீரியல் கில்லர் தொடர், பழைய படங்களின் திரை விமர்சனம் என்று எழுதி வருகிறேன். இனி பேய் பற்றிய உண்மை கதைகளும் என் பதிவுகளில் பார்க்கலாம். இங்கே நான் சொல்லப்போவது நான் படித்த சில உண்மையான அமானுஷ்ய கதைகளை மட்டுமே பதிவேற்றப்போகிறேன். இனி என் பதிவின் முதல் பேய் கதையான 'சிம்பிள் ஆவியை' பார்க்கலாம்.

டாக்டர் கென்னத் வாக்கர் உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை. நியூரோ சர்ஜன். இன்றைய பிரபல சர்ஜன்களுக்கெல்லாம் பீஷ்மர் போன்றவர். சாமான்யர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டுப்போன 'The Story of Medicine' போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, ஆவிகளை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர். The Unconscious mind என்ற அவருடைய புத்தகத்தில் Appartions என்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஆவி அது!

வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல். மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லாத, ரொம்ப ப்ராக்டிகலான மனிதர் அவர். லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ரோவல், கென்னத் வாக்கரிடம் விவரித்த நிகழ்ச்சி இது!
மிகவும் சிம்பிளான ஆவி அது! வாக்கர், இது பற்றி புத்தகத்தில் எழுதியதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகிறார் - 'டாக்டர் ரோவல் என் நீண்டகால நண்பர். பொய் சொல்லி காலை வாரிவிடுபவரோ, அதிகப்படியான கற்பனை செய்து திரித்து சொல்பவரோ அல்ல. அவர் ஒன்றை பார்த்தால் நான் பார்த்ததை போல!'
டாக்டர் ரோவல் விவரித்தது இது அப்படியே!
மதியம் 12 மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷங்கள் இருந்தன. என் ரௌண்ட்சை முடித்துக்கொண்டு (செயின்ட் பிரையாஸ்) ஆஸ்பத்திரியிலிருந்து பக்கத்தில் உள்ள மெடிக்கல் கல்லூரிக்கு நடந்தேன். இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் பாலம் போல ஒரு வராண்டா உண்டு. நான் அதில் நடந்து சென்றபோது எதிரே ஒரு நர்ஸ் மெல்ல நடந்து வந்தார். வயது ஐம்பது இருக்கும். மருத்துவமனையின் உடை - வெளிர் நீலத்தில் வெள்ளை புள்ளிகள் கொண்ட உடையை அணிந்திருந்த அவரை நான் அதுவரை அந்த ஆஸ்பத்திரியில் பார்த்ததில்லை. நான் அருகில் சென்றபோது சற்று ஒதுங்கிய அவரை பார்த்து, நாகரிகம் கருதி என் தொப்பியை தொட்டு மரியாதை காட்டினேன். அவரும் மெல்ல தலையசைத்து விட்டு என்னை தாண்டி செல்ல, எனக்கு எதோ பொறி தட்டியது. அவர் அணிந்திருந்த சீருடையில் எதோ மாறுதல். கைப்பகுதி சற்று பழைய ஸ்டைலாக (old Fashioned) இருந்தது. அது நீளமான வராண்டா. அந்த நர்ஸ் என்னை தாண்டி சில அடிகள் கூட போயிருக்க முடியாது. சரேலென்று நான் திரும்பி பார்த்தபோது, அங்கு நர்ஸ் இல்லை. இருபுறமும் தோட்டம். சத்தியமாக அதற்குள் அவர் எங்கேயும் போயிருக்க முடியாது.
அதாவது, கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிட்டார் என்பது தான் உண்மை. எனக்கு பயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், திடிரென்று ஒருவர் எப்படி முழுசாக மறைய முடியும்? வியப்புணர்வு தான் நிறைய இருந்தது. மாணவர்களுக்கு ஒரு லெக்சர் தரவேண்டியிருந்தது. அதை முடித்து விட்டு, லஞ்ச் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஆஸ்பத்திரிக்கு போனேன். வழியெல்லாம் என் கண்கள் அலைபாய்ந்தன. தலைமை மேட்ரனை தேடினேன். அவர் இல்லாததால் மற்ற சீனியர் நர்ஸ்களை ஆபிஸ் அறைக்கு அழைத்தேன். 'சுமார் 50 வயதுள்ள சற்றே நீளமான மூக்கோடு கூடிய நர்ஸ் இங்கே பணிபுரிகிறாரா?, என்று நான் ஆரம்பித்த உடனேயே அங்கு ஓர் இறுக்கமான மௌனம் நிலவியது. பிறகு உதவி தலைமை மேட்ரன் மெல்லிய குரலில் கேட்டார். 'டாக்டர், எட்டாம் நம்பர் வார்டு சிஸ்டரை பார்த்திங்களா?'
மேலும் விசாரித்ததில், ஐந்தாறு நர்ஸ்கள் 'அதை' பார்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது. எல்லோரும் ஒரே மாதிரி அடையாளங்கள் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு பிறகு இன்னொரு பணியாளர் மெதுவாக சொன்னார். 'டாக்டர்! பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எட்டாம் நம்பர் வார்டில் டியூட்டிக்கு போக எல்லோருமே தயங்குகிறார்கள். பகல், இரவு என்றில்லை. சற்று கூட்டமில்லாமல் அமைதியான நேரத்திலெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக அந்த நர்ஸ்! ஆகவே, நாங்கள் தனியாக அந்த வார்டில் உட்காருவதை தவிர்க்கிறோம்' என்றார்.

என்னை போலவே இன்னும் சில சீனியர் மருத்துவர்கள் அந்த நர்சை நேருக்குநேர் பார்த்திருக்கிறார்கள். அப்படி ஒருவர், ரிட்டயர் ஆகிவிட்ட டாக்டர் Frank என்பவர் வீட்டுக்கு போய் இது பற்றி கேட்டேன். (நர்ஸ்கள் ஏதாவது கதைகட்டி விடலாம் இல்லையா!) டாக்டர் Frank தானும் அந்த நர்ஸை பார்த்ததாக ஒப்புக்கொண்டார். அவர் பார்த்தது மாலை 6 மணி - லேசாக இருட்ட ஆரம்பித்த நேரம். Frank பார்த்ததும் அதே வராண்டாவில் தான். சில வித்யாசங்கள் இருந்தன. அந்த நர்ஸ் சற்று வேகமாக நடந்து வந்ததாகவும், முகத்தில் எதோ கலவரம் படிந்திருந்ததாகவும், தன்னை நோக்கி வரும்போதே, கண்ணெதிரே 'பளிச்' சென்று மறைந்து போனதாக சொன்னார் Frank!

- இத்தனையும் டாக்டர் ரோவல், கென்னத் வாக்கரிடம் சொன்ன விஷயங்கள்.

ஆக, யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாத எளிமையான ஆவி அது.

டாக்டர் வாக்கரின் விளக்கப்படி, ஆவிகளுக்கு கால்கள் தெரியாது என்பதும், அது தரையிலிருந்து சில அங்குலங்கள் உயரத்தில் மிதந்து வரும் என்பதும் தவறான கருத்து. 'எட்டாம் வார்ட் சிஸ்டர் நன்கு தரைபதிய நடந்து வந்தார். புகை மண்டலமெல்லாம் இல்லை. உடம்பின் அவுட்லைன், மூக்கு, கண்கள் எல்லாம் தெளிவாக, 'ஷார்ப்'பாக இருந்தன. அதைவிட பெரிய விஷயம், நர்ஸ் நடந்து வந்தபோது மெலிதாக அவருடைய நிழலும் வராண்டாவில் கூடவே வந்தது!' என்கிறார் அந்த டாக்டர். ஒரே ஒரு நர்ஸ் மட்டும் 'அந்த நர்சுக்கும் மேலதிகாரிகளுக்கும் எதோ வாக்குவாதம் ஏற்பட - ஒரு தலைமை டாக்டர் கடுமையாக நர்சிடம் எதோ சொல்ல, சென்சிடிவ் டைப்பான அந்த நர்ஸ் மனம் உடைந்து ஓடிப்போய் அந்த ஆஸ்பத்திரியின் நாலாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கதையை' அந்த டாக்டரிடம் சொன்னாள்.
நன்றி: மதனின் 'மனிதனும் மர்மங்களும்', கிழக்கு பதிப்பகம்.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).என்றும் அன்புடன்

Post Comment

6 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Interesting.

ஜீ... சொன்னது…

மதனின் இந்தப் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!

uthayan சொன்னது…

good

farook சொன்னது…

ரொம்ப நல்ல நிகழ்வு

UmaMaheswari சொன்னது…

மிகவும் நன்ரர்க இருந்த்து....வித்யாசமானது...

kavi சொன்னது…

kathaiyaga matum yatru kolkiren.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக