புதன், ஆகஸ்ட் 22, 2012

படம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...

 இன்று சென்னைக்கு 373 வது பிறந்தநாள். திருமணம் முடிந்த பத்து நாட்களுக்குள், மனைவியுடன் உகாண்டா வந்தபிறகும் கூட, பல சந்தர்ப்பங்களில் சென்னை பற்றிய நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. திருமணத்திற்காக நான் வந்திருந்த அந்த 45 நாட்களில்
சென்னையை எவ்வளவோ மிஸ் செய்து விட்டோம் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே சென்னையை பற்றி நம் சிங்கார சென்னைக்கு வயது 371 வருஷம், எனக்கும் சென்னைக்குமான தொடர்பு, உகாண்டா to சென்னை போன்ற பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பதிவில் வில்லிவாக்கத்தில் உள்ள மிகவும் பிடித்த சில இடங்களின் புகைப்படத்தை பார்த்து என் அனுபவத்தை சொல்கிறேன். ஒரேயடியாக சென்னை முக்கிய இடங்களை பற்றி சொல்ல முடியாது. Because, அதற்க்கெல்லாம் தனிப் பதிவே போடப்போகிறேன். இது வெறும் நான் வசிக்கும் வில்லிவாக்கம் பகுதியை பற்றிய நினைவுகள் தான். அதற்க்கு முன்பு கடந்த திங்களன்று (20/08/2012) திருமண பந்தத்தில் இணைந்த என் நண்பன் 'முரட்டு சிங்கம்' அருண் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில்:
Chennai Villivakkam Damodhara Perumal Temple
 பஸ் ஸ்டாண்டை தாண்டி மார்கெட் போகும் வழியில் உள்ளது இந்த கோயில். நிறைய பேர் இதை '150 ஆண்டுகள்' பழமையான கோவில் என்று சொல்லுவார்கள். ஆனால் கூகுளில் தட்டி பார்த்தபோது ''650 ஆண்டு மிகப் பழமையான கோவில்'' என்று தெரிய வந்தது. என் நண்பன் சரவணன் தன் காதலியை சந்தித்து  காதல் வளர்த்த இடங்களில் இதுவும் ஒன்று. என் மனைவி கூட காதலிக்கிற காலத்தில் என்னை பார்க்க வரும்போது இந்த கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வருவாள். வருடத்திற்கு ஒரு முறை வரும் 'கருடசேவை' விழா ரொம்ப அருமையாக நடக்கும்.



Chennai Villivakkam Damodhara Perumal Temple 1
 கோவிலின் மணி மண்டபத்தின் பக்கத்தில் பல கடைகள் திடீரென முளைத்து வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை சமாச்சாரங்கள் என்று அந்த இடமே களைகட்டும். பெருமாள் கோவிலின் வாசலில் நின்று இடதுபுறம் திரும்பினால், அது காய்கறி மார்கெட் மற்றும் ரயில்வே நிலையத்தை அடையலாம், வலது பக்கம் திரும்பினால் பஸ் டிப்போவை அடையலாம். வாசலில் இருந்து நேராக சென்றால் வில்லிவாக்கம்  தபால் நிலையத்தை அடையலாம். கோவில் மண்டபத்தை ஒட்டி 'ஸ்ரீ கனக துர்கா தெலுங்கு மேல்நிலைப் பள்ளி'யும் உள்ளது.

 வில்லிவாக்கம் அகத்திஸ்வரர் கோயில்:
Chennai Villivakkam Agatheeswarar Temple
 இந்த கோவில் சரித்திரப் புகழ் வாய்ந்தது. முன்னொரு காலத்தில் அப்பாவி மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தனர் இரண்டு அசுரர்கள். பல முனிவர்களை தந்திரமாக கொன்ற அந்த 'அசுர சகோதரர்களை' அழித்தவர் அகத்திய முனிவர். அதன் நினைவாக அகத்தியரே எழுப்பிய கோவில் தான் இந்த அகத்திஸ்வரர் ஆலயம். இது பெருமாள் கோவிலை விட மிகப் பழமையானது. நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் இந்த இடத்தை 'கொன்னுர்' என்றே பலர் அழைத்தனர்.
Chennai Villivakkam Agatheeswarar Temple 1
 ஆனால் அகத்தியர் நட்டுவைத்த வில்வ மரத்தை மக்கள் வணங்க ஆரம்பிக்க, காலப்போக்கில் அது 'வில்லிவாக்கம்' என்ற பெயர் எப்படியோ மருவி நிலைத்து விட்டது. இந்த கோவிலுக்கு நான் அதிகமாக சென்றதில்லை. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை நானும், என அப்பாவும் தாத்தாவிற்கு தர்ப்பணம் கொடுக்க சிவன் கோவிலின் குளக்கரைக்கு வருவோம். அந்த குளக்கரையை ஒட்டித் தான் வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு இருந்தது. இப்போது அதை மெயின் ரோட்டிற்கு மாற்றி விட்டார்கள்.

 வில்லிவாக்கம் பஸ் டிப்போ:
Chennai Villivakkam Bus Terminus
 எங்க ஏரியா பஸ் டிப்போவை தாண்டிப்போனால் தான் எங்கள் பாட்டி வீட்டை அடைய முடியும். சிறு வயதில் பாட்டி வீட்டில் தங்கியிருக்கும்போது அங்கே இருக்கும் என் வயது பசங்களோடு 'திருடன் போலீஸ்' விளையாடுவேன். அப்போது நான் ஒளிந்து கொள்ள பயன்படுத்தும் இடம், பஸ் டிப்போ. அதுவே நான் போலீஸாக இருந்து திருடனை தேட ஆரம்பிக்கும் இடம், அதுவும் பஸ் டிப்போ தான். பஸ் ஸ்டாண்டிலிருந்து வீடு வரைக்கும் பத்தே நிமிடம் தான். பத்தாம் வகுப்பு, காளிகாம்பாள் கோவில், அண்ணா சாலை வேலை என்று எனக்கு எல்லா இடத்திருக்கும் மிக எளிதாக போக முடிந்ததற்கும் இந்த டிப்போவால் தான்.

வில்லிவாக்கம் ரயில் நிலையம்:
Chennai Villivakkam Railway Station
 உண்மையில் பஸ்ஸை விட  ரயில் தான் எனக்கு நெருக்கம். ஒன்பதாம் வகுப்பு தொடங்கி +2 வரைக்கும் போனது ரயிலில் தான் (பத்தாவது தவிர்த்து). அதே போல வேலைக்கு அதிகம் பயன்படுத்தியது ரயில் தான். வில்லிவாக்கம் டூ கொரட்டூர், வில்லிவாக்கம் டூ சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம் டூ திருத்தணி என்று  என் ரயில் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்தவரை ரயிலில் தூங்கிக்  கொண்டே பயணம் செய்வது, அன்னையின் மடியில் படுத்து, உலகையே மறந்து உறங்குவது போல.

 வில்லிவாக்கம் AGS சினிமாஸ்:
Chennai Villivakkam AGS Cinemas
 இன்றைக்கு இது 5 தியேட்டர்களைக் கொண்ட AGS சினிமாஸ் என்று சொல்லிக் கொண்டாலும், வில்லிவாக்க வாசிகளுக்கு இது 'ராயல்' தியேட்டர் தான். நான் முன்பே சொன்ன என் பாட்டி வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளிப் போனால், ராயல் தியேட்டரை அடைந்து விடலாம். முதன்முதலில் 'குருதிப் புனல்' படத்தை தனியாக வந்து பார்த்தது ராயல் தியேட்டரில் தான். அதே போல தர்மதுரை, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, அவ்வை சண்முகி, முத்து, பாபா என்று பல படங்களை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் ராயலில் பார்த்த படம் 'திருப்பாச்சி'. அதே போல இன்றைய AGS இல் நான் ஊருக்கு வந்து பார்த்த முதல் படம், 'நண்பன்'.

 வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர்:
Chennai Villivakkam Nathamuni Theatre
 உண்மையில் எனக்கு ராயல் தியேட்டரைப் போல நாதமுனி தியேட்டர் பெரிதாக கவரவில்லை. ஆனாலும் பல படங்களை நான் நாதமுனியில் பார்த்திருக்கிறேன். நாதமுனி திரையரங்கில் 'மூட்டை பூச்சித் தொல்லைகள் அதிகம்'. அதே போல ஒரே ஒரு ப்ரொஜெக்டர் மட்டுமே அந்த தியேட்டரில் இருந்தது. அடிக்கடி 'தியேட்டரை ரிப்பேர் செய்கிறேன்' என்று என்னென்னவோ செய்து பார்ப்பார்கள். ஆனாலும் ஒன்றும் சரியாகவில்லை. தியேட்டரின் வெளியே இடது பக்கத்தில் ஒரு பெரிய டீ கடை இருக்கிறது. அங்கு செய்யப்படும் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். மற்ற கடை சமோசாக்களை மொத்தமாக ஓரம் கட்டிவிடும் இந்த 'சமோசா'.

 கொளத்தூர் கங்கா சினிமாஸ்:
Chennai Kolathur Ganga Complex Theatre
 என்ன தான் ராயல், நாதமுனி என்று இரண்டு தியேட்டர்கள் இருந்தாலும் புது படம் என்று வரும்போது அதற்க்கு எங்களுக்கு தேவைப்பட்ட தியேட்டர், கங்கா காம்ப்ளக்ஸ். எனக்கு முதல் நாள், முதல் ஷோ சினிமா என்றால், அதை கங்கா தியேட்டரில் தான் பார்க்க ஆசைப்படுவேன். கங்காவில் நான் பார்த்த முதல் படம், தலைவரின் 'அருணாச்சலம்'. அதற்குப் பிறகு பிரெண்ட்ஸ், தீனா, சிட்டிசன், தில், தூள், அட்டகாசம், ஜி என்று தலயும். தளபதியும் மோதிய பல திரையரங்குகளில் இதுவும் ஒன்று. தல ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள் பலவும் இந்த தியேட்டரில் தவறாமல் நடக்கும். தளபதி ரசிகர்களும்  இதில் விதிவிலக்கு இல்லை. இந்த தியேட்டரில் நான் பார்த்த கடைசி படம், 'ராஜபாட்டை'.

அண்ணா ஆர்ச்:
Chennai Anna Nagar Arch
இந்த ஆர்ச் எனக்கு சின்ன வயதிலிருந்தே பழக்கம். சிறு வயதில் என்னை என் அப்பா பைக்கில் அமர்த்திக் கொண்டு அமைந்தகரை போய் வருவார். அப்படி அவர் அந்த ஆர்ச்சை கடக்கும்போது, என் கைகள் அந்த ஆர்ச்சை பிடிக்க நீளும். ஆனாலும் அதை பிடிக்க முடியாமல் போய் விடுவேன்.  அப்படி நான் சிறுவயதில் விளையாடிய அது இன்று இல்லை என்று நினைக்கும்போது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆர்ச் வேறு எங்கோ அமைக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மையில் அங்கே இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு லேன்ட் மார்க் இந்த அண்ணா ஆர்ச் தான்.







(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

  1. படங்களுடன் விளக்கம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்று....சென்னை பத்தின பார்வை....

    பதிலளிநீக்கு
  3. அருமையான நினைவுகள் பாஸ்... :)
    தாமதத்திற்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  4. அனைத்து படங்களும் அருமை


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா25 ஆகஸ்ட், 2012 14:53

    Thanks a lot for sharing this with all of us you really know what you are talking about!
    Bookmarked. Kindly also talk over with my site =).
    We may have a hyperlink alternate agreement between us
    http://www.youtube.com/watch?v=DJ2xpbRrPBI&feature=youtu.
    be
    My homepage free runescape bots no download

    பதிலளிநீக்கு