திங்கள், மே 27, 2019

தேர்தல் 2019...

டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் வென்று திரும்பவும் ஆட்சியமைத்துள்ளது. அதே போல தமிழகத்தில் நடந்து முடிந்த 22 இடைத்தேர்தலில் 13 இல் தி.மு.கவும், 9 இல் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அ.தி.மு.க அரசு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆட்சியை தரவுள்ளது. தேர்தல் அறிவித்ததிலிருந்து, தேர்தல் முடிவுகள் அறிவித்தது வரை நடந்த கூத்துக்கள், களேபரங்கள், கணிப்புகள் என்று பல மக்களாகிய நாம் கண்கூடாக கண்டோம். அவற்றை பற்றிய தெளிவான அலசல்கள் இதோ...

தேர்தலுக்கு முந்தைய கலவரம்:
மக்களிடம் சம்பாதித்துள்ள அதிருப்தியை தாண்டி பெரிய அளவில் வெற்றிவாகை சூடவேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க என்று மெகா கூட்டணியை அமைத்து களம் கண்டது அ.தி.மு.க. அதே போல கலைஞர் இல்லாத தி.மு.கவில் வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் என்று எதிர் கட்சிக்கு சளைக்காமல் கூட்டணி அமைத்து களம் கண்டார் ஸ்டாலின். தனித்துவமாக மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும், அமமுகவும் தனியாக களம் கண்டன. ஆனால் அதே சமயம், சீட்டுக்காகவும், பணத்திற்காகவும் ஒரே நேரத்தில் இரு பெரிய கட்சிகளிடம் தே.மு.தி.க நடத்திய பேரம், 'மாற்றம், முன்னேற்றம்' என்று கூவி 'திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்று சொல்லி அ.தி.மு.கவில் ஐக்கியமான பா.ம.க,  ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவாவை மட்டுமே நம்பி கட்சி நடத்தி, தமிழக விவசாயிகளுக்கு எதிரான பல திட்டங்களை செயல்படுத்த நினைத்த பா.ஜ.க போன்ற கட்சிகள் ஒரே அணியில் திரண்டதை பார்த்தபோதே 'சந்தர்ப்பவாத கூட்டணி' என்பதை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர். அதே போல இந்த தேர்தலிலும் பணம் பல வழிகளில் வாக்காளர்களின் சட்டை பைகளில் நிரம்பியதையும் மறுக்கமுடியாது. வழக்கம் போல தேர்தல் ஆணையமும் பெயருக்கு ஆளும்கட்சிக்கு எதிரானவர்களின் பணத்தை பறிமுதல் செய்து, தங்கள் 'கடமையை' சிறப்பாக செய்ததாக மார்தட்டி கொண்டது.

தேர்தலுக்கு பிந்தைய நிலவரமும், தேர்தல் முடிவுகளும்:
இந்தியா முழுக்க ஏழு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வந்தபோது, நாட்டு மக்கள் மட்டுமல்ல, பா.ஜ.க கூட்டணி கூட நம்பமுடியாமல் 'ஜெர்க்' ஆனது. 'பா.ஜ.க கூட்டணியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும், காங்கிரஸ் கூட்டணி தோற்கும்' என்று பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும், இந்தியா டுடே போன்ற சில முன்னணி பத்திரிக்கைகளும் தங்களின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. 'இந்த கருத்துக்கணிப்புகள் போலியானவை, முறையற்றவை' என்று இதன் மீதான விவாதங்களும் களைகட்ட துவங்கின. ஆனால் மே 23 ஆம் தேதி 'கருத்துக்கணிப்புகள் உண்மையே' என்று மக்களும் உணர துவங்கினர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வடக்கில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் தெற்கில் பயத்தையும், சோகத்தையும் மக்களுக்கு கொடுத்ததென்னவோ உண்மை. காரணம், மத்திய அரசின் கடந்தகால 'சாதனைகள்' அப்படி.

பா.ஜ.கவும், அ.தி.மு.கவும்:
'மக்களுக்கான அரசு' என்று சொல்லிக்கொண்டே மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடிப்பதில் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்பதை அடிக்கொரு தரம் நிரூபித்து வருகின்றன. நீட் தேர்வு, ஹைட்ரொ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், பள்ளிகளில் கட்டாய இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு என்று பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடினால், சேலம் எட்டு வழி சாலை திட்டம், தமிழக அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டில் வட இந்தியர்களுக்கு அதிக இடஒதுக்கீடு என்று மத்திய அரசுக்கு ஏற்றவாறு தமிழக அரசும் த(னி)ன் ஆவர்த்தனத்தை 'விசுவாசத்தோடு' நடத்துகிறது. இந்த தேர்தலில் சோகமான வேடிக்கை என்னவென்றால், தமிழக மக்கள் இன்னும் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் இருவேறு கட்சிகளாகவே நினைத்து கொண்டிருக்கின்றனர். அதனால் தானோ என்னவோ, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை தவிர அதிமுக கூட்டணிக்கு வெற்றியை தராத மக்கள், இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்ததை நகைமுரண் என்று சொல்லாமல் இருக்க முடியுமா? அடுத்த இரண்டு வருடங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் தமிழகத்தில் செயல்படுத்த நினைக்கும் பல திட்டங்கள், மக்களுக்கு எதிரானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்னும் போராட்டங்களும், நீதிமன்றத்தில் வழக்கு தொடருதல்களும் தமிழ்நாட்டில் தொடரப்போகின்றன என்பதும் நிதர்சனம்.

பாமகவும், தேமுதிகவும்:
திரு. விஜயகாந்த் அவர்கள் உடல்நலத்தோடு இருந்திருந்தால், தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா என்பதை சிலர் சொல்லும்போது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. காரணம், இன்று அவரின் மச்சானும், மனைவியும் தனித்தனியாக செய்ததை (ஒரே நேரத்தில் இரு பெரிய கட்சிகளிடம் தே.மு.தி.க நடத்திய பேரம் + பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய விவகாரம்) ஒருசேர செய்தவர் விஜயகாந்த். அவரால் கட்சி பாதி தேய்ந்ததென்றால், மீதியை மற்ற இருவரும் சேர்ந்து முடித்து விட்டார்கள். விஜயகாந்த் மீதும், அவரின் கட்சியின் மீதும் மக்களிடம் இருந்த ஒரு சின்ன 'இமேஜ்' மொத்தமாக சரிந்து விட்டதால், இனி தேமுதிகவிற்கு எழுச்சி என்று எதுவும் வரப்போவதில்லை. இனிமேல் அக்கட்சி பத்தோடு பதினொன்றாக இருந்து விடப்போகிறது தமிழகத்தில்.
அடுத்து பாமக. செல்வி.ஜெயலலிதா இறந்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு அமைந்த பிறகு கடும் விமர்சனங்களை பதித்தவர் டாக்டர். ராமதாஸ். அடுத்து இரண்டு வருடங்கள் 'திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்னு எத்தனை தடவ சொல்றது? பத்திரம் எழுதி கொடுக்கட்டுமா? கடல் நீர் வத்தினாலும் வத்தும். இனி அதிமுக, திமுக கூட கூட்டணி வைக்கவே மாட்டோம்' என்று பெரிதாக 'கூவியவர்' மருத்துவர் ஐயா. போதாக்குறைக்கு திரு. அன்புமணி அவர்கள், 'டயர் நக்கிகள், ஈபிஸ், ஓபிஎஸ்க்கு ஒன்னும் தெரியாது. அவங்களுக்கு நிர்வாகம்னா என்னனு தெரியுமா? கால்ல விழச்சொன்ன விழுவாங்க. அவ்ளோ தான் தெரியும்' என்று பெரிதாக கொக்கரித்தார்  'பாகுபலி'. ஆனால் தேர்தல் அறிவித்த உடனே 7 + 1 என்ற கணக்கில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது பாமக. இதிலேயே பாதி செல்வாக்கு காலி. போதாக்குறைக்கு இன்றுவரை பாமக ஒரு சாதி கட்சியாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்க்கு உதாரணம், பொன்பரப்பியில் தலித்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை. இவையெல்லாமே சேர்ந்து அக்கட்சிக்கு தோல்வியை தேடித் தந்திருக்கிறது. இனி அக்கட்சியை டாக்டர்கள் ராமதாஸும், அன்புமணியும் எப்படி காப்பாற்றி கரை சேர்க்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

திமுகவும், காங்கிரஸும்:
இதுவும் ஒருவகையில் சந்தர்ப்பவாத கூட்டணி தான். 2ஜி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து திமுகவும், காங்கிரஸும் பெரிதாக கைகோர்க்காமல் இருந்த நிலையில், தேர்தல் நெருங்க, நெருங்க இந்த இரண்டு கட்சிகளும் நெருக்கம் காட்டியது. அதே போல காங்கிரஸ் கட்சி மத்திய அரசாக இருந்தபோது ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை நம்மால் மறுக்க முடியாது. உண்மையில் ஒரு விஷயத்தை நாம் ஆழமாக யோசித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான மனநிலை தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஓட்டாக மாறியதே தவிர, திமுகவின் மேல் உள்ள நம்பிக்கையின் பேரில் அல்ல. இதன் ஆகச்சிறந்த உதாரணம் தான், தமிழக இடைத்தேர்தலில் 22க்கு 13 தொகுதிகள் வெற்றி பெற்றது திமுக கூட்டணி. திரு. ஸ்டாலின் அவர்கள் இன்னும் மக்கள் மனதில் திமுகவின் மேல் உள்ள நம்பிக்கையை பெரிதாக வளர்க்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் 2021 இல் நடைபெறப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பலமாக எதிரொலிக்கும். திரு. ஸ்டாலினுக்கு சொல்லிய இந்த வாக்கியங்கள் திரு. ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்பது மறுப்பதற்கில்லை.

மக்கள் நீதி மய்யம்:
என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை முதலில் சொல்ல வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு வெறும் 14 மாதங்களே ஆகின்றன. அதற்குள் கிட்டத்தட்ட 4% வாக்குகளை அள்ளியிருக்கிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களிலும், திருச்சி, கோவை போன்ற பெரிய ஊர்களிலும் லட்ச வாக்குகளை பெற்றிருப்பது ஒரு நல்ல ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர வேண்டும். அதற்கு திரு. கமலின் சினிமா இமேஜ் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கண்டிப்பாக திரு. கமல்ஹாசன், திரு.விஜயகாந்த் போன்று கோட்டை விடக்கூடியவர் அல்ல. இமேஜ் ஒருபுறம் இருந்தாலும், மக்களிடம் 
நம்பிக்கையை பெரிதாக சம்பாதிக்க வேண்டும். அது தான் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தை பெரிதாக அடையாளப்படுத்தி காட்டும். So Finally, Congrats for the Good Start.

அமமுகவும், நாம் தமிழர் கட்சியும்:
'அதிமுகவிற்கு மாற்று நாங்கள் தான், நாங்கள் தான் உண்மையான அதிமுக' என்ற கோஷத்தோடு அமமுக என்ற கட்சியோடு களமிறங்கிய டிடிவி. தினகரன், போட்டியிட்ட பல தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை பார்த்தபோது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கிய தினகரன், தமிழகம் முழுக்க தனக்கு செல்வாக்கு இருக்கும் என்று நம்பியது மூடத்தனம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. 2021 சட்டமன்ற தேர்தல் வரும் முன் பல மாற்றங்கள் தமிழக அரசியலில் நடக்கும். அதில் அமமுக இருக்குமா, இருக்காதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வந்த நாளில் திரு.சீமானிடம் கமல் கட்சி ஒட்டு வாங்கியதை பற்றி கேட்டபோது 'அவரு வெள்ளையா இருக்குறதுனால மக்கள் அவர் கட்சிக்கு ஒட்டு போட்டுட்டாங்க' என்றார். இது தான் சீமான். மன்னிக்க வேண்டும், 'இவ்வளவு தான் சீமான்'. கட்சி ஆரம்பித்ததில் இருந்து 'பிரபாகரன் என் தலைவன், அவரோடு சேர்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன், ஏகே 74 துப்பாக்கியில் சுட்டேன்' என்று கதை விட ஆரம்பித்து, இன்று 'அண்ணாவுக்கு எம்ஜிஆர் டா, அண்ணனுக்கு நீ டா' என்பது வரை பல உளறல்கள். ஒரு கீழ்மட்ட அரசியல் தொண்டன் போல இன்று வரை எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டுவது, வசைபாடுவது. ஏதாவது கேள்வியை கேட்டால் 'நீ தமிழனா?' என்று பாய்வது என்று பல. நான் கேட்கிறேன், இவர் யார் ஒருவரை தமிழர் என்று முடிவு செய்ய? இன்று வரை 'திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் ஒரு மராட்டியர்' என்கிறார். Who the Hell is he to Decide that? மக்கள் ஏற்றால் அவர் தலைவர், மக்கள் புறக்கணித்தால் அவர் வெறும் நடிகர். அவ்வளவு தான். இந்த லட்சணத்தில் இவர் தமிழக முதல்வராக வேண்டுமாம். இதற்க்கு அவர் ஸ்டைலில் ஒரு பதில் சொல்லலாமா? 'வாய்ப்பில்ல ராஜா'...



Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக