கற்க கற்க கள்ளும் கற்க...

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

தளபதி - திரைவிமர்சனம்

உலகத்தில் ஒரு மனித உயிர் பிறந்து, அந்த உயிர் மறையும் வரைக்கும் பல உயிர்கள் அவனுக்கு உறவுகளாக துணை நிற்கின்றது. ஆனால் ஒரு மனிதனுக்கு இரண்டு உயிர்களை மட்டுமே அவனாகவே அமைத்து கொள்ளமுடியும். ஒன்று காதல், மற்றொன்று நட்பு. ஒருவன் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலு சரி அவரவர்கேற்ப காதலும், நட்பும் அமையும்.
அனைவருக்குமே நல்ல காதல் அமையாமல் போகலாம். ஆனால் நல்ல நட்பு அமையாமல் இருக்காது. அப்படி ஒரு நல்ல நட்பை மையமாகக்கொண்டு, அதோடு அழகான காதலையும், ஒரு தாயின் உன்னதமான பாசத்தையும் சொல்லிய படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி'.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த Class படங்கள் குறைவு. ஆனால் Mass படங்களோ அதிகம். இந்த இரண்டுவிதமான படங்களை தனித்தனியாக பிரித்து, ஒரு தராசில் வைத்து பார்த்தால், Class படங்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். அப்படி ரஜினி நடித்த Class படங்களில் முக்கியமான படம் இது. 'சூர்யா' என்ற கதாபாத்திரம் ரஜினிக்கு. தமிழ் சினிமா தொடங்கிய காலம் தொட்டே பல கதாநாயகர்களை 'அநாதை' என்று படத்தில் அறிமுகம் செய்வார்கள். ஆனால் அந்த அநாதை என்ற ஒரு வலிமிகுந்த தாக்கத்தை ரசிகனிடம் சரியாக காட்டாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ரஜினி தான் ஒரு அநாதை என்று சொல்லாமலேயே கண்ணில் ஒரு ஏக்கத்தோடும், அழுத்தமான நடிப்போடும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் சீரும் அந்த ஒரு காட்சி போதும், ரஜினியின் பன்முக நடிப்பை பற்றி சொல்வதற்கு.
தேவராஜாக மம்மூட்டி. இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சரியானவன் நான் தான் என்று நிருபித்திருக்கிறார். 'உனக்கு அவ்வளோ பேரு இருக்காங்க, எனக்கு நீ மட்டும் தாண்டா இருக்க' என்று சொல்லு இடம், கலக்கிடீங்க சார். தன் ஆட்களை கைது செய்யும் காவல் துறையினரை நோக்கி ஓடிவரும்போது வேட்டியை எடுத்து அருமையாக கட்டுவார் பாருங்கள், ரஜினி ரசிகர்களே அந்த காட்சிக்கு கை தட்டுவார்கள். இந்த படத்தில் Second Hero இவர் தான்.
சுப்புலக்ஷ்மியாக ஷோபனா. அருமையான தேர்வு. ஒரு பிராமண பெண்ணாக மிக அருமையாக நடித்திருக்கிறார். கண்ணில் கண்ணீரோடு ரஜினியை பார்த்து 'பிடிச்சிருக்கு' என்று சொல்லும் அந்த காட்சி, காதலின் இதமான காட்சி. ஆரம்பத்தில் கொஞ்சம் குறும்பாகவும், பின்பு அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.
ரஜினியின் அம்மாவாக வரும் ஸ்ரீவித்யாவின் நடிப்பு மிகவும் அருமை. தான் பெற்ற முதல் குழந்தையை தொலைத்த சோகத்தை அவரின் கண்களாலேயே காட்டுவது Simply Super. ஸ்ரீவித்யாவின் கணவராக வரும் ஜெய்ஷங்கரின் அமைதியான நடிப்பு மிளிர்கிறது. பானுப்ரியாவின் நடிப்பு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரவிந்தசாமியின் 'அறிமுகமான' நடிப்பு ok. அம்ரிஷ் புரியின் மிரட்டலான நடிப்பு கலக்கல். மற்றபடி நாகேஷ், சார்லி இருவரையும் இந்த படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவு தான்.
படத்தின் உயிர் நாடி இளையராஜா தான். பின்னணி இசையில் கலக்குகிறார் இசைஞானி. பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. சின்ன தாயவள், ராக்கம்மா கைய தட்டு, யமுனையாற்றிலே, காட்டு குயிலு மனசுக்குள்ள என்று அணைத்து பாடல்களுமே சூப்பர். குறிப்பாக 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் என்னை போன்று காதலியை பிரிந்து, கடல் கடந்து வந்து வேலை செய்யும் காதலர்களின் Ringtone இந்த பாடல். சந்தோஷ் சிவனின் கேமரா அங்கிள் ஒவ்வொன்றும் Super. படத்தை தயாரித்தது, மணிரத்னத்தின் சகோதரர் மறைந்த தயாரிப்பாளர் அமரர் திரு. G. வெங்கடேசன். எழுதி இயக்கியது மணிரத்னம். கதை மகாபாரதத்தில் இருந்து தழுவப்பட்டது என்றாலும் அதற்கு திரைக்கதை அமைத்து படமாக்கிய விதம், மிகவும் அருமை. 'ஏன்? எதுக்காக?' என்று கேள்விகளையே வசனமாக மாற்றும் திறமை மணிரத்னத்திற்கு மட்டுமே உண்டு.

இந்த படம் 5 நவம்பர் 1991 அன்று ஆல்பர்ட், ஷக்தி அபிராமி, உதயம், பாரத், ஸ்ரீபிருந்தா என்று பல திரையரங்குகளில் வெளியானது. படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. நான் முதலாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மா, அப்பாவுடன் சென்னை நெற்குன்றத்தில் உள்ள 'கோல்டன் ஈகிள்' திரையரங்கில் இந்த படத்தை பார்த்தேன். இந்த படம் பார்க்கும் போது தான் என் அப்பா எனக்கு சாப்பிடுவதற்கு 'இனிப்பு கஜிராவை' அறிமுகம் செய்தார். இன்றும் நான் இனிப்பு கஜிராவை சாப்பிட்டால் உடனே எனக்கு ஞாபகம் வருவது ரஜினியின் 'தளபதி'...
(கடந்த பதிவை பிரபலமாக்கிய நண்பர்களுக்கு என் நன்றிகள். தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்).

Post Comment

4 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக