செவ்வாய், டிசம்பர் 19, 2017

ஸ்ரீதரின் 'ஊட்டி வரை உறவு (1967)' மற்றும் 'கலாட்டா கல்யாணம் (1968)' - 2 in 1 திரை அலசல்

ஊட்டி வரை உறவு (1967):
காமெடி ஆள் மாறாட்ட கதைகள் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் கோபுவுக்கும், ஸ்ரீதருக்கு மிகவும் சுலபம் போல. அதனால் தான் காதலிக்க நேரமில்லை தொடங்கி பல படங்கள் இவர்களால் சாதிக்க முடிந்தது. படத்தின் கதை இது தான். டி.எஸ். பாலையா ஒரு பணக்காரர். அவரின் மகன் சிவாஜி கணேசன். சொந்த பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு ஓடி வரும் கே.ஆர். விஜயாவின் காரில் விபத்தில் சிக்குகிறார் எல். விஜயலக்ஷ்மி.
அடிபட்ட மயக்கத்தில் இருக்கும் விஜயலட்சுமியை அப்படியே விட்டுவிட நேருகிறது விஜயாவுக்கு. அதே சமயம், அவரிடமிருந்த பெட்டி தவறுதலாக விஜயாவின் கைக்கு வருகிறது. அதில், பாலையாவின் இன்னொரு தாரத்தின் மகள் விஜயலக்ஷ்மி என்று தெரியவர, பாலையாவிடம் 'நான் தான் உங்கள் மகள்' என்று நம்பவைத்து, அங்கேயே' பாலையாவின் நண்பர் மகளாக தங்குகிறார் கே.ஆர். விஜயா.

இதற்க்கு நடுவில் பாலையாவின் மகனான சிவாஜிக்கு இந்த விபரம் தெரியவர, விஜயா தன் தங்கை இல்லை என்பதை தெரிந்து, தன் உண்மையான தங்கையை தேடுகிறார் கே.ஆர்.விஜயாவின் துணையுடன். அதே போல முத்துராமனும், விஜயலக்ஷ்மியும் காதலர்கள். முத்துராமனுக்கு தன் காதலை தந்தையான வி.கே.ராமசாமியிடம் சொல்ல பயம். அதனால் தன் நண்பனான சிவாஜியின் உதவியை நாடுகிறார். அதற்க்கு ஒரு திட்டம் போட்டு விஜயலட்சுமியை முத்துராமனின் வீட்டிலேயே தங்க வைக்கிறார் சிவாஜி. சிவாஜிக்கு தன் தங்கையான விஜயலட்சுமியை கண்டுகொண்டாரா? கே.ஆர்.விஜயாவின் உண்மை பிரச்சனை என்ன? முத்துராமன் & விஜயலக்ஷ்மி மற்றும் சிவாஜி கணேசன் & கே.ஆர்.விஜயாவின் திருமணம் எப்படி நடந்தது என்பதை சிறந்த காமெடி திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர்.
படத்தின் நடிகர்களான சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல். விஜயலக்ஷ்மி ('ஆடலுடன் பாடலை கேட்டு' பாடலில் வாத்தியாரோடு ஆடுவாரே, அவரே தான்) டி.எஸ்.பாலைய்யா, வி.கே.ராமசாமி, நாகேஷ், சச்சு என்று அனைவரும் மிக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். கண்ணதாசனின் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வரும் 'ஹாப்பி இன்று முதல் ஹாப்பி, பூ மாலையில், ராஜ ராஜ ஸ்ரீ ராணி, தேடினேன் வந்தது' என அனைத்து பாடல்களும் அருமை. தயாரிப்பு - கோவை செழியன். படத்தை இயக்கியது திரு. ஸ்ரீதர். இந்த படத்தை தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்து 'ஸ்ரீ ரங்க நீத்துலு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, படம் வெற்றி பெற்றது. 'ஊட்டி வரை உறவு' வெளிவந்த ஆண்டு 1 நவம்பர் 1967. இந்த படம் வெளிவந்து இந்த வருடத்தோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. உண்மையில் இது போன்ற சிறந்த கிளாசிக் காமெடி திரைப்படங்கள், எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்பதே உண்மை.

கலாட்டா கல்யாணம் (1968):
இதுவும் ஸ்ரீதர் - சித்ராலயா கோபு - சிவாஜி கணேசன் காம்போவில் வந்த மற்றுமொரு திரைப்படம். சீன ஆக்கிரமிப்பு காரணமான போர் சமயம். அதற்க்கு நிதியளிக்க வேண்டி தமிழ் சினிமா நடிகர்கள் பல ஊர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அந்த சமயத்தில் இயக்குனர் ஸ்ரீதர், தன் நண்பரான 'சித்ராலயா' கோபுவிடம் 'ஒரு நாடகம் எழுதுடா கோபு. இந்த கலை நிகழ்ச்சில சிவாஜி கணேசன், ஏவிஎம் ராஜன், ஜெமினி கணேசன், நாகேஷ் எல்லாரும் இருக்காங்க. அவங்க எல்லாரும் ஆக்ட் பண்ற மாதிரி ஒரு கதை எழுதி குடு' என்று கேட்க, திருவல்லிக்கேணியில் உள்ள தன் மாமனார் வீட்டில் உட்கார்ந்து இரண்டு நாளில் ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள் ஸ்ரீதர் குழுவினர். ஒரு நாள் கோபுவிடம் சிவாஜி கணேசன் 'கோபு, இந்த நாடகத்தை நான் படமா பண்ணலாம்னு இருக்கேன். உன் கம்பெனிக்கு (ஸ்ரீதரின் 'சித்ராலயா' நிறுவனம்) கொடுத்துடாதே. நாடகம் போட்ட எல்லா இடத்துலயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. படமா பண்ணா, இன்னும் நல்லா இருக்கும்' என்று சொன்னாராம். அப்படி நாடக வடிவில் இருந்து, சினிமாவாக வந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'கலாட்டா கல்யாணம்'.

மதனும் லலிதாவும் காதலர்கள். லலிதாவை பெண் கேட்கப்போன வீட்டில் வருகிறது சிக்கல். லலிதாவின் அப்பா தன் நான்கு மகள்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்க வேண்டும், இல்லையேல் தனக்கு கண்டம் வந்து சேரும் என்று சொல்கிறார் அவர். தனக்கு கல்யாணம் நடக்க வேண்டி லலிதாவின் அக்கா, தங்கைகளுக்கும் சேர்த்து வரன் பார்க்க ஆரம்பிக்கிறான் மதன். அதே சமயம், அக்காவுக்கு திருமண விருப்பமில்லை, இன்னொரு பெண்ணுக்கு காதல் ஊடல், கடைசி பெண்ணுக்கு சினிமா ஆசை என பல முட்டுக்கட்டைகள். இதையெல்லாம் சமாளித்து தன் திருமணத்தோடு சேர்த்து நான்கு திருமணங்களையும் எப்படி செய்கிறான் மதன் என்பதே கதை.
மதனாக சிவாஜி கணேசன். சிம்மக்குரலோனுக்கு சிரிப்பு வேடம். சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லவா வேண்டும்? ஒரு ஹீரோவுக்கூறிய எந்த ஒரு சமரசமும் இல்லாமல் மிக எதார்த்தமாக காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் திரு. சிவாஜி கணேசன். காதலி லலிதாவாக செல்வி. ஜெயலலிதா. துள்ளலான கதாபாத்திரத்தில் கலக்குகிறார் 'அம்மு'. நாகேஷின் நகைச்சுவையை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. வழக்கம் போல காமெடி கலக்கல். படத்தின் மற்ற கதாபாத்திரங்களான தங்கவேலு, ஏவிஎம். ராஜன், மனோரமா, சச்சு என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அனைவரும் அவரவர் வேடங்களில் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமி. நெடுநெடுவென என்ன ஒரு அழகு அவர்?

கோபுவின் திரைக்கதை பாணி படத்தின் பெரும் பலம். எந்த ஒரு காட்சியும் கதையை தாண்டி பயணிக்காதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வரும் பாடல்களில், 'எங்கள் கல்யாணம்' இன்றும் ஸ்பெஷல். படத்தை இயக்கியது ஸ்ரீதரின் சகோதரர் சி. வி. ராஜேந்திரன். 12 ஏப்ரல் 1968 அன்று வெளிவந்த படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.



Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக