கற்க கற்க கள்ளும் கற்க...

செவ்வாய், செப்டம்பர் 30, 2014

மெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்

ஒரு அறிமுக  இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு
இரண்டாவது படத்தில் சறுக்கிய இயக்குனர்கள் பல. அதையும் மீறி ஜெயித்தவர்கள் தான் இன்று பெரிய இயக்குனர்களாக திரையுலகில் வலம் வருகின்றனர். கண்டிப்பாக மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித்தும் இந்த பட்டியலில் சேருவார் என்று நிச்சயமாக நம்பலாம். இரண்டாவது படம், அதுவும் கார்த்தி போன்ற கொஞ்சம் பெரிய நடிகரோடு இணைந்து பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் இயக்குனர்.முதலில் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியோடு நாம் விமர்சன பகுதிக்கு செல்வோம்.
கதை, வெறும் ஒரு பெரிய சுவர். கதையின் களம், வடசென்னை. இந்த இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு கலக்கிவிட்டார் இயக்குனர் படத்தில். பொதுவாக சென்னையை பலரும் தத்ருபமாக காட்ட நினைத்தாலும் அது சில சமயம் எடுபடாமல் போகும். ஆனால் ரஞ்சித்திற்கு மட்டும் அது விதிவிலக்கு ஆகியிருக்கிறது. வடசென்னை வாழ்க்கையை மிக அழகாக திரையில் காட்டியிருக்கிறார். சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்யும்போது கழிவு நாற்றமும், கடல் மீன் குழம்பு வாசமும் கலந்து அடிக்கும் ஏரியாக்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நட்பு, காதல், மோதல், பகை, துரோகம், கொலை இன்னும் நிறைய விஷயங்களை படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் ரஞ்சித். 'இதுக்கெல்லாமா சண்டை போட்டுப்பாங்க?' என்று நீங்கள் கேட்டால், நீங்கள் வடசென்னையை சேர்ந்தவரல்ல. 'இங்கே இன்னாத்துக்கு சண்டை போடுறோங்கறது முக்கியமில்ல. நாம யாருன்னு ஏரியாவுல கெத்து காட்டனும், அதான் முக்கியம்' என்பார்கள் வடசென்னை நண்பர்கள்.
காளியாக கார்த்திக். எனக்கென்னவோ 'பருத்திவீரன்' படத்திற்கு பிறகு இந்த படம் தான் கார்த்திக்கு 'Bench Mark' படம் இது என்பதே என் கருத்து. நன்றாகவே நடித்திருக்கிறார். ஒரு வடசென்னைவாசியினுடைய Body Language அப்படியே கார்த்தியிடம் தெரிகிறது. கார்த்தி இது போன்ற படங்களில் தேர்ந்தெடுத்து நடித்தால், கண்டிப்பாக அவரது அண்ணனின் இடத்திற்கு விரைவில் வந்துவிடலாம். படத்தின் கதாநாயகியாக கேத்ரின் திரேசா. ஏற்கனவே கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழில்  இவருக்கு இது முதல் படம். இவரின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. படத்தில் வரும் நிச்சயதார்த்த காட்சியில் மேக்கப்போடு வரும் காட்சியை தவிர, மற்ற காட்சிகளில் எல்லாம் மேக்கப் இல்லாத 'வெள்ளை கலரு' வடசென்னைகாரியாகவே நடித்திருக்கிறார். கார்த்தியின் நண்பராக வரும் அன்பரசனும், மேரியும் தான் என் மனதில் நிறைந்திருக்கிறார்கள். ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் செல்ல சண்டைகள், சின்ன கோபங்கள், அவர்களின் Romance இப்படி எல்லாமே அழகாக செய்திருக்கிறார்கள் படத்தில்.
படத்தில் நடித்த பலரும் புதுமுகங்கள் என்றால் வியப்பாக இருக்கிறது. எவ்வளவு கதாபாத்திரங்கள். சிறுசு முதல் பெருசு வரை அனைவரிடமும் இயல்பான நடிப்பு. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஜெயபாலன், பின்பு வெறும் சுவர் ஓவியமாக வந்து சில சமயங்களில் பயமுறுத்தவும்  செய்திருக்கிறார். அந்த கெடா மீசையோடு இருக்கும் அவரின் ஓவியம் உண்மையில் இந்த படத்துக்கு கெத்தாகத்தான் இருக்கிறது. அடுத்து, பைத்தியக்கார ஜானியாக நடித்திருக்கும் ஒருவர். சர்வ சாதாரணமாக அவர் பேசும் விதம் மிகவும் அருமை. படத்தில் அவரைப் பற்றி சொல்வதுபோல போலீஸ்காரர்கள் அடித்து நிஜமாகவே பைத்தியமானவர்களை நான் பார்த்திருக்கிறேன். மற்ற முக்கிய கதாபாத்திரங்களான மாரி, கண்ணன், விஜி, கார்த்தியின் அப்பா அம்மா என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் திரு.ஜி.முரளி அவர்களின் கேமரா கோணங்கள் அனைத்தும் அருமை. வடசென்னையின் முக்கிய பகுதிகளான வியாசர்பாடி ஜீவா, காசிமேடு, ராயபுரம், ஓட்டேரி மற்றும் பெரம்பூர் பகுதிகளை தத்ருபமாக காட்டியிருக்கிறார். குறிப்பாக அந்த Housing போர்டு ஏரியா, இரவில் நடக்கும் சண்டைக்காட்சிகள், கோர்ட்டில் தூணை நடுநயமாக வைத்து அன்புவை கூலிப்படையினர் போட்டுத்தள்ளும் காட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இசை, சந்தோஷ் நாராயணன். அனைத்துப் பாடல்களும் அருமை. எதுவும் சோடைபோகவில்லை. படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள், சென்னை வடசென்னை மற்றும் நான் நீ. பாடல்களை விட பின்னணி இசை ஒரு படி மேலே நம்மை கவர்கிறது. எழுதி இயக்கியது பா. ரஞ்சித். படத்தில் நடித்த அனைவரையும் அருமையாக வேலைவாங்கி இருக்கிறார் இயக்குனர்Simply சூப்பர். இது போன்ற வித்தியாச படங்களை கமர்ஷியல் கலந்து கொடுத்தால், எந்த ரசிகனும் வரவேற்ப்பான். அதற்க்கு இந்த மெட்ராஸ் படமே சாட்சி.


Thanks & Regards

Post Comment

1 comments:

சீனு சொன்னது…

எனக்கு முதல் பாதி ரொம்ப ரொம்பவே பிடித்திருந்தது.. என்ன ஹீரோயின் தேர்வு இன்னும் கொஞ்சம் நன்றாய் இருந்திருக்கலாம்...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக