சனி, மே 21, 2011

கமலின் 'சலங்கை ஒலி' - திரை விமர்சனம்


பொதுவாகவே ஒரு படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவதென்றால் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முன்னுரை சற்று நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து உற்சாகமாக முழு பதிவையும் படித்து முடிப்பார்கள். அதனால் இந்த முன்னுரைக்கு மட்டும் கொஞ்சம் சிரத்தை
எடுத்து எழுதிவிடுவேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்த படத்திற்கு மட்டும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி, இப்படியே யோசித்து கொண்டிருந்தால் எப்போது பதிவு போடுவது? அதனால் தான் ஒரு வழியாக இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன். இனி இந்த 'சலங்கை ஒலியின்' கதையை கேட்க ஆரம்பிப்போமா?
பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு 'யார்' என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த 'சலங்கை ஒலி'.

பாலுவாக கமல்ஹாசன். கமலின் அறிமுக காட்சி உண்மையிலேயே யாரும் எதிர்பாராரது. தான் பிரயாணம் செய்த ரிக்க்ஷாவை இவர் தள்ளிக்கொண்டு வரவார். அப்போதே இவரின் கதாபாத்திரத்தின் மீது ஒரு அழுத்தமான கவனம் பதிந்து விடுகிறது. இளமையில் அவ்வளவு துடிப்பாக இருந்த ஒருவன், முதுமையில் ஒரு குடிகாரனாக காட்டப்படும்போது அதற்கான காரணம் சற்று அழுத்தம் தான். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் கமல் நடிக்கும்போது அவரின் வயது 29. ஆனால் ஒரு குடிகார கிழவனாக அவரின் மேனரிசங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே தோற்ற ஒரு வயது முதிர்ந்தவரின் இயல்பை திரையில் அழகாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். தன் பத்திரிக்கை ஆபிசில் ஷைலஜாவிடம் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடி காண்பித்து 'இது தான் சரியான அபிநயங்கள்' என்று செய்து காட்டும் இடம், ஆஹா. அதே போல 'தகிட ததிமி' பாடல் காட்சியில் கிணற்றின் மீது நடனம் ஆடும் காட்சியை பார்க்கும்போது நமக்கே 'கமல் கிணற்றில் விழுந்து விடபோகிறாரோ' என்ற பயமாக இருக்கும். அது சினிமா ஷூட்டிங்காக இருந்தாலும், கொட்டும் மழையில் கிணற்றின் மேல் லாவகமாக நாட்டியமாடி அவர் ஒரு 'விழா நாயகன்' என்று நிருபித்திருப்பார். இந்த படத்தில் கதாநாயகனின் பங்கு சற்று பெரியது தான். ஆனால் அதை கமல் போன்ற சிறந்த நடிகனால் தான் தாங்கி பிடிக்க முடியும். அதை அவர் சரியாக செய்துள்ளார்.

மாதவியாக ஜெயப்ரதா. 'நினைத்தாலே இனிக்கும்' ஜெயப்ரதாவுக்கும், 'சலங்கை ஒலி' ஜெயப்ரதாவுக்கும் எவ்வளவு வித்யாசங்கள்? இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? 'தேவதை' கதாபாத்திரம். ஆம். பாலு என்ற ஒரு இளைஞனின் திறமையை எப்படியாவது இந்த உலகிற்கு கொண்டு போகவேண்டும் என்று அவனுக்கு உதவுகிறாள் மாதவி. அந்த பாலுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையை போலவே தென்படுகிறாள். ஜெயப்ரதாவின் நடிப்பிற்கு இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை சாம்பிளாக சொல்கிறேன். 'நாத வினோதங்கள்' பாடல் இறுதிகாட்சியில் கமல், ஜெயப்ரதா இருவரும் Audience மத்தியில் மாட்டிக்கொண்டு அல்லல்படும்படியான ஒரு காட்சியை இயக்குனர் எடுத்திருப்பார். ஆனால் அங்கு கமல், ஜெயப்ரதா இருவரை தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்த இருவரும் ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் 'Mono Acting' செய்திருப்பார்கள். அதில் கமல்ஹாசனுக்கு சரிசமமாக ஜெயப்ரதாவும் நடித்திருப்பார். அந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த படத்தில் இவர் ஒரு இளம்வயது பெண்ணாகவும், பின்னர் ஷைலஜாவின் அம்மாவாகவும் நடித்திருப்பார். எனக்கு ஜெயப்ரதாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கண்கள் தான். இவர் நடித்த பல காட்சிகளில் அழகாகவும், மிக ஆழமாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.

படத்தின் சிறப்பான காட்சிகள்:


கமல், தான் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மொழி தெரியாத நாட்டிய பெண்ணிடம் அபிநயத்தில் சொல்லி புரியவைப்பது.


சினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.

ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.

அகில இந்தியா நடன போட்டியின் அழைப்பிதழில் தன் பெயர் இருப்பதை பார்த்து ஜெயப்ரதாவின் கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது.


சாகும் தருவாயில் இருக்கும் தன் அம்மாவிற்காக நாட்டிய விழாவில் ஆடப்போகும் நாட்டியத்தை தன் அம்மாவிடம் அழுதுகொண்டே ஆடிக்காட்டுவது.


கமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.

ஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.

படத்தின் கேமராமேன் நிவாஸ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கம் அருமை. இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிருபித்திருக்கிறார் இசை ஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்கிறது. எனக்கு ராஜாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரின் பின்னணி இசை. மனிதர் கலக்குவார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியது திரு K. விஸ்வநாத் அவர்கள். முக்கியமாக ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவரை பற்றி எழுதாமல் விட்டால் இந்த திரை விமர்சனமே முழுமை பெறாது. அந்த நபர் S.P. பாலசுப்ரமணியம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் (ஆண் குரல்) இவரே பாடியுள்ளார். மனிதருக்கு என்ன ஒரு குரல் வளம்.

இந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் 'சாகர் சங்கமம்' என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று 'சலங்கை ஒலி' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை - இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் - S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

  1. ஆழமான அலசல் நண்பரே .. இந்த படத்தின் மேலுள்ள தாக்கத்தை அதிகப்படுத்தியது.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கமல் ரசிகர் போல.. நல்லாருக்கு விமர்சனம். இந்தப்படத்தை ரசிக்காதவர் யாரும் இல்லை

    பதிலளிநீக்கு
  3. kamal enral- natippu, ilayaraja enral- isai ithai thirumpa nirropitha padam .superrrrrrrrrrrrrr

    பதிலளிநீக்கு
  4. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் பண்ணப்பட்டதா?? இருமொழிகளிலும் இரு ஷாட் எடுக்கப்பட்டதா???

    பதிலளிநீக்கு