சனி, ஆகஸ்ட் 10, 2013

வேலை கிடைச்சிரிச்சி...

 இது நடந்தது கடந்த ஆண்டு நவம்பர் மாத முதல் வாரம். எப்பவும் போல அன்று காலை எங்கள் கம்பெனியின் ஈமெயில் பார்த்தபோது ஒரு அதிர்ச்சியான செய்தி, எங்கள் முதலாளியிடமிருந்து வந்திருந்தது. வழக்கம் போல ஏதாவது உப்பு சப்பில்லாத மெயில் என்று தான் நினைத்தோம். ஆனால், வந்த மெயில் அதுவல்ல. இந்த நவம்பர் மாதத்தோடு தான் கம்பெனியை
மூடுவதாகவும், இந்த மாதத்தின் சம்பளத்தை தவிர எந்த செட்டில்மெண்ட் பணமும் தரமுடியாது எனவும் திட்டவட்டமாக கூறிவிட்டார் அவர். நாங்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. 'எனக்கு லாபம் இல்லை, அதனால தான் கம்பெனிய மூடுறேன்' என்று அந்தாளு கூலாக லண்டனில் இருந்து சொல்கிறார். 'இத தானே நான் வேலைல சேர்ந்த மொத நாள்ல இருந்தே சொல்லிக்கிட்டு வர்ற. கண்டிப்பா மூட தான் போறேன்னு ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு சொல்லியிருந்தால், நாங்கள் வேறு வேலை தேடியிருப்போமே. இப்போது வந்து சொல்கிறானே கிழவன்' என்று நினைத்துக் கொண்டேன். அதே சமயம் எனக்கு வேறு ஒரு பிரச்சனை வேறு இருந்தது.


கர்ப்பவதியான என் மனைவிக்கு வாந்தி நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. ஹாஸ்பிடலுக்கு போனால் வாந்தியை நிறுத்துவதற்கு மூன்று நாள் ட்ரிப்ஸ் போட வேண்டும் என்றார்கள். அதையும் செய்து பார்த்தேன். ஒன்றும் சரியாவது போல் தெரியவில்லை. எவ்வளவோ செலவு செய்து பார்த்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. நாள் ஆக ஆக, அவளின் உடல் நிலை ரொம்பவே மோசமாகி விட்டது. இதற்க்கு மேல் யோசிப்பது சரியல்ல, இந்தியாவிற்கு அனுப்புவது தான் சரி என்று முடிவு செய்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை. அவளால் தனியாக பயணம் செய்யும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லை. அதில்லாமல் கர்ப்பவதி வேறு. அவள் உடல்நிலையை பற்றி நன்கு தெரிந்த ஒருவர் யாராவது கூட இருந்தால் தான், அவளுக்கு சௌகரியமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஒரே ஆள், உகாண்டாவில் என்னைத் தவிர என் மனைவிக்கு யாரும் இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் அவளோடு நானும் இந்தியாவிற்கு கிளம்பினேன்.

நிற்க. இப்படி நான் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தால், ஏதோ கே.பாக்யராஜின் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படம் ஓட்டுவது போல ஆகிவிடும். அதனால் சுருக்கமாக சொல்லி முடித்து கொள்கிறேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வேலை இல்லை. எப்படியோ ஒரு நான்கு மாதங்கள் போராடி ஒரு வேலை தேடிக்கொண்டேன். ஆனால் உகாண்டாவில் அல்ல. பக்கத்து நாடான புருண்டியில். கடந்த நான்கு மாதமாக நம்ம வண்டி இங்கே தான் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்பு பார்த்த வேலைக்கும், இப்போது கிடைத்துள்ள வேலைக்கும் துளி கூட சம்பந்தமில்லை. அப்படியே தட்டுத், தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஊரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரே டயலாக்கில் இப்படி சொல்லலாம், 'கொசு இருக்கும், ஆனா வத்தி இல்ல'. என்னோடு பணிபுரிகின்றவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 'பன்னிகுட்டி எல்லாம் என்னை பாத்து பஞ்ச் டயலாக் பேசுதுங்க'. என்ன பண்றது? எல்லாம் என் நேரம்.

 கடந்த மே மாதத்தின் வார இறுதியில் என் மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதுவும் சுகப்ப்ரசவத்தில். குழந்தைக்கு 'தனுஸ்ரீ' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். போனில் செய்தியை சொன்னார்கள். 'அப்படியா?' என்று கேட்டுக் கொண்டேன். வேற என்ன பண்றது? செய்தி கேட்ட உடனே 'பாப்பா பாப்பா' என்று அடிக்கிற வெயிலில் ஸ்வட்டர் ஒன்றை மாட்டிக்கொண்டு 'தெய்வதிருமகள்' விக்ரம் போல டான்சா ஆடமுடியும்? ஏதோ, நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறேன். எதுவும் பிடிக்கவில்லை, எதிலும் என் மனம் லயிக்கவில்லை. அதனால் தான் கடந்த ஆறேழு மாதமாக பதிவு எதுவும் எழுதாமல் இருந்தேன். இனி வரும் நாட்களில் தொடர்ந்து பதிவு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம்...





 என்றும் அன்புடன்

5 கருத்துகள்:

  1. உங்கள் எதிர்காலம் பிரகாசமடைய என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. பிரசாத்,
    முதலில் அப்பாவாக ப்ரோமோஷன் பெற்றதுக்கு என் மனமான் வாழ்த்துக்கள் :):):).
    பாப்பா பொறந்தப்ப நீங்க எந்த மனநிலையிலே இருந்தீங்களோ, அதே மனநிலையில தான் நானும் என்னோட பையன் வியாஸ் பொறக்கும் போதும் இருந்தேன். என்னோட பையன் பொறக்கும் போது நான் பக்கத்துல இல்ல. ரொம்ப கஷ்டமா தான் இருந்தது, அப்புறமும் நம்ம இங்க வந்து சம்பாறிக்கிறது நம்ம பசங்களுக்கு தானேன்னு மனசை தேத்திகிட்டேன். அப்புறம் உங்க புது வேலைக்கு வாழ்த்துக்கள். புது நாடு, கொஞ்ச நாளுல செட் ஆகிரும்.
    மனசை ரிலாக்ஸ் பண்ண அப்ப அப்ப பதிவு எழுதுங்க. கொஞ்ச நண்பர்களோட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. :):):)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் பிரசாத்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா10 ஆகஸ்ட், 2013 06:49

    வாழ்த்துக்கள் தந்தையானமைக்கு. உகாண்டா, புருண்டி மட்டுமல்ல அமெரிக்கா, கனடாவிலும் இதே நிலை தான். பணியின்றி ஆறு மாதம் இருந்தேன் நரக வேதனை. ஆனால் தாழ்ச்சிகள் பலவற்றை ருசிக்கத் தொடங்கினால், மனம் பக்குவப்பட்டு விடும். பின்னர் உயர்ச்சிகள் தானே வரும். ஆற அமர சிந்தியுங்கள், உங்கள் கல்வி, பணி, அனுபவத்துக்கு உகந்த வேலை வேறு எங்காவது கிட்டுமா என தேடுங்கள். அறிந்தோர், அறியாதோர் ஊடாய் அளவளாவிக் கொள்ளுங்கள், சில சமயம் நல் வாய்ப்புக்கள் தேடி வரலாம். மனதில் உள்ள வேதனைகளை மனைவி, நண்பர்களோடு மனம் விட்டு பேசுங்கள். உகாண்டா, புருண்டியை தாழ்மையாக நினைக்காமல் அந் நாடு குறித்து, மக்கள், வரலாறு குறித்தும் வாசியுங்கள், பழகுங்கள், பயணியுங்கள், புகைப்படம் எடுங்கள் அனைத்தையும் தொகுத்து எழுதுங்கள். எத்தனை தமிழர்க்கு அவ் வாய்ப்பு கிட்டும், அந் நாடு குறித்து எமக்கு எதுவும் தெரியாதே. உங்கள் அனுபவங்களையும் கோர்த்து சுவைபட எழுதுங்கள். தெய்வ நம்பிக்கை எனக்கில்லை, ஆனால் முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவரின் வாக்கை நம்புவோன். முயல்வீராக, முன்னேறுவீராக. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சுகப்ப்ரசவத்தில். குழந்தைக்கு 'தனுஸ்ரீ' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    இனிய வாழ்த்துகள்..

    குழந்தை பிறந்த நேரம் வாழ்வில் வசந்தங்கள் மலரட்டும் ..!

    பதிலளிநீக்கு