கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி...

சிறந்த 90's நைட் கிளப் பாடல்கள் - தமிழ் மற்றும் ஹிந்தி
எனக்கு தெரிந்து 90's சினிமாக்களின் காலகட்டம் தான் பரவலாக ஆக்க்ஷன் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம். குறிப்பாக அது போன்ற படங்களை எடுத்துக்கொண்டிருந்த கமர்ஷியல் இயக்குனர்கள் ஒரு ஆக்க்ஷன் படத்திற்கான திரைக்கதையை எழுதும்போது சில விஷயங்களை கண்டிப்பாக படத்தில் சேர்ப்பார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நைட் கிளப் பாடல்கள்.

ஒரு கிளப்பில் வில்லன் எதாவது ஒரு சதி திட்டத்தை செயல்படுத்த துவங்கியிருப்பான். அதை தெரிந்து கொண்ட ஹீரோ, கதாநாயகியுடன் மாறுவேடம் போட்டுக்கொண்டு அந்த கிளப்பில் ஆடலுடன் பாடல் மட்டுமில்லாமல் பாட்டு வழியாக வில்லனுக்கு சவால்களையும், தான் சுய புராணத்தை கலந்து வில்லனுக்கு சொல்லுவார். அது எதைப்பற்றியும் கொஞ்சம் கூட புரிந்து, தெரிந்து கொள்ளாமல் ஹீரோயின் இடுப்பையும், வனப்பையும் பார்த்துக்கொண்டே இருப்பார் வில்லன். கடைசியில் ஹீரோ பாட்டை முடித்த பிறகு வில்லன் மீது பாய்ந்து, சண்டை போட்டு கிளைமாக்ஸ்க்கு வழி வகுப்பார். உண்மையில் இது போன்ற ஜானர் படங்களால் தான் இன்று விஜயகாந்த் என்ற ஆக்க்ஷன் ஹீரோ நமக்கு கிடைத்தார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இது போன்ற பெரும்பாலான படங்களில் வரும் இந்த வகை நைட் கிளப் பாடல்கள் பெரிதாக ஒன்று கிளிக் ஆகாது. அப்படியே ஆனாலும் அந்த வருடம் வரைக்கும் லைம் லைட்டில் இருந்து விட்டு பின்பு மெதுவாக, அடுத்து இது போன்ற இன்னொரு பாடல் வரும்போது மறைந்து விடும். அதையும் மீறி சில பாடல்கள் Evergreen பாடல்களாக அமையும். அப்படி அமைந்த பாடல்களை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

Tezaab (1988) - ஏக் தோ தீன்:இந்த பாடலை ஹிந்தி பாடலாக இருந்தாலும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அனைவருக்கும் இந்த பாடல் பரிட்சயமான ஒன்று தான். இந்த பாடலில் ஆடியிருக்கும் நடிகை மாதுரி தீட்சித்தின் நடனமும், அழகும் அபாரம் என்றே சொல்லலாம். உண்மையில் நடனம் என்றாலே அந்த மாதுரி தானே? என்னுடைய 90's இஷ்ட நடன நங்கையும் அவர் மட்டும் தான்.இந்த ஒரு பாடல் மூலம் மாதுரி ஓவர் நைட்டில் பாலிவுட்டின் 'டார்லிங்' ஆனது தனி கதை.  படத்திற்கு இசையமைத்த லக்ஷ்மிகாந்த் - ப்யாரேலால் என்ற இரட்டையர்கள் இசையமைத்த இன்னொரு பாட்டு தான் 'சோலிகே பீச்சே க்யா ஹே' என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பிரபாகரன் (1991) - ஆட்டமா தேரோட்டமா:ரம்யா கிருஷ்ணனின் நடனத்தில், இளையராஜாவில் இசையில் ஒரு சிறந்த நைட் கிளப் டைப் பாடல் என்றே சொல்லலாம் இதை. வீரபத்ரனை தேடி கேப்டன் பிரபாகரன் தன் போலீஸ் படைகளோடு வர, வீரபத்ரனை போலீசிடம் பிடித்து கொடுக்க அவன் பங்காளி கிட்டு வீரபத்ரனிடம் சமாதானம் பேச அழைக்கும் காட்சிகளின் பின்னணியில் அமைந்த அருமையான பாடல். பாடலை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரல், Simply Outstanding. வி மிஸ் ஹேர்.

அமரன் - சண்டை பஜாரு:இந்த பாடலை பற்றி நிறைய பேருக்கு தெரியாத ஒரு ரகசியம் ஒன்றை சொல்லட்டுமா? இந்த பாடலை பாடியவர்... மறைந்த சினிமா நடிகை ஸ்ரீவித்யா. என்ன, கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அது தான் உண்மை. அமரன் படத்தில் கார்த்திக் சொந்த குரலில் இரண்டு பாடல்கள் பாடி, அவை பெரிய அளவில் ஹிட்டடித்ததாலேயே இந்த பாடல் பற்றிய விபரங்கள் பெரியதாக தெரிய வரவில்லை. படத்திற்கு இசை ஆதித்யன். படத்தில் சில்க் ஸ்மிதா மற்றும் டிஸ்கோ சாந்தி என ஆளுக்கு தலா ஒரு பாடும், சில காட்சிகளும் இருந்தாலும் நடனம் என்று வரும்போது சில்க்கை விட டிஸ்கோ சாந்தியே முந்துகிறார். பாட்டின் பீட்டிற்கேற்ப செம லோக்கல் குத்து குத்துகிறார் ஆட்டத்தில்.

வால்டர் வெற்றிவேல் - பட்டு நிலா:
நடிகை சுகன்யாவை எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பு, நடனம், சொந்த குரலில் பேசும் அழகு என பல விஷயங்கள் இருந்தாலும் சில படங்களில் கொஞ்சம் 'ஓவர் ஆக்டிங்' செய்வதையும் பார்த்திருக்கிறோம். கவர்ச்சியாக இருந்தாலும் கூட, நடித்த பல படங்களில் குடும்பப் பாங்கான வேடம் தான். 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் வரும் இந்த பாடலை நான் விரும்பியதற்கு முதல் காரணம், இசை ஞானி. இரண்டாவது மற்றும் மூன்றாவது காரணம் - சுகன்யாவின் அழகு நடனம் & எஸ். ஜானகியின் மயக்கும் குரல். மற்றபடி படமும் பிளாக் பஸ்டர் ஹிட் & மற்ற பாடல்களும் அருமை.

சேதுபதி IPS - சாத்து நடை சாத்து:
மீனா ஒரு கண்ணழகி. இது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இந்த பாடலை பொறுத்தவரை பாடலின் மெட்டும், இசையும் குறிப்பாக ஆஷா போஸ்லேவின் மயக்கும் குரல் என்று மொத்தமும் கலந்து மீனாவின் அழகோடு சேர்ந்து ஒரு இசை விருந்தை தந்திருக்கிறது எனலாம். குறிப்பாக பாடலை படமாக்கும் விதத்தில் ஒரு வித கண்ணியமான, அருவெறுப்பான கவர்ச்சி என்று பாடலை கெடுக்காமல் எடுத்திருக்கிறார்கள்.அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மட்டுமல்ல, எத்தனை முறை இந்த பாடலை பார்த்தாலும் சரி, கேட்டாலும் சரி கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை.

Mohra - தூ சீஸு படி ஹை மஸ்து:
இந்த பாடலை நான் லைக் செய்வதற்கு காரணம், இந்து சரண்யா. புரியவில்லையா? நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்கூலில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு மாணவ மாணவியர்கள் ஏதாவது பாடலை தேர்ந்தெடுத்து குரூப் டான்ஸ் ஆடுவார்கள். அப்படி இந்த பாடலை தேர்ந்தெடுத்து ஆடிய கூட்டத்தில் ஹீரோயின் வேடத்தில் ஆடியவள் தான் இந்து. என்னுடன் வகுப்பில் படித்தவள். வெள்ளையாக, அழகாக இருப்பாள். சின்ன வயதில் நான் பெண்களிடம் பேசாத ஒரு 'டம்மி பீஸாக' இருந்த காரணத்தால் கடைசி வரை அவளிடம் பேச முடியாமலேயே போய்விட்டது எனக்கு. இப்போதும் இந்த பாடலை கேட்கும்போதோ பார்க்கும்போதோ இந்து சரண்யாவின் ஞாபகம் கண்டிப்பாக வரும்.

கூலி - பூ பூவா:
இசையமைப்பாளர் சுரேஷ் பீட்டர்ஸ் ஒரு சிறந்த பாடகர். ஊர்வசி ஊர்வசி, பேட்டை ராப், சிக்கு புக்கு ரயிலே என பல பாடல்களை பாடியிருக்கிறார். பாடிய அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் ஹிட். ஆனால் இந்த பாடல் என்னை கவர்ந்ததற்கு அவரின் இசை ஒரு பிரதான காரணம் எனலாம். எஸ்.பி.பி மற்றும் ஸ்வர்ணலதாவின் குரலுடன் கூடிய பாடல், கேட்பதற்கு 'வாவ்' ரகம். பார்க்கும்படியானால் சரத்குமாரை தவிர்த்து மீனாவை மட்டும் நோக்கினால், கண்டிப்பாக அடுத்தமுறையும் விரும்பிப் பார்க்கலாம்.
Thanks and Regards,

Post Comment

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக