செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்

இந்த வாரம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான இரண்டு படங்களை விமர்சிக்கப் போகிறேன். இன்னும் 10 நாட்களில் 'லிங்கா' வந்துவிடும். அதிலிருந்து தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களை ஆக்கிரமித்துவிடும். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சின்ன ஹீரோக்களுக்கும், சிறு முதலீட்டு படங்களும் வெளிவருவது கடினம்.
அப்படியே வந்தாலும், குறைந்த பட்சம் ஒரு வாரமாவது திரையரங்கில் படத்தை காணமுடியுமா என்பது சந்தேகமே. சரி. நாம் நம் விமர்சனப் பகுதியில் முதலில் பார்க்கப்போவது, வசந்தபாலன் இயக்கத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'காவியத் தலைவன்'.
நாடகசபை நடத்தி வரும் சிவதாஸ் சுவாமிகளிடம் (நாசர்) சிஷ்யர்களாக இருக்கிறார்கள் காளியப்ப பாகவதரும் (சித்தார்த்), கோமதி நாயகம் பிள்ளையும் (பிரிதிவிராஜ்). கோமதி நாயகத்துக்கு தானே அனைத்திலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் அவரை விட அனைத்திலும் தகுதியாக இருப்பவர் காளியப்ப பாகவதர். அதை பொறுக்க முடியாத கோமதி நாயகம், வஞ்சகமாக சிவதாஸ் சுவாமிகளிடம் காளியப்பனின் காதல் வாழ்க்கையை பற்றி சொல்ல, காளியப்பனின் காதலுக்கும், மேடை நடிப்புக்கும் தடை போடுகிறார். பின்னாளில் தன்  காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காளியப்பர், அந்த சாவுக்கு காரணமான தன் குரு சிவதாஸ் சாமிகளுக்கே சாபம் இடுகிறார். மனமுடையும் சிவதாஸ் சுவாமிகள் மரணிக்க, தந்திரமாக காளியப்ப பாகவதரை நாடக சபையில் இருந்து துரத்தி விட்டு, நாடகத்தை எடுத்து நடத்துகிறார் கோமதி நாயகம் பிள்ளை. ஐந்து வருடங்களுக்கு பிறகு வேறொரு சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்திக்கிறார்கள் காளியப்ப பாகவதரும், கோமதி நாயகம் பிள்ளையும். கடைசியில் கோமதி நாயகத்தின் கோபம் குறைந்ததா? காளியப்ப பாகவதர் என்னவாகிறார்? என்ற கேள்விகளுக்குக்கான விடைகளை வெள்ளித்திரையில் காண்க.
இது போன்ற Fantasy Type கதைகளை நாம் வரவேற்றாலும், அதை சரியாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குனர்கள் சற்று கோட்டை விடுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. அந்த கால நாடக உலகம், மக்கள், பழக்க வழக்கங்கள், சுதந்திர தாகம் போன்றவைகளை பழமை மாறாமல் தந்தால் தான் அது ரசிக்கும்படியாகவும், பின்னாளில் கொண்டாடும்படியாகவும் இருக்கும். அதை அரைகுறையாகத் தந்தால், நாம் படம் பார்க்கும் நேரத்தோடு சேர்த்து அவர்களின் பணம், உழைப்பு என்று அனைத்தும் வீண் தான். சித்தார்த்திற்கு இந்த கதைக் களம் புதுசு. அதனாலேயே சில இடங்களில் கொஞ்சம் சறுக்கியும், பல இடங்களிலும் சமாளித்தும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடிப்பில் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ப்ரிதிவிராஜுக்கு நல்ல வேடம். ஆனால் இது போன்ற வில்லத்தனம் எல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மை கவரவில்லை என்பதே உண்மை. இவர் தமிழில் நடித்த முதல் படமான 'கனா கண்டேன்' படத்தில் கலக்கியது போலவே, வில்லத்தனத்தில் ஒரு கலக்கு கலக்கியிருக்க வேண்டாமா?


ஒரு வேளை, அது போன்ற ஒரு கதாபாத்திரம் தான் இது என்று நினைத்திருந்தாரோ என்னவோ. நாசர் வழக்கம் போல தன் கிளாஸ் நடிப்பால் நம்மை கவர்கிறார். வேதிகாவும், புதுமுகம் அனைகாவும் படத்தில் அழகாக இருக்கிறார்கள். ஆனால் அனைக்காவை விட, வேதிகா கொஞ்சம் அதிகமான காட்சிகளில் வருவதை தவிர பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை.. தம்பி ராமையா & சிங்கம் புலி இருந்தும் நகைச்சுவை சுத்தமாக இல்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் பெரிதாக ஒன்றும் கவரும்படியாக அமையவில்லை. காரணம், பாடலின் கால சூழ்நிலையும், நவீனத்துவ இசையும் சுத்தமாக பொருந்தவில்லை. ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவின் கேமரா கலர்புல்லாக கவிதை பேசுகிறது படத்தில். எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கதை, திரைக்கதை எழுதி இயக்கியது வசந்தபாலன். உண்மையை சொல்லப்போனால், 'அரவானில்' செய்த தவறை இதில் வேறு விதமாக தொடர்ந்திருக்கிறார் என்பதே நிதர்சனம். அது சரி, இந்த படத்திற்கு எதற்கு 'காவியத் தலைவன்' என்று பெயர் வைத்தார்கள்?
Horror Anthology படங்கள் தமிழில் ரொம்பவே புதுசு. இது வரைக்கும் தமிழில் இதுபோன்ற படங்கள் எதுவும் வந்ததில்லை. Science Fiction Thriller with Beast படங்கள் என்று பார்த்தால் அம்புலி படத்தோடு தான் ஆரம்பிக்கிறது (நாளைய மனிதன், அதிசய மனிதன் தவிர்த்து). அந்த அம்புலி படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஹரி ஷங்கர் & ஹரிஷ் நாராயன் இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு திகில் படைப்பு தான் இந்த 'ஆ'. பொதுவாக ஒரு பேய் படத்தின் கதையில் ஒரு பேய் மட்டுமே இரண்டரை மணிநேரம் ரக ரகமாக பயமுறுத்தும். ஆனால் இதில் மொத்தம் ஐந்து விதமான பேய்கள், வெவ்வேறு நாடுகளில் இருந்து. பாபி சிம்ஹா, கோகுல், மேக்னா & பாலசரவணன் அனைவரும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். நீண்ட நாளைக்குப் பிறகு சந்திக்கும் இவர்கள், ஒரு பெட்டிங் வைத்துக் கொள்கிறார்கள். அதாவது பாபி சிம்ஹா தன்னிடம் பேய் இருக்கிறது என்று நிரூபித்தால், தன் சொத்தில் பாதியை (60 கோடி) கொடுப்பதாகவும் நிரூபிக்கவில்லையென்றால் தன்னிடம் முன்பு பெட்டிங்கில் தான் தோற்ற யமஹா வண்டியை மட்டும் திரும்பக்கொடுக்கும்படி சொல்கிறார். அதற்க்கு உடன்பட்டு பேயைத் தேடிச் செல்கிறார்கள் கோகுல், மேக்னா & பாலசரவணன். இது தான் 'ஆ' படத்தின் கதை.
மொத்தம் ஐந்து வகையான பேய்கள். நடுகடலில் பேய், ஜப்பான் பேய், அரேபிய பூதப் பேய், ATM பேய் மற்றும் ஹைவே பேய் என்று அதகளப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள். இவர்கள் இயக்கிய அம்புலி என்னுடைய Favorite படங்களில் ஒன்று. அந்த படத்தை இயக்கிய இயக்குனர்களின் படத்தை பார்க்காமல் விடுவேனா? பயந்துகொண்டே பார்த்தேன். மிரட்டியிருக்கிறார்கள். எனக்கு இந்த ஐந்து பேய்களில் அரேபிய பேய் காட்சிகள் தான் ரொம்ப பிடித்தது. ஆனால் கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் கடுப்படித்தது. மற்றபடி படம் சூப்பர். கேமரா மேன் சதீஷ், காட்சிகளை வைத்து கிலி ஏற்படுத்தி இருக்கிறார். அதே போல ஹரி ஷங்கர் எடிட்டிங்கும் படத்திற்கு அருமையாக அமைந்திருக்கிறது. இயக்குனர்கள் ஹரி ஷங்கர் & ஹரிஷ் நாராயன் இருவரும் உண்மையில் 'ஆ' என்று அலறத்தான் வைத்திருக்கிறாகள். ATM சென்டரில் வரும் பேய், நடுகடலில் இருக்கும் பேய் என்று ஒவ்வொரு கான்செப்டும் Simply Awesome. மொத்தத்தில், இப்போதைய சிரிக்க வைக்கும் பேய்களின் மத்தியில் கொஞ்சம் சீரியஸ் ஆன பேய் கதையை பயமுறுத்தலோடு தந்திருப்பதால் சினிமா பேய் ரசிகர்களை திருப்தி படுத்திவிட்டது இந்த 'ஆ'.




Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக