திங்கள், ஜனவரி 27, 2014

பாட்டி வீட்டு ஞாபகங்கள்...

பாட்டி வீட்டு ஞாபகங்கள் 2
இன்றைய உலகம் பேய்த்தனமான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதன் அந்த வேகத்திற்கு தன்னை ஒப்படைத்துவிட்டு, ஜடமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதில் நானும் ஒருவன் தான். படிக்கும் நீங்களும் ஒருவர் தான். ஆனாலும், திடீரென்று ஒரு சில ஓய்வுகள் கட்டாயம் அனைவருக்கும்
கிடைக்கும். அது தவிர்க்க முடியாதது. அந்த ஓய்வு, கண்டிப்பாக ஒரு வித மனநிம்மதியை நமக்கு அளிக்கும். இது வயது முதிர்ந்த பிறகு வரும் 'Permanent Relief' அல்ல. நமக்கு அடிக்கடி கிடைக்கும் 'Temporary Relief'. இந்த ஓய்வு, நம்மை ஏதோ ஒரு விஷயத்திற்காக தயார்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. எனக்கு அப்படி சில ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் வாசிப்பது, பதிவு எழுதுவது என்று நேரத்தை செலவிடுவேன். பிரயாண சமயங்களில் பாடல்கள் கேட்பது போன்ற விஷயங்களில் நான் நேரத்தை கடத்தினாலும், நினைவுகள் மட்டும் எப்போதும் என் மனதிற்குள் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். இந்த 'பாட்டி வீட்டு ஞாபகங்களும்' அடிக்கடி என் மனதில் வந்து போகும்.

சிறுவயதில் நான் அதிக நேரம் செலவிட்டது, என் பாட்டி வீட்டில் தான். கிட்டத்தட்ட 14 வருடங்கள். என் அம்மாவோடு பிறந்த ஐவரின் பிள்ளைகளும் வளர்ந்த இடம் அது தான். பாட்டி வீடு, கொஞ்சம் பழைய வீடு. கீழே, மேலே என்று இரண்டு போர்ஷன்கள். அந்த ஓட்டு வீட்டை தாங்கிப் பிடிக்க இரண்டு ரயில் தண்டவாளங்களை வைத்து ஓட்டு கூரையை திடப்படுத்தியிருந்தார்கள். சிமென்ட் பூசாத செங்கல் பதித்த தரை, துருபிடித்த ஜன்னல் கம்பிகள், சுண்ணாம்புச் சாயம் உலர்ந்து போன சுவர்கள், கரி பூசிய சமையலறை, வீட்டு பின்புற கிணற்றடி, சிறிய தோட்டம், முன் பக்க வராண்டா என்று பழைய வீட்டின் அழகை அழகாக பிரதிபலிக்கும். சனி, ஞாயிறு விடுமுறைகள் பெரும்பாலும் நான் கழிப்பது பாட்டி வீட்டில் தான். பாட்டி வீடு அமைந்த இடம், பஸ் ஸ்டாண்டின் பின்னால். வீட்டின் மாடியில் நின்று கொண்டே, பக்கத்தில் இருக்கும் ராயல் தியேட்டரில் ஓடும் படத்தின் வசனக்காட்சியை கேட்கலாம். ராயல் தியேட்டருக்கும், பாட்டி வீட்டிற்கும் நடுவில் இருந்த இன்னொரு கட்டடம், கனகதுர்கா தெலுங்கு மீடியம் பள்ளி.
பாட்டி வீட்டு ஞாபகங்கள் 2
சிறுவயதில் எனக்கு அங்கு பொழுதுபோக்க நிறைய விளையாட்டுக்கள் நிறைந்திருந்தது. பாட்டி வீட்டின் நேரெதிரில் 'பாஷா சைக்கிள் கடை' இருக்கும். அங்கே கிடைக்கும் பழைய சைக்கிள் டயர்களை எடுத்து வந்து ஒரு டயருக்குள் இன்னொரு டயர்களை நுழைத்து ரோட்டில் டயர் விட்டுக்கொண்டிருப்பேன். பாஷா சைக்கிள் கடைக்கு பக்கத்தில் நாடார் பெட்டிக் கடை இருக்கும். தேன்மிட்டாய், இனிப்பு & கார கஜிரா, பட்டர் பிஸ்கட் என்று கண்ணாடி பாட்டில்களில் வைத்திருப்பார்கள். 'பெப்சி' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சாதாரணமாக குடிக்கும் பெப்சி குளிர்பானம் அல்ல. 'உறிஞ்சி' குடிக்கும் பெப்சி ஐஸ். கோலா கலர் பானத்தை நீளமான பிளாஸ்டிக் கவரில் அடைத்து, பிரிட்ஜில் வைத்து உறைந்து ஐஸ் ஆன பிறகு விற்பார்கள். சின்ன பெப்சி - அம்பது பைசா, பெரிய பெப்சி - ஒரு ருபாய். ஆரஞ்ச், கிரேப், பைனாப்பிள் என்று மூன்று Flavors வரும். பெப்சி ஐஸின் ஒரு முனையை கடித்து துப்பி உறிஞ்சி குடிப்பதே அன்றைய வெயிலுக்கு இதமாகவும், தொண்டைக்கு குளுமையாகவும் இருக்கும்.

பாட்டி வீட்டில் தங்கியிருக்கும்போது மாலைநேரங்களில் அங்கே இருக்கும் என் வயது பசங்களோடு 'திருடன் போலீஸ்' விளையாடுவேன். அப்போது நான் ஒளிந்து கொள்ள பயன்படுத்தும் இடம், பஸ் டிப்போ. அதுவே நான் போலீஸாக இருந்து திருடனை தேட ஆரம்பிக்கும் இடம், பஸ் டிப்போ தான். பாட்டி வீட்டு மாடிப் வீட்டில் நின்று பார்த்தபடியே என்னென்ன பஸ்கள் நின்றிருக்கிறது என்று தெளிவாக சொல்லிவிட முடியும். பாட்டி வீடு அமைந்துள்ள 'தெற்கு மாட வீதி' விலாசம் எனக்கு இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. பள்ளி முடிந்து சாப்பிடுவதற்க்கு பாட்டி வீட்டிற்கு வருவேன். வரும் வழியில் ஒரு ஐஸ் கடை இருக்கும். பெரிய சைஸ் ஐஸ் கட்டிகளை பொதுவாகவே நெற்பதர்களை போட்டுத் தான் மூடி வைத்திருப்பார்கள். அவை அதிக ஈரத்தோடு இருந்தால், வெயிலில் போட்டு உலர வைத்து எடுப்பார்கள். ரோட்டில் பரப்பி வைத்திருக்கும் அவைகளை நானும் என் பங்கிற்கு காலால் பரப்பிக் கொண்டே வருவேன்.
பாட்டி வீட்டு ஞாபகங்கள் 3
சிறுவயதிலிருந்தே நான் ரஜினி ரசிகன். பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு Whole sale கடை ஒன்று அங்கு இருக்கும். பெட்டி கடைக்கு தேவையான சரக்குகள் அனைத்தும் மொத்த விலைக்கு கிடைக்கும். அந்த கடையின் உரிமையாளர் என் சித்தப்பாவின் நண்பர். அந்த கடையில் ரஜினி, கமல், ராமராஜன் ஆகியோரின் பேப்பர் ஸ்டில்கள் பொலிதீன் கவர்களில் அடைத்து மாலையாக தொங்கவிட்டிருப்பார்கள். அதை ஒன்றிரண்டு வாங்கினாலே சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சித்தப்பா எனக்கு மொத்தமாகவே வாங்கிக் கொடுத்துவிடுவார். அப்படி அவர் வாங்கிக் கொடுத்த ஸ்டில்கள் ஏராளம். முதன்முதலில் பள்ளியில் இருந்து தனியாக போனது, அப்பாவிடம் செய்த / செய்யாத தவறுகளுக்காக அடிகள் வாங்கியது, விநாயகர் சதுர்த்தி மேடைகளில் தாத்தா, பாட்டியின் சிபாரிசில் மேடையேறி பாடல்களும், கீர்த்தனைகளும் பாடியது, அண்ணன்கள், தங்கைகள், அக்கா, தம்பி என்று அவர்களோடு கதை பேசி விளையாடிய காலங்கள் அனைத்தும் பசுமையான பாட்டி வீட்டின் நினைவுகள். அவை திரும்ப கிடைக்காத பொக்கிஷத் தருணங்கள்.

இன்றைக்கு நாங்கள் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்று செட்டிலானாலும். அந்த பாச நெருக்கம் இன்னும் அப்படியே இருக்கிறது. சித்தி மகள், பெரியப்பா மகன் என்று பாகுபாடு பார்க்காமல் அண்ணன், தங்கை என்று எங்களால் பழகமுடிகிறது என்றால், அதற்க்கு எங்களை வளர்த்த விதம் தான் முக்கிய காரணம் என்று சொல்வேன். அன்றைக்கு எங்களுக்கு இருந்த பாட்டி வீடு என்ற Play School, பொழுதுபோக்கை மட்டும் சொல்லித் தராமல் வாழ்க்கைக்குத் தேவையான பல அடிப்படை விஷயங்களை சொல்லித் தந்தது. இன்றைய சந்ததியினருக்கு அவை கிடைக்கவில்லை எனபதால் தான் பல குழந்தைகள் மூர்க்கமாகவும், மந்தபுத்தியாகவும் வளர்கிறார்கள். இவர்கள் வளர்ந்த பிறகு எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறார்களோ என்ற பயம் சமுதாயத்தில் வலம் வரும் பல நல்ல மனிதர்களுக்கு இருக்கத்தான் செய்யும்....




Thanks & Regards

2 கருத்துகள்:

  1. இனிய பல மகிழ்ச்சியான நினைவுகள் மனதில் வந்து போயின... ம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு