கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, ஏப்ரல் 23, 2011

சீரியல் கொலைகாரன் Ted Bundy - ஒரு பார்வை


கடந்த பதிவில் சிக்காடிலோவை பற்றி விவரித்ததை படித்த பலருக்கு கண்டிப்பாக வியர்த்திருக்கக்கூடும். நான் எழுதியதென்னவோ கொஞ்சம் தான். இன்னும் விவரித்திருந்தால் கண்டிப்பாக என் ப்ளோக்கை தடை செய்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, ஒருத்தர் கூட இந்த பதிவிற்கு மட்டும் கருத்து போடவில்லை. அப்போதே புரிந்து கொண்டேன், 'பதிவை
படித்தவர்கள் மனதுக்குள் சற்று கலவரமடைந்திருக்கிறார்கள்' என்று. சரி, இப்போது டேட் பண்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லர் பற்றி பார்ப்போம். நான் முன்பே குறிப்பிட்ட அந்த இரண்டு சீரியல் கில்லர்களை விட இவன் கொஞ்சம் Famous. இவனை பற்றிய புத்தகங்கள், சினிமா என்று பல வெளிவந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், பாரதிராஜா இயக்கி, கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் Inspiration இவன் தான்.

Theodore Robert 'Ted' Bundy நவம்பர் 24, 1946 அன்று அமெரிக்காவில் உள்ள பர்லிங்டன் நகரில் பிறந்தான். அவன் தந்தை யாரென்று அவனுக்கு தெரியாது. அவள் தாய் அவனை பெற்றெடுத்துவிட்டு, அவள் பெற்றோரிடம் சென்று அடைக்கலமடைந்தாள். குழந்தையான டேட் பண்டி அவன் பாட்டி, தாத்தாவை தன் பெற்றோரென்றும், அவன் தாயை தன் சகோதரியேன்று நினைத்து வளர ஆரம்பித்தான். அவனுக்கு நினைவு தெரிந்த பிறகுதான் தன் தாய் யாரென்பதை தெரிந்து கொண்டான். அதுமட்டுமல்ல, டேட் பண்டியின் தாய் ஒருவனை மறுமணம் செய்துகொண்டாள். அவனுக்கு சிறுவயது முதலே அவன் தாயை மறுமணம் செய்துகொண்டவனோடு ஒத்துபோக முடியவில்லை. அவன் தொடர்ந்து தன் பாட்டி, தாத்தாவுடனே இருக்க ஆரம்பித்தான். தன் பள்ளி படிப்பை முடித்த டேட் பண்டி, பின் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் மனோதத்துவம் பற்றி படிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்திலிருந்தே பண்டி ஒரு சாதாரண குழந்தையை போலவே வளர ஆரம்பித்தான். அதுமட்டுமல்ல, ரொம்ப சுட்டியான பையனும் கூட.
கல்லூரி மாணவன் டேட் பண்டி சில தவறான பழக்கங்களிலும் ஈடுபட ஆரம்பித்திருந்தான். அது , இரவில் வீடுகளில் உள்ள பெண்கள் அரைகுறை ஆடைகளோடு உறங்குவதை பார்த்து ரசித்தான். இதனால் இரவு நேரங்களில் இதற்காகவே மெனக்கெட்டு ரோட்டில் திரிய ஆரம்பித்தான். மற்றொன்று குடிப்பது. ஆனால் அதே சமயம், தன் படிப்பில் கவனத்தோடு இருந்தான். வாஷிங்டனில் உள்ள ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து அந்த கட்சி தேர்தலுக்காக பிரசாரம் செய்யவும் ஆரம்பித்தான். பண்டிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்ச சுபாவம் இருந்தது. அதை மாற்றியதே இந்த அரசியல் ஆர்வம் தான். அப்போது சில அரசியல் பதவிகளிலும் வகித்திருக்கிறான் பண்டி. அப்போதே பண்டிக்கு அரசியலில் எதிர்காலம் பிரகாசமாக இருந்தது. ஆனால் அவனுக்குள் இருந்த மிருகம் அந்த வாழ்க்கையை வாழ அவனை அது விடவில்லை.

ஒரு சின்ன காதல் தோல்விக்கு பிறகு அவனுக்கு வேறு ஒரு பெண்ணோடு காதலாகி அது திருமணத்திலும் முடிந்தது. அவர்கள் திருமண வாழ்க்கைக்கு பரிசாக ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. டேட் பண்டியின் மனைவியான எலிசபெத் கெண்டல் தன் கணவனை மிகவும் நேசித்தான். அதனால் பண்டி மற்ற பெண்களோடு பழகுவதை அவள் விரும்பவில்லை. இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்து விவாகரத்து வரை சென்று விட்டது. ஒருவனுக்கு 'நீ செய்வது சரி, அல்லது தவறு' என்று சொல்ல ஒரு ஆள் நிரந்தரமாக இல்லாமல் போனால் அவன் என்ன ஆவான் என்பது நினைத்து பார்க்கமுடியாத கோரம். அது தான் டேட் பண்டியின் வாழ்க்கையில் நடந்தது. 1974 ஆம் ஆண்டு ஒரு பெண் கல்லூரி வளாகத்திலிருந்து காணாமல் போனாள். 21 வயதான அந்த பெண்ணை தொடர்ந்து மேலும் இரண்டு பெண்கள் காணாமல் போனார்கள். போலீஸ் விசாரணையில் ஒரு அழகான ஆணோடு காணாமல் போன பெண்கள் கடைசியாக பேசிக்கொண்டிருந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள். இதே போல பக்கத்து மாநில பெண்களும் காணாமல் போக ஆரம்பித்தார்கள்.

ஆம். சீரியல் கொலைகாரன் டேட் பண்டி தன் 'இரைகளை' தேர்ந்தெடுக்க, மெனக்கெட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணித்தான் அவன். இதற்கிடையில் வாஷிங்டன் நகரத்தை ஒட்டியுள்ள காடுகளில் போலீசார் சில அடையாளம் தெரியாத எலும்பு கூடுகளை கண்டெடுத்தார்கள். அந்த எலும்பு கூடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துகையில், அது காணாமல் போன பெண்ணின் எலும்பு கூடுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற மாநிலத்திலிருந்த போலீசாரும், வாஷிங்டன் போலீஸும் கலந்து பேசி குற்றவாளியை பற்றி துப்பு துலக்க ஆரம்பித்தனர். இப்படி காணாமல் போகும் பெண்களை கடத்தி, கற்பழித்து பின்பு அந்த பெண்களை தன் கைகளில் வைத்திருக்கும் இரும்பு தடியால் அடித்தே கொல்வான் பண்டி. இந்த ஒரே ஸ்டைல் கொலைகளை வைத்து, ஒரு சீரியல் கொலைகாரன் இருவேறு மாநிலங்களுக்கு பயணித்து கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று போலீசார் தெரிந்து கொண்டனர். 1975 ஜனவரியில் ஒரு பெண், அதை தொடர்ந்து சில மாதங்களில் இன்னும் ஐந்து பெண்கள் என காணாமல் போய்க்கொண்டே இருந்தார்கள். இந்த ஆறு பெண்களுமே ஒரே சாயலில் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் கொடுரம்.

இப்படி வரிசையாக பெண்களை கொலை செய்த பண்டி, ஒரு நாள் தன் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் மாட்டிக்கொண்டான். அவன் காரை சோதனையிட்ட போலீசார், அந்த காரில் கையுறை, ஒரு இரும்புத்தடி என்று சந்தேகத்திற்கிடமான பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவன் காரின் முன்வரிசை இருக்கையும் இல்லாமல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அதனால் பண்டியை திருட்டு வழக்கில் கைது செய்தனர். ஆனால் பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலைகாரன் இவன் தானா என்று போலீசார் சந்தேகப்பட்டு கிடைத்த தடயங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்தார்கள். எப்படி தெரியுமா? முன்பு பண்டி ஒரு முறை கரோல் என்ற பெண்ணை கடத்த முயன்றபோது அவள் அவனிடமிருந்து தப்பித்து விட்டாள். அவள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமுலத்தில் 'அவன் VW ரக கார் வைத்திருந்தான். அவள் அவனிடம் போராடியபோது பண்டியை அவள் தாக்கியிருக்கிறாள். அந்த தாக்குதலிலிருந்து சிதறிய டேட் பண்டியின் ரத்தம் கரோலினின் உடையில் சிந்தியிருக்கிறது. அந்த ரத்தத்தை வைத்து கொலைகாரன் வயது, என்ன வகை ரத்தம் என்று போலீசார் மேற்கண்ட தடயங்களை பண்டியோடு ஒப்பிட்டு பார்க்க, அந்த தடையங்கள் டேட் பண்டிக்கு பக்காவாக பொருந்த 'இவன் தாண்டா' என்று போலீசார் உஷாரானார்கள்.

ஒரு வழியாக டேட் பண்டி என்ற சீரியல் கொலைகாரன் கடைசியில் பிடிபட்டான். டேட் பண்டி, தன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கட்டு கட்டிக்கொண்டு, இரவுநேரத்தில் இளம்பெண் யாராவது தனியாக அந்த பக்கம் வரும் சமயம் பார்த்து, காருக்குள் ஒரு பெட்டியை வைக்க சிரமப்படுவது போல் நடிப்பான். உதவ வரும் பெண் காருக்கு அடியில் குனியும்போது, அவளை உள்ளே தள்ளி, தன் கை கட்டுக்குள் நுழைத்து வைத்திருக்கும் இரும்புத் தடியை உருவி, அவள் மண்டையில் அடித்து மயக்கமுற செய்து... பிறகு அந்த பெண்ணின் கதி, அவ்வளவு தான்! இப்படித்தான் அவன் பெண்களை கடத்தியிருக்கிறான். இப்படி அவன் ஆறு வருடங்களில் அவன் செய்த கொலைகளின் எண்ணிக்கை 30 ஆகும். ஆனால் அவன் நூற்றுக்கணக்கான பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டார்கள். பெரும்பாலும் பண்டி நன்கு வெள்ளையான, ஒல்லியான, மிக நீளமான கூந்தல் உள்ள பெண்களையே கடத்தியிருக்கிறான். பெரும்பாலும் அவன் கடத்துவது கன்னி பெண்களை தான். வேலைக்கு போகும் பெண்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி பெண்கள் என்று எவரையும் விட்டுவைக்கவில்லை அந்த காம மிருகம்.

பண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இரண்டு முறை சிறையில் இருந்து தப்பித்திருக்கிறான். முதல் முறை தப்பித்தபோது அடுத்த வாரத்திலேயே பிடிபட்டான். அனால் இரண்டாவது முறை தப்பித்தபோது அவன் மேலும் இரண்டு பெண்களை கற்பழித்து கொலை செய்திருந்தான். இரண்டாவது முறை அவனை கைது செய்த போலீசார், அவன் வீட்டை சோதனை செய்தபோது அங்கு சில பெண்களின் தலைகளையும் கண்டெடுத்தார்கள். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான் பண்டி. டேட் பண்டி ஒரு மகா தற்பெருமையாளன். கோர்ட்டில் டிவி குழுக்களையும், நிருபர்களையும் பார்த்தால் போலீசிடம் இருந்து திமிறிக்கொண்டு போய் பேட்டி கொடுப்பான் அவன். கைவிலங்குகளோடு இருகரங்களையும் உயர்த்தி, போட்டோவுக்கு விதவ்தமாக 'போஸ்' கொடுப்பான். பிறகு ஒருபடி மேலே போய் 'என் வழக்குக்கு நானே வக்கீலாக இருந்து வாதாட போகிறேன்' என்று அறிவித்தான் அவன் (டேட் பண்டி ஒரு முன்னாள் சட்டக் கல்லூரி மாணவன்!). எதிர் கட்சி வக்கிலை மடக்கி ஒரு கேள்வி கேட்டுவிட்டு, பெருமிதத்துடன் கோர்ட்டில் இருப்பவர்களை நோக்கி ஒரு பார்வை பார்ப்பான். ஒரு முறை டேட் பண்டி கோர்ட்டில் நடந்த விசாரணையில் 'எனக்கு செக்ஸ் புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும்' என்று ஒப்புக்கொண்டான். ஆனால், அது தான் என்னை கொலை செய்யத் தூண்டியது என்று அவன் சொல்லவில்லை.

ஒருவாறாக விசாரணை முடித்து டேட் பண்டிக்கு மரண தண்டனை வழங்கினார் நீதிபதி. 1989, ஜனவரி 24 அன்று சரியாக காலை 7.13 மணிக்கு அவனை மின்சார நாற்காலியில் வைத்து தண்டனையை நிறைவேற்றினார்கள். டேட் பண்டி உபயோகப்படுத்திய கார், வாஷிங்டனில் உள்ள National Museum of Crime & Punishment என்ற இடத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பண்டியின் கதையை பலர் புத்தக வடிவில் எழுதியிருக்கிறார்கள். அதே போல ஆங்கிலத்தில் சூப்பர் ஹிட் படமான 'Silence of the Lamp' படத்தில் வரும் கொலைகாரன் 'டேட் பண்டியை' வைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான். அதுமட்டுமல்லாமல் 'டேட் பண்டி' என்ற பெயரில் கூட ஒரு படம் 2002 அன்று வெளிவந்தது. இந்த படம் கூட இவனது உண்மை கதையை தழுவி எடுத்த படமாகும்...


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

Post Comment

4 comments:

டி.சாய் சொன்னது…

"மனிதனுக்குள் மிருகம் " புத்தகத்தல் படித்திருக்கிறேனே இது எல்லம் :)))

ஜெகதீஸ்வரன். சொன்னது…

கமல் போல அழகாகதான் இருக்கிறான்,. விதி எப்படியெல்லாம் விளையாண்டுவிட்டது.

Mohamed Faaique சொன்னது…

சீரியல் கிள்ளர் கதைகளை படிக்கனும்னு ரொம்ப நாளா ஆசையா இருந்தது. இப்போதுதான் உங்கள் பதிவை பார்க்கீறேன்.. பகிர்வுக்கு நன்றி

gemine சொன்னது…

நண்பா இந்த கதைகளை படித்து தான் எனக்கு இது போல ஐடியா வந்ததுன்னு எதாவது லூசு சொல்ல போகுது..குடி வெறி தமிழ் நாட்ல ரொம்ப பெருகிடிச்சி எட்டாவது பெயில் ஆனகூட இப்பல்லாம் பார்டி தான் உஷாரய்யா..எதுக்கு நிறைய சப்ஜாக்ட் இருக்கறப்போ இந்த கன்றாவி எல்லாம்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக