கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, மே 15, 2011

2011 தேர்தல்கள முடிவுகள் - ஒரு அலசல்அப்பாடா. ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி மொத்தம் 203 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அதுவும் அதிமுக மட்டும் 146 தொகுதிகளை கைப்பற்றியிருப்பது சற்று பெரிய விஷயம் தான். அது போல கட்சி ஆரம்பித்து ஆறுவருடங்களில் சட்டசபை எதிர்கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு என் வாழ்த்துக்கள்.
ஆனால் இந்த வெற்றிக்கு முழு காரணம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ அல்லது கூட்டணி கட்சிகளின் சுறாவளி பிரச்சாரமோ கிடையாது என்பதே என் கருத்து. இந்த தடவை ஜெயித்தது மக்களின் ஜனநாயகம் தான். அதெப்படி? என்று சில அதிமுக சார்பு பதிவர்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன்.


கடந்த ஆட்சியாளரான கருணாநிதி செய்த தவறுகள் என்ன என்பதை நாடறியும். விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஈழத்தமிழர் பிரச்சனை, மின்சார தட்டுப்பாடு, குடும்பத்தினர் ஆதிக்கம், 2G அலைவரிசை ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி கருணாநிதி அரசு செய்த தவறு தான் ஜெயலலிதாவை மெஜாரிட்டியில் ஜெயிக்க வைத்தது. அதாவது திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று நினைத்து தான் அதிமுகவுக்கு ஓட்டளித்தார்களே தவிர, அம்மா வந்தால் நாட்டில் லஞ்ச லாவண்யம், வறுமை, பஞ்சம் எல்லாம் ஒழிந்து பாலும், தேனும் ஆறாக ஓடும் என்று நினைத்து ஓட்டளிக்கவில்லை என்பதே உண்மை. அதை அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மக்கள் இந்த தேர்தலில் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதை தேர்தல் முடிவுகளை பார்க்கும்போதே புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் மக்களுக்கு ஜெயலலிதா அரசு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆரம்பத்திலேயே புதிய சட்டசபைக்கு போகாமல், பழைய சட்டசபைக்கு தான் செல்வேன்' என்று சொல்லி அதற்கான வேலைகளையும் முடக்கி வைத்துவிட்டார் அம்மையார். ஆனால் கடந்த திமுக அரசு பழைய சட்டசபையை ஒரு பொது நூலகமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள். இனி அந்த புத்தகங்கள் கரையான்களுக்கு உணவாக போகிறதென்பது என்பது என்னவோ உண்மை. அதுமட்டுமல்ல, கடந்த திமுக அரசு ஆரம்பித்த மேம்பாலங்கள் கட்டுதல், 108 அவசர சிகிச்சை, கலைஞர் காப்பிட்டு திட்டம் போன்ற விஷயங்கள் இனி தொடருமா என்பது கேள்விக்குறி தான்.அம்மையாரின் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கும். ஆனால் இந்த ஒன்று மட்டும் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது. தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதற்கான தீர்வு தான் மேம்பாலங்களை அமைத்தல். இப்போது பாதியில் நின்றிருக்கும் மேம்பாலங்களை முழுவதுமாக முடித்து திறந்து வைத்தால் தான் ஓரளவுக்காவது போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் திமுக அரசு கட்டிய பாலங்களில் பயணம் செய்யக்கூடாது என்ற 'கொள்கை' உடையவர் அம்மா அவர்கள். இந்த ஆட்சி மாற்றத்தால் 'அம்போ'வென்று நிற்கும் மேம்பாலங்களை அம்மையார் முடித்துவைப்பாரா என்பது கேள்விக்குறி தான். பார்ப்போம். அடுத்து விஜயகாந்த். கட்சி ஆரம்பித்து இவ்வளவு குறுகியகாலங்களுக்குள் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது தேமுதிக. அதுவும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அசைக்க முடியாத கட்சியாக இருந்த திமுகவையே பின்னுக்கு தள்ளி முதன்மை எதிர்கட்சியாக சட்டசபையில் உட்காரபோகிறார்கள் தேமுதிகவினர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்கள் பிரச்சனையை தீர்க்க பாடுபட்டால், கண்டிப்பாக தேமுதிக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இந்த பதிவின் மூலமாக சொல்லிக்கொள்கிறேன்.


தமிழக வாக்காள பெருமக்கள் திமுக அரசின் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த தேர்தலின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆனால் அதே சமயம் இந்த கோபம் பிற்காலத்தில் அதிமுக மீது கூட பாயலாம். அதற்கு அதிமுக இடம் கொடுத்து விடக்கூடாது. திமுக அரசு பலவிதமான தலைவலிகளை தமிழக மக்களுக்கு கொடுத்திருந்தாலும் ஒரு ருபாய் அரிசி, மாநகராட்சி சீர்படுத்துதல், மதுரையில் டைடல் பார்க் என்று சில நல திட்டங்களையும் செய்திருக்கிறார்கள். அதனால் இனி வரும் ஆளுங்கட்சி ஓரளவுக்காவது சிறந்த முறையில் ஆட்சி நடத்தினால் தான் மக்கள் அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். இல்லையெனில் எப்படி இந்த தேர்தலில் திமுக என்ற கட்சி Washout ஆனதோ, அதைவிட மோசமாக அதிமுகவும் Washout ஆகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

என்றும் அன்புடன்

Post Comment

2 comments:

கந்தசாமி. சொன்னது…

///108 அவசர சிகிச்சை, கலைஞர் காப்பிட்டு திட்டம் போன்ற விஷயங்கள் இனி தொடருமா என்பது கேள்விக்குறி தான்.// கலைஞர் செய்த இந்த சின்ன சின்ன விஷயம் எல்லாம் குடும்ப அரசியலால் மக்கள் கண் முன்னே இருந்து மறைந்துவிட்டது..நல்ல அலசல்

skaamaraj சொன்னது…

நேர்மையான அலசல்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக