வியாழன், அக்டோபர் 06, 2016

புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை...

புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை 1
ஒரு முறை நடிகர் சத்யராஜ் தனது பேட்டியில் 'இப்போ நெறைய பழைய படங்களை ரீமேக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதே சமயம் நெறைய ஜானர்ல படங்கள் வெளிவந்துக்கிட்டிருக்கு. நம்ம புரட்சித்தலைவர் நடிச்ச 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி பைரேட் டைப் படங்கள் எடுத்து வெளிவந்தா, பிரம்மாண்டமா ஓடும்' என்று சொல்லியிருந்தார்.
பொதுவாகவே பைரேட் வகை கதைகள், நாவல்கள், படங்கள் போன்றவைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு இருக்கும். இன்றைய காலகட்டத்தில், இது போன்ற படங்களை பிரம்மாண்டமாக தயாரித்தாலும் நல்ல கதை, நேர்த்தியான திரைக்கதை, வியாபார ரீதியான நடிகர், நடிகையர்கள் சரியாக அமைந்தால் தான் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அமையும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படங்களில், நிறைய படங்களை நாம் பார்த்திருப்போம். அதில் சில படங்கள் ட்ரெண்ட் செட்டர் வகைகளை சார்ந்தவை. அதில் மிக முக்கியமான படம் என்று சொன்னால், அது 'ஆயிரத்தில் ஒருவன்' தான்.
புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை 2
நெய்தல் நாட்டில் வசிக்கும் மருத்துவரான மணிமாறன், அந்த நாட்டை ஆளும் சர்வாதிகாரியை எதிர்த்து புரட்சி செய்த சிலருக்கு சிகிச்சை செய்த காரணத்தால் கைது செய்யப்படுகிறார். மணிமாறனோடு சேர்த்து புரட்சி செய்தவர்களை கடல் தாண்டி இருக்கும் கன்னித்தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறான் சர்வாதிகாரி. கன்னித்தீவை நிர்வகிக்கும் செங்கப்பனின் பராமரிப்பில் வளரும் இளவரசி பூங்கோடி, மணிமாறனை பார்த்ததும் காதல் கொள்கிறாள். பூங்கோடி காதலை மணிமாறனிடம் தெரியப்படுத்த, அதை ஏற்க மறுத்து, தன்னுடன் இருப்பவர்களின் விடுதலைக்காகவும் போராடுகிறார் மணிமாறன். இதனிடையில் கன்னித்தீவை திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்க, மணிமாறன் குழுவின் உதவியை நாடுகிறார் செங்கப்பன். 'எங்களுக்கு உதவினால், உங்கள் அனைவருக்கும் விடுதலை' என்ற உறுதியை நம்பி கடற்கொள்ளையர்களை விரட்டுகிறார்கள் மணிமாறன் குழுவினர். ஆனால் கொடுத்த வார்த்தையை காப்பாற்றாமல் அனைவரையும் சிறையில் அடைகிறார் செங்கப்பன்.

சிறையிலிருந்து தப்பிக்கும் மணிமாறன் குழு, கடலில் பயணித்து முன்பு கன்னித்தீவில் கொள்ளையடித்த கடற்கொள்ளை தலைவனை சந்தித்து தங்களை நெய்தல் நாட்டிற்கு சேர்ப்பிக்குமாறு உதவி கோருகிறார் மணிமாறன். ஆனால் அவர்களை நெய்தல் நாட்டில் கொண்டு சேர்க்காமல், அவர்களை தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று அவர்களை தங்களோடு  கடற்கொள்ளையில் ஈடுபட நிர்பந்திக்கிறார் கொள்ளையர் தலைவர். தன் மக்களின் விடுதலைக்காக கொள்ளையராக மாறும் மணிமாறன், பயணக்கப்பலை தவிர்த்து, அவர்களைப்போன்ற கொள்ளையர் கப்பல்களை கொள்ளையடித்து, அதன் மூலம் வரும் பணத்தை நெய்தல் நாட்டு சர்வாதிகாரியால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு மறைமுகமாக கொடுத்து உதவுகிறார். அதே சமயம் ஒரு கடல் பிரயாணத்தில் மணிமாறனை சந்திக்கும் பூங்கோடிக்கு மணிமாறன் ஒரு கொள்ளையன் என்பது தெரியவர அவரை வெறுக்கிறாள் இளவரசி. மணிமாறனும் அவரின் குழுவினரும் கடற் கொள்ளையரிடமிருந்து தப்பித்தார்களா? மணிமாறனின் உண்மை நிலை என்ன என்பதை புரிந்துக்கொண்டாளா இளவரசி பூங்கோடி? நாட்டை சர்வாதிகாரியிடமிருந்து மீட்டார்களா என்பதை ஆக்க்ஷன், காமெடி, செண்டிமெண்ட் போன்றவற்றை சரிவிகிதத்தில் கலந்த தந்த கமர்ஷியல் திரைப்படம் இந்த 'ஆயிரத்தில் ஒருவன்'.
புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை 3
படத்தின் நாயகனான வாத்தியாரை பற்றி புதிதாய் சொல்ல என்ன இருக்கின்றது என்று வார்த்தைகள் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மருத்துவராக, கன்னித்தீவு அடிமையாக, கடற்கொள்ளையராக மூன்று வேடங்கள். ஆனால் மூன்றிலும் ஒரு உன்னத தலைவனாக மட்டும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார் புரட்சி தலைவர். இளவரசி பூங்கோடியாக செல்வி ஜெயலலிதா. அந்த 14 வயது பெண்ணிடமிருந்து எப்பேர்ப்பட்ட நடிப்பு வெளிப்பட்டு இருக்கிறது? காதல், சோகம், கோபம், குறும்பு என்று, பல ஆண்டு காலம் நடிப்பு அனுபவம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறார் சந்தியாவின் புதல்வி (இந்த பதிவின் மூலமாக தமிழக முதல்வரான அம்மா அவர்கள் கூடிய விரைவில் பூரண நலம் பெற, இறைவனை பிரார்த்திக்கிறேன்). நாகேஷின் கலக்கல் காமெடி ஒரு பக்கம் சிரிக்க வைக்கிறார் என்றால் மறுபக்கம் எம்.என்.நம்பியாரும், ஆர்.எஸ். மனோகரும் அவரவர்களின் தனித்துவமான,அதகளமான வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.
புரட்சித் தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) - திரை பார்வை 4
வி. ராமமூர்த்தியின் கேமரா எது கப்பல், எது செட் என்று தெரியாத வண்ணம் அவரின் ஒளிப்பதிவு தத்ரூபமாக செயல்பட்டிருக்கிறது. 'அதோ அந்த பறவை, நாணமோ, ஓடும் மேகங்களே' என்ற கண்ணதாசனின் வரிகளுக்கும் சரி, 'ஆடாமல் ஆடுகிறேன், உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி, பருவம் எனது பாடல்' போன்ற வாலியின் வரிகளுக்கும் சரி, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் அனைத்தும் தேன் ரகம். கதை, ஆர்.கே.சண்முகம். இது ஆங்கிலப் படங்களான 'கேப்டன் பிளட்' மற்றும் 'தி கிரிம்சன் பைரேட்' படங்களை தழுவி, எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு எழுதிய கதை. அதற்க்கு திரைக்கதை வடிவம் கொடுத்தவர் கே.ஜே.மகாதேவன். செங்கப்பனின் கழுத்தில் கத்தி வைத்து மணிமாறன் குழுவினர் தப்புவது, பயணக்கப்பல்களை தாக்காமல் கொள்ளைக்கார கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பது, நெய்தல் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக இட்லியில் தங்கக்காசை வைத்து கொடுப்பது என்று மிக அற்புதமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அதே போல வசனங்களும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. 'மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்' - பொன்மன செம்மலின் சிறந்த பன்ச் வசனம் என்றே சொல்லலாம் இதை. இது போன்ற பல சிறப்பான வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. பத்மினி பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியது பி.ஆர். பந்துலு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்ஸ்.

9 ஜூலை 1965 இல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தால் ஏற்பட்ட கடனை, புரட்சி தலைவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் மூலமாக அடைத்தார் பந்துலு. அது போல இரண்டாவது படத்திலேயே மக்கள் திலகத்துடன் நடித்ததால், விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார் செல்வி ஜெயலலிதா. அதே போல எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே. ராமமூர்த்தியும் இணைந்து பணியாற்றிய கடைசி படமும் இது தான். இனி எத்தனை விதமான பாண்டஸி வகை படங்கள் வந்தாலும், 'ஆயிரத்தில் ஒருவன்' போல கமர்ஷியல் வெற்றி கொடுப்பது சந்தேகமே...



Thanks and Regards,

2 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே. மிகவும் சிறப்பு தங்களின் விமர்சனம்.‌ ஆனால் ஒரு சிறு திருத்தம் பூங்கோடி என்பதை பூங்கொடி என மாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே. மிகவும் சிறப்பு தங்களின் விமர்சனம்.‌ ஆனால் ஒரு சிறு திருத்தம் பூங்கோடி என்பதை பூங்கொடி என மாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு