கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், ஏப்ரல் 29, 2015

நான் படித்த புத்தகங்கள் 3 - இந்திரா சௌந்தராஜன், கோட்டயம் புஷ்பநாத் & சுஜாதா நாவல்கள்...

 கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தராஜன்:
இந்த நாவலை தொலைக்காட்சித் தொடராக நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த பதினைந்து வயதில் 'கிருஷ்ணதாசி' சீரியல் எனக்கு ரொம்பவே போரடித்த சீரியல். அதனால் என்ன கதை என்றெல்லாம் சுத்தமாக நினைவில்லை. இப்போது நாவலாக படிக்கும்போது தான் எனக்கு அன்றைக்கு ஏன் இந்த கதை புரியவில்லை என்று
தெரிந்தது. இதற்க்கு முன்பு இந்திரா சௌந்தராஜனின் புதினங்கள் பல படித்திருக்கிறேன். ஆனால், உண்மையில் பெரிய அளவில் என்னை இந்திரா ஈர்க்கவில்லை. இந்த நாவலில் இருந்து தான் எனக்கு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் நாவல்கள் என்னை கவர ஆரம்பித்தது என்றே சொல்லலாம். திட்சகரின் மகனான சுந்தரேசன், தாசியான கிருஷ்ணவேணியின் மகள் மீனாட்சியை ஒரு சந்தர்ப்பத்தில் தற்கொலையிலிருந்து காப்பாற்றுகிறான். இதனால் மீனாட்சிக்கு சுந்தரேசன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதனிடையில் தன் பிறப்பின் ரகசியத்தை கிருஷ்ணவேணியிடமிருந்து அறிய முற்படுகிறாள் மீனாட்சி. அதே சமயம், ஒரு மைனருக்கு ஆசை நாயகியாகும்படி மீனாட்சியை வற்புறுத்துகிறாள் அவளின் பாட்டி மனோன்மணி. மீனாட்சி தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்தாளா? மனோன்மணியின் ஆசை நிறைவேறியதா? சுந்தரேசன், மீனாட்சி காதல் ஜெயித்ததா என்ற கேள்விகளுக்கான பதில்களை, தன் அழகான எழுத்து நடையோடும், சில எதிர்பாராத திருப்பங்களோடும் கதையை எழுதியிருக்கிறார் இந்திரா சௌந்தராஜன். குறிப்பாக நாவலில் வரும் அந்த எதிர்பாராத திருப்பம், மிகவும் அருமை.

 நிறமற்ற வானவில் - சுஜாதா:
ஒரு Software நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் கிருஷ்ணமூர்த்திக்கு, கல்யாணி என்ற மனைவியும், ஆண்டாள் ரோஜா என்ற மகளும் உள்ளனர். அழகான அவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராதவிதமாக கல்யாணியையும், அவனின் மகள் ஆண்டாளையும் ஒரு விபத்தின் மூலமாக காலனிடம் பறிகொடுக்கிறான் கிருஷ்ணமூர்த்தி. 'மனைவி, குழந்தை இல்லாத வாழ்க்கை எனக்கு எதற்கு?' என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறான் அவன். அதிஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்து பிழைக்கிறான். சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும்போது சுப்ரியா என்ற இளம் விதவை இவனுக்கு அறிமுகம் ஆகிறாள். அவளின் நட்பு அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக அவனது கடந்த காலத்தை மறக்கடிக்க செய்கிறது. இருவரும் Living Together ஆக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஊடல், கூடல் எல்லாம் கடந்து திருமணம் செய்துகொள்ள முடிவு  செய்கிறார்கள். அப்போது சுப்ரியாவை பற்றி எதிர்பாராத உண்மை ஒன்று கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவருகிறது. அந்த உண்மை என்ன? யார் இதற்க்கு மூலகாரணம்? உண்மை தெரிந்தபின் கிருஷ்ணமூர்த்தியின் முடிவு என்ன? என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. 'மரணம் என்பது சம்பந்தப்பட்டவர்களின் இறுதி முடிவாக இருக்கலாம். ஆனால் அதுவே இறந்தவர்களின் நெருக்கமானவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதே இந்த நாவலின் மூலக்கரு.

 ஆசை ஊஞ்சல் - இந்திரா சௌந்தராஜன்:
இந்திரா சௌந்தராஜனின் வழக்கமான பாணியில் இல்லாமல், சற்று வித்யாசமான கதையோடு வந்திருக்கும் நாவல். பிரபாகர், பிரவீன் இருவரும் நண்பர்கள். இதில் பிரவீன் சினிமா நடிகன். என்ன தான் சினிமாவில் பெரிய நடிகனாக இருந்தாலும், தன்னை உண்மையாக நேசிக்க இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை என்ற வேதனையை தன் நண்பன் பிரபாவிடம் சொல்ல, அவனை உண்மையாக நேசிக்கும் ஒரு பெண்ணை தேடுகிறான். அதே சமயம் தன் அத்தை மகளான வாசுகியை பிரவீனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்க, அதற்க்கு வாசுகியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, தடாலடியாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறான் பிரபா. கொஞ்ச நாட்களில் ப்ரவீனுக்கு பெரியம்மை தாக்குகிறது. இதற்க்கு நடுவில் பிரவீனை சினிமாவை விட்டு துரத்த நினைக்கும் எதிர் நடிகனின் திட்டம், நடிகை கலாவின் கர்ப்ப நாடகம் என்று போகும் கதை, கடைசியில் சின்ன ட்விஸ்ட்டோடு சுபம் போட்டு முடிகிறார்கள். சத்தியமாக எனக்கு இந்த நாவல் பிடிக்கவில்லை. படித்து ரிஸ்க் எடுக்க நினைக்கிறவர்கள் தாராளமாக எடுக்கலாம்.

 என்றாவது ஒரு நாள் - சுஜாதா:
புண்ணியகோடி என்கிறவன் ஒரு கொள்ளைக்காரன். போலீசுக்கு தெரியாமல் தலைமறைவாக சென்னையில் நாராயணன் என்ற பெயரில் கட்டட வேலை செய்து வருகிறான். அங்கே திலகம் என்ற பெண்ணோடு ஒரு ஈர்ப்பு ஏற்பட, அவளிடம் தன் கடந்த காலத்தை சொல்லாமல் மறைத்து, அவளோடு வாழ ஆசைப்படுகிறான். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தர்மராஜன் புண்ணியகோடியை தீவிரமாக தேட, கடைசியில் புன்னியக்கொடி தர்மராஜால் கைது செய்யப்பட்டானா? திலகத்தோடு அவன் வாழ நினைத்த வாழ்க்கை என்னவானது? போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக தன் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. இதுவும் ஒரு குறுநாவல் தான்.

 காகித சங்கிலிகள் - சுஜாதா:
இது ஒரு குறுநாவல் கதை. கிட்னி பழுதான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூர்த்தி. திருமணமான ஆறே மாதத்தில் தன் கணவருக்கு இப்படி ஒரு நிலையா என்று சோகத்தில் இருக்கும் மனைவி விமலா. ரத்த சம்பந்தப்பட்டவர்கள் ஒரு கிட்னியை தானமாக கொடுக்கலாம் என்ற சூழ்நிலை வரும்போது, மூர்த்தியின் குடும்பத்தார் என்ன நினைக்கிறார்கள்? மூர்த்தியின் அண்ணன், தம்பிகளின் நிலைப்பாடு என்ன? மூர்த்திக்கு மாற்று உறுப்பு பொருத்தப்பட்டதா? என்பதை ஒரு அரசு மருத்துவமனையின் பின்னணியோடு கதை சொல்லியிருக்கிறார் சுஜாதா. சின்ன குறுநாவல் தான் என்றாலும், மிகவும் எதார்த்தமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.

 6961 - சுஜாதா:
ஒரு வித்யாசமான கதையை நாவலாகக்கொண்ட சுஜாதாவின் கைவண்ணம். விமலா ஒரு பணக்கார வீட்டுப்பெண். அவளுக்கு அப்பாவின் பாட்னர் மகன் ராஜேஷை திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனால் விமலாவுக்கு அதில் விருப்பமில்லை. எதேச்சையாக ராஜேஷின் டிரைவர் யாஷை பார்த்தவுடன் அவள் ராஜேஷை மணக்க சம்மதிக்கிறான். உண்மையில் விமலாவுக்கு ராஜேஷை பிடித்திருக்கிறதா? எதற்காக அவள் யாஷுடன் பழக விரும்புகிறாள்? இதை ராஜேஷ் எப்படி அணுகினான்? குறிப்பாக 6961 என்றால் எதை குறிக்கிறது? என்பதற்கு மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் சுஜாதா. 'வன்புணர்வு' ஒரு பெண்ணை உளவியல்ரீதியாக எப்படி எல்லாம் பாதிக்கிறது, உண்மையில் விமலா போன்ற பெண்களுக்கு என்ன தான் தேவை? என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர். கதை நடக்கும் இடம், பம்பாய். அதனால் நிறைய சமாச்சாரங்கள், ஒரே சவுகார் பேட்டை வாடை அடிக்கிறது. ஆனால் சுவாரஸ்யத்திற்கு குறை வைக்கவில்லை சுஜாதா.

 கோஸ்ட் - ரா.கி. ரங்கராஜன்:
மந்த்ராலயம் செல்லும் இரு நண்பர்கள். அவர்களில் ஒருவன் தனக்கு தெரிந்த, நடந்த அமானுஷ்ய சம்பவங்களின் தொகுப்பே இந்த 'கோஸ்ட்' நாவல். உண்மையில் அமானுஷ்ய நாவல் வாசிப்பில் உள்ள த்ரில், வேறெதிலும் இருக்காது. காரணம், நாம் இது போன்ற நாவலை படிக்கும்போது நம் பக்கத்தில் உண்மையிலேயே ஒரு பேய் நம்மோடு உட்கார்ந்து இருப்பது போல ஒரு உணர்வு இருக்கும். அதை இந்த நாவல் படிக்கும்போது கூட கொஞ்சம் அனுபவித்தேன். மொத்தம் ஆறு கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு காலகட்டத்தை சேர்ந்தவை. அதில் ராஜா பேய், ஜமீன் வீட்டு வேலைக்காரப் பேய், குழந்தை ரத்தம் குடிக்கும் தாய் பேய், பூர்வ ஜன்ம ஆவி என்று கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. ஒரே கதையாக இல்லாமல் இருப்பதே, சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. கண்டிப்பாக மறுமுறை படிக்கலாம்.

9 வது வார்ட் - கோட்டயம் புஷ்பநாத்:
கேரளாவில் எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத் மிகவும் பிரபலமானவர். நம்மூரில் எப்படி 'திகில் மன்னன்' ராஜேஷ்குமாரோ, அது போல அங்கு அவர். குறிப்பாக அமானுஷ்யம், திகில், மாந்த்ரிகம் மற்றும் துப்பறியும் கதைகளை சுவைப்பட எழுதுவதில் வல்லவர். சமீபத்தில் இவரின் சில புத்தகங்களை படித்தேன். படித்த நான்கு புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் என்னை கவர்ந்தது. அதில் நான் படித்த முதல் புத்தகம், இந்த '9 வது வார்ட்'. இது ஒரு பேய் கதை. டாக்டர் மெர்சி ஜார்ஜ் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவரின் குடும்பமும் டாக்டர் குடும்பம் தான். ஒரு நாள் இரவு மேர்சியின் மருத்துவமனைக்கு ஒரு பிணம் பிரேத பரிசோதனைக்காக வருகிறது. அதை பிணத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறாள் மெர்சி ஜார்ஜ். காரணம், இறந்து கிடக்கும் பெண், தனக்காக தன் குடும்பத்தாரால் கற்பழித்து, கொலை செய்து, அதை தற்கொலை என்று ஜோடித்த மெர்சி ஜான் என்ற பெண்ணின் உடல். இவை நடந்தது சில வருடங்களுக்கு முன். ஆனால் இப்போது, எப்படி இந்த பிணம் இங்கு வந்தது? என்ற குழப்பத்துடன் தன் அறைக்கு செல்லும் மெர்சி ஜார்ஜ்க்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. சற்று முன்பு பிணமாக பார்த்த மெர்சி ஜான், இப்போது அரூபமாக காட்சி தர, விக்கித்து நிற்கிறாள் மெர்சி ஜார்ஜ். அதே சமயம் மெர்சி ஜானின் ஆவியும், மெர்சி ஜார்ஜ்ஜின் உடலில் புகுந்து விடுகிறது. மெர்சி ஜார்ஜ்ஜின் உடலுக்குள் புகுந்த மெர்சி ஜான், தன்னை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை எப்படி பழிவாங்கினாள்? என்பதை மிகவும் அமானுஷ்யமாக கதை சொல்லியிருக்கிறார் கோட்டயம் புஷ்பநாத். பேய் கதைகளை விரும்பிப் படிக்கிறவர்கள் கண்டிப்பாக படிக்கலாம். போரடிக்காமல் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த '9 வது வார்ட்' நாவல்.

சௌபர்னிகா - கோட்டயம் புஷ்பநாத்:
ஒரு கல்லூரியில் உயிரியல் பிரிவு விரிவுரையாளராக இருப்பவர் ஸ்ரீகுமார். ஒரு நாள் இரவு அவர் கல்லூரி பரிசோதனை கூடத்தில் இருக்கும் எலும்புகூடானது, அரூபமாகி அவரிடம் பேசுகிறது. அது தன்னை 'சௌபர்னிகா' என்று அறிமுகப்படுத்துக்கொண்டு அவரிடம் பேசுகிறது. உண்மையில் சௌபர்னிகாவுக்கும் ஸ்ரீகுமாருக்கும் உள்ள பந்தம் என்ன? அவளை கொன்றவர்கள் யார்? எதற்க்காக? அவர்களுக்கும் ஸ்ரீகுமாருக்கும் உள்ள விரோதம் என்ன? என்பதை அமானுஷ்யம், மாந்த்ரிகம் கலந்த நாவலாக தந்திருக்கிறார் புஷ்பநாத். இவையனைத்தும் மொழி மாற்று நாவல்கள். அதனாலேயே அந்த கதையின் கதாபாத்திரப் பெயர்கள், ஊர் என்று மொத்தமாக கேரளாவின் வழக்கங்கள் அனைத்தையும் நாவலாக வாசிக்கும்போது, எதோ டப்பிங் படத்தை பார்த்தது போன்ற உணர்வு தருகிறது புஷ்பநாத்தின் நாவல்கள். கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களை தமிழுக்கேற்றார் போல மொழிபெயர்த்துத் தருவது பத்திரிக்கையாளர் சிவன்.

மர்ம மாளிகை - கோட்டயம் புஷ்பநாத்:
ஒரு ஊரில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான பாழடைந்த மாளிகையைப் பற்றி நிறைய செய்திகள் அந்த ஊர் மக்களால் பேசப்படுகிறது. அந்த பங்களாவில் சால்வின் துரை என்ற வெள்ளைக்காரர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒரு அக்கிரமக்காரர் என்றும், அவரே அங்கு அமானுஷ்யமாய் உலாவுகிறார் என்றும் அந்த ஊர் மக்களால் பூடகமாகவும், நம்பத்தகுந்த தகவல்களோடும் சொல்லப்பட அதை குறித்து தெரிந்து கொள்வதற்காக வருகிறார்கள் துப்பறியும் அதிகாரி புஷ்பராஜும் அவரின் நண்பரும். அந்த மர்ம மாளிகையில் இருக்கும் மர்மம் என்ன? ஊர் மக்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நிஜம் இருக்கிறது? என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் புஷ்பநாத். நாவலின் ஆரம்பத்திலிருந்தே செம திகிலாக இருந்தது இந்த நாவல். இப்போது அதே புஷ்பநாத் எழுதிய நாவலான 'மந்திர மோகினியை' படித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல சுவாரஸ்யமாக போகிறது.

பைனல் கிக்:
'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன் டான்ஸ் எப்படி இருக்கும் என்பதை தெலுங்கு தேசத்தில் உள்ள சின்ன குழந்தைக்கும் நன்றாகவே தெரியும். கடந்த வருடம் வெளியான அல்லு அர்ஜுனின் 'Race Gurram' என்ற படம் பாக்ஸ் ஆபிஸை ஒரு கலக்கு கலக்கியது. குறிப்பாக இந்த பாடல் எனக்கு பிடித்ததற்கு காரணம், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் நம்ம 'பாய்ஸ்' தமன் மட்டுமல்ல. அல்லு அர்ஜுனுக்கு ஈடு கொடுத்து ஆடிய சுருதி ஹாசனையும் சேர்த்து தான் சொல்லணும். பாட்டின் வேகத்தோடு, நடனத்தின் வேகமும் சேர்ந்தால் தான் அந்த பாட்டு கமர்ஷியல் அளவில் பெரிய ஹிட்டடிக்கும். அதில் இந்த பாட்டும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து விட்டது இந்த 'சினிமா சுபிஸ்தான் மாமா' பாடல்.Thanks and Regards

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக