வியாழன், மார்ச் 23, 2017

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும்...

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 1
இந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஒரு சின்ன குறை மனதில் நிறைந்திருந்தது. 'நாற்பது நாட்கள் விடுமுறையில் வந்திருக்கிறோம். புத்தகத் திருவிழாவும் இருந்தா பார்க்கலாமே' என்ற ஆசை. 2015 டிசம்பர் மழை வெள்ளத்தால் 2016 ஜனவரியில் நடக்கவேண்டிய 39 வது புத்தகத் திருவிழா, ஜூலையில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.
ஆறு மாத இடைவெளியில் திரும்பவும் ஜனவரியில் நடைபெறாமல் வேறு ஏதாவது மாதத்தில் நடைபெறும் என்ற என் எண்ணத்தில் தீ வைத்து கொளுத்தியது அந்த போஸ்டர். 'ஜனவரி 6 முதல் 19 வரை 40 வது புத்தகத் திருவிழா நடைபெறும்' என்று இடம், நேரம் மற்றும் இன்னபிற அறிவிப்புகளோடு இருந்த போஸ்டரை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். காரணம், சரியாக 5 வருடங்கள் கழித்து இதில் பங்கேற்கிறேன்.
40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 2
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முன்பு இரண்டு முறை பு.தி'க்கு போயிருந்தாலும், 2012 ஆம் ஆண்டு வந்தது தான் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. புத்தகக் திருவிழாவில் நான் தேர்ந்தெடுக்கப்படும் பதிப்பகம் பெரும்பாலும் கிழக்கு பதிப்பகமாகத்தான் இருக்கும். காரணம், எனக்கு சுயசரிதை புத்தகங்களின் மேல் இருந்த ஆர்வம். கூடவே மலிவு விலையும் ஒரு முக்கிய காரணம். கிழக்கு பதிப்பகத்திற்கு அடுத்து என்னுடைய சாய்ஸ், விகடன் பிரசுரம். விகடனில் உள்ள ஸ்பெஷல், சில குறிப்பிடத்தக்க சிறப்பான புத்தகங்கள் கிடைக்கும். மதனின் வந்தார்கள் வென்றார்கள், மனிதனுக்குள் ஒரு மிருகம், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் என இன்னும் சில. பொதுவாக இந்த இரண்டு ஸ்டால்களை தாண்டி அதிகம் போக மாட்டேன். மீறிப் போனாலும் நக்கீரன் பதிப்பகம் தாண்டி வேறு எங்கும் புத்தகம் வாங்க மாட்டேன்.

ஆனால் இந்த முறை பல பதிப்பக ஸ்டால்களுக்கு சென்று, சில புத்தகங்களையும் வாங்கினேன். அதற்க்கு காரணம் என் தங்கைகள். தங்கைகளோடு வந்திருந்ததால் நிறையவே நேரம் செலவழிக்க முடிந்தது. அதனாலேயே மற்ற புத்தக ஸ்டால்களை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. பிரபல எழுத்தாளர் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களை கண்டேன். வேறு எவரையும் கவனித்ததாக நினைவில் இல்லை. கண்ணில் பட்ட பல புத்தகங்கள் என்னிடம் PDF வடிவில் இருந்தாலும், பல ஆயிரம் புத்தகங்கள் இன்னும் புத்தக வடிவிலேயே இருப்பதே மகிழ்ச்சியான விஷயம். கல்கி, ஜெயகாந்தன், ஜெயமோகன், சேத்தன் பகத், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகதா கிறிஸ்டி என பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கிறது படிப்பதற்கு. ஆனால் திரு. சுஜாதா அவர்களின் புத்தகங்களையே மொத்தமாக படித்து முடிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து படிக்கணும்.

நான் வாங்கிய புத்தகங்கள்:

காற்று காற்று உயிர் - இந்திரா சௌந்தராஜன்

லாக்கப் - மு. சந்திரகுமார்

புலனாய்வாளரின் குறிப்புகள் - க. சுப்பிரமணியம் (Diary of a Criminologist by Lev Sheinin)

இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது - குகன்

ஜூலியஸ் சீசர் - எஸ். எல். வீ. மூர்த்தி

மாஃபியா ராணிகள் - கே. என். சிவராம்

டாங்கிரி டு துபாய் - எஸ். ஹுசைன் சேத்தி (தமிழில் கார்த்திகா குமாரி)
40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 3
இது போன்ற புத்தகம் வாங்கும் வைபவங்களுக்கு செல்லும்போது, என்னுடன் யாராவது வருவது உண்டு. அப்படி வருபவர்களின் அடிப்படைத் தகுதி ஒன்றே ஒன்று தான். அவர்களுக்கும் கொஞ்சமாவது புத்தகம் வாசிக்கும் திறன் இருக்கவேண்டும். அப்படி புத்தகம் வாசிக்கும் திறன் கொண்டவர்களாக என் தங்கைகளோடு சேர்ந்து புத்தகங்கள் வாங்கியபோது அவர்களும் சிலவற்றை வாங்கினார்கள்.

ஆனந்தம்பண்டிதர் - சித்த மருத்துவரின் சமூக மருத்துவம் - கோ. ரகுபதி

தக்கர் கொள்ளையர்கள் - இரா. வரதராசன்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - காம்கேர் கே. புவனேஸ்வரி

காடோடி - நக்கீரன்

என்னாடுடைய இயற்கையே போற்றி! - டாக்டர் கே. நம்மாழ்வார்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - ஜி.எஸ்.எஸ்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - சசி வாரியர்

உயிர் பிழை - புற்றுநோய் வென்றிட - மருத்துவர் கு. சிவராமன்

நெல்லை ஜமீன்கள் - முத்தாலங்குறிச்சி காமராசு

தங்கைகள் எடுத்த புத்தகங்கள் எல்லாம் என் அளவிற்கு வேறு லெவல் புத்தகங்கள். குறிப்பாக கடைசி தங்கை சித்த மருத்துவம் படிக்கிறாள். அவளுக்கு புதினம், சிறுகதை படிப்பதை விட தமிழ் இலக்கியம் சார்ந்த புத்தகங்களை ரசித்து படிக்கக் கூடியவள். அவள் வைத்திருக்கும் புத்தகம் எல்லாம் என்னைப் போன்றவர்களை கொஞ்சம் எட்ட நிற்க வைக்கும் எனலாம். நான் எனக்கென்று வாங்கிய புத்தகங்கள் மட்டும் என்னுடன் விமானத்தில் பயணமானது. அந்த 5 கிலோ புத்தக மூட்டையில் முகிலின் 'அகம், புறம், அந்தப்புறமும்' சேர்ந்து கொண்டது. அதை வாங்கவில்லை. 'சித்த மருத்துவ' தங்கை படிக்க வைத்திருந்த புத்தகத்தை நான் எடுத்து வந்து விட்டேன். இப்போது வரை ஒரு 400 பக்கங்களுக்கு மேல் தாண்டியிருப்பேன். சுவாரஸ்யமாகவே போகிறது. இந்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் அங்கம் வகித்த அரசர்களின் வாழ்க்கை முறைகள், சம்பவங்கள், ஆட்சி நடத்திய விதம், சுகபோகம், மக்களின் துயரம் என புத்தகத்தில் பக்கங்கள் மட்டும் கிட்டத்தட்ட 1100 பக்கங்கள். மொத்தமாக படித்து விட்டு பிறகு எழுதுகிறேன்.

லாக்கப் - மு. சந்திரகுமார்:
40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 4
லாக்கப் நாவலுக்கு அறிமுகம் தேவையில்லை. 'விசாரணை' படத்தின் புத்தக வடிவமே இந்த நாவல். வீட்டை விட்டு ஓடிவந்து ஆந்திரா, லாலாப்பேட்டையில் உள்ள ஹோட்டலில் குமார் வேலை செய்கிறான். நெல்சன், ரவி, மொய்தின் என நண்பர்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் தங்கி வேலை செய்கிறார்கள். ஒரு நாள் குமாரை நண்பர்களோடு சேர்த்து போலீஸ் அவர்களை அள்ளிக்கொண்டு 
ஸ்டேஷனில் வைத்து அடி வெளுக்கிறார்கள். எதையோ ஒத்துக்கொள்ள சொல்கிறார்கள். பாஷை முழுசாக தெரியாமல் 'நாங்கள் அப்பாவிகள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என சொல்லும் இவர்களை பலவிதமான சித்ரவதைகளுக்கு உட்படுத்தி, செய்யாத தவறை ஒத்துக் கொள்ள சொல்கிறார்கள். லாக்கப்பிற்குள்ளே உண்ணாவிரதம் இருந்து, பின்பு நான்கு பேரையும் தனித்தனியாக பிரித்து தனிமை படுத்தி, திரும்பவும் மரண அடி அடித்து அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர நினைக்கிறார்கள் காவல் துறையினர்.

இருட்டு அறை, உள்ளாடை மட்டுமே உடை, எப்போதும் வியர்வை நாற்றம், அடிக்கடி மூத்திர நாற்றமும், சமயங்களில் மல வாடையும் அதில் கலக்கும். காற்று கூட கொஞ்சமாக இருக்கும் அறை, ஒரு வேளை உரப்பில்லாத சோறு, அடிக்கடி கைதிகள் அலறி துடித்து கதறும் சத்தங்கள் என.... ப்பா.., எழுதும் எனக்கே படித்ததை நினைத்து பதறுகிறது மனம். பாவம், அவர்கள் எவ்வளவு வலிகளை தாங்கியிருப்பார்கள்? குறிப்பாக விதவிதமான போலீஸ் அடிகளை பற்றி விலாவரியாக எழுதியதை படிக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. இது போன்ற துயரங்கள் இன்றும் எங்காவது ஒரு மூலையில் அரேங்கேறிக்கொண்டே இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. செய்த தவறுக்கு தண்டனையே தவிர, செய்யாத குற்றத்திற்கு தண்டனை என்று எந்த சட்ட புத்தகத்திலும் இல்லை. என்னை சிலிர்க்க வைத்த சில புத்தகங்களில் 'லாக்கப்பிற்கும்' ஒரு முக்கிய பங்கு இருக்குறது. தனக்கு நடந்த அநீதியை உலகிற்கு புத்தக உருவில் சொன்னதற்கு நன்றி மு. சந்திரகுமார் சார்...



Thanks and Regards,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக