திங்கள், ஜூன் 27, 2011

அம்மா, உன் மடியில் - அமானுஷ்ய தொடர் பகுதி - 4

தபாலில் வந்த அந்தக் கடிதத்தை, பிரித்துப் படித்தபோது சம்பந்தமில்லாத ஒருவிதமான பயம், அந்தத் தாயின் மனதில் நிழலாகப் படிந்தது. ஆனால் மகன் கப்பல்படை பயிற்சி நிலையத்திலிருந்து மகிழ்ச்சியுடன் 'நலம் விசாரித்துத்தான்' கடிதம் எழுதியிருந்தான்.


அதில் அவன் பேசுவதைப் போல வரிக்கு வரி வழக்கமான நகைச்சுவை இருக்கவே செய்தது. கூடிய விரைவில், விடுமுறை கிடைத்தவுடன் ஊருக்கு ஓடிவந்து, தாயின் மடியில் படுத்து உறங்க வேண்டுமென்று இருபத்தைந்து வயதான அந்த ஆபிசர், குழந்தையைப் போல தன் அம்மாவுக்கு ஆசை ஆசையாக எழுதியிருந்தான்.
பயப்படத்தக்க வகையில் கடிதத்தில் ஓர் எழுத்து கூட இல்லை. ஆனால் இனம்புரியாத ஒரு கலவரம், கடிதத்தைப் படித்ததிலிருந்து அந்தத் தாயின் மனதில் தொடரவே செய்தது. நடக்கக் கூடாதது எதோ ஒன்று நடந்து விட்டதைப் போலவே உணர்ந்தான். மிகப்பெரிய சோகத்தைக் கூடிய சிக்கிரம் சந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவள் 'உள்ளுணர்வு' எச்சரித்தது.
இந்த மனநிலையை மாற்றுவதற்காக சர்ச்சுக்குப் போனாள். தன் கணவனுடன் நாடகத்துக்குப் போனாள். அப்பொழுதும் அவள் மனதிலிருந்த, விவரிக்க முடியாத அச்சம் விலகவில்லை.
அடுத்த நாள்.
போர்ட்லாண்டில் ஆபிசருக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் மகன், முந்தைய தினம் கடிதத்தில் பேசியவன், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடிரென்று வீட்டுக்கு வந்து தாயின் முன் நின்றான். தாய் ஆச்சிரியப்பட்டாள்.
கடிதத்தில் எழுதியதைப் போலவே, 'மிகவும் அலுப்பாக இருக்கிறது' என்று சொல்லி, அவன் சிறிது நேரம் அம்மாவின் மடியில் படுத்து தூங்கினான். அதற்குப் பிறகு எழுந்து தன் அறைக்குச் சென்றான். மகனுக்குச் சுவையாகச் சமைத்துப்போட தாய் சமையல் வேளைகளில் ஈடுபட்டாள்.
அப்போது வேலைக்குச் சென்றிருந்த அவளது கணவன் வழக்கத்துக்கு மாறாக காலை பதினோரு மணிக்கே ஆபிசிலிருந்து திரும்பி வந்தார். அவர் முகம் இருண்டு கண்கள் கலங்கி இருந்தன.
அவர் சொன்ன விஷயம் அந்தத் தாய்க்கு நெஞ்சைப் பிளக்கும் செய்தியாக இருந்தது. போர்ட்லாண்டில் ஆபிசர் ட்ரைனிங்கில் இருக்கும் மகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக மேல் அதிகாரியிடமிருந்து வந்த கடிதத்தைக் காண்பித்தார்.
அவள் எப்படி இதை நம்ப முடியும்? மகன் சற்று நேரத்துக்கு முன் திடிரென்று வந்ததையும், தன் மடியில் இவ்வளவு நேரம் படுத்துத் தூங்கி விட்டு இப்பொழுதுதான் தன் அறைக்குச் சென்றதையும் கூறினாள்.

ஆச்சரியப்பட்ட அவள் கணவன் அவசரமாக ஓடிச் சென்று மகன் இருக்கும் அரைக் கதவைத்திறந்தார். அவருக்குப் பின்னாலேயே அந்தப் பாசம் மிகுந்த தாயும் குழப்பத்துடன்அறைக்குள்ளே எட்டிப் பார்த்தாள். அந்த அறையில் கட்டில் காலியாக இருந்தது. யாரும்இல்லை. பிரமித்து போனாள்.
மகன் எழுதிய கடிதம் நேற்று கைக்கு வந்ததிலிருந்து அவள் மனதில் ஏற்பட்ட சம்பந்தமில்லாத பய உணர்வுக்குக் காரணம் புரிந்தது.
பயிற்சி முகாமிலிருந்து மேல் அதிகாரி அனுப்பிய முத்திரை குத்திய கடிதத்தை மீண்டும் பார்த்தாள். உண்மையில் மகன் இறந்துவிட்டான் என்பதை அந்தக் கடிதம் ஊர்ஜிதப்படுத்தியது.
அப்படியானால் சற்றுநேரத்துக்கு முன், இங்கே வந்து தன் மடியில் படுத்துத் தூங்கியது யார்? கடிதத்தில் எழுதியதைப் போலவே, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வந்த தன் மகனின் ஆவியா?
அதற்குமேல் அந்தத் தாயால் சிந்திக்க முடியவில்லை. மயங்கி விழுந்தாள். அன்று இரவு அவள் அரைகுறையாகக் கண் விழித்தபோது அவள் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் யாரோ உட்கார்ந்திருந்ததைப் போல உணர்ந்தாள். உருவம் சரியாகக் கண்ணுக்குப் புலப்படவில்லை.
அந்த உருவம் அவளிடம் எதையோ சொல்ல முயற்சி செய்வதை உணர்ந்தாள். நன்றாக உற்றுப் பார்த்தபோது அது தன் மகனின் உருவம்தான் என்பதைக் கண்டுகொண்டாள். அந்த உருவம் சிரமப்பட்டு வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் பேசியது.

'நான் உண்மையான கிறிஸ்துவன். எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். என்னைச் சுட்டுக் கொன்று விட்டார்கள். இதை நீ தெரிந்து கொண்டால் போதும். கூடிய சீக்கிரம் என்னைக் கொன்றவர்களை நான் பழிவாங்கியே தீருவேன்'.
இந்த சமயத்தில் அந்தத் தாயைக் கவனித்து வரும் குடும்ப டாக்டரும், அவள் கணவனும் உள்ளே வந்தனர். மகனது உருவம் மெதுவாக தாயின் கண்களிலிருந்து மறைந்தது. நடந்தவற்றை அதத் தாய் கணவனிடமும் டாக்டரிடமும் பதற்றத்தோடு சொன்னாள். ஆனால் அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
தாங்கமுடியாத சோகத்தில் அவள் மனம் பிதற்றுகிறது என்று நினைத்த டாக்டர், தூக்க மாத்திரைகளைக் கொடுத்து விட்டுச் சென்றார்.
அடுத்த நாள், போர்ட்லாண்டிலிருந்து மகனின் பிரேதம் வந்து சேர்ந்தது. குடும்பமே கதறி அழுதது. அவனது உடைமைகளான வாட்ச், பர்ஸ், துணிமணிகளையும் பயிற்சி முகாமிலிருந்து அனுப்பி இருந்தனர். அவனது உடல் ஒரு வழியாக அடக்கம் செய்யப்பட்டது.

அன்றிரவு மகனது உடமைகளை மார்புடன் அனைத்து அந்தத் தாய் கண்ணீர் வடித்துக்
கொண்டிருந்தபோது, மீண்டும் அந்த உருவம் தெரிந்தது. அது பேச ஆரம்பித்தது.
'அம்மா! என் பிரேதத்தை பார்த்தாயா? அதில் என் முகம் சிதைந்திருக்கும். என்னை அவர்கள் அடித்துக் கொன்றுவிட்டு பிறகுதான் சுட்டார்கள். நீ போலீஸுக்கு ரிப்போர்ட் கொடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
அந்தத்தாய் மனதில் சோகத்தையும் மீறி கோபம் உண்டானது. தன் மகனை அநியாயமாக அடித்துக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கும்படி போலீசில் புகார் செய்தாள். ஆனால், பயிற்சி முகாம் டாக்டரின் ரிப்போர்ட் தற்கொலைதான் என்று தெளிவாகக் கூறியது.
எனவே அந்தத் தாயின் பரிதாபமான புகார் நிராகரிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் அந்த உருவம் குடும்பத்தினர் அனைவர் கண்ணிலும் அடிக்கடி தென்பட்டது. அது அமைதியின்றி அழுதது. 'நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அந்தப் பாவமான காரியத்தை நான் செய்யமாட்டேன். இதை நிருபித்து என்னைக் கொன்றவர்களைக் காட்டிக் கொடுக்காமல் நான் போகமாட்டேன்' என்று திரும்பத் திரும்பச் சொன்னது. அப்போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. பயிற்சி முகாம் ஆபிசராக இருந்த எட்வர்ட் என்பவர் போலீசில் ஒரு புகார் செய்தார்.
இரவு நேரம் தன்னை யாரோ வந்து கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சிப்பதாகவும், தனக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று பயத்துடன் கூறினார். இரவு நேரம், அவர் வீட்டை துப்பறியும் போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர்.
எந்த நபரும் வீட்டுக்கு இரவு நேரம் வரவில்லை. ஆனால் எட்வர்ட் ஒரு நாள் இரவு திடிரென்று அலறிப் புடைத்துக் கொண்டு கத்த ஆரம்பித்தான். 'அவுங்க ரெண்டு பேருந்தான் உன்னை கொன்னாங்க. நா... இல்லே! சத்தியமா நா... இல்லே! என்னை விட்டுரு' என்று கத்த ஆரம்பித்தான்.
மறந்திருந்த துப்பறியும் போலீசார் இதைக் கேட்டனர். எட்வர்டை விசாரணை செய்தனர். ஆனால் எட்வர்ட் பயத்தில் தூக்கக் கலக்கத்தில் தான் அப்படி உளறியதாகக் சமாளித்தான். வாதிட்டான்.
அதேநேரத்தில் அந்தத் தாய், இறந்துபோன மகனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று போலீஸ் மேலதிகாரிகளை விடாமல் வற்புறுத்தி வந்தாள்.
மறுவிசாரணை செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்த மேலதிகாரிகள் இரண்டு வருடங்கள் கழித்து 'ஆர்லிங்கடன்' கல்லறையில் வைத்திருந்த பிரேதத்தைத் தோண்டி எடுத்தனர்.பரிசோதனை நடந்தது. அடித்துக் கொல்லப்பட்ட பிறகே துப்பாக்கியால் அந்த உடல் சுடப்பட்டது என்று இப்போதைய டாக்டரின் ரிப்போர்ட் தெளிவாகச் சொல்லியது. போலீஸ் உஷாரானது. எட்வர்டை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். முழு உண்மையும் வெளிப்பட்டது.
ஒரு காதல் விவகாரத்தில் பொறாமை ஏற்பட்ட எட்வர்டும் அவனது நண்பர்கள் இருவரும் அநியாயமாக அவனைக் கொன்றதாக ஒப்புக் கொண்டனர். சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு, ஆத்மசாந்தி அடைந்த அந்த ஆவி, யார் கண்ணிலும் படவில்லை.
(இந்த விசித்திர சம்பவம் இங்கிலாந்தில் போர்ட்லாந்து கோஸ்ட் சொசைட்டியில் 1987 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.)

நன்றி: திரு. சஞ்சீவியின் 'பேய்', கிழக்கு பதிப்பகம்.





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

4 கருத்துகள்:

  1. அமானுஷ்யமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. Excellent & Intersting. Waiting for the Next one.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா29 அக்டோபர், 2011 13:28

    எல்லா ஆவிகளும் இப்படி வந்தால் யாருமே தவறு செய்யமாட்டார்கள்.... நல்ல பதிவு..... தொடரட்டும்........!

    பதிலளிநீக்கு