கற்க கற்க கள்ளும் கற்க...

திங்கள், டிசம்பர் 24, 2012

புரட்சித் தலைவருக்கு ஒரு நினைவு மடல்...

Makkal Thilagam MGR Rare Unseen Pictures
தலைவருக்கு வணக்கம்,

நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து, இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு சராசரி ரசிகனாக என்னை போன்ற பல அபிமானிகளுக்கு இன்றும் நீங்கள் தான் தலைவர். இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உங்களை பிடிக்கிறதென்றால்,
அதற்க்கு உங்களிடமிருந்த குணங்களில், எதை சுட்டிக்காட்டுவதேன்று தெரியவில்லை. உங்களிடம் என் போன்ற சில ரசிகர்கள் சொல்ல நினைக்கின்ற சில விஷயங்களை இந்த கடிதத்தில் பகிரப்போகிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' என்ற மெகா பட்ஜெட் திரைப்படம் வெளியானபோது, ரஜினி தன்னை சந்திக்க வந்த நண்பர்களிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'எம்.ஜி.ஆரோட 'உலகம் சுற்றும் வாலிபன் ' படம் மாதிரி, இந்த எந்திரன் படம் Reach ஆகியிருக்கா?' என்று தான். இந்த ஒன்றை வைத்தே சொல்லலாம், நீங்கள் இன்றும் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்களின் மனதில் 'சிம்ம சொப்பனமாக' திகழ்கிறீர்கள் என்று. உங்களிடம் எனக்கு பிடித்த முக்கியமான ஒன்று, 'முடியாது என்று ஒன்று கிடையாது' என்ற சிந்தனை தான். இயக்கிய முதல் படத்தில் இரட்டை வேடக் காட்சியை (Trick Shot) தத்ருபமாக படம் பிடித்தது, உலகத்தின் முக்கிய நாடுகளை செல்லுலாய்டில் பதித்து சினிமாவாக கிராமத்து ரசிகனுக்கு காட்டியது என்று உங்கள் திறமைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இதையெல்லாம் யாருக்கும் சொல்லிக் கொடுக்காமலேயே போய் விட்டீர்களே? உங்களுக்கு இது பிடிக்காது என்றாலும், பின்னால் வந்த சினிமா சந்ததியினருக்கு உபயோகமாக இருந்திருக்குமே?
தலைவரே, உங்களிடம் நான் அதிகம் பேச நினைப்பதே அரசியலை பற்றித்தான். இன்றைய அரசியல் சூழல் எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா? 'தடியெடுத்தவன் தண்டல்காரன்' என்பது போல சின்ன லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவிக்கிறார்கள், உப்பு சப்பில்லாத விசயத்துக்கெல்லாம் 'போராட்டம்' செய்கிறார்கள். ஏதாவது ஒரு நடிகை புடவை உடுத்தினால் கூட, அதிலும் ஒரு குறை கண்டு பிடித்து கண்டனம், போராட்டம் என்று இம்சிக்கிறார்கள். என்ன கொடுமை பார்த்தீர்களா? உங்கள் ஆட்சி காலத்தில் எதிர்கட்சிகளை எவ்வளவு அழகாக கையாண்டீர்கள்? அது இன்றைய ஆட்சியாளர்களிடையே சுத்தமாக இல்லை தலைவரே.

நீங்கள் அன்று தோற்றுவித்த உங்கள் கட்சியின் தலைமையில் தான் இப்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகமே மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று பல பிரச்சனைகள் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. 'எம்.ஜி.ஆர் கட்சி' என்றிருந்த காலம் போய், இப்போது 'அம்மா கட்சி' என்றாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க கட்சி. அதிமுகவில் இன்று எம்.ஜி.ஆர் அபிமானிகள் என்று யாருமே இல்லை. கூழை கும்பிடு போடுபவர்களும், சாஸ்டாங்கமாக காலில் விழுபவர்களுக்குத் தான் அங்கே முன்னுரிமை. கேவலம், போஸ்டரில் கூட உங்கள் படத்தை சிறிதாக போட்டு, 'அம்மையார் படத்தை பெரிதாக போடுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எங்கே போய் முட்டிக்கொள்வது என்றே தெரியவில்லை.
ஒரு காலத்தில் 'எம்.ஜி.ஆர் தோட்டம்' என்று சொன்னால், அது ராமாவரத்தில் உள்ள உங்கள் வீட்டை குறிக்கும். இன்று அதன் நிலைமை, தோட்டமாகக் கூட அல்ல, குப்பையாகவே போட்டு வைத்திருக்கிறார்கள் உங்கள் வீட்டை. உங்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு, எங்கள் பொன்மனச் செம்மல் வாழ்ந்த நினைவிடம் அது. இதெல்லாம் கூட பரவாயில்லை தலைவரே. ஒரு நடிகர் ஒருவர், உங்களை போன்று ஒரு குல்லாவையும், கருப்பு கண்ணாடியையும் போட்டுக்கொண்டு 'நான் தான் கருப்பு எம்.ஜி.ஆர்' என்கிறார். கேட்டால், 'எனக்கு திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரசார வேனை கொடுத்திருக்கிறார்கள். அதனால் நான் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை தலைவரே. 'இவர் பைத்தியக்காரரா? இல்லை நாங்கள் பைத்தியக்காரர்களா?' என்று. (சட்ட) சபை நாகரீகம் இல்லாதவர், பத்திரிகை ஆட்களை அசிங்கமாக திட்டி மிரட்டுபவர், தன் வேட்பாளரையே மக்கள் மத்தியில் அடித்தவர், இப்படிப்பட்டவரெல்லாம் உங்களை தன் 'ரோல் மாடல்' என்று சொல்லும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது தலைவரே.
Makkal Thilagam MGR Rare Unseen Pictures 1
இதை விட ஒரு பெரும் கொடுமை நடந்தேறிக் கொண்டிருக்கிறது நம் நாட்டில். 'பிணத்தின் மேல் அரசியல்' என்று சொல்லலாம் அதை. அண்மையில், இலங்கையில் நம் மக்கள், சகோதர சகோதரிகள் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆண்களின் கை கால்களை பின்னால் கட்டி பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள். பெண்களின் நிலையோ, கொடூரத்தின் உச்சம். சிங்கள ராணுவத்தினர் கூட்டாக சேர்ந்து கொண்டு, பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து, கற்பழித்து, பின்பு கொல்கிறார்கள். இதில் முக்கால்வாசிப் பெண்கள் கூட்டாக கற்பழிக்கும்போதே இறந்து விடுகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. அன்று நீங்களும், இந்திரா காந்தியும் நம் தமிழர்களை காக்க எவ்வளவு போராடினீர்கள்? இன்றோ நிலைமை தலைகீழ். நம் தமிழர்களை கொன்ற அந்த இலங்கை அதிபர் இந்தியாவுக்குள் வந்து சுதந்திரமாக சுற்றி பார்த்துவிட்டு போகிறார்(ன்). இதை விட வேதனை, 'இலங்கை தமிழர்களுக்காக போராடும் தமிழினத் தலைவன் நான்' என்று வாய் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டு திரிபவர் யார் தெரியுமா? திரு.மு. கருணாநிதி அவர்கள்.
இல்லாத தமிழர்களை வைத்து, இன்னும் யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் இவர் என்று தான் தெரியவில்லை. ஈழ தமிழன் இறந்தால் தந்தி, ஈழ தமிழச்சி பலாத்காரம் செய்யப்பட்டால் தந்தி. காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் 'உண்ணாவிரதமாம்'? சினிமாவில் நீங்கள் செய்த ஸ்டன்டை விட இவர் செய்த 'ஸ்டன்ட்', உலகமறிந்தது. அன்று அறிஞர் அண்ணா துரை, கே.ஏ. மதியழகன், ஈ.வி.கே. சம்பத் என்று அனைவராலும் சேர்ந்து தொடங்கப்பட்ட திமுக என்ற கட்சியில், ஒரு சாதாரண மேடை பேச்சாளராக இருந்த இவர், இன்று அதே திமுகவின் தலைவர். இவரின் பிள்ளைகள், பேரன்கள் அனைவரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். கருணாநிதியின் பரம்பரை சேர்த்த மொத்த சொத்துக்கள், ஏழு தலைமுறைக்கு மேல் உக்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டார்கள்.

'குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ளநரிக்கு சொந்தம்,
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்கு சொந்தம்,
தட்டு கெட்ட மனிதன் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்,
சட்டப்படி பார்க்கப்போனா
ஆறடி தான் சொந்தம்.
உனக்கது சொந்தம்
எனக்கது சொந்தம்,
ஊருக்கு எது தான் சொந்தமடா?'

இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி, நீங்கள் நடித்த ஒரு படத்தின் பாடல் காட்சியின் வரிகள். மேலே குறிப்பிட்ட 'கருணாநிதி குடும்பத்தினருக்கு' இந்த பாடல் ஒத்துப்போகும் என்று நினைக்கிறேன். ஆனால் அதே சமயம், என்றைக்கு என் ஈழ தமிழ் மக்களின் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கப் போகிறது என்றே தெரியவில்லை. 'ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே' என்று நீங்கள் பாடிய பாடல் வரிகளை மனதில் வைத்துக் கொண்டு, அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க.
என்றும் அன்புடன்

Post Comment

4 comments:

Thava Kumaran சொன்னது…

அற்ப்புதமன பதிவு..
@@ எனக்கு ஒன்றும் புரியவில்லை தலைவரே. 'இவர் பைத்தியக்காரரா? இல்லை நாங்கள் பைத்தியக்காரர்களா?' @@
சந்தேகமே இல்லை..அவர்கள்தான்.எம்ஜிஆர் அவர்களைப்போல் வாழ ஆசைப்படுவது நல்லது.ஆனால் நிறையப்பேர் எம்ஜிஆர்-ராகவே மாறவேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லை.நான் அவரைப்பற்றி அறிந்துக்கொண்டதெல்லாம் எனது பெற்றோர்கள், திரைப்படங்கள், இணையத்தளங்கள் மூலம்தான்..என் வாழ்க்கையில் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் பொருந்தும்.தங்களது எழுத்து வண்ணம் அருமை.தொடருங்கள்.நன்றி.

ராஜ் சொன்னது…

//'இவர் பைத்தியக்காரரா? இல்லை நாங்கள் பைத்தியக்காரர்களா?'///
சந்தேகமே வேண்டாம்...அவர் தான் பைத்தியக்காரன்.

Ramya சொன்னது…

good post. keep it up

sajirathan சொன்னது…

சரியாக சொன்னீங்க நண்பா... எத்தனை காலம் சென்றாலும் தலைவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலுமே நிரப்பமுடியாது...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக