கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, மே 07, 2011

கிணறு - நாம் தொலைத்த நீருற்று பொக்கிஷம்


காலையில் அரக்கபரக்க எழுந்து, குளியலறைக்கு சென்று ஒரு ஜக்கு தண்ணிரை எடுத்து உடம்பில் ஊற்றும்போது, தண்ணீர் நம் உடம்பை முழுதும் நனைக்காது. ஒரு ஜக்கு தண்ணீர் எப்படி முழுஉடம்பையும் நனைக்கும்? அதுவே ஒரு வாளி தண்ணீராக இருந்தால், அதுவும் கிணற்றில் இருந்து தண்ணிரை இறைத்து அதை அப்படியே தலையில் உற்றும்போது, ஒரு
விதமான பரவசமும், உற்சாகமும் நம் உடம்பிற்கும் மனதிற்கும் ஓட்டும். அந்த எனர்ஜி அந்த நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். இன்றைய நாகரிக உலகத்தில் அன்றைக்கு நாம் பார்த்த கிணறு இன்று ஒரு போர் தண்ணீராக எப்படி வடிவம் பெற்றது? இந்த வடிவமாற்றம் நம் வருங்கால சமுதாயத்திற்கு வரமா அல்லது சாபமா? இந்த கிணறு பற்றிய பதிவை நான் அலச போவதில்லை. எனது சிறுவயது வாழ்க்கையில் என்னோடு இருந்த சிலர் வீட்டு கிணற்றடி நினைவுகளை அசைபோடுகிறேன்.


சிறுவயதிலிருந்தே நான் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன். நான் முன்பு குடியிருந்த வீட்டில் கிணறு கிடையாது. ஆனால் என் பெரியம்மா வீட்டில் கிணறு இருக்கும். அவர்களும் வாடகை வீடு தான். அந்த வீட்டுகிணறு அமைந்திருக்கும் இடம், குடித்தன வீடுகளின் மையப்பகுதியில். கோடைகாலங்களில் கிணற்று நீர் சுமார் இருபது அடி ஆழத்தில் இருக்கும். மழை காலங்களில் அந்த கிணற்றை பார்த்தால், தண்ணீர் ஒரு நாலடி தூரத்திலேயே தென்படும். அப்போதெல்லாம் 'இந்த கிணறு முழுவதுமாக ரொம்பி தளும்பக்கூடாதா?' என்று நினைப்பேன். விடுமுறை நாட்களில் நான் அங்கு தங்கியிருக்கும்போது என் பெரியம்மா, பெரியப்பாவிற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொடுப்பது அடியேன் தான். கிணற்றில் நீர் இறைத்ததால் வரும் வியர்வையை போக்க, ஒரு வாளி தண்ணீரை இறைத்து என் தலையில் ஊற்றும்போது ஒரு விதமான குளிர்ச்சி வரும். அந்த உணர்வு இனிவரும் சந்ததியினருக்கு கிடைக்கப்போவதில்லை.

ஒரு முறை சிறுவயதில் என் அப்பாவின் கோபத்திற்கு ஆளாகி என்னை அவர் அடித்து, என்னை தலைகிழாக தூக்கி கிணற்றின் அருகில் காண்பித்தார். ஒரு வினாடி என் உயிர் போய் வந்தது. ஆனாலும் எனக்கு கிணற்றின் மேல் பெரிதாக பயம் இல்லை. என் பாட்டி வீட்டிலும் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணறு எனக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லை. ஆனால் ஆற்றில் திரியும் கெண்டை மீன்களை அந்த கிணற்றில் போட்டு வளர்த்திருக்கிறேன். சமயங்களில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்போது அந்த மீன்களும் வந்துவிடும். திரும்பவும் அவைகளை தண்ணீரில் விட்டுவிட்டு கிணற்றை வேடிக்கை பார்ப்பேன். அன்று நான் வேடிக்கை பார்த்த கெண்டை மீன்களும் இன்று இல்லை, அதை சுமந்த கிணறும் இன்று இல்லை.

நான் முன்பு ஒரு வீட்டில் குடியிருந்தபோது அந்த வீட்டில் கிணறு இருந்தது. அது தான் நான் சென்னையில் கடைசியாக பார்த்த கிணறு என்று நினைக்கிறேன். நான் குடியிருந்த வீட்டிற்கு பின்புறம் தான் அந்த கிணறு இருந்தது. அந்த கிணற்றுக்கு அருகே ஒரு மாமரம், இரண்டு தென்னை மரம், ஒரு சலவைக்கல் என்று அந்த இடம் கொஞ்சம் நன்றாகவே இருக்கும். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகனுக்கு உயிர்கொல்லி நோய் தாக்கியிருந்தது. ஊராரின் அவமான பேச்சிற்கு பயந்து அந்த கிணற்றில் இறங்கி விட்டார். அவரின் மறைவுக்குப்பின் அந்த கிணற்றை மூடிவிட முடிவு செய்தார் வீடு உரிமையாளர். எங்கள் கண்ணெதிரே ஒரு இயற்கை நீருற்று மண்ணில் கடைசியில் புதைந்தே போனது.

வீட்டு கிணற்றிற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. விநாயகர் சதுர்த்தியன்று நாம் வாங்கும் களிமண் பிள்ளையார் கரைந்து போவது நம் வீட்டு கிணற்றில் தான். இன்று அந்த பிள்ளையார் கரைந்து போவது மெரினா கடற்கரையில். இதைவிடக்கொடுமை, சில 'பிள்ளையார்கள்' கரைந்து போவது சென்னை கூவம் நதியில். அது சரி, கூவம் மட்டும் எங்கே கலக்கிறது? கடலில் தானே. இங்கே கரைத்தால் கடவுள் கடலில் கலந்து விடுவார் என்ற நினைத்தார்களோ என்னவோ. ஊருக்கு ஒரு கிணறு இன்று இருக்கலாம், ஆனால் வீட்டிற்கு ஒரு கிணறு...? அன்று சில பெண்கள், தன் காதலன் எழுதிய கடிதத்தை யாருக்கும் தெரியாமல் படித்தது வீட்டு கிணற்றடியில் தான். இன்று எந்த காதலனும் தன் காதலிக்கு காதல் கடிதம் எழுதுவதில்லை. ஒரு வேளை, கிணறில்லாமல் தன் காதலி எப்படி இந்த கடிதம் படிப்பாள் என்று நினைத்தானோ என்னவோ...?

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).என்றும் அன்புடன்

Post Comment

1 comments:

Jegan சொன்னது…

உங்கள் இடுகை நன்றாக உள்ளது. ஆனால் இந்த Twitter bird இடைஞ்சலாக உள்ளது. படிக்கும் இடங்களில் வந்து உட்க்கார்ந்து சுவாரஸ்யத்தை கெடுக்கிறது. சமீபமாக நான் இந்த Twitter வரும் ப்ளாக்குகளை தவிர்த்து வருகிறேன். இதை எடுத்தால் நன்றாக இருக்கும். இப்போது கூட பாதிக்கு மேல் படிக்கவில்லை. ஏதோ வந்ததுக்கு என்னோட ஓட்டை போட்டுட்டேன்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக