செவ்வாய், ஜனவரி 08, 2019

2018 தமிழ் டாப் 10 திரைப்படங்கள்...

இனிய 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிறது. சோம்பலும், வேலையும் சேர்ந்து என்னை எழுத விடாமல் செய்து விட்டன. இந்த பதிவு கூட ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட வேண்டியது. வழக்கம் போல தள்ளி வைத்து இப்போது பதிவேற்றுகிறேன். இந்த வருடம் முதல் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். பார்ப்போம். சரி, இந்த ஆண்டில் பல படங்கள் வெளியாகின. 'தல' அஜித்தை தவிர பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்த பட்சம் ஒன்றாவது வெளிவந்திருந்தது மகிழ்ச்சி. ஆனால், ஓப்பனிங் வசூல் நிலவரங்கள் தவிர்த்து விமர்சனரீதியாக பெயர் பெற்ற படங்கள் எதுவுமே இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை. அதே சமயம் சிறிய பட்ஜெட்டில், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சில படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றிருந்தன. அதில் எனக்கு பிடித்த 10 படங்களை பட்டியலிடுகிறேன்.

மேற்குத்தொடர்ச்சி மலை:
இந்த திரைப்படத்தை பார்க்கும்போது என் மனதிற்குள் ஒலித்த குரல், 'இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே, எவ்வளவு பெரிய யோகக்காரன் நான், பாவம் அவர்கள்'. கடவுள் சத்தியமாக எனக்கு அப்படித்தான் தோன்றியது. மலையும், மலை சார்ந்த மழையும் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காட்சி, அந்த ஏலக்காய் மூட்டை மலை உச்சியிலிருந்து உருண்டு சிதறி, அடிவாரம் வரை சென்று விழும்பொழுது 'ப்பா', நினைக்கும்போதே நெஞ்சடைக்கிறது. வளையல் கிழவி, சாத்தான் மேடு, கங்காணியார், கம்யூனிஸ்ட் கட்சி, இடுப்பு வேட்டியை கட்டி அடையாளம் சொல்லுமிடம் என எத்தனையெத்தனை எதார்த்தங்கள்? ஒருவனின் வாழ்க்கையை அவன் தீர்மானிப்பதை விட, அவனை சுற்றியிருக்கும் மற்றவர்களின் உணர்ச்சிகள் தீர்மானிப்பது எந்த வகையான நகைமுரண்? இயக்குனர் லெனின் பாரதிக்கு ஒரு பூங்கொத்து, தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கு 'அவர் பாணியில்' கன்னத்தில் முத்தம், இளையராஜாவுக்கு எப்போதும் போல சிரம்தாழ்த்தி தலை வணங்குதல். இதுவே நான் இந்த படத்திற்காக வழங்க நினைக்கும் என் வகையிலான உயரிய மரியாதை.

96:
மிக, மிக நான் லேட்டாக பார்த்த படம். படம் ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் மனதோடு ஒட்ட வைத்து, லயிக்க வைத்த படம். 'நீ நடிகன்டா, நடிகன்டா. திர்ஷா உனக்கு கிடைப்பா டா' என்று விஜய் சேதுபதியை பாராட்டியும் திரிஷா கிடைக்காமல் போன படம். 'எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை படங்கள் நடித்தாலும் நயன்தாராவுக்கு என்றுமே நீ ஒருத்தி மட்டும் தான் போட்டி' என்று திரிஷாவை கொண்டாட வைத்த படம். ரொம்ப நாள் கழித்து ஜனகராஜை திரையில் பார்த்த படம். பீல் குட் லவ் மூவிஸ் தெலுங்கில், மலையாளத்தில் மட்டுமே வரும் என்ற என் நினைப்பிற்கு, இயக்குனர் சி. பிரேம் குமார் மண்ணை அள்ளி கொட்டிய படம். கால் இன்ச் விரசமோ, காமமோ இல்லாமல் எடுத்த அக்மார்க் நட்பும், காதலும் உள்ள படம். 'வடசென்னைக்கு' பிறகு என்னை அடிக்கடி பார்க்க வைத்த படம். எல்லாவற்றுக்கும் மேல், பலருக்கும் 'Reunion' பற்றி யோசிக்க வைத்திருக்கும் படம், இந்த '96'.

வடசென்னை:
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களுமே, ஒவ்வொரு வகையான உலக சினிமாக்கள். அதிலும் வடசென்னை வேற லெவல். தமிழில் கேங்ஸ்டர் திரைப்படங்கள் வந்து வெகுகாலம் ஆகிவிட்டன. என்னை பொறுத்தவரை இது வெறும் கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, கடலோர மக்களின் வாழ்வாதாரம், அதை சுற்றி நடக்கும் அரசியல்கள், அதனால் விளையும் பகை, துரோகம், நட்பு, பழிவாங்கல் இன்னும் பல. திரு.தனுஷ் அவர்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதையும் இந்த படத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறார். இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா, நடிகர்கள் கிஷோர், பவன், டேனியல் பாலாஜி, ராதாரவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான பங்கை கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளிவரலாமென நினைக்கிறேன். 'அன்புவின் எழுச்சிக்காக' காத்திருக்கிறேன்.

ராட்சசன்:
தமிழ் சினிமாவின் கருப்பு, வெள்ளை காலத்திலிருந்தே சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் சைக்கோ கொலைகள் பற்றிய படங்களும் கணிசமாக வந்திருக்கின்றன. அந்த வகையில், இந்த வருடம் வெளிவந்த 'ராட்சசன்' திரைப்படம் சைக்கோ வகையறா படங்களில் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றது என்றே சொல்லலாம். 'முண்டாசுப்பட்டி' எடுத்த ராம்குமாரின் படைப்பு இது என்பதே ஆச்சர்யமான உண்மை. விஷ்ணு விஷால், அமலா பால், ராமதாஸ், ராதாரவி, காளி வெங்கட், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஜிப்ரான். படத்தின் மேக்கிங், சஸ்பென்ஸ் கொண்டு சென்ற விதம், திரைக்கதை என எல்லாமே கொண்டாடப்பட வேண்டிய அம்சங்கள். பெரிய ஹீரோக்களே கதை தேர்ந்தெடுப்பில் தடுமாறிக்கொண்டிருக்க, விஷ்ணு விஷால் போன்ற நான்காம் நிலை நடிகர்கள் சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

பரியேறும் பெருமாள்:
படம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் இயக்குனர் ரஞ்சித்தை எனக்கு பிடிக்காது. 'மெட்ராஸ்' என்ற படத்தோடு ரஞ்சித் என்ற இயக்குனர் காணாமல் போய் விட்டார். ஆனால் இவரின் முதல் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களான கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஜி. மாரிமுத்து என்று படத்தில் நடித்த அனைவரும் தங்கள் சிறப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு இசை, சந்தோஷ் நாராயணன். இயக்குனரான மாரி செல்வராஜுக்கு இது முதல் படம். வாழ்த்துக்கள்.

கனா:
சமீபகால இந்திய சினிமாக்களில், பெண்களை முன்னிலைப்படுத்தி வெளிவரும் படங்கள் அதிகமாகியிருப்பது பாராட்டக்கூறியது. அதுவும் ஆண்களுக்கு நிகராக விளையாட்டு சம்மந்தமான கதைகளில் கதாநாயகிகள் நடிப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால் நான் அருண்ராஜா காமராஜை பாராட்ட நினைக்கும் இடம் விவசாயத்தையும், ஒரு பெண்ணின் கனவையும் parallel'ஆக காட்டியிருப்பது அழகு. விளையாட்டு துறையில் நடக்கும் அரசியல்களை பற்றி பல படங்களில் பார்த்திருந்தாலும், ஒரு விவசாயியின் வலிகளையும், அவன் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கான சூழ்நிலையையும் கனமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், ரமா, இளவரசு, ராமதாஸ் மற்றும் பலர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றனர். இந்த வருடம் 'சீமராஜாவாக' தோல்வியை சந்தித்தாலும், தயாரிப்பாளராக தன் முதல் 'கனாவில்' வெற்றி பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். எஸ். கேயின் அடுத்தடுத்த 'கனாக்கள்' தொடர வாழ்த்துக்கள்.

கடைக்குட்டி சிங்கம்:
நல்ல குடும்ப படங்கள் தமிழில் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றே சொல்லவேண்டும். காரணம், குடும்ப செண்டிமெண்ட் படங்கள் தமிழில் ஓடாது என்று தமிழ் சினிமா துறையில் முடிவு செய்து விட்டிருப்பார்கள் போல. ஆனால் நல்ல படங்கள், ரசிகர்களை திருப்திபடுத்தும் படங்கள் எப்போது வந்தாலும் ஹிட்டடிக்கும் என்பதை தயாரிப்பாளர் சூர்யா + நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் கூட்டணியில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கத்தின் மூலம் அழுத்தமாக நிருபித்திருக்கிறார்கள். உண்மையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து வேலை வாங்குவது மற்ற இயக்குனர்களுக்கு சவாலாக இருக்கலாம். ஆனால் முதல் படமான 'பசங்க' படத்தில் குழந்தைகளை பிரதான பாத்திரங்களாக நடிக்க வைத்த பாண்டிராஜுக்கு இது மிக சாதாரணம். உண்மையில் முன்பை விட கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் கார்த்திக்கு இந்த படம் மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. வெறும் குடும்ப உறவுகளை பற்றி மட்டும் சொல்லாமல், விவசாயத்தில் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறியது மிகச்சிறப்பு.

இரும்புத்திரை:
எனக்கு தெரிந்து இந்த படத்தின் ஒன்லைன் எது தெரியுமா? படத்தில் ரோபோ ஷங்கர் ஒரு டயலாக் சொல்வார், 'நம்மளே எல்லாத்தையும் குடுத்துப்புட்டு தூக்கிட்டு போய்ட்டான், தூக்கிட்டு போய்ட்டான்னு சொன்னா எப்படி?'. தொழில்நுட்ப வளர்ச்சியை மனிதன் எந்த அளவுக்கு தன் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பது தான் படத்தின் மையக்கரு. அதை பரபரப்பான ஆக்க்ஷன் த்ரில்லரோடு சமூக கருத்தையும் சேர்த்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பி. எஸ். மித்ரன். படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தது சிறப்பு. விஷால், அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் என்று படத்தில் நடித்த அனைவருக்குமே கனமான பாத்திரங்கள். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை, யுவன் ஷங்கர் ராஜா. இனி மொபைல் ஆப்பிலிருந்து, பாங்க் அக்கௌன்ட் வரை அதிக கவனமாக கையாள மறுமுறை அழுத்தமாக சொல்லியிருக்கிறது இந்த 'இரும்பு திரை'.

இமைக்கா நொடிகள்:
 லயன் அண்ட் ஹைனா கதையோடு டீசர் ஆரம்பித்தபோதே படத்தின் மீது எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது, படத்தை பார்த்தபோது தான் தெரிந்தது யார் அந்த ஹேனா மற்றும் யார் அந்த லயன் என்று. முதல் படம் ஹாரர் படம், இரண்டாவது சைக்கோ சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்று அஜய் ஞானமுத்துவின் ஸ்கிரிப்ட் உழைப்பு நன்றாக தெரிகிறது. ஒரு சாதாரண கதாநாயகி, லேடி சூப்பர் ஸ்டாராக வரமுடியும் என்பதை நயன்தாராவின் நடிப்பை பார்க்கும்போது புரிகிறது. அனுராக் காஷ்யப் என்ற இயக்குனரை கூல் டெரர் வில்லனாக அதகளம் செய்ய வைத்திருப்பது அருமை. 'ஆர் யூ ஓகே பேபி' என்று சில நிமிடங்களே வந்தாலும், சிறப்பாக செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. குழந்தை மானஸ்வி, அழகி குட்டி செல்லம். மொத்தத்தில் இமைக்க மறந்த நிமிடங்கள், இந்த 'இமைக்கா நொடிகள்'.

செக்க சிவந்த வானம்:
மல்டி ஸ்டாரர் படங்கள் என்பது எப்போதாவது தமிழ் சினிமாவில் பூக்கும் குறிஞ்சிப்பூ. அதுவும் மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனருக்கு இது போன்ற படங்களை இயக்குவது எளிது. அதை செக்க சிவந்த வானத்திலும் செய்து காட்டியிருக்கிறார். அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர். ரஹமான். தந்தைக்கு பின் மாபியா உலகத்தை ஆள நினைக்கும் மூன்று சகோதரர்களுக்குள் நடக்கும் துப்பாக்கி சண்டைகள் தான் மொத்த படமே என்றாலும், பின்னணி இசை, பாடல்கள், விஜய் சேதுபதியின் தனித்துவமான நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம் என படம் ஒரு பக்கா Action Entertainer.



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




என்றென்றும் நட்புடன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக