செவ்வாய், டிசம்பர் 06, 2016

அம்மா...

அம்மா 1
அழுகை வரவில்லை எனக்கு, உங்கள் பூத உடலை காணும்வரை,

குரல் தழுதழுக்கவில்லை எனக்கு, உங்களை பற்றி பேசும் வரை.

சந்தியாவின் புதல்வியாய் திரையுலகில் அறிமுகமாகியபோது தங்களின் அகவை பதினான்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புரட்சித் தலைவரோடு சேர்ந்து திரையில் நடித்ததால் மட்டும் புரட்சித் தலைவி ஆகிவிடவில்லை நீங்கள். எங்கிருந்து உங்கள் பொது வாழ்க்கையை துவங்கினீர்களோ, அங்கிருந்தே உங்கள் புரட்சிகள் ஆரம்பமாகி விட்டது. உங்களின் கம்பீர குரலுடன் கூடிய தமிழ் உச்சரிப்பும், நடிப்பு, நடனம் என்று ஏனைய தகுதிகளும் கொண்டிருந்தாலும், அச்சத்தை துச்சமாக எண்ணி புறம் தள்ளிய பெண்மணியல்லவா நீர்? 'கன்னடத்தில் பேசு, இல்லையேல் தாக்கப்படுவாய்' என்று மொழி வெறி கூட்டம் ஒன்று உங்களை சூழ்ந்து நின்ற போதும், அவர்களுக்கு அடிபணியாமல், தைரியமாக எதிர்கொண்ட துணிச்சல் யாருக்கு வரும்?

அரசியல் என்ற அடர்க்காட்டில் உலவும் பல நூறு நரிகளின் இடையே சிங்கமாக (சிங்கத்தில் ஏது ஆண், பெண் இன வேற்றுமை? சிங்கமென்றாலே கம்பீரமல்லவா?) நடமாடிய உங்கள் பொற்பாதங்கள் இன்று இல்லாமல் போனதே எங்களுக்கு துயரமாகப்படுகிறது. உங்களை பற்றி எழுத நினைத்தால், என் மனது வேறு சிந்தனைகளை நினைக்க முடியாதபடி செய்து விட்டதே உங்கள் இழப்பு? இனி உங்கள் வெற்றிடத்தை நிரப்ப யாரும் வரமுடியாது என்று பெருமைப்பட முடியவில்லை. மாறாக அந்த வெற்றிடம் எங்களுக்கு தேவையா என்பதே அந்த இறைவனிடம் நான் கேட்க நினைக்கும் கேள்வி.
அம்மா 2
நான் ஒரு வாத்தியார் பக்தன். அதற்க்கு 'அற்பமான' காரணங்கள் தேவையில்லை. அவரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே பிறந்த எனக்கு அதுவே ஒரு பெருமையாக நினைக்கிறேன் நான். அது போலவே என் மகள் உங்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே அவள் பிறந்து வளர துவங்கியிருக்கிறாள். என் மகள் மீது நான் வைக்கும் முதல் பெரும் நம்பிக்கை, அவளும் உங்களை போலவே வாழ்க்கையில் வருவாள், தைரியலட்சுமியாய்...


Thanks and Regards,

Prasad...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக