கற்க கற்க கள்ளும் கற்க...

சனி, ஆகஸ்ட் 09, 2014

எம். ஆர். ராதா - 25

நாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான வழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தொடங்குவார். அதேபோல ராதா கொண்டாடும் ஒரே பண்டிகை - தமிழர் திருநாள்.


'நடிப்பு இலக்கணம் பற்றி ராதாவுக்கு தெரியாது. அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் கிடையாது. நீங்கள் எடுத்துக்கொண்டே இருங்கள். நான் நடித்துக் கொண்டே இருக்கிறேன்' என்பார். முதல் தடவை நடித்ததையே திருப்பி எடுத்தால், அதே மாதிரி நடிக்க அவரால் முடியாது. வேறு மாதிரிதான் நடிப்பார்' - டைரக்டர் பஞ்சு.

ரஷ்யாவில் ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் பிரபலமாக இருந்தார். 'ஆவாரா' படத்தின் விழாவிற்க்காக ரஷ்யாவிற்கு சென்றிருந்தார் அவர். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். 'இந்தியாவில் சிறந்த நடிகர் யார்?' ராஜ்கபூர் பதில், 'தென்னகத்துல கதாநாயகனாக, வில்லனாக, நகைச்சுவை நடிகனாக எல்லாப் பாத்திரங்களையும் உணர்ந்து நடிக்கிற நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் எம். ஆர். ராதா'.

திருச்சி தேவர் ஹாலில் கருணாநிதி எழுதிய 'மணிமகுடம்' என்ற நாடகத்தை பார்த்தார் ராதா. அதில் அல்லி பாத்திரத்தில் நடித்தது நடிகை மனோரமா. ராதாவுக்கு மனோரமாவின் நடிப்பு பிடித்திருந்தது. 'எதிர்காலத்துல நீ நல்லா வருவே' என்று மேக்-அப் அறைக்குச் சென்று வாழ்த்தினார். பின் சென்னைக்கு வந்தார் மனோரமா. வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. நாடகத்திலும் அவ்வளவு வருமானமில்லை. சொந்த ஊருக்கே திரும்பி விடலாம் என்று மனம் வெறுத்துப் போனார் மனோரமா. அந்த நேரத்தில் ராதா, 'இன்பவாழ்வு' என்றொரு படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதுதான் மனோரமா சினிமாவில் நடித்த முதல் படம். படத்தின் கதாநாயகன் ராதா தான். மனோரமாவுக்குக் கதாநாயகியின் அம்மா வேடம். படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது. ஆனால் ராதா அன்று தடுத்து நிறுத்தாவிட்டால், மனோரமா என்றொரு சிறந்த நடிகை திரையுலகிற்கு கிடைத்திருக்க மாட்டார்.

ராதாவின் டிரைவர் பெயர் தமிழன். கார் ஓட்டும்போது டிரைவர் அசதியாக இருப்பது போல தெரிந்தால் ராதா கார் ஓட்ட விடமாட்டார். டிரைவரை பின் சீட்டில் உட்காரச் சொல்லிவிட்டு, தானே காரை ஓட்டிச் செல்வார்.படப்பிடிப்பின் மதிய இடைவேளையில், சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பெக் பிராந்தி சாப்பிடும் பழக்கம் ராதாவுக்கு இருந்தது. பின் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்வார். ஆனால் பிறகு மதுப்பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அவர் காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்ட மனைவி கீதா கேட்டுக் கொண்டதால்தான் மதுவை விட்டார் ராதா.

ராதாவுக்கு இயல்பாகவே கட்டளையிடும் கரகரப்புக் குரல் தான். படத்தில் தேவைக்கேற்ப இரண்டு டோன்களில் அல்லது மூன்று டோன்களில் பேசுவதை ஸ்டைலாக மாற்றிக் கொண்டார்.

தன் நடிப்பு பாணி பற்றி ராதா சொன்னது:
'முன்பெல்லாம் சினிமா உலகம் டைரக்டர் கையிலே இருந்தது. இப்போது கதாநாயகன் கையிலே இருக்கிறது. கதை எழுதுறவன், பாட்டு எழுதுறவன், வசனம் எழுதுறவன் எல்லோரும் கதாநாயகனிடம் அடைக்கலம். கதாநாயகன் தன்னைப் பற்றியே சொல்லுகிறான். அவனைப் பற்றியே கதை எழுதுகிறவன் எழுதுகிறான். பாட்டு எழுதுகிறவனும் அவனை புகழ்ந்தே எழுதுகிறான். திருட்டுத்தனம் பண்ணுவதற்குத் தமிழ்தான் இடம் கொடுக்குமே. நல்ல டயலாக் எல்லாம் கதாநாயகன் பேசுகிறமாதிரி வரவேண்டும் என்கிறான். மற்றவர்கள் பேசுகிற டயலாக்கெல்லாம் டல்லாக இருக்கவேண்டும் என்கிறான். இதனால் 'என் வசனத்தை என் பாணியிலேயே பேசுகிறேன். உங்க பாணி சரிப்பட்டு வராது' என்று சொல்லி நான் மாத்தினேன் பாருங்க, அது சக்ஸஸ் ஆகிவிட்டது'.

'அண்ணே முதல்ல லெப்ட்ல இருந்து நீங்க வர்றீங்க. க்ளோசப்ல உங்களைக் காட்டுறோம். ரைட்ல திரும்பிப் பேசுறிங்க. அப்பறம் லாங் ஷாட்ல...' - சோமு என்ற இயக்குனர் ராதாவிடம் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ராதா அடித்த கமெண்ட். 'இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றே மேன்? லென்ஸை மாத்துறது எல்லாம் உன் வேலை. உன் வேலையை எதுக்கு என்கிட்ட சொல்லுற? டயலாக்கை சொல்லு'.

அடேய், எல்லா நடிகைங்க போட்டோவையும் மறைச்சு மறைச்சு வச்சுப் பார்க்காதிங்கடா. சரோஜா தேவி போட்டோவை மட்டும் வச்சிக்கோங்க. அவ நல்ல பொண்ணு' - இது ராதா தன் பிள்ளைகளிடம் சொன்னது.

படப்பிடிப்பில் யாராவது 'ஏதாவது சின்ன ரோல் கிடக்குமாண்ணே?' என்று ராதாவிடம் வந்து வாய்ப்பு கேட்டால், 'கொடுப்பா, பாவம்' என்று இயக்குநரிடம் சிபாரிசு செய்வார்.

யாராவது அசத்திட்டிங்கன்னே என்று படப்பிடிப்பிலோ, சினிமாப் பார்த்துவிட்டோ பாராட்டினால் ராதா சொல்லும் கமெண்ட். 'நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறப்போதான் ஆக்ட் பண்ணினேன். இப்போ எங்கேயா ஆக்ட் பண்ணுறேன்'.

தேனாம்பேட்டை நாடக நடிகர்கள் எல்லோர் மீதும் ராதா தனி பிரியம் வைத்திருந்தார். அவர்கள் எல்லோரும் 'நைனா' என்று ராதாவை அழைத்தார்கள். அவர்கள் தன்னைத் தேடி வரும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லுவார் ராதா. நினைத்த நேரத்தில் எல்லாம் போய் சாப்பிட்ட நலிந்த கலைஞர்கள் கூட உண்டு.

'எங்க அம்மா இறந்துட்டாங்க. போகணும். நான்தான் எங்கப்பாவோட மூத்ததாரத்துப் பையன். கண்டிப்பா போயே ஆகணும்' என்று ராதா வீட்டுப் பணியாள் விடுப்பு கேட்டார். 'சரிதான், உங்கப்பா என் டைப் போலிருக்கு' என்று கமெண்ட் அடித்தார் ராதா. 'நீ நம்ம டைப் போலிருக்கு' என்று கமெண்ட் அடித்தார் எம்.ஆர்.ஆர். வாசு.

நாடகத்தில் போலிஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவது போல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏண்டா பயப்படுறே? போலிஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களை பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவனெல்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான். 'ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து ஓடுவதும் உண்டு.இதுவரை வந்த தமிழ்படங்களிலேயே அதிக 'பஞ்ச்' டயலாக்குகள் கொண்ட படம் ரத்தக்கண்ணீர் தான். பின்னாள்களில் 'ரத்தக்கண்ணீர்' நாடகம் இருந்த நாள்களில் மதிய நேரத்தில் ஊசி ஒன்றை போட்டுக்கொள்ளும் பழக்கம் வைத்திருந்தார் ராதா. அது என்ன சத்து ஊசி என்று தெரியவில்லை. ஆனால் மனித ஆயுளின் ஒரு நாளை குறைக்கும் அளவுக்கு வீரியம் மிக்கதாம். அந்த ஊசி போடுவதற்கென்றே கம்பவுண்டர் ஒருவரை வைத்திருந்தார். ஊசி போட்டுவிட்டு இரண்டு மணி நேரம் தூங்குவாராம். பின்பு நாடகத்துக்குக் கிளம்புவாராம். நாடகத்தில் பழைய நடிப்பு கொஞ்சமும் குறையாமல் சிரமப்பட்டு நடிப்பதற்காகவே அந்த ஊசி போட்டுக்கொள்வாராம்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டுத் தோட்டத்தில் ராதாவுக்கு என நினைவு மண்டபம் உள்ளது. அந்த வீட்டில் அவர் நாடகத்துக்கு பயன்படுத்திய பொருள்கள், சாட்டின் படுதாக்கள் எல்லாம் இருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு பற்றி அவரிடமே ராதா சொன்ன கமெண்ட் - 'நீ படத்துல முதல்ல வரணும். அப்பறம் நடுவுல அப்பப்ப வரனும். அப்பறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிருபிக்கணும். ஆனா படம் முழுக்க நீ இருந்துகிட்டிருக்கியே?'

'இன்கம்டாக்ஸ் கட்டவில்லையா? போச்சு போச்சு, வந்து உங்கள் காரை சீஸ் செய்துவிட்டு போய்விடுவார்கள்' - ராதாவிடம் சொன்னார் ஜி.டி. நாயுடு. ராதா நேராக தன் ப்ளைமவுத் கார் நிற்கும் இடத்திற்க்குச் சென்றார். அதை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு, அதன் நான்கு டயர்களையும் கழட்டி எடுத்து ஒளித்து வைத்தார். பின்பு சொன்னார். 'சீஸ் பண்ண வரவங்க, டயர் இருந்தாத்தானே ஓட்டிக்கிட்டுப் போவ முடியும். இப்ப என்ன பண்ணுவாங்க?'

எம்.ஜி.ஆர் வந்தால் செட்டில் யாரும் உட்கார மாட்டார்கள். வேலையை வேகமாக முடிக்கவேண்டும் என்று பரபரப்பாக இயங்குவார்கள். ஆனால் ராதா முன்பு எம்.ஜி.ஆர் உட்கார மாட்டார். ராதாவே வற்புறுத்திச் சொன்னால்தான் உட்காருவார். ராதாவுக்கான காட்சிகளை சீக்கிரம் முடித்து அனுப்பச் சொல்லுவார் எம்.ஜி.ஆர்.

இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர் எப்போதுமே பைப் சிகரெட்டை பிடித்துக் கொண்டிருப்பார். ஒருநாள் ராதா செட்டில் ஓர் உதவி இயக்குநரை பார்த்துக் கேட்டார். 'பைப் வைச்சு புடிக்கிறாரே டைரக்டர், அந்த ஆளுங்க நடிக்கும்போதும் பைப் வைச்சுப் பிடிப்பாரா?' அந்த உதவி டைரக்டரின் பதில் - 'நல்லா பிடிப்பாரன்னே. சிவாஜி முன்னாலயும் பிடிப்பாரு. எம்.ஜி.ஆர் முன்னாலயும் பிடிப்பாரு. உட்கார்ந்துகிட்டே டைரக்ட் பண்ணுவாரு. அவரு எப்பவுமே இப்படித்தான்.' பதிலைக் கேட்ட ராதா மகிழ்ச்சியோடு சொன்ன கமெண்ட், 'இவன்தான்யா டைரக்டரு. ஒரு ஓரத்துல போயி பயந்து பயந்து சிகரெட் அடிக்கிறவனுங்க எல்லாம் என்னய்யா டைரக்டரு?'

சொன்ன நேரத்தில் நாடகத்தை தொடங்குவதில் ராதாவுக்கு நிகர் ராதா தான். யாருக்காகவும், எதற்காகவும் அவர் ஒரு வினாடி கூட காத்திருக்க மாட்டார். சமயங்களில் நாடகம் தொடங்குவதற்கு முன்பே, நாடக அரங்கம் பாரவையாளர்களால் நிரம்பி வழியும். அந்த சமயங்களில் நாடகத்தை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்க சொல்லி கூச்சல் போடுவார்கள். உடனே ராதா மேடையில் தோன்றுவார், ஒரு நாயுடன். அந்த நாயை பார்த்து, 'நாயே, உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏழு மணிக்கு பிஸ்கட் போடறேன்னு சொன்னா, ஏழு மணிக்குத் தான் போடுவேன். அதுக்கு முன்னாடியே ஏன் நாயே பிஸ்கட் கேட்டு கொறைக்கிற? அமைதியா இருந்தா பிஸ்கட் உண்டு. இல்லேன்னா கெடையாது' என்று ரசிகர்களை மறைமுகமாக திட்டுவார். ரசிகர்களும் அமைதியாகி விடுவர். அதே போல நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது யாராவது 'ஒன்ஸ்மோர்' கேட்டால், ராதா சொல்லும் பதில் இதுதான், 'அடுத்த ஷோ'ல வந்து பாரு'.

ஒரு படத்தில் ராதாவும், நடிகர் எஸ்.வி. ரங்காராவும் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகி இருந்தனர். அந்த சமயத்தில் எஸ்.வி. ரங்காராவ் மீது நிறைய புகார்கள். 'சரியாக ஷூட்டிங் வருவதில்லை, மிகவும் காலதாமதமாக வருகிறார், அப்படியே வந்தாலும் குடித்துவிட்டு வருகிறார்' என்று நிறைய குற்றச்சாட்டுகள். எம்.ஆர். ராதா நடித்துக் கொண்டிருந்த படத்திலும் எஸ்.வி.ஆர் காலதாமதமாக வருவது தொடர்ந்தது. ராதாவும் பொறுமையாக இருந்தார். ஒரு நாள் வழக்கம் போல லேட்டாக வந்த எஸ்.வி.ரங்காராவ், எம். ஆர். ராதாவைப் பார்த்து, 'என்ன ராதாண்ணே, சௌக்கியமா?' என்று கேட்க, ராதாவோ பக்கத்தில் இருந்த தன் உதவியாளரைப் பார்த்து 'கஜபதி, நான் இந்த படத்துல வில்லனா நடிக்கிறேன். நானே சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்துடுறேன். இவர் இந்த படத்துல நல்லவரா நடிக்கிறாரு, ஆனா பாரு, இவரு லேட்டா வர்றாரு?' என்று சொல்ல, எஸ்.வி. ரங்காராவுக்கு என்னவோ போலாகிவிட்டது. அன்றிலிருந்து அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்து நடித்துக் கொடுத்தார் எஸ்.வி.ஆர்.

ராதாவுக்கு சினிமாவை விட, நாடகத்தில் நடிப்பது தான் அதிக விருப்பம். அதனால் தான் சினிமாவில் நடிக்கும்போதே, நாடகத்திலும் தொடர்ந்து நடத்தியும், நடித்துக் கொண்டும் இருந்தார். ராதாவின் ஒவ்வொரு நாடகத்திலும் வசனங்கள் அன்றைய சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் ராதாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. தினசரி காலையில் ராதாவுக்கு யாராவது  அன்றைய நாளிதழை படித்துக் காட்டுவார்கள். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நாடகத்தில் சமயம் பார்த்து அதைப் பற்றி 'பஞ்ச்' அடித்து விடுவார். அன்றைய சினிமாவில் 'Own Dialogue' பேசுவதை படத்தின் இயக்குனர்கள் அனுமதித்தார்கள். ராதாவைத் தவிர சொந்தமாக வசனம் பேசுபவர்களில் 'டனார்' தங்கவேலு, வி.கே. ராமசாமி, நாகேஷ் போன்றோர் முதன்மையானவர்கள்.

ராதாவின் நாடகங்களில் பெரும்பாலானவை கோர்ட் வாசலை தொட்டுவிட்டுத் தான் நாடக மேடையையே தொடும். அந்தளவுக்கு சர்ச்சையான தலைப்பையோ, நாடகத்தின் கதையையோ தேர்வு செய்வார் ராதா. உதாரணமாக ராமாயணத்தை 'கீமாயணம்' என்ற தலைப்பில் நாடகம் நடத்துவார். அதிலும் ராமர் வேடத்தில் நடிக்கும் ராதாவோ ஒரு கையில் மதுவுடனும் இன்னொரு கையில் மாமிசத்துடனும் காட்சி தருவார்.நன்றி: எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை புத்தகம்
Sixth Sense Publications


Thanks & Regards

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக