கற்க கற்க கள்ளும் கற்க...

புதன், ஏப்ரல் 18, 2012

மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' - திரை விமர்சனம்


பொதுவாகவே சினிமாவில் கமர்ஷியல், கிளாசிக் என்று திரைப்படங்களை வகைப்படுத்துவார்கள். கமர்சியல் என்பது நிழலை நிஜமாக காட்டுவது (எ.கா. ஹீரோவை ஹீரோயின் மட்டுமே காதலிப்பது, ஹீரோ ஒவ்வொரு படத்திலும் குறைந்தது நூறு பேரையாவது அடிப்பது, ஒரே பாட்டில்
கோடிஸ்வரன் ஆவது இப்படி பல). கிளாசிக் டைப் படங்கள் என்பது நிஜத்தை நேரடியாகவே சொல்லுவது. மனிதனால் இன்றளவும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரே விஷயம், 'உண்மை' தான். நான் கமர்ஷியல் படங்கள் எடுப்பதை குறை சொல்லவில்லை. அப்படிப்பட்ட படங்களை எடுப்பது மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், சினிமாவில் வியாபாரம் செய்வதற்காகவும் தான். ஆனால் கிளாசிக் படங்கள் எடுப்பது எதற்காக? 'கலை ஆர்வம்' என்று சொல்லி நாம் அதை தரம் பிரித்தாலும், அந்த 'தரத்திற்கான மரியாதை' என்ன என்பதே மிகவும் முக்கியம். நம் தமிழ் சினிமாவில் கிளாசிக் டைப் படங்களுக்கான உருவாக்கம் மிகவும் குறைவு தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான 'குறிஞ்சி மலர்'. அப்படிப்பட்ட ஒரு குறிஞ்சி மலர் தான் இயக்குனர் மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்' திரைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் எடுப்பதற்கு பலவிதமான வரைமுறைகள் இருந்தன இந்த படம் எடுப்பதற்கு முன். ஆனால் அத்தனை வரைமுறைகளையும் உடைத்து எறிந்தார் மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலமாக. ஹீரோ இல்லாத படம். ஆனால் கதை தான் இந்த படத்தின் 'ஹீரோ'. திரைக்கதை தான் படத்தின் 'கதாநாயகி'. யதார்த்தமான வசனங்கள், நேர்த்தியான கதாபாத்திரப் படைப்பு, சிறப்பான இயக்கம் என்று அதகளப்படுத்தியிருக்கிறார் மகேந்திரன்.
 விஜயன் ஊர் மக்களால் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர். அவர் மனைவி, இரு குழந்தைகளோடு வசித்து வருகிறார். தன்னை விட யாரும் பெரியாளாக இருக்கக்கூடாது என்ற மனப்பான்மை கொண்ட இவர், தன் மனைவி அடிக்கடி நோய் வாய்ப்படுவதை காரணம் காட்டி அவர் மனைவியின் தங்கையை திருமணம் செய்யப் பார்க்கிறார். அவர் மனைவியின் தங்கையை மணப்பதற்காக தன் மனைவியை மற்றொருவரோடு தொடர்பு படுத்தி பேச, அது ஊர் விவகாரமாகி பிரச்சனையில் முடிகிறது. ஊரே தெய்வமாக மதிக்கும் அவரின் மனைவி நோய்வாய் பட்டு இறக்க, விஜயன் தன் அம்மா சொன்ன பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்து கொள்கிறார். இதற்கிடையில் இறந்து போன முதல் மனைவியின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில், அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்கிறார். இதை கேட்டு ஆவேசப்படும் ஊர் மக்கள் எடுக்கும் இறுதி முடிவு தான் படத்தின் கிளைமேக்ஸ்.
 விஜயனின் கதாபாத்திரப் படைப்பு, நம்முடன் அடிக்கடி வளைய வரும் சில மனிதர்களின் நிஜ ஸ்வரூபம். தனக்கு கிழே வேலை பார்க்கும் இளைஞன், பேண்டு சட்டை அணிந்திருப்பதை பார்த்து 'இனிமே நீ ஜிப்பா தான் போடணும்' என்று அறிவுறுத்தும் அந்த ஒரு காட்சியிலேயே விஜயனின் குணத்தை சொல்லிவிடுகிறார் இயக்குனர். அமைதியாக, மிக அழகாக வில்லத்தனம் பண்ணுவதில் விஜயனுக்கு நிகர் விஜயன் தான். விஜயனுக்கு மனைவியாக வரும் அஸ்வினியின் நடிப்பு அருமை. படத்தில் இவருக்கு அதிகமான வசனங்கள் இல்லையென்றாலும், தன் முகபாவனைகளிலேயே நடித்து அசத்தி விடுகிறார். அஸ்வினிக்கு அப்பாவாக வரும் சாருஹாசன், வாத்தியாராக வரும் சுந்தர், அஸ்வினியின் தங்கையாக வரும் மதுமாலினி, சரத்பாபு, விஜயனின் தம்பியாக வரும் ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி என்று படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முக்கியமாக விஜயன், அஸ்வினி தம்பதிகளுக்கு குழந்தைகளாக வரும் நடிகை அஞ்சுவும், 'மாஸ்டர்' காஜா ஷெரிப் இருவரும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள்.படத்தில் பல காட்சிகள் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியில் சரத்பாபு ஆற்றங்கரையில் இருக்கும் விஜயனிடம் சமாதானம் பேச வருவார். அந்த ஒரு ஷாட் முடிந்ததும், அடுத்த காட்சியில் சரத்பாபு ரத்தகாயப்பட்டிருக்கும் தன் உதட்டை ஆற்று நீரால் கழுவி, கிழிந்த தன் சட்டையை சரிசெய்து கொண்டு, 'உங்கள நான் அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா நீங்க அவங்களோட கணவருங்கறதுனால தான் அடிக்காம போறேன்' என்று சொல்லுவார். அந்த ஒரு காட்சியிலேயே  இதற்க்கு முன் என்ன நடந்திருக்கும் என்பதை வெகு தெளிவாக விளக்கியிருக்கிறார் மகேந்திரன்.
 இந்த ஒரு காட்சியே இப்படி என்றால், மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். இந்த கதை, எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்ற சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்டு திரைப்படமாக்கப்பட்டது. அசோக்குமாரின் கேமரா படத்தில் நன்றாக உழைத்திருக்கிறது. பி.லெனினின் படத்தொகுப்பு மிகவும் அருமை. முக்கியமாக இசை ஞானியின் இசையை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ்சில் இளையராஜா கொடுக்கும் BGM... சான்சே இல்ல. இறுதியாக படத்தின் இயக்குனர் திரு.மகேந்திரன். படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மிகவும் அருமை. 'இத்தன நாளும் நான் கெட்டவனா இருந்தேன். அப்பெல்லாம் நீங்க நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இப்போ, உங்களையும் நான் என்னை மாதிரி ஆக்கிட்டேன். நான் பண்ணதிலேயே பெரிய தப்பு இது தான்' போன்ற வசனங்கள், மிகவும் ஆழமான வார்த்தைகள். படத்தில் இறுதியில் ஆற்றை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளோடு படம் முடியும்போது நம் மனம் கனத்திருப்பதை மறுக்காமல் இருக்க முடியாது.

இந்த படத்தை தயாரித்தது ராதா பாலகிருஷ்ணன். படம் வெளியான ஆண்டு 1979. இந்த படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் கார் ஏறினாராம். அப்போது மகேந்திரன் 'என்னன்னே, படத்தை பத்தி ஒண்ணுமே சொல்லாம போறீங்க?' என்று கேட்க, அதற்க்கு எம்.ஜி.ஆர் 'மகேந்திரா, இன்னைக்குத் தான் நான் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில நிம்மதியா தூங்கப் போறேன்' என்று சொல்லிவிட்டு போனாராம். இயக்குனர் மணிரத்னத்திடம் உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் எது என்று கேட்டால், 'உதிரிப்பூக்கள்' என்று பதில் வரும். இந்த 'உதிரிப்பூக்கள்' படம் தான் பல 'நாளைய இயக்குனர்களுக்கு' பெரிய Inspiration. அதேபோல பல இளம் இயக்குனர்களுக்கு இன்றும் 'இயக்குனர்களின் துரோணாச்சாரியார்' இந்த மகேந்திரன் தான்.(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

 

என்றும் அன்புடன்


Post Comment

10 comments:

T.N.MURALIDHARAN சொன்னது…

கேள்விப்பட்டிருக்கிரேனே தவிர இந்தப் படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.உங்கள் விமர்சனம் மூலம் படத்தை பற்றி அறிந்து கொண்டேன். இப்படத்தின் பிரபல பாடலான "அழகிய கண்ணே" என்ற பாடல் மிகவும் அற்புதமான பாடல். நன்றி.

அபிமன்யு சொன்னது…

படம் ஒரு பொக்கிஷம்.தெளிவான அழகான விமர்சனம். கல்யாணம் ஆன பிறகு நண்பர்க்கு இப்போதுதான் பதிவு பக்கம் வர நேரம் கிடைத்திருக்கிறது போல. பகிர்வுக்கு நன்றி. :)

MuratuSingam சொன்னது…

நல்ல விமர்சனம். நிறைய விஷயங்கள் படத்தை பற்றி. படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு..... இது வரை பார்கவில்லை, இந்த விமர்சனத்தினால் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன்.

Kumaran சொன்னது…

இந்த படத்தை இன்னும் பார்த்ததில்லை நண்பரே..தங்களது விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.சந்தர்ப்பம் கிடைப்பின் கண்டிப்பாக பார்க்கிறேன்.மற்றப்படி விமர்சனம் மிகவும் அருமை, மிக்க நன்றி.

anand சொன்னது…

very nice... intha padatha partha piragu nan enna solanumnu nenachatha neenga soliteeinga...thanx.. continue panunga..

Ashokar சொன்னது…

naan paartha sila nalla padagkalil kurupitathakka oru cinema

Gobinath சொன்னது…

எனக்கும் பெரிதாக Classic படங்கள் பிடிப்பதில்லைதான். ஏனென்றால் உண்மையின் கொடூரமான பக்கம் அப்படியே வெளிக்காட்டப்பட்டிருக்கும். இந்தப்படமும் அந்த நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறது.

HOTLINKSIN.COM சொன்னது…

இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

Pia R. சொன்னது…

The song "Azhigiya kanne.." sung by Dr. S.Janaki is so great.

சரவணன் சொன்னது…

எல்லாம் சரிதான், ஆனால 'போடா போடா பொக்கை' பாடல் இந்தப் பட்த்துக்குத் தேவையற்றது. அபத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும். எதார்த்தம் அற்ற விஷயம் இந்தப் பாடல் மட்டுமே. தவிர்த்திருக்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக