புதன், ஆகஸ்ட் 11, 2010

மைக்கல் மதன காம ராஜன் - என் பார்வையில்


ஒரு பணக்காரருக்கு பிறந்த நான்கு குழந்தைகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிறது. பிரிந்த இவர்கள், வளர்ந்து பெரியவர்களாகி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் படம் தான் மைக்கல் மதன காம ராஜன்.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நான்கு வேடங்கள். பணக்காரர், தீயணைப்பு வீரர், பிராமண சமையல்காரர் மற்றும் கடத்தல்காரர். இந்த நான்கு கேரக்டர்களுக்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாதபடி நடிப்பு முதல் சிரிப்பு வரை வித்தியாசப்படுத்தி நடித்திருப்பார் (கமல் என்றால் சும்மா வா?). இதில் எனக்கு மிகவும் பிடித்தது, கமலின் இரண்டு வேடங்கள். ஒன்று, தீயணைப்பு வீரர் & பிராமண சமையல்காரர். ராஜூவாக வரும் தீயணைப்பு வீரர் கமல் வெளுத்து கட்டுகிறார். குஷ்பூ உடன் காதலாகட்டும், நாகேஷிடம் ராமாயண கூத்து பாடல் பாடுவதாகட்டும், கமல் கமல் தான் என்று நிருபித்திருக்கிறார். அதே போல கமேஸ்வரனாக வரும் சமையல்கார கமல் அப்பாவியாகவும், மலையாள தமிழ் பேசி நடித்து கலக்குகிறார். பணக்காரராக வரும் கமல் உண்மையை கண்டறிவதிலும், வில்லனாக வரும் கமல் பணத்தை சுருட்டுவதிலும் நேரத்தை செலவிடுவதால் மனதில் அவ்வளவாக மனதில் ஒட்டாமல் நிற்கிறார்கள்.

நடிகைகள்:
இதில் நடித்த நடிகைகளில் எனக்கு முதலில் பிடித்தது ஊர்வசி. அழகாகவும் இருக்கிறார், அட்டகாசமாகவும் நடித்திருக்கிறார். மலையாளமும், தமிழும் கலந்து அவர் பேசும் ராகம், கலக்கல். அடுத்ததாக குஷ்பூ. ஒரு காட்சியில் கமல்ஹாசன், தண்ணீரில் நனைந்த குஷ்பூவின் உடல் அழகை பார்த்து 'ஹைய்யா' என்று சொல்லும்போது குஷ்பூ அவரை பார்ப்பார். உடனே கமல் 'அய்யய்யோ' என்பார். அந்த 'ஹைய்யா'வை நம்மையும் சொல்ல வைக்கிறது குஷ்பூவின் அழகு. நடிப்பிலும் அவர் 'ஹைய்யா' ராகம் தான். ஒரு காட்சியில் குட்டி கரணம் எல்லாம் அடித்திருப்பார். கடைசியாக ரூபினி. இவருக்கு இந்த படத்தில் காட்சிகள் குறைவு தான். ஆனாலும் கிடைத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மற்றவர்கள்:
நாகேஷ் வழக்கம் போல கலக்கி இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லனிடம் அடித்த ஜால்ராவை சட்டென ஹீரோவிடம் அடிக்கும் இடம் 'அது நாகேஷ்'. காமேஸ்வரன் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ் தன் வெற்றிலை பெட்டியை தேடும் காட்சிகள் அருமையான காமெடி. சந்தன பாரதி குடித்து விட்டு அடிக்கும் கூத்து, செம ரகளை. ஆச்சி மனோரமா சில காட்சிகளே வந்தாலும் ஜொலிக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி ரெட்டை அர்த்த வசனம் எதுவும் இல்லாமல் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஊர்வசியின் பாட்டியாக வரும் லட்சுமி கலக்கி இருக்கிறார். மற்றபடி இந்த படத்தில் நடித்த அனைவரும் அவரவர் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கிரேசி மோகன்:
மொத்த படத்தையும் தாங்கி நிறுத்துகிறது கிரேசியின் பேனா. இவர் Timing வசனம் தான் இவரின் Style. இதை படத்தில் நடித்த அனைவரும் சரியாக செய்திருக்கிறார்கள். உதாரணம்,
குஷ்பூ: சீ, நீங்க ரொம்ப Nooty.
கமல்: அப்ப நீ மட்டும், கம்மினாடியா?

இசை ஞானி:
ராஜாவின் பாடல்கள் எல்லாமே கேட்டு பரவசப்படும் பாடல்கள் தான். முதல் டைட்டில் பாடலில் முதல் அரை மணிநேர ஆரம்ப காட்சியை முடித்திருப்பது அருமை. மற்ற பாடல்களான சுந்தரி நீயும், ரம் பம் பம், பேரு வச்சாலும் & சிவா ராத்திரி அனைத்தும் வித விதமான துள்ளல்கள்.

(பதிவை படிச்சிட்டு மறக்காம ஒட்டு & கமெண்ட்ஸ் போடுங்க).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக