கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், டிசம்பர் 12, 2012

புவனா ஒரு கேள்விக்குறி - திரை விமர்சனம்

Rajinikanth's 'Bhuvana oru Kelvi kuri' DVD Cover
இந்த படத்தை நான் பார்த்தது 2009 இல் என்று நினைக்கிறேன். நான் என் வேலை காரணமாக ஒரு முறை பாண்டிச்சேரிக்கு போனபோது அங்குள்ள ஒரு கடையில் இந்த படத்தை வாங்கினேன். பொதுவாகவே 'பாண்டிச்சேரி' என்றால் ஒன்று சரக்கு, மற்றொன்று DVD's. எனக்கு சரக்கு மேல் இன்ட்ரஸ்ட் கிடையாது. ஆனால், சினிமா
என்றால் ரொம்ப இன்ட்ரஸ்ட். இந்த படத்தை நான் பார்த்த பிறகு எனக்கு தோன்றிய ஒரே விஷயம், 'ஒரு நல்ல நடிகன், தேவையில்லாமல் கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக மாறிவிட்டாரே' என்று தான். அதற்க்கு காரணம், ரஜினிகாந்த் என்ற மனிதர் மட்டுமல்ல, அவரை வைத்து கமர்ஷியல் படம் எடுத்தவர்களும், அதை கை தட்டி விசிலடித்து வரவேற்ற நாமும் தான்.
Rajinikanth & Siva Kumar in 'Bhuvana oru Kelvi kuri'
நாகராஜ், சம்பத் இருவரும் ரோட்டில் துணி விற்பவர்கள். நாகராஜ் வியாபாரத்தில் சிறந்தவனாக இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் சபலப்பேர்வழி. சம்பத், இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன். எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சம்பத்தின் காதலி இறக்க நேரிட, தற்கொலைக்கு முயல்கிறான் சம்பத். சம்பத்தை காப்பாற்றும் நாகராஜ், தான் சம்பாதித்து சேர்த்த பணத்தை வைத்து சொந்தமாக ஒரு ஏஜென்சி தொடங்க, சம்பத்தை அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்புகிறான். இந்த இருவரும் பயணிக்கும் அந்த ரயிலில் ஒரு கோயில் குமாஸ்தாவும் இவர்களுடன் பயணிக்கிறார். அவரிடம் கணக்கில் இல்லாத பணம் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் நாகராஜ், அவரிடம் மிரட்டி பணம் பிடுங்க நினைக்கிறான். அதே சமயம் நெஞ்சு வலியால் இறக்கும் அந்த குமாஸ்தாவின் பணத்தை நாகராஜ் எடுத்துக் கொள்ள, அதை பற்றி விசாரிக்க வருகிறாள் அந்த குமாஸ்தாவின் தங்கை புவனா.

புவனாவின் சந்தேகம் தன்மேல் விழாமல் இருக்க புவனாவை ஆசை வார்த்தைகள் கூறி அவளை கர்ப்பமாக்குகிறான் நாகராஜ். அதே சமயம் தன் முதலாளியின் மகள் தன் மேல் ஆசை கொண்டுள்ளதை அறிந்து கொள்ளும் நாகராஜ், புவனாவை மணக்க மறுக்கிறான். அதைக் கேட்டு ஆத்திரப்படும் புவனா, நாகராஜுக்கு நெருக்கடி கொடுக்க நாகராஜ் சம்பத்தின் உதவியை நாடுகிறான். சம்பத் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத நாகராஜ், 'புவனாவை கொன்றாவது முதலாளியின் மகளான மனோகரியை திருமணம் செய்து கொள்வேன்' என்று சொல்ல, அதற்க்கு சம்பத் 'காரணமே இல்லாத என் வாழ்க்கைக்கு நானே ஒரு காரணம் தேடிக்கிறேன்' என்று சொல்லி புவனாவை மணக்கிறான். நாகராஜும் மனோகரியை மணந்து ஊரிலேயே பெரிய செல்வந்தராக வளர்கிறான். அதே சமயம் அவனுக்கு உயிர் சத்துக்கள் குறைந்து, பிள்ளை பெரும் பாக்கியம் இல்லாமலும் போகிறது.

தன்னால் கர்ப்பமடைந்த புவனா பெற்ற தன் மகன் பாபுவை தத்து கொடுக்க கேட்கிறான் நாகராஜ். அதற்க்கு புவனா மறுக்க, சம்பத்தும் நாகராஜும் பிரிகிறார்கள். குழந்தை பாபுவுக்கு திடீரென்று காய்ச்சல் அடிக்க, அந்த நேரத்திலும் 'பாபுவை என்கிட்ட ஒப்படைத்தால் தான், பாபுவை காப்பாற்றுவேன்' என்று சொல்ல கடைசி நேரத்தில் பாபுவுக்கு தேவையான மருந்தை கொண்டு வருகிறான் சம்பத். தன தவறை உணர்ந்து நாகராஜ் திருந்துகிறான். சம்பத் மாரடைப்பால் மரணமடைகிறான். புவனாவின் வாழ்க்கை கேள்விக்குறியோடு படம் முடிகிறது.


சம்பத்தாக ரஜினிகாந்த். என்ன ஒரு பாந்தமான நடிப்பு. தலைவரின் நடிப்பை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை என்று சொல்லலாம். முதல் பாதியில் துள்ளலாக வரும் ரஜினி, தன் காதலி இறந்த பின் தாடி வைத்து, எப்போதும் சிகரெட் புகைத்துக் கொண்டும், குடித்து தள்ளாடி கொண்டும் நடப்பார். ஆனால் அவரின் நடிப்பு எந்த ஒரு இடத்திலும் 'தள்ளாடாமல்' இருப்பது ரஜினி ஸ்பெஷல். 'அவன பொருத்தவரைக்கும் நான் அவன் வச்ச வேலைக்காரன், உன்ன பொறுத்த வரைக்கும் உன் பிள்ளைக்கு அப்பா. என்னை பத்தி யாரு கவலைபடுறிங்க? நான் யாரு?' என்று கேள்வி எழுப்பும் போது ரஜினி மேல் இரக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை. நாகராஜாக சிவ குமார். யதார்த்தமான நடிப்பு. இன்றும் இது போன்ற சில 'அழகான கயவர்கள்' நம்மோடு உலாவிக் கொண்டிருப்பதை அழகாக எடுத்துக் கூறுகிறது இவரின் கதாபாத்திரம். புவனாவாக சுமித்ரா. சுமித்ரா கதாநாயகியாக நடித்ததேன்னவோ ஆறேழு படங்கள் தான். ஆனால் தேர்ந்தெடுக்கும் படங்களில் அவரின் கதாபாத்திரம் அவருக்கு சிறப்பாகவே அமைந்திருக்கிறது. படத்தில் வரும் சின்ன, சின்ன கதாபத்திரங்களான ஜெயா, மீரா, ஒய்.ஜி. மகேந்திரன், சுருளி ராஜன் போன்றோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
Rajinikanth & Sumithra in 'Bhuvana oru Kelvi kuri'
இசைஞானியின் இசையில் வரும் விழியிலே மலந்தது, ராஜா என்பார் மந்திரி என்பார் போன்ற பாடல்கள் எவர்க்ரீன் ஹிட்ஸ். அதே போல பின்னணி இசையும் கலக்கல். குறிப்பாக சிவகுமார் வசனம் பேசும் சில முக்கிய காட்சிகளில் 'நாகராஜ்' என்ற அவரின் பெயருக்கேற்ப மகுடி இசையை அமைத்திருப்பது ரசிக்கத்தக்கது. படத்தின் கதாசிரியர் மகரிஷி. இந்த கதை ஒரு தொடர் கதையாக குமுதம் வார இதழில் வெளிவந்ததாம். திரைக்கதை, வசனம் & பாடல்கள் பஞ்சு அருணாச்சலம். மிக நேர்த்தியான திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் சிறு தோய்வு கூட இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது சூப்பர். முக்கியமாக வசனங்கள். ஒவ்வொரு வசனமும் 'நறுக்கென்று' இருக்கிறது. எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து வசனங்களும் அருமை. படத்தை சிறப்பாக இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். படத்தை தயாரித்தது எம்.ஏ.எம் மூவீஸ்.
Rajinikanth & Siva Kumar in 'Bhuvana oru Kelvi kuri' 1
இந்த படம், 02 - 09 - 1977 அன்று திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ரஜினி நடித்த 10 வது படம். அதே போல எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டனியில் வெளிவந்த முதல் படமும் இது தான். அன்றைய காலத்தில் வில்லன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை ஹீரோவாகவும், கதாநாயகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த சிவகுமாரை வில்லன் வேடத்திலும் நடிக்க வைத்து வெற்றி பெற்று காட்டினர் எஸ்.பி.எம்மும், பஞ்சுவும்.அதே போல அந்த வருடத்திற்கான சிறந்த படமாக 'புவனா ஒரு கேள்விக்குறி' திரைப்படம் Filmfare விருது பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் ரஜினிக்கு குணசித்திர வேடங்களும், கதாநாயகன் வேடங்களும் கிடைக்க ஆரம்பித்தன. இந்த படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்து, மம்மூட்டி ரஜினி வேடத்திலும், ரதீஷ் என்பவர் சிவகுமார் வேடத்திலும் நடித்து 'முன்நேட்டம்' என்ற பெயரில் வெளிவந்தது.
என்றும் அன்புடன்

Post Comment

3 comments:

கோவை நேரம் சொன்னது…

தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்/...விமர்சனம் அருமை...

Ramya சொன்னது…

nice

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக