கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், ஜூலை 13, 2015

எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி' - திரை விமர்சனம்

உண்மையில் சரித்திரக் கால படங்களை எடுப்பதென்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. படத்திற்கான மெகா பட்ஜெட், நடிகர், நடிகையரின் வருடக்கணக்கில் கால்ஷீட், நேர்த்தியான தொழில்நுட்பம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, தணிக்கை குழுவினர். மிருக வதை, மனித வதை என்று அவர்களையும் தாண்டி இயக்குனர் நினைத்தபடி வரும் படம் தான், ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இந்த 'பாகுபலி'.

பொதுவாகவே சரித்திரக்கால கதைகளை பொருத்தவரை இரண்டே இரண்டு தான். ஒன்று ராஜ்யத்திற்காக சகோதர சண்டை + பழிக்குப் பழி, அல்லது மனம் கவர்ந்த பெண்ணிற்க்காக காதல் சண்டை. இதில் பாகுபலி முதலில் சொன்ன சகோதர சண்டை + பழிக்கு பழியை பின்னணியாக கொண்ட படமாக வந்திருக்கிறது. ஆனால் இதை ராஜமௌலி Visualize ஆக கொடுத்திருப்பது தான், மிரட்டலாக இருக்கிறது. பொதுவாகவே எஸ். எஸ். ராஜமௌலிக்கு ஒரு தொழில் தந்திரம் எப்போதும் கை கொடுக்கும். அதாவது, ஒரு சாதாரண கதையை வைத்து, அதற்க்கு அசாதாரணமான திரைக்கதையை எழுதி, அந்த படத்திற்கான Visuals மொத்தத்தையும் ஒரு Extra-Ordinary Treat ஆக ரசிகனுக்கு கொடுத்து அவர்களை திருப்திபடுத்துவார். அதை இந்த முறையும் சரியாகவும், கொஞ்சம் பெரிதாகவும் செய்திருக்கிறார் இயக்குனர்.
 படத்தின் நாயகனாக பிரபாஸ். முறுக்கேறிய உடம்போடும், மிரட்டலான நடிப்போடு கலக்கியிருக்கிறார் இந்த 'டார்லிங்'. வில்லனாக ராணா. பிரபாசுக்கு சரிசமமான வில்லன். தன் புஜபலத்தோடு இவர் அறிமுகமாகும் காட்சியிலேயே நம் கவனத்தை மொத்தமாக ஈர்க்கிறார். தமன்னா அழகாகவும், அதிரடியாகவும் நம்மை கிறங்கடிக்க வைக்கிறார். நம் சத்யராஜூக்கு அழுத்தமான கதாபாத்திரம். கட்டப்பாவாக கலக்குகிறார். நாசரும் வழக்கம் போல நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இது போன்ற கதாபத்திரத்தை அவர் செய்திருப்பதால், பெரிதாக அவர் நம்மை கவரவில்லை. சிவகாமியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு கலக்கல். குறிப்பாக அவரின் மிரட்டலான குரல், அவரின் கதாபத்திரத்தின் மதிப்பை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறது. தேவசேனா  என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவின் அறிமுகக்காட்சிகள், மிரட்டல். அவர் யார்? எதற்காக கைதியாக இருக்கிறார் என்பதை அடுத்த பாகத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும். இதன் தொடர்ச்சி அடுத்த வருடமான ஜூலை 2016 ரிலீஸ் செய்யப்படுகிறது.
கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவை,'Magical விஷுவல் ட்ரீட்' என்றே சொல்லலாம். பிரம்மாண்ட அரண்மனை, ஆர்ப்பரிக்கும் மலையருவி, அடைந்த காடு, குறிப்பாக போர்க்கள காட்சிகள் என மனிதர் பேய்தனமாக உழைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் காட்சிகளாக நம் கண் முன்னால் விரிகிறபோது, இமைக்கக் கூட மறந்து படத்தை பார்க்க செய்துவிடுகிறார் கேமரா மேன். படத்திற்கு இசை, எம்.எம். கீரவாணி. காட்சிகளுக்கேற்ப இசையை சரியாக கொடுத்திருக்கிறார். கதை, கே.வி. விஜயேந்திர பிரசாத். இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் தந்தையான இவரின் கதைகளைத் தான் எப்போதும் ராஜமௌலி திரைக்கதை அமைத்து படமாக எடுப்பார். இந்த கதையை பொருத்தவரை பொன்னியின் செல்வன், மகாபாரதம் போன்றவற்றின் கலவையாக இருக்கிறது. அதே சமயம் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியது எஸ்.எஸ். ராஜமௌலி.நான் பார்த்த ஆங்கிலப் படங்களான Gladiator, Cleopatra போன்ற படங்களின் பிரம்மாண்டத்திற்கு சரிசமமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காரணம், நான் பார்த்த சில சரித்திரக் கால பின்னணி கொண்ட இந்திய திரைப்படங்களில் போர்க்கள காட்சிகளை மட்டும் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு இவ்வளவு விரிவாக நான் பார்த்ததே இல்லை. அதே போல முதல் பாகமான இந்த படத்தில் வந்த அனுஷ்கா மற்றும் சுதீப் போன்ற நடிகர்களுக்கு, அடுத்த பாகத்தில் கொடுக்கப்பட இருக்கும் Big  Screen Space க்கான அறிகுறிகளை மிக அழகாக காட்டி, ரசிகனின் டெம்பரை பல மடங்கு ஏற்றுகிறார் இயக்குனர். இப்படி ஒரு சரித்திரக்கால பிரம்மாண்டப் படத்தை தந்ததற்காகவே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு என் ராயல் சல்யூட். படத்தின் முதல் பாகத்தை பார்த்த பிறகு, 'எப்படா ஜூலை 2016 வரும்?' என்று இப்போதே ஏங்க வைத்து விட்டது இந்த 'பாகுபலி'.
Thanks and Regards

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக