வெள்ளி, பிப்ரவரி 23, 2018

Production No. 1975...

'ரெண்டு சின்ன பசங்க சார், இது ஜெயிக்கும்னு நானும், இதுவும் ஜெயிக்கும்னு அவரும் சொல்லிக்கிட்டு இருப்போம், அப்படி சொன்னது அன்னைக்கு முழுக்க எங்க மைண்ட்ல ஓடிக்கிட்டே இருந்துச்சி' - நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் அவர்களின் இருவேறு சினிமா பாணி பற்றி விவாதித்ததை நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த ரஜினி - கமல் சந்திப்புக்கு பிறகு, திரு. ரஜினிகாந்த் அவர்கள்  'நடிகர் கமல்ஹாசனின் பாணி வேறு, என்னுடைய பாணி வேறு. சினிமாவை போல அரசியலிலும் எங்களின் தனித்துவம் இருக்கும்' என்பதை சொல்லியிருக்கிறார். தலைவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று எப்போதோ கூறிவிட்டார். ஆண்டவர், 'மக்கள் நீதி மய்யம்' என தன் கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் கட்சிக்கொடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் புதிய கட்சி அறிமுகம் விழாவினால் இணையம், அரசியல் களம் என இரண்டும் சற்று பரபரப்பாகவே உள்ளது.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்:
ஜெயலலிதாவின் மரணம், கலைஞரின் ஓய்வு போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்க, ஆட்டம் காண ஆரம்பித்தது தமிழக அரசியல். தமிழக ஆட்சிக் கட்டிலில் நடந்து கொண்டிருக்கும் பல கொடுமைகளையும், கோமாளித்தனங்களையும் பார்த்து அண்டை மாநிலத்தவர்கள், 'எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே?' என்ற ரீதியில் பரிதாபப் பார்வை பார்க்கிறார்கள். காமராஜர், அண்ணா துரை, கலைஞர், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா என்ற ஆளுமைகளையும், அறிவார்ந்தவர்களையும் பெற்றிருந்த தமிழகம் இன்று அடர்ந்த காட்டில் வழிதெரியா ஆடு போல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில், இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களாக திகழும் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமல்ஹாசனின் அரசியல் வருகையை இந்தியா முழுவதையும் தமிழ் நாட்டை உற்று நோக்க வைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் அவர்களின் அரசியல் பிரவேசம் எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தரவில்லை. காரணம், இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தேன். என்னுடைய 'சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா? - ரஜினியின் பிறந்தநாள்' பதிவில் என்னை போன்ற ரஜினி ரசிகர்களின் இரண்டு வித மனநிலையை தெளிவாக சொல்லியிருந்தேன். ஆனால் யாருமே எதிர்பார்க்காத 'ஆண்டவர்' கமல்ஹாசன் அரசியலுக்கு வருகை தந்தது தான் மிகப்பெரிய ஆச்சர்யம் என்பேன். 'சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி' என்ற பழமொழிக்கேற்ப ஆளுங்கட்சி அமைச்சர்கள் 'ட்விட்டருக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி' என்று எதையெதையோ பேசி உலக நாயகனை அரசியலுக்கு வரவழைத்து விட்டார்கள். 

உண்மையில் ஜெயலலிதா, கலைஞர் தவிர வேறு தலைவர்களேஅரசியல் களத்தில் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜஸ்ட் 'இருக்கிறார்கள்', அவ்வளவே. கலைஞரின் மகனாக ஸ்டாலின் இருந்தாலும் கருணாநிதியின் சமயோஜிதம், சொல்லாற்றல், கட்சி நடத்தும் விதம், தொண்டர்களை அரவணைத்து செல்லும் லாவகம் போன்ற பல வழக்கங்கள் ஸ்டாலினிடம் இல்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் பலம் இருப்பது என்னவோ உண்மை. திமுக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, நாம் தமிழர், பிஜேபி, காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுள் உண்மையான 'மக்கள் தலைவர்' என்று யாருமே இல்லை. நியாயமாக பார்த்தால் விஜயகாந்த் வந்திருக்க வேண்டியது. ஆனால் சிகிச்சையில் இருந்த, உடல்நிலை சரியில்லாத விஜயகாந்தை சட்டமன்ற தேர்தலின்போது அவரை மேடையேற்றி விட்டு மாபெரும் தோல்வியை தழுவ செய்த பெருமை, அவர்களின் குடும்பத்தாரையே சாரும். மற்ற தலைவர்கள் அனைவரும் ஏதோ வாய் இருக்கிற ரீதியில் தான் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ரஜினியும், கமலும் அரசியல் களத்திற்கு வரவேண்டிய சரியான தருணம் இதுவே.
எதுவேண்டும் தமிழ் நாட்டிற்கு:
தமிழ் நாட்டிற்கு இதை தருவேன், அதை தருவேன், மத்தியிலிருந்து இவற்றை வரவழைப்பேன், அவற்றை வரவழைப்பேன் என சொல்லி ஓட்டு கேட்பது அரசியல் பாணி. இப்போது ரஜினியும், கமலும் நாட்டிற்கு நல்லது செய்வேன் என்ற பொதுவான அஜெண்டாவோடு அரசியலில் களமிறங்கியிருக்கிறார்கள், எதிர்காலத்தில் இருவரில் ஒருவர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் பின் வரும் இந்த முதல் 10 முக்கிய பிரச்சனைகளுக்கு உடனடியாகவும், நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்பதே என் விருப்பம். 

1. விவசாயம் பிரச்னை
2. டாஸ்மாக் பிரச்சனை
3. தடையில்லா மின்சாரம்
4. வியாபாரமற்ற தரமான கல்வி
5. கலப்படமில்லாத உணவுகள்
6. ஸ்மார்ட் ரகஅரசு பேருந்துகள் மற்றும் குறைந்த கட்டணம்
7. மழைநீர் தேங்காத, பள்ளம் விழாத தரமான சாலைகள்
8. டெங்கு, மலேரியா ஒழிப்பு
9. சுகாதாரம்
10. சிறப்பான சட்டம் ஒழுங்கு காவல்

தலைவரும், ஆண்டவரும்:
இது சினிமா அல்ல, அரசியல்.  அதே போல 'இனி சினிமா இல்லை. அரசியல் மட்டும் தான்' என்ற எண்ணத்தை இருவருமே முடிவு செய்துகொள்ள வேண்டும். 'தோற்றாலும், துவண்டாலும் இனி அரசியல் மட்டும் தான்' என்ற எண்ணம் வளர்த்தால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும். அரசியலுக்கு வரும் இருவருக்கும் சினிமா வெளிச்சம் மட்டும் போதாது. அது வெறும் அடையாளத்தை மட்டுமே ஏற்படுத்தும். அரசியலில் சக்ஸஸ் பார்முலா என்று ஒன்று தனியாக இல்லை. மக்களின் அபரிமிதமான நம்பிக்கையை பெற்றாலே ஜெயித்து விடலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. நிறைய இழக்க வேண்டியிருக்கும். இழந்ததை மீறி பெறப்போவது மக்களின் ஆதரவு மட்டுமே.
புரட்சி தலைவரும், செல்வி. ஜெயலலிதாவும் கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடவில்லை. கட்சி பிரச்சாரம், சிறு பதவியிலிருந்து பெரிய பதவிகள், முதல்வர் ஆவதற்கான சூழல், சந்தர்ப்பம், நேரம், முக்கிய முடிவுகள் என எல்லாம் கலந்து வந்தது. அதனால் தான் அவர்களால் நாட்டை ஆளும் உன்னத நிலைக்கு வரமுடிந்தது. இதை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இனி இருவரும் தமிழகம் முழுக்க நிறைய பயணம் மேற்கொள்ள வேண்டும். ஊர், ஊராக வீதி, வீதியாக தெரு, தெருவாக வலம் வரவேண்டும். மக்கள் கூறும் எல்லா பிரச்சனைகளையும் இவர்கள் கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும், அந்த துறை சார்ந்த அனுபவமிக்க  குழு ஒன்றை அமைத்து, தீர்வை விரைவாகவும்,  தீர்க்கமாகவும், தொலைநோக்குடனும்  எடுக்க வேண்டும். இவற்றை அடிக்கடி மக்கள் மன்றத்தில் தெரிவித்து, மக்களுக்கு நம்பிக்கை வந்தால் கண்டிப்பாக அவை ஓட்டாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அரசியல் என்ற சதுரங்கத்தில் திரு. கமல்ஹாசன் அவர்கள் 'மக்கள் நீதி மய்யம்' என தன் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக்கொடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்டத்தை துவங்கி விட்டார். இனி திரு. ரஜினிகாந்தின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். Make your Move Thalaiva. we are Waiting...




என்றும் அன்புடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக