கற்க கற்க கள்ளும் கற்க...

செவ்வாய், ஏப்ரல் 08, 2014

மை டியர் Blacky...

 2002. ஏப்ரல் 14 என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்க்கு இரண்டு நாய் குட்டிகளை கொண்டு வந்தாள் என் தங்கை. ஒன்று பிரவுன் கலர், மற்றொன்று ப்ளாக் கலர். அதனால் அதன் பெயர்களை கூட Blacky, Browny என்றே பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தோம். நாய் வளர்ப்பது ஒன்றும் எங்களுக்கு
புதிதல்ல. ஏற்கனவே நான் குழந்தையாக இருக்கும்போதே Trikki என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து, அதற்க்கு 'ராபீஸ்' என்ற நோய் தாக்கி இறந்ததால் இனி மேல் வீட்டில் நாய் வளர்க்க வேண்டாம் என்று எங்கள் அப்பா சொன்னதனாலும் , சில காலம் வளர்க்காமல் இருந்தோம். ஆனால் என் தங்கையால் மீண்டும் இரண்டு நாய்கள் எங்கள் வீட்டிற்க்கு மறுபிரவேசம் செய்தது. Browny க்கு ஒரு கண் தெரியாது. அதனாலேயே அது பயங்கர உஷாராக இருக்கும். இதனால் Blacky யை விட Browny யை கொஞ்சம் கூடுதலாக கவனித்துக் கொண்டோம். ஆனால் ஒரு நாள், என்ன ஆனதோ தெரியவில்லை. Browny எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அதற்க்கு அடிபட்டதால் மூளை குழம்பி விட்டது, அதனால் தான் அது எங்களை விட்டு சென்று விட்டது என்று சிலர் சொல்ல, அதுவும் ஒரு வகையில் உண்மையாக இருந்ததனாலும், Browny எங்களுக்கு கடைசி வரைக்கும் கிடைக்காமல் போனதாலும், Blacky யை மட்டும் வளர்க்க ஆரம்பித்தோம்.

பெயர் தான் Blacky. ஆனால் கருப்பு, காக்கி, வெள்ளை என எல்லாம் கலந்து ஒரு Different ஆன கலரில் இருப்பான் அவன். Tom & Cherry யில் வரும் டாமின் வால் முனை மட்டும் எப்படி வெள்ளையாக இருக்குமோ, அதே போல Blacky யின் வால் முனையும் வெள்ளையாக இருக்கும். இந்த ஒரு அடையாளத்தை வைத்தே அவனை எந்த கூட்டத்திலும் கண்டுபிடித்து விடலாம். பொதுவாகவே நாய்களுக்கு என்று சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அதில் பாதி கூட, பாதி என்ன கால்வாசி குணங்கள் கூட Blacky யிடம் நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் வீட்டு ஆட்களை தவிர வேறு யார் சாப்பாடு போட்டாலும் சரி, பிஸ்கட் போட்டாலும் சீண்டவே சீண்டாது. 'என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விடும். Blacky சிறிதாக இருக்கும்போது நான் சாப்பிடுவதற்காக 'கிரீம் பன்' வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட ஆரம்பிப்பேன். கவரை பிரிக்கும்போது தூரத்தில் என்னை பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் அவன், பன்னை நான் தட்டில் வைக்கும்போது என் மடியில் படுத்துக்கொண்டு என்னை பாவமாக பார்ப்பான். அந்தளவுக்கு கேடி இவன். என் தங்கையை யாராவது அடித்தால், எங்களுக்கு முன்னால் போய் முறைத்துக்கொண்டு நிற்பான். நாங்கள் அவனை அடித்தாலும் சரி, இம்சித்தாலும் சரி. ஒரு முறை கூட எங்களை அவன் முறைத்ததும் இல்லை, கடித்ததும் இல்லை.
எங்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படி சொல்லுவார்கள், 'பொறந்தா அவங்க வீட்டு நாயா பொறக்கணும்' என்று. காரணம், தொடர்ந்து பத்து வருடம் அவனின் இரவு உணவு - சிக்கன் பிரியாணி. அதுவும் பீஸை மட்டும் கரெக்ட் ஆக அடித்து விட்டு, ரைஸை விட்டுவிடுவான். ஸ்வீட்ஸ் என்றால் கொள்ளை இஷ்டம். ஸ்வீட்ஸ் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் எதையாவது செய்து அவன் பங்கை எங்களிடம் இருந்து வாங்கி விடுவான். ஆனால் ஒரு முறை கூட அவன் திருடி சாப்பிட்டதில்லை. அவன் தரையில் படுத்து தூங்க மாட்டான்.படுத்தால் சோபா அல்லது கட்டில். எங்கள் வீட்டிற்க்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால், அவர்கள் ஹாலை தாண்டி எங்கும் போகக்கூடாது. மீறிப் போனால், முறைப்பான். ஆனால், அவன் யாரையும் கடித்ததில்லை. தூங்கும்போது கனவு கண்டு, அதில் ஓடுவது போலவே படுத்துக்கொண்டு தூக்கத்தில் ஓடிக் கொண்டிருப்பான். நிறைய தடவை தூக்கத்தில் கட்டிலில் இருந்து கிழே விழுந்து விட்டு, பின்பு சுதாரித்து எழுந்து எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப எங்கிருந்து விழுந்தானோ அங்கேயே மறுபடியும் படுத்துக்கொள்வான்.

Blacky ஒரு ஏரியா தாதா. தூரத்தில் ஏதாவது நாய் ஒன்று இதை பார்த்து குறைத்தால், ஒரு ரெண்டு அடி முன்னாடி எடுத்து வைக்கும். அவ்வளவு தான். குறைத்த நாய் பயந்து ஓடியிருக்கும் அல்லது படுத்துக்கொண்டு இவனோடு விளையாட ஆரம்பித்திருக்கும். எங்கள் Blacky யை பார்த்த எங்கள் பெரியப்பா 'இது ஏதோ ஒரு ஜாதி நாயின் சாயலில் இருக்கிறதே?' என்று சொல்லிவிட்டு பின்பு அது எந்த ஜாதி என்று எங்களுக்கு கண்டுபிடித்து சொன்னார். Blacky ஒரு 'சிப்பி பாறை' கிராஸ் வகையை சேர்ந்தவன். இந்த வகை நாய்கள் வேட்டைக்காகவே பயன்படுத்தப்படுபவை. அது இதன் ஜாதியிலேயே கலந்திருக்கிறது. பொதுவாகவே நாய்கள் பாம்பு, பூனை, எலி போன்றவற்றைப் பார்த்தால் என்ன செய்யும்? பாய்ந்து, பிடித்து, கடித்து ஒரு வழிப் பண்ணிவிடும். ஆனால் Blacky அப்படி அல்ல. எங்கள் வீட்டில் எலி தொல்லை கொஞ்சம் ஜாஸ்தி. அவைகள் இருக்கும் இடத்தை வெறும் சத்தத்தாலேயே கண்டுபிடிப்பான். பின்பு ஒரு சின்ன சத்தம் கூட போடாமல் கொஞ்சம், கொஞ்சமாக அதன் மூக்கை எலிகள் இருக்கும் இடத்தில் நுழைத்து வேவு பார்க்கும். எலி குதித்து தப்பி ஓடும்போது மிக சாதாரணமாக அவைகளை பிடிக்கும். அதுவும் எலிகளை அவன் தன் முன் பற்களால் மட்டுமே பிடிப்பான். முதல் தடவை பிடித்து, முன் பற்களால் கடித்து பின்பு கிழே போடுவான். உயிர் இருந்தால் மீண்டும் முன்பல்லால் லேசாக கடித்து பின்பு கிழே போடுவான், அவை சாகும் வரை.
சரியாக இரவு ஏழரை மணியானால் போதும். எங்கள் அப்பாவை மெதுவாக சுரண்டுவான். காரணம், அது அவனுடைய டின்னர் டைம். 'போய் எனக்கு பிரியாணி வாங்கிட்டு வாப்பா' என்று என் அப்பாவை கேட்கும் குறியீடு அது. இதே தைரியமான Blacky யிடம் பயந்தாகொலித்தனமும் இருந்தது. ஆட்டோ என்றால் பயம். காரணம் அது அவனை ஆஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு போகும் வாகனம். அதனால் அவன் அதில் ஏற மறுப்பான். எங்கள் வீட்டு பால்கனியை கூட முன் காலை வைத்து ஏறி நிற்க பயம். அதனால் வெறும் தலையை மட்டும் வைத்து வேடிக்கை பார்ப்பான். நாய் வண்டி வந்து தெருவில் திரியும் நாய்களை பிடித்துக் கொண்டு போகும்போது எங்களுக்கு Blacky நினைத்து நெஞ்சு பதறும். ஆனால் அவன் மட்டும் அவர்களுக்கு எப்படியாவது டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி இருப்பான். ஐந்து வருடங்களுக்கு முன்பு நானும், என் தங்கையும் 'ராடோ' என்ற லேப் வகை நாயை வீட்டிற்கு அழைத்து வரும்போது அதை எதிர்த்ததும் Blacky தான். அன்று இரவு ராடோவை வாக்கிங் அழைத்து சென்றபோது மற்ற தெருநாய்கள் ராடோவை கடிக்க வர, அந்த நாய்களிடமிருந்து அவனை காத்ததும் இந்த Blacky தான். ராடோவிற்காக, உருவத்தில் மிகப் பெரியதாக இருக்கும் 'German Shepherd' வகை நாயையே முறைத்து தில்லாக நின்றவன் எங்கள் Blacky.

இரவு நேரங்களில் என் அப்பா தூங்குவதற்காக பாயை விரித்தால், அதில் படுத்து, உருண்டு என் அப்பாவோடும், என்னோடும், என் தங்கையோடும் விளையாடிவிட்டுத்தான் அவன் தூங்கவே போவான். சிறு குழந்தை போல எல்லாவற்றிற்கும் ராடோவோடு போட்டி போட்டாலும், ராடோவிடம் அவன் விரோதம் பாராட்டியதே இல்லை. வெளிநாட்டிற்கு நான் வேலைக்கு வந்த பிறகு, போனில் என் வீட்டில் இருப்பவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் Blacky அங்கு வந்தால் அவன் காதில் போனை வைப்பார்கள். 'Blacky செல்லம்' என்று நான் குரல் கொடுத்தால் அவன் காது ஜிவ்வென பெரிதாகுமாம். நான் வெளிநாட்டிலிருந்து முதல் தடவை இந்தியாவிற்கு வந்தபோது என்னை பார்த்து அவன் சந்தோஷப்பட்ட பூரிப்பு இருக்கே... அவற்றை வார்த்தைகளால் சொல்ல முடியாதது. நன்றியின் உணர்வை ஒரு எஜமானனுக்கு உணர்த்திய தருணங்கள் அவை. என்னைப் போலவே என் 10 மாத மகள் தனுஸ்ரீக்கும் Blacky என்றால் கொள்ளை இஷ்டம். அவனோடு விளையாடவே அவள் அதிகம் விரும்புவாள். இரண்டு தடவை இந்தியாவை விட்டு வரும்போது நான் நினைக்கும் ஒரே விஷயம் இது தான், 'நாம் திரும்ப வரும்போது இவைகளை திரும்ப பார்க்க முடியுமா?' என்பது தான் அது. அந்த கேள்விக்கும் 'முடியாது' என்ற பதில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது.
வருடம் ஆக, ஆக Blacky க்கு வயது 13 ஆனதே எங்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் தான் இருந்தது. நன்றாக இருந்தவன், திடீரென்று நோய்வாய்ப்பட்டான். எழுந்து நடக்கக் கூட முடியாமல் சிரமப்பட ஆரம்பித்தான். சாப்பாடு சாப்பிட மறுத்தான். என்ன செய்வதென்றே எங்களுக்கு புரியவில்லை. அவன் எங்களை விட்டு போகப் போகிறான் என்பதை மட்டும் நாங்கள் புரிந்து வைத்துக் கொண்டோம். 'Sugar Complaint' என்றாள் என் தங்கை. டாக்டரிடம் போனால் 'வயசாயிடுச்சி, ஒரு ட்ரிப்ஸ் போட்டு பார்க்கலாம்' என்றார்கள். கடந்த சனிக்கிழமை என் தங்கையும், என் மனைவி மற்றும் என் மகளோடு நாகப்பட்டினத்திற்கு பயணமானார்கள். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு Blacky இறந்து விட்டான். என் அப்பா வீட்டின் பின்னால் இருந்த ஒரு காலியிடத்தில் அவனை புதைத்துவிட்டார். என் தங்கையும், என் மனைவியும் விஷயம் தெரிந்து இரண்டு சொட்டு கண்ணீரோடு அவர்களின் சோகங்களை ஆறுதல்படுத்திக் கொண்டாலும், என் மகள் வீட்டிற்கு வந்து 'Blacky எங்கே?' என்று தேடினால் என்ன செய்வது என்று தான் அவர்களுக்கு புரியவில்லை.

அவன் இறந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால் தான் இந்த பதிவை நான் எழுதியிருக்கிறேன். ஒரே ஆறுதல், அவன் நன்றாக இருக்கும்போதே அவனை நான் கடைசியாக பார்த்துவிட்டேன். அவன் சாகும்போது மிகவும் மெலிந்து, தளந்திருந்ததாக சொன்னார்கள். அப்படி ஒரு கோலத்தில் அவனை பார்க்காமல் இருந்ததே போதும். Blacky போன்ற ஒரு உன்னதமான ஜீவனை இதற்க்கு முன்பும் நான் பார்த்ததில்லை. இதற்க்கு அப்பறமும் இவனை போல இன்னொரு நாய் எங்களுக்கு கிடைக்கும் என்பதும் சந்தேகமே. இவ்வளவு நாளும் எங்களை காத்து, 'நன்றி' என்ற வார்த்தைக்கு சிறிதும் பங்கம் வராமல் பார்த்துக்கொண்டு, கடைசி வரைக்கும் எங்கள் வீட்டின் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்த எங்கள் Blacky என்ற அந்த 'பைரவ சாமிக்கு' எங்கள் நன்றியை இந்த பதிவின் மூலமாக செலுத்துகின்றேன்...Thanks & Regards,

Post Comment

4 comments:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் வீட்டு “ப்ளாக்கி” யைப் பற்றி படித்தேன். உங்கள் “ப்ளாக்கி” இறந்தது பெரிய இழப்புதான். உங்கள் ப்ளாக்கிக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி! அவன் ஆன்மா இனி அமைதியாக உறங்கட்டும்! உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும், அண்மையில் இறந்து போன எங்கள் வீட்டு “ஜாக்கி”யை நினைவு படுத்தின. கண்ணீரை வரவழைத்தன.

நான் எங்கள் வீட்டு ஜாக்கியின் நினைவாக எழுதிய பதிவுளை கீழே குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும்.
ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”
http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா?
http://tthamizhelango.blogspot.com/2014/03/blog-post.html


Gobinath சொன்னது…

வணக்கம் பாஸ், ப்ளாக் வந்து நிறைய நாள் ஆகிவிட்டது. நான் வரும் நாளாக பார்த்து இப்பிடி சோகமான பதிவாக இருக்கிறதே.
உண்மையில் குடும்பதி ஒருவரை இழக்கும் சோகத்துக்கு உரியது செல்ல பிராணியின் இழப்பு. உங்களுக்கு எனது அனுதாபங்கள்.

Kopikan Thavasuntharam சொன்னது…

எனக்கு 4வயது இருக்கும் போது ஒரு வெளிநாட்டு நாய் அப்பா வாங்கி தந்தார்.அதை நான் கீழே போட்டு விட்டதால் சில நாட்களில் அது இறந்து விட்டது. அதனால் எனக்கு இன்னொரு நாட்டு நான் வாங்கி தந்தார்.அதற்கு நான் jhon என பெயரிட்டேன்.அவன் மிகவும் நல்லவன்.சாப்பிடும் போதும் அதை பார்க்க மாட்டான்.வரச்சொன்னால் மட்டுமே வருவான்.அவன் இந்த நொடி வரை வீட்டிற்கு உள்ளே வந்ததே இல்லை.எங்கள் வீட்டில் 5நாய்கள் இருந்தும் எனக்கு அவரையே பிடிக்கும்.அவன் வரும்போது எனக்கு சகோதரர்கள் எவரும் இல்லை. அவனை எனது தம்பியை போல் வளர்த்து வந்தேன். எனக்கு தற்போது 16 வயது.எனக்கு 12வயது இருக்கும் போதே எனக்கு ஒரு தங்கை கிடைத்துள்ளது.ஆனாலும் நான் என் சகோதரப்பதவியில் இருந்து அவனை விளக்கவில்லை.ஆனால் அவன் 26.10.2017 வியாழக்கிழமை அன்று என் வீட்டு ஃபூட்சில் இறந்து கிடந்தான்.நேற்றிலிருந்து என் உடலில் உள்ள நீரின் கண்ணீராய் சொரிந்து கொண்டிருக்கிறேன் அவன் மீண்டும் வரமாட்டானா என்று.அவன் இறக்க முதல் நாள் நான் அவனிடம் கதைக்கவே இல்லை. எனக்கும் நேரமில்லை. எனது ஒன்று விட்ட அண்ணாவிற்கு கொடிய காய்ச்சல். அதற்கு அடுத்த நாளே jhon இறந்தான். அவருடைய காய்ச்சலும் குறைந்தது. இவ்வளவு காலமும் நோய் நொடி பாராது எங்கள் வீட்டை காவல் காத்த அந்த நல்ஆன்மா ஆன அந்த வைரவசாமி எங்கிருப்பினும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அத்துடன் அவ்ஆன்மா சாந்தி அடையவும் என்னைவிட்டு பிரியாது இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறான நல்ஆன்மாக்கள் அனைத்தும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவனை போன்ற நல்ல பழக்கங்கள் உள்ள நாய் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இதை பார்ப்பவர்களும் அவன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் எனவும் நான் எழுதியவை நிறைவேற வேண்டும் என்றும் பிரார்த்திப்பீர்கள் என்றும் நம்புகின்றேன். என் இனிய தம்பி John ற்கு அண்ணாவின் கோடான கோடி நன்றிகளும் கண்ணீர் காணிக்கைகளும் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி!சாந்தி! சாந்தி!

Kopikan Thavasuntharam சொன்னது…

உங்கள் blacky ற்கும் எனது நினைவு அஞ்சலிகள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக