திங்கள், ஜனவரி 12, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் - சுஜாதா மற்றும் ராஜேஷ் குமாரின் நாவல்கள்...

நினைத்ததை படிப்பதை விட, கிடைத்ததை படிப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறேதிலும் இல்லை. புத்தகக் கடைகளில் சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் நம்மை வசீகரிக்கும் பொருட்டு நாம் அதை விலை கொடுத்து வாங்கி படிக்க
ஆரம்பிப்போம். ஆனால் உள்ளே நாம் எதிர்பார்க்கும் எந்த விஷயமும் இருக்காது. ஆனால் எந்த பெரிய எதிர்பார்ப்பில்லாத புத்தகங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அப்படிப்பட்ட 10 புத்தகங்களை பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறேன். அதிலும் குறிப்பாக, எனக்கு மிகவும் பிடித்த சுஜாதா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பற்றி சொல்லப் போகிறேன்.

ஜே.கே - சுஜாதா:
ஜே.கே என்பவன் ஒரு விமானி. கொஞ்சம் பணத்திற்கு ஆசைப்பட்டு சில பெட்டிகளை (அதில் என்ன உள்ளது என்றே தெரியாமல்) சம்பந்தப்பட்டவர்களக்கு மாற்றி விடுகிறான். அதே சமயம் பிரிந்து போன ஒரு மந்திரியின் மகளை மீட்டு வரும்வழியில் தவற விட்டுவிடுகிறான் நம் ஹீரோ. பின்னர் அந்த மந்திரி தன் மகள் தன்னிடம் வந்துவிட்டாள் என்று சொல்ல, அவளைப் பார்க்க அவள் வீட்டிற்கு சென்றால் அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே மந்திரியின் மகளாக வேறொருத்தி இருக்கிறாள். 'அப்போ நான் யாரை அழைச்சிகிட்டு வந்தேன்?' என்று அவன் யோசிக்க, மொத்தமாக கதை ட்ராக் மாறுகிறது. உண்மையில் ஜே.கே. அழைத்து வந்த அந்த பெண் யார்? என்ன நடக்கப் போகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு, அழகான நடையில் பதில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. எனக்கு இந்த நாவலைப் படித்தபோது சத்யராஜ் நடித்த 'ஏர்போர்ட்' படம் ஞாபகத்திற்கு வந்தது. கண்டிப்பாக சுஜாதா புத்தகத்திலிருந்து தான் படத்தின் கதையை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எது எப்படியோ, கதை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

காயத்ரி - சுஜாதா:
1970 களில், தினமணி கதிரில் சுஜாதாவால் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது இந்த நாவல். எழுத்தாளர் ஒருவருக்கு பழைய புத்தகக்கடையில் விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட ஒரு நோட்டு கிடைக்கிறது. புதிதாக மணமுடித்து வரும் ஒரு பெண் தனது புகுந்தவீட்டில் இருப்பவர்களின் மர்மமான நடவடிக்கைகளை எழுதி வைத்து தன்னைக் காப்பாற்றுமாறு கோருகிறாள். எழுத்தாளர், வக்கீல் கணேஷிடம் உதவி கேட்கிறார். அந்த மர்ம வீட்டில் நடந்தது என்ன, அப்பெண்ணை மீட்டார்களா என்பதே கதை. இப்புதினம், 1977 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த 'காயத்ரி' என்ற இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நான் இன்னும் ரஜினி நடித்த காயத்ரி' படத்தை பார்த்தது இல்லை. ஆனால் நாவலாக படித்தபோது எனக்கு 'காயத்ரியை' மிகவும் பிடித்திருக்கிறது. கண்டிப்பாக 'காயத்ரி' படத்தையும் பார்த்தாக வேண்டும்.

மறுபடியும் கணேஷ் - சுஜாதா:
ஷைலஜா என்னும் பெண், வெறுமையான தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறலாமா , அல்லது தனது பழைய காதலனுடன் சென்று விடலாமா என்னும் மனக்குழப்பத்தில் வக்கீல் கணேஷிடம் ஆலோசனை கேட்கிறாள். ஆனால் மறுநாள் கணேஷ் அவளைச் சந்திக்க செல்லும் பொழுது அவள் தூக்கில் தொங்குகிறாள். அவள் மரணம் கொலையா, தற்கொலையா? கொலை என்றால் அவளைக் கொன்றது யார் என்று கணேஷும் வசந்தும் துப்பறியும் கதை. மறுபடியும் கணேஷ்சுஜாதாவால் எழுதப்பட்டு 1978 இல் மாலைமதியில் தொடர்கதையாக வெளியானது. கொன்றவனை கணேஷும் வசந்தும் எப்படி நெருங்குகிறார்கள் என்பதை செம த்ரில்லிங்காக சொல்லியிருக்கிறார் சுஜாதா. குறிப்பாக நாவலில் வரும் அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் சூப்பரோ சூப்பர். அது தான் சுஜாதா ஸ்டைல்.

இருள் வரும் நேரம் - சுஜாதா:
'இருள் வரும் நேரம்' கல்கியில் தொடராக வெளிவந்தது. பேராசிரியர் ராம்ப்ரகாஷ் தன் இளம் மனைவி அம்ருதாவுடன் ஒரு கல்யாண வரவேற்புக்கு சென்று விட்டு திரும்பும்போது மனைவி காணாமல் போய் விடுகிறாள். அவளைத் தேடி அலைந்து, திரும்பக் கிடைக்கும்போது அவள் முகம் தெரியாத இருவரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். இன்பமயமான அவர்களின் வாழ்க்கை அந்த ஒரே இரவில் மாறி போலீஸ், கோர்ட், கேஸ் என்று திசை மாறி அவர்களின் நிம்மதியும் தொலைகிறது. சம்மந்தப்பட்ட அந்த குற்றவாளிகள் கிடைத்தார்களா? அவர்களுக்கு ராம்ப்ரகாஷ் மற்றும் அம்ருதா இருவரும் அளித்த தண்டனை என்ன என்பதை சொல்லும் 'அக்மார்க்' சுஜாதா நாவல். 'குற்றவாளிகள் பிறப்பதில்லை, அவர்களின் சமூகமும், சகவாசமும் தான் அவர்களை குற்றவாளிகளாக மாற்றுகின்றன என்பதை இந்த நாவலின் மூலம் சொல்லியிருக்கிறார் சுஜாதா.

உள்ளம் துறந்தவன் - சுஜாதா:
ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளி ராகவேந்தர். அவரின் வளர்ப்பு மகள் மஞ்சரி. இதய கோளாறால் அவர் சிகிச்சைக்கு செல்ல, மொத்த சொத்தையும் அபகரிக்க நினைக்கிறார் ராகவேந்தரின் மூத்த மாப்பிள்ளை நாக ரத்தினம். அதே சமயம் மஞ்சிரிக்கு அழகேசன் என்ற ஏழை பையனுடன் காதல். பெரியவர் ராகவேந்தருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பொருத்தமான இதயம் வேண்டி தேடிக் கொண்டிருக்க, அவருக்கு மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைக்கிறது. அந்த இறந்தவரின் பெயர், அழகேசன். பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறாள் மஞ்சரி. இது ஒரு விபத்து என்று மஞ்சரி நினைத்துக்கொண்டிருக்க, 'அது விபத்தல்ல, கொலை' என்று தெரியவருகிறது. அதற்க்கு பிறகு என்ன நடந்தது? அந்த கொலைக்கு காரணம் யார் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. Corporate, Shares, Funds இது போன்ற Hi tech விஷயங்களை விளக்குவதற்கு சுஜாதாவால் மட்டுமே முடியும். நம்மை அப்படியே ஒரு IT கம்பெனியில் உலவ விடுகிறார். வழக்கம் போல சுஜாதாவின் முத்திரை இந்த புத்தகத்திலும் தவறவில்லை.

துளசி தளம் - எண்டமுரி வீரேந்திரநாத்:
இது ஒரு பில்லி, சூன்யம் பற்றிய அமானுஷ்யக் கதை. எண்டமுரி வீரேந்திரநாத், ஆந்திராவில் பெரிய நாவலாசிரியர். நிறைய திரைப்படங்கள் இவரின் நாவல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை. ஸ்ரீதர், சாரதாவின் மகள் துளசி. முதலாளியின் மகளை ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றுகிறார் ஸ்ரீதர். அதனால் அவரின் முதலாளி ஸ்ரீதரின் மகள் துளசியின் பெயருக்கு 10 லட்சம் எழுதிவைக்கிறார். ஒரு வேளை, துளசி பத்து வயதுக்கு முன் இறந்து போனால், அந்த பணம் ஒரு டிரஸ்ட்க்கு போய் சேர்ந்து விடும். அந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த ட்ரஸ்ட்டை சேர்ந்த இரண்டு பேர், காத்ரா என்ற மந்திரவாதியின் மூலம் 'காஷ்மோரா' என்ற ஒரு தீய சக்தியை அந்த பத்து வயது குழந்தையின் மேல் ஏவி விடுகிறார்கள். 30 நாளுக்குள் துளசி இறக்க வேண்டும் என்பது கெடு. நன்றாக இருக்கும் துளசி திடீரென சுகவீனப்படுகிறாள். காரணம் தெரியாமல், புரியாமல் தவிக்கின்றனர் பெற்றோரும், சிகிச்சை அளிக்கும் டாக்டரும். முப்பது நாளுக்குள் குழந்தையின் திடீர் சுகவீனத்திற்கு காரணம் யார்? அந்த 'காஷ்மோராவிடமிருந்து' குழந்தை துளசியை காப்பாற்றினார்களா? என்பதே இந்த நாவலின் கதை. 'மனிதனும் மர்மங்களும்', 'பேய்' போன்ற சிறந்த பேய்கதைகளை படித்த எனக்கு இந்த 'துளசி தளம்' என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் இந்த கதை, ஆந்திராவில் பெரிய ஹிட். நாவல் வெளியான காலத்திலேயே கிட்டத்தட்ட 40,000 பிரதிகள் விற்றது இந்த நாவல். அதே சமயம், துளசி தளம் சீரியலாகவும், சினிமாவுமாக 1980 களில் வந்து சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீல நிலா - ராஜேஷ் குமார்:
ஒரு பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று ஒரு கோட்டையை பற்றி ஆராய்ச்சி செய்யப் புறப்படுகிறது. அதே சமயம் நகரத்தில் இருக்கும் ஒரு பெரியவருக்கு மரணப் படுக்கையில் விழுந்து உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக நீலமாக மாற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அந்த நீலத்திற்கான காரணம் தெரியாமல் மருத்துவர் யோசிக்க, 'இது ஒரு கொலை முயற்சி' என்று போலீசுக்கு தகவல் போக, அவர்களும் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெரியவர் இறந்து விட, அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் அவர்க்கு பிறந்தவரல்ல என்ற உண்மை மகன்களுக்கும், மகளுக்கும் தெரியவந்து அதிர்ச்சியடைகிறார்கள். உண்மையில் அந்த பெரியவருக்கு வந்த வினோதமான நோய் என்ன? அவரை கொன்றவர் யார்? யார் அவருக்கு பிறக்காத பிள்ளை? பல்கலைக்கழக மாணவர் குழு சென்ற கோட்டையில் என்ன நடக்கிறது? அங்கிருந்து உயிரோடு திரும்பியவர்கள் யார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்கிறார் ராஜேஷ் குமார். கதை செம ஜோர். நல்ல சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் நாவல்.

வசந்த்! வசந்த்! - சுஜாதா:
இந்த புதினம், 1981 இல் சுஜாதாவால் எழுதப்பட்டு கல்கி இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. உக்கல் என்ற இடத்தில் உள்ள "ராஜராஜன் கிணறு" பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியரின் குறிப்புகள் பறிபோகின்றன. அதை மீட்கச் செல்லும் வசந்த், கணேஷ் இருவரும் சந்திக்கும் சவால்கள் என்ன? அந்த கிணற்றின் மர்மத்தைக் கண்டுபிடித்தார்களா? அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. வசந்தின் நகைச்சுவை மற்றும் காதல் அத்யாயங்களோடு, கணேஷின் துப்பறியும் திறனும் சேர்ந்து கதையை சுவாரஸ்யமான பாதையில் அழைத்து செல்கின்றன. 'இதுவாகத்தான் இருக்கும்' என்று படிக்கும் நாம் நினைக்க, 'கண்டிப்பாக நீங்கள் நினைப்பது இல்லை' என்று அடுத்தடுத்த பக்கங்களில் நம்மை அழகாக ஏமாற்றுகிறார் சுஜாதா. கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்.

தப்பு தப்பாய் ஒரு தப்பு - ராஜேஷ் குமார்:
காவல் துறை பயிற்சி முடிந்து போஸ்டிங்காக காத்திருக்கும் கதையின் நாயகன், நீண்ட நாளுக்குப் பிறகு தன் தோழி ஒருவரை சந்திக்கிறார். அவள் ஊதுவத்தி விற்பனை செய்வதாக சொல்கிறாள். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு வீட்டில் ஒரு பெரியவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்த வீட்டிற்கு கடைசியாக வந்தது ஒரு ஊதுவத்தி விற்கும் பெண் என்று சாட்சிகள் சொல்ல, தன் தோழியை சந்தேகித்து அவளை தேட ஆரம்பிக்கிறார் கதையின் நாயகன். உண்மையில் அவள் தான் கொலை செய்தவளா? அந்த கொலைக்கான பின்னனி என்ன? கடைசியில் அவளை கண்டுபிடித்தார்களா என்பதே இந்த துப்பறியும் நாவலின் கதை. துப்பறியும் கதைகளின் சிறந்த கதை சொல்லி என்பதை திரும்பவும் நிருபித்திருக்கிறார் நம் 'கிரைம் மன்னன்' ராஜேஷ் குமார். கதை மிகவும் விறுவிறுப்பு, நிறைய ட்விஸ்ட்கள் என்று இந்த நாவலைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இனி மின்மினி - ராஜேஷ் குமார்:
அமெரிக்காவில் வீடு வாடகைக்கு தேடும் ஒரு இந்தியருக்கும், கோயம்புத்தூர் கலெக்டர் மனைவிக்கும் வெவ்வேறு விதமான சம்பவங்கள் நடக்கின்றன. அதே சமயம், கலெக்டரின் மனைவிக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் முன்பே திருமணம் நடந்ததாக நம்பகமான தகவல் வர, இந்த விஷயத்தை விவேக் மற்றும் விஷ்ணுவிடம் ஒப்படைக்கிறார் கலெக்டர். இவர் எப்படி துப்பறிந்து உண்மையை கண்டு பிடிக்கிறார்கள் என்பதே கதை. எப்படி சுஜாதாவுக்கு 'கணேஷ், வசந்தோ' அதேபோல ராஜேஷ் குமாருக்கு விவேக், விஷ்ணு. எனக்கு தெரிந்த வகையில் இவர்களுக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும் எனக்கு பிடித்தது சுஜாதாவின் ஹீரோக்கள் தான். இந்த கதை, ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. வழக்கம் போல விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது இந்த ராஜேஷ் குமாரின் 'இனி மின் மினி' நாவல்.

கமர்ஷியல் கிக்:


இந்த படம் கடந்த வருடமே வெளிவந்திருந்தாலும், நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். படம் என்னை கொஞ்சமே கொஞ்சம் கவர்ந்தாலும், பாடல்கள் என்னை பெரிதாக கவர்ந்தன. குறிப்பாக இந்த பாடலில் வரும் சரணம், பல்லவி என இரண்டு மெட்டுக்களும் என்னை மிரட்டி விட்டன. பாடகர்களான ஹேமந்த், திவ்யா இருவரும் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.



Thanks and Regards

2 கருத்துகள்:

  1. நன்று.

    சுஜாதாவின் சில கதைகளை வாசித்துள்ளேன். ராஜேஷ் குமார் வாசித்ததில்லை.

    துளசிதளம் என் வசம் உள்ளது:-)

    பதிலளிநீக்கு
  2. இதில் ஜே.கே தவிர வேறு எதையும் நான் படித்ததில்லை... இருள் வரும் நேரம் எல்லாம் இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்...

    பதிலளிநீக்கு