செவ்வாய், அக்டோபர் 09, 2012

ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) - ஒரு பார்வை

ஒரு சின்னக் கதை. இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன. ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு, 'நாங்களே இந்த மண்ணின் மாந்தர்கள். அவனுங்க வந்தேறிகள். இந்த மண்ணின்மீது உரிமை இல்லாதவங்க' என்று மார் தட்டிக் கொள்ளும்.


இன்னொரு குழுவோ, 'அவனுங்க சுத்த சோம்பேறிங்க. ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க. இந்த நாட்டை வளப்படுத்துன நாங்கதான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு' என்று உரிமை கொண்டாடும்.

இரு தரப்பிலும் இனக்கலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைஞர்கள் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்துவிடக் கூடாது என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அவ்வப்போது, இரு குழுக்களுக்கும் இடையே உரசல்கள் ஏற்படும். 'உங்க தரப்பு மாடு எங்க வயல்ல மேய்ந்தது, உங்க பையன் எங்க பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான்' போன்ற சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, நாட்டு அரசியலில் தங்களுக்குச் சேரவேண்டிய இடத்தை அடுத்தவர் ஆக்கிரமித்துள்ளார்கள் போன்ற பெரிய விஷயங்கள் வரை, சின்னச் சின்னப் புகைச்சல்கள் இருந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் கைகலப்பும் உயிர்சேதமும் கூட ஏற்பட்டுவிடும்.

என்ன, இதுவரை சொன்ன கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? எல்லா நாடுகளிலும், பல சமூகங்களில் இது மாதிரியான ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன. எங்கெல்லாம் மனித நாகரிகம் தழைத்திருக்கிறதோ அங்கெல்லாம் இந்தக் கதை பல வகைகளில் அரங்கேறியிருக்கிறது, இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலும் பல இடங்களில் வாய் சண்டைகளோடும் சிறு கைகலப்போடும் இந்த மோதல் நின்று போகும். ஆனால், வெகு சில இடங்களில், ஒரு தரப்பு இன்னொரு தரப்பை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்து, இனப்படுகொலையில் ஈடுபட்டதும் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான், லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கிய ருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide). சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், சகித்துக்கொண்டு போகலாம். அந்த மனப்பான்மை இல்லாமல், அடுத்த இனத்தையே தீர்த்துக் கட்ட முயன்றவர்கள், டூட்சி, ஹுட்டு இன மக்கள் (Tutsi & Hutu).
டூட்சிகளும் ஹுட்டுக்களும் மத்திய ஆப்ரிக்கப் பகுதியில் வாழும் இரு இனக் குழுக்கள். பல நூறு ஆண்டுகளாக 'பெரும் ஏரிகள் பகுதி (Great Lakes Region)' என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில்தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆப்ரிக்காவின் பிற இனக்குழுக்களைப் போலவே அவர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் அவ்வபோது நிகழ்ந்து வந்திருக்கின்றன.

இரு குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்கியப் பெருமை காலனியாதிக்கத்தையே சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆப்ரிக்காவில் காலணிகளை உருவாக்கின. இந்த காலனியாதிக்கத்துக்கு பல காரணங்கள் உள்ளன.

அக்கண்டத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதிலிருந்து, பக்கத்து நாட்டுக்காரனைவிட பெரிய நிலப்பரப்பை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற வெத்து ஜம்ப நினைப்பு வரை. இதையே வரலாற்றாளர்கள் 'ஆப்ரிக்காவுக்கான அடிதடி (The Scramble for Africa)' என்று அழைக்கின்றனர்.

ஆப்ரிக்காவின் யதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஐரோப்பாவில் உட்கார்ந்துகொண்டு ஆப்ரிக்க வரைப்படத்தில் கோடு கிழித்தார்கள், ஐரோப்பிய அரசியல்வாதிகள். அதன் காரணமாக, எந்தச் சம்பந்தமில்லாமல் ஆப்ரிக்காவில் பல நாடுகள் உருவாயின. பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இனக்குழுக்கள், ஐரோப்பியர் வரைந்த எல்லைகளால் பிளவுபட்டன. அதே போல, பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்கள், ஒரே நாட்டில் அருகருகே வாழும்படியான சூழ்நிலையும் உருவானது. இந்தக் குளறுபடியில் உருவானவைதான் ருவாண்டா, புரூண்டி நாடுகள்.
இரு நாடுகளும் ஜெர்மனியின் காலனியாதிக்கத்துக்கு ஆளாயின. அதற்க்கு முன்பு, இந்த பகுதி பல நூறு ஆண்டுகளாக டூட்சி இன மன்னரின் ஆட்சியின் கீழ்இருந்தது. டூட்சிக்கள், எண்ணிக்கையில் ஹுட்டுக்களைவிடக் குறைவானவர்கள். என்றாலும், ஆட்சி அதிகாரம் அவர்களுடைய கையில் தான் இருந்தது. ஜெர்மனியின் காலனிய ஆட்சியாளர்களும் டூட்சிக்களுக்குச் சாதகமாகவே செயல்பட்டார்கள். அவர்களுடைய அரசாங்கத்தில் டூட்சிக்களுக்காகவே உயர் பதவிகளை ஒதுக்கினார்கள்.

'டூட்சிக்கள்தான் மரபணு அடிப்படையில் உயர்ந்த இனம்' என்ற எண்ணம் கொண்டிருந்த ஜெர்மானியர்களின் கொள்கைகள், அதுவரை சிறிய அளவில் புகைந்துகொண்டிருந்த இன வெறுப்பை ஊதிப் பெரிதாக்கின. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இரண்டாம்தரக் குடிமக்கள் போலவே ஹூட்டுக்கள் வாழ நேரிட்டது. இதனால், அவர்களுக்கு டூட்சிக்களின் மேலிருந்த கோபம், வெறுப்பாக மாறியது.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதால், ருவாண்டாவும் புரூண்டியும் பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பெல்ஜியம், ஜெர்மனியின் இனவாதக் கொள்கைகளை மேலும் விரிவுபடுத்தியது. டூட்சிக்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டது. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, இன அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் அளவுக்கு காலனிய ஆட்சியாளர்கள் இனவாதக் கொள்கைகளைப் பின்பற்றினார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், ஆப்ரிக்கா மீதான ஐரோப்பாவின் பிடி தளர்ந்தது. ஆப்ரிக்கா முழுவதும் தேசியவாதம் தழைத்தோங்கி, எல்லா நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் தோன்றின. ருவாண்டாவிலும் புரூண்டியிலும், ஹுட்டு இன மக்கள், விடுதலை இயக்கங்களில் பெரும் பங்காற்றினார்கள். நாடு விடுதலை அடைந்துவிட்டால், இதுவரை கிடைக்காத அரசியல் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்பது அவர்களது கணக்கு.
மக்களாட்சி முறையில், எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்களே அரசு அமைக்க முடியும் என்பதால் இரு நாட்டு ஹுட்டுகளும் சுதந்திரத்திற்க்காக பாடுபட்டனர். ஆனால், டூட்சிக்கள், நாட்டு விடுதலையில் அவ்வளவு உற்சாகம் கொள்ளவில்லை. காலனியாட்சி போய் மக்களாட்சி வந்துவிட்டால், எண்ணிக்கையில் குறைந்த தங்கள் இனம் இதுவரை அனுபவித்து வந்த ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து, ஹுட்டுக்களின் தயவில் வாழ வேண்டுமே என்று அஞ்சினார்கள். அந்தக் காரணத்தால், அவர்கள் விடுதலை இயக்கங்களில் பங்கேற்கவில்லை.

இரு நாடுகளும் 1960 களில் விடுதலையடைந்தன. மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடந்தன. மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதம் இருந்த ஹுட்டுக்களே, ருவாண்டாவில் எளிதாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதிகாரத்தை இழந்த டூட்சிகள், எப்படி மீண்டும் அதை கைப்பற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். அதே சமயம், அண்டை நாடான புரூண்டியில் டூட்சிக்களின் ராணுவ ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது.

1960 களில், ஆப்ரிக்கா முழுக்க அரசியல் நிலையின்மை நிலவியது. அடிக்கடி ராணுவப் புரட்சிகள் வெடித்தன. இந்தச் சூழலில் தான், ருவாண்டாவில் ஹுட்டு இன மக்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். இந்தக் காரணங்கள்தான், புரூண்டியில் இருந்த ஹுட்டுக்களுக்கு, ஆட்சி ஆதிகாரத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தன.

1972 இல், புரூண்டியில் ஹுட்டுக்களின் புரட்சி வெடித்தது. சில ஆயிரம் டூட்சிக்கள், புரட்சியால் விளைந்த கலவரங்களில் கொல்லப்பட்டார்கள். ஆத்திரம் அடைந்த டூட்சி அரசு, பதிலுக்கு ஹுட்டுக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது. திட்டமிட்டு ஹுட்டு இனத்தை அழிக்க முயன்றது. இந்த காலகட்டத்தில், டூட்சி அரசின் முழு ஒத்துழைப்போடு நடந்த படுகொலைகளில் ஒன்றரை லட்சம் ஹுட்டுக்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், சில லட்சம் பேர் தப்பித்து ஓடி, அண்டை நாடுகளில் அகதிகளானார்கள்.

அதுவரை உலக சரித்திரத்தில், இரு இனங்களிடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்று வந்தாலும், ஓர் இனம் கவனமாகத் திட்டமிட்டு அடுத்த இனத்தை பூண்டோடு அழிக்க முயன்ற முதல் நிகழ்வு அதுதான். இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு, சாதாரணமாக இனவொழிப்பைச் செய்துவிடலாம் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருந்தது.
அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, ருவாண்டாவிலும் புரூண்டியிலும் பெரிய அளவு கலவரங்கள் எதுவுமில்லை. கிட்டத்தட்ட அமைதிப் பூங்காவாகத்தான் இரு நாடுகளும் இருந்தன. இருந்தாலும் ஒரு பக்கம், ருவாண்டாவில் ஹுட்டு பெரும்பான்மை அரசை வீழ்த்துவதற்கு சில டூட்சி போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போராடிக் கொண்டிருந்தன. உகாண்டா, செயர் போன்ற அண்டை நாடுகள், ருவாண்டா மீது தாக்குதல் நடத்தியபடி இருந்தன. 1990 களில் இந்த மோதல்கள் எல்லாம் சேர்ந்து, உள்நாட்டுப் போராக உருமாறியது. உள்நாட்டு போர் மூண்டவுடன் பிற நாடுகள் தலையிட்டன. இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினா. ஆட்சி அதிகாரத்தில் டூட்சிப் போராளிகளுக்குப் பங்கு கொடுக்கும்படி ஹுட்டு அரசை வற்புறுத்தின.

'எவ்வளவோ காலமாக அடிமட்டத்தில் இருந்த நாங்கள், இப்போதுதான் அதிகாரத்தை அனுபவித்து வருகிறோம். அதையும் பொறுக்காமல், அரசில் டூட்சிக்களுக்குப் பங்கு கொடுக்கச் சொல்கிறார்களே!' என்று ஹுட்டுக்களுக்கு ஆத்திரம் மூண்டது. டூட்சிக்கள் இருந்தால்தானே பிரச்சனையை? அவர்களை வேரோடு அழித்துவிட்டால்? இப்படியெல்லாம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 1972 இல், புரூண்டியில் டூட்சிக்கள் செய்ய முயன்று தோற்றுப்போன இனவொழிப்பை, இந்தமுறை தாங்கள் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார்கள். இனவோழிப்புக்கான ஆயத்தங்களைத் தொடங்கினார்கள்.

ஏப்ரல் 1994 இல், ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகளின் குடியரசு தலைவர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டா நாட்டு தலைநகர் கிகாலியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இதில் மரணமடைந்தார்கள். இனவொழிப்பை தொடங்க ஹுட்டுக்கள் தேடிக் கொண்டிருந்த காரணம் ஒரு வழியாக கிடைத்தது. எப்படியும் டூட்சிகள் நம்மை ஆளவிடமாட்டார்கள் என்று அவர்கள் பிரசாரம் செய்ய இது வசதியாகப் போனது. (யார் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பதே இன்றுவரை சர்ச்சையாகவே உள்ளது. டூட்சிப் போராளிக் குழுக்கள்தான் அந்தக் காரியத்தைச் செய்தன என்று ஹுட்டுக்களும், ஹுட்டு தீவிரவாதிகள், இனவொழிப்பைத் தொடங்குவதற்காக இதைச் செய்தார்கள் என்று டூட்சிக்களும் இன்றுவரை மாறிமாறிக் குற்றம் சாட்டி வருகிறார்கள்.)

யார் ஆரம்பித்தார்களோ...! அடுத்து நிகழ்ந்த பயங்கரம் இதுவரை உலக வரலாற்றில் யாரும் பார்த்திராதது. ருவாண்டா ஊடகங்கள், டூட்சி இனத்தவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தன. ஹுட்டு மக்களின் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்யும் அளவுக்கு, டூட்சிகள் சதிகளும் துரோகங்களும் செய்வதாக அவதூறுகளை பரப்பின. 'டூட்சிகள் கரப்பான்பூசிகளைப் போன்றவர்கள். அடியோடு நசுக்காவிட்டால், பல்கிப் பெருகி, தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள்' என்றெல்லாம் மக்களை உசுப்பேற்றின.

இனக்கொலைக்குத் தேவையான கத்திகளையும் ஆயுதங்களையும் லட்சக்கணக்கில் அரசாங்கமே இறக்குமதி செய்து, ஹுட்டுக்களுக்கு விநியோகம் செய்தது. ஒவ்வோர் ஊரிலும் கிராமத்திலும் இருந்த டூட்சி குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களை யார், எப்படிக் கொல்லவேண்டுமென்ற 'பொறுப்புகள்' பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஹுட்டு இளைஞர்களை கொண்ட கொலைப் படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. டூட்சிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே, மக்கள் அனைவரும் இனத்தின் அடிப்படையில் தனித்தனியே அடையாள அட்டைகளைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஏப்ரல் 7, 1994 இல், டூட்சி இனப்படுகொலை தொடங்கியது. குழந்தைகள், வயதானோர், ஊனமடைந்தவர்கள் என யாரும் விட்டுவைக்கவில்லை. வெகுகாலமாக, ஒரே ஊரில் வாழ்ந்த டூட்சிகளை அவர்களது பகுதியில் வாழ்ந்த ஹுட்டுகளே விரட்டி விரட்டிக் கொன்றார்கள். படுகொலையில் பங்கேற்க மறுத்த ஹுட்டுகளும் கொல்லப்பட்டார்கள். தப்பி, ஓடி ஒளிந்த டூட்சிகளைக் கொல்ல கொலைப்படைகள் நாடெங்கும் அலைந்தன. தேவாலயங்கள், பள்ளிகள் என எங்கு ஒளிந்திருந்தாலும் டூட்சிகளைத் தேடிப்பிடித்துக் கொலை செய்தன.

ஜூலை மாத இறுதிவரை இந்த வெறியாட்டம் தொடர்ந்தது. ஐந்து லட்சத்திலிருந்து பதினோரு லட்சம் டூட்சிகள் இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள் என்று உத்தேசமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும், 7 டூட்சிகள் விதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படியொரு படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, ஐக்கிய நாடுகளும், பன்னாட்டுச் சமுதாயமும் ஏதோ உள்நாட்டுத் தகராறு நடக்கிறது என்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

டூட்சி போராளிக் குழுக்களும், தங்கள் இனமக்கள் சாவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. படைதிரட்டி, ருவாண்டா நாட்டைக் கைப்பற்றி, ஹுட்டு அரசைப் பதவியிலிருந்து விரட்டின. பல லட்சம் ஹுட்டுகள், டூட்சி அரசு தங்களைப் பழிவாங்கிவிடும் என்று பயந்து நாட்டைவிட்டு அகதிகளாக ஓடினார்கள்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. டூட்சி அரசு, ருவாண்டாவை இரும்பிப் பிடியுடன் ஆண்டு கொண்டிருக்கிறது.ஹுட்டு போராளிக் படைகள், பக்கத்து நாடுகளிலிருந்து கொண்டு ருவாண்டாவைத் தாக்கி வருகின்றன. அவற்றை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ருவாண்டா, பக்கத்து நாடான ஜெயருக்குள் அவ்வப்போது படையெடுத்து, அங்கு உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். இன்னும் பல லட்சம் பேர், வீடுகளை, உடைமைகளை இழந்து அகதிகளாகிவிட்டார்கள். ஆனால், இரு தரப்பிலும் இனவெறி மட்டும் தணியாமல் நெருப்பைப்போல கனன்றுகொண்டே இருக்கிறது.



நன்றி: பாலா ஜெயராமன், 'வில்லாதி வில்லன்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்.



(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்

10 கருத்துகள்:

  1. உண்மையில் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மேலை நாடுகள் என்றழைக்கப்படும் உயர்ந்த நாடுகளின் செயல்கள் கீழ்த்தரமானவையாகத்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா09 அக்டோபர், 2012 07:31

    மிக அருமையான பதிவு சகோ. ருவாண்ட படுகொலைக் குறித்து பல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன் ... மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு துயரச் சம்பவம் ருவாண்டா கலவரமாகும்

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான கட்டுரை நண்பா..

    உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கலவரம்!!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் கொடுமையான சம்பவம்... இதை படித்த பிறகாவது யாரும் வன்முறையை / இனவெறியை தூண்டாமல் இருந்தால் நன்றி... இந்த செய்தியை பகிர்ந்த நண்பர் பிரசாத்துக்கு மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு