ஞாயிறு, டிசம்பர் 05, 2010

வேலைக்காரன் - திரை விமர்சனம்

ரொம்ப நாளாகவே சூப்பர் ஸ்டாரின் படத்தை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன். ஏன்னெனில், கடந்த இரண்டு பதிவுகளுமே கலைஞானி படங்களை பற்றியே எழுதியதால் தான் இந்த முடிவு. அது மட்டுமல்ல, கமல் படங்களை பற்றியே எழுதியதால் என் மனசாட்சி 'நீ எல்லாம் ஒரு தலைவர் ரசிகனா?' என்று கேட்டு விட்டது.
அதற்காகவும் இந்த பதிவு. 'எந்திரனை' பற்றி பலர் எழுதிவிட்டனர். Top 10 ரஜினி படங்கள் என்று நிறைய வந்து விட்டன. ஆனால் எனக்கு தலைவரின் படங்களை Top 10இல் வெளியிட விருப்பம் இல்லை. தலைவரின் படங்களை ஒன்றின் பின் ஒன்றாக, விலாவரியாக சொல்லவே நான் விரும்புகிறேன். அந்த வகையில் நான் முதலில் விமர்சிக்கும் படம் 'வேலைக்காரன்'.

சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செல்வந்தரின் குழந்தையை கொலை செய்ய பார்க்கிறது ஒரு கும்பல். அதை தடுத்து, அந்த குழந்தையை காப்பாற்றி அதை தன் மனைவியான K.R.விஜயாவிடம் கொடுத்து உயிரிழக்கிறார் அந்த செல்வந்தரிடம் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த். அதனால் தான் பெற்ற குழந்தையை அவரின் மாமனாரான V.K.ராமசாமியிடம் ஒப்படைகிறார். அவர் பெற்ற பிள்ளையை விட முதலாளியின் குழந்தையை காப்பது தான் முக்கியம் என கூறும் K.R.விஜயாவிடம் இனி உனக்கும், நீ பெற்ற பிள்ளைக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் V.K.ராமசாமி. அந்த குழந்தை தான் நம்ம தலைவரு. (வேற யாரு?) வெட்டியாக ஊர் சுற்றிகொண்டிருக்கும் ரஜினியை வேலைக்காக சென்னைக்கு அனுப்புகிறார் V.K.R. சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை கிடைகிறது. அதே சமயம் இந்த ஹோட்டலின் முதலாளியான சரத்பாபுவை யாரோ கொலை செய்ய முயல, அதை நம் தலைவர் தடுக்கிறார். சரத்பாபுவை யார் கொலை செய்ய பார்க்கிறார்கள்? ரஜினி தன் அம்மாவை கண்டுபிடித்தாரா? என்பதே இந்த படத்தின் கதையும், திரைக்கதையும்.

Sir, Iam Raghupathi, son of Gajapathi, son of Valayapathi என்று ரஜினி தன்னை ஹோட்டல் மேலாளரான நாசரிடம் அறிமுகப்படுத்திகொள்ளும் காட்சியிலிருந்து தலைவர் பட்டையை கிளப்புகிறார். I can talk English, I can walk English, I can Laugh English you Bloody Fellow. Vaiyapuri in Tamil Becomes Vaipuri in English and Belpuri in Hindi என்று ரஜினி அதகலபடுத்துகிறார். சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவியான கதாபாத்திரங்கள் என்றால் அவருக்கு அது அல்வா சாப்பிடுவது போல. ஒரே நேரத்தில் காதல், சோகம், வீரம், பாசம் என்று பன்முக நடிப்பில் வெளுத்துகட்டுகிறார். படத்தில் ரஜினியின் மேனரிசம் மிக அழகாக இருக்கிறது.

அடுத்து படத்தின் நாயகியான அமலா. நான் அமலா நடித்த நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அமலா மேல் எனக்கு பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் வரவில்லை. ஆனால் இந்த படத்தில் அமலாவை பார்த்த பிறகு 'ஆஹா, என்ன அழகுடா' என்றே என் மனதில் தோன்றியது. அதை விட இந்த படத்தில் ரஜினி அமலாவை பார்க்கும்போதெல்லாம் ஒரு லுக்கு விடுவாரே, அட,அட,அட,அட. இது தாண்டா சூப்பர் ஸ்டார். இதிலிருந்து ஒன்று புரிந்துகொண்டேன். அதாவது நம்ம இளையதளபதி எதையும் 'சொந்தமாக' செய்யவில்லை என்பது தான் அது (உக்காந்து யோசிப்பாங்களோ). அமலாவும், அவர் வரும் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் சரத்பாபு ஹோட்டல் முதலாளியாக வருகிறார். அவரின் வளர்ப்பு தாயாராக கே.ஆர்.விஜயா. ரஜினியின் நண்பராக செந்தில். பார் டான்சராக பல்லவி. ரஜினியின் தாத்தாவாக வீ.கே.ராமசாமி. வில்லனாக நாசர். இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தும் படத்தை பெரிதும் சுமப்பது ரஜினி தான். படத்தில் அதிகப்படியான காட்சிகள் நகைச்சுவை ததும்பும்படியாகவே இருக்கின்றது. ஆனால் அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்திருக்கிறது. படத்தில் எனக்கு தெரிந்த முக்கிய காட்சி, ஹோட்டலை விலைக்கு வாங்க வரும் அனைவரையும் ரஜினி அடித்து கலாட்டா செய்து அனுப்பும் காட்சி ரகளையான காமெடி. ரஜினிக்கு அடுத்து இந்த படத்தின் ஹீரோ, இசைஞானி தான்.

ராஜாவின் கைவண்ணத்தில் பாடல்கள் அனைத்தும் அசத்தல். தோட்டத்துல பாத்திகட்டி, வா, வா, கண்ணா வா, மாமனுக்கு, பெத்து எடுத்தவ தான், எனக்கு தான் என எல்லாமே சூப்பர். பின்னணி இசையிலும் அதிரவைக்கிறார் ராஜா. இந்த படத்தை இயக்கியது, ரஜினியின் ஆஸ்தான டைரக்டர் S.P.முத்துராமன். தயாரித்தது ரஜினியின் குரு நாதர் திரு K.பாலச்சந்தரின் 'கவிதாலயா'.
1987ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. சென்னையில் இந்த படம் ஆனந்த், ஈகா, உதயம், ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீபிருந்தா என்று பல திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 131 நாட்கள் ஓடி ரஜினியின் வெற்றி படவரிசையில் சேர்ந்து கொண்டது. இந்த படம் ரஜினிகாந்த் நடித்த 111வது படமாகும். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து மிகபெரிய வெற்றி பெற்ற 'நமக் ஹலால்' படத்தின் ரீமேக் படமாகும். அதை விட முக்கியமான விஷயம், 'ஸ்ரீ ராகவேந்திரா' படத்தின் நஷ்டத்தை ஈடு கட்ட, கவிதாலயாவிற்கு ரஜினி நடித்து கொடுத்த படம் தான் இந்த 'வேலைக்காரன்'...

1 கருத்து: