வெள்ளி, மார்ச் 09, 2012

உகாண்டா to சென்னை...

கடந்த இரண்டு மாதமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை. அதற்க்கு நான் சொல்லும் ஒரே காரணம், 'என் கல்யாணம்' தான். திருமணம் முடிந்து உகாண்டா வந்த பிறகு இன்று பதிவு எழுதலாம், நாளை பதிவு எழுதலாம் என்று ப்ளான் போட்டேனே தவிர, பதிவு எதுவும் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. அது மட்டுமல்ல, எதை பற்றி
எழுதுவது என்ற சிந்தனை வேறு. அதனால் தான் உகாண்டாவிலிருந்து சென்னைக்கு கிளம்பியதில் ஆரம்பித்து, திரும்பி வந்தவரைக்கும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும் இந்த பதிவின் வரவேற்ப்பை பொறுத்து தான் என் அடுத்த பதிவை எழுதுவேன்.

எனக்கு திருமணம் முடிவானவுடன், அனைவரும் என்னிடம் கேட்ட முதல் கேள்வி 'எப்ப இந்தியாவிற்கு வர்ற?' என்பது தான். ஆனால் எனக்கு, யாருக்கும் தெரியாமல் இந்தியாவுக்கு வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரவேண்டும் என்று நினைத்தேன். அதனால் என் அண்ணனுக்கு மட்டும் (பெரியப்பா மகன்) நான் வரப்போகும் தேதியை தெரிவித்துவிட்டு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு இந்தியாவிற்கு கிளம்ப தயாரானேன். என் அண்ணனுக்கும் நான் சொன்ன 'சர்ப்ரைஸ் ப்ளான்' பிடித்திருக்கவே அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டார். என் அப்பா, அம்மா, தங்கைகள், உறவினர்கள், என் மனைவியாகப் போகிற என் காதலி, என் நெருங்கிய நண்பன் என்று யாருக்கும் சொல்லவில்லை என்பது தான் 'ஹைலைட்'. ஆனால் நான் ஊருக்கு கிளம்ப இருந்த சில நாட்களுக்கு முன்பு என் அப்பா என்னிடம் 'நீ எப்ப வர்றேன்னு எனக்கு மட்டும் சொல்லு, நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்' என்று ரொம்ப வேண்டிக் கேட்டுக்கொண்டதால் நான் இந்தியாவிற்கு எப்போது வருகிறேன் என்று அவரிடம் சொல்லி தொலைத்து விட்டேன்.
ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? என் உறவினர்களுக்கு போன் போட்டு 'வர்ற ஞாயற்றுக்கிழமை எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க. எல்லாருக்கும் நம்ம வீட்ல தான் சாப்பாடு. உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டிருக்கு' என்று சொல்லிவிட்டார். இதை கேள்விப்பட்டு அவருக்கு போன் போட்டு 'ஏம்பா?' என்று கேட்டால், 'நான் எதுவும் சொல்லலையே?' எல்லாரையும் சாப்பாட்டுக்கு மட்டும் தான் கூப்பிட்டேன். இதிலென்ன இருக்கு?' என்று என்னையே திருப்பி கேட்கிறார் மனிதர். 'நீங்க ஆணியே புடுங்க வேணாம்பா' என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். அப்பவாவது அவர் சும்மா இருந்தாரா? திரும்பவும் என் உறவினர்களுக்கு போன் போட்டு 'சன் டே யாரும் வரவேண்டாம். சர்ப்ரைஸ் எல்லாம் ஒன்னும் இல்ல' என்று சொல்லி நான் அன்று இந்தியாவிற்கு வரப்போவதை உறுதிப்படுத்தியே விட்டார் 'எங்க டாடி'. என்னத்த சொல்றது?

டிசம்பர் 31 2011, மதியம் 2 மணி. உகாண்டாவிலுள்ள என்டேபி விமான நிலையத்தில் Checking, Immigration எல்லாம் முடிந்து விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். கையில் 'ரஜினியின் பன்ச் தந்திரங்கள்' புத்தகம். புத்தகத்தை எவ்வளவு படித்தாலும் சலிப்பு தான் ஏற்பட்டது. ரஜினி பற்றிய புத்தகத்தில் லயிக்க முடியாத என் மனம், இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் அப்பா, அம்மா உட்பட அனைவரும் வழியனுப்பி என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அந்த நினைவுகள் வந்து போயின. அன்று என்னை வழியனுப்பிய அனைவரும் இன்று எப்படி இருப்பார்கள்? உருவம் மாறியிருக்குமா? உள்ளம் மாறாமல் இருக்குமா? மனசு இந்தியா போகும் ஆசையில் பரபரத்தது. 4 மணிக்கு விமானத்தில் ஏறி உட்கார்ந்த பிறகு தான் மனம் கொஞ்சம் அமைதியானது. சரியாக 4.20 க்கு Entebbe to Dubai Airport க்கு போகும் Emirates விமானத்தில் என் பயணம் துவங்கியது.
Entebbe to Dubai Airport பயணம் இருக்கிறதே, செம கடுப்பு. கிட்டத்தட்ட 8 மணி நேரம் ட்ராவல் செய்ய வேண்டும். இதற்க்கு நடுவில் எத்தியோப்பியாவில் ஒரு Pickup & Drop வேறு. Time pass செய்வதற்கு ரஜினி புத்தகத்தை படித்தால், அதில் எனக்கு பெரிதாக ஒன்றும் Interest வரவில்லை. சரி, தூங்கலாம் என்று பார்த்தால் தூக்கமும் வரவில்லை. விமானத்தின் ஜன்னலில் வேடிக்கை பார்க்கலாம் என்று பார்த்தால், மேகத்தை தவிர ஒன்றுமே தெரியவில்லை. 'எப்படா நாம துபாய் போவோம்?' என்றாகிவிட்டது என் நிலைமை. பிறகு ஒரு வழியாக துபாயை நெருங்கிக்கொண்டிருந்தது என் விமானம். அந்த சமயத்தில் தான் மணி சரியாக 12 அடித்து புதுவருடம் தொடங்கியிருந்தது. ஆம். பூமியிலிருந்து சராசரியாக 40,000 அடி உயரத்தில் புது வருடத்தை கொண்டாடியது எனக்கு ரொம்பவே புதுமையான அனுபவம். அதே சமயம், Flight Landing சமயத்தில் துபாயை ரொம்ப நெருக்கத்தில் பார்த்தேன். United Arab Emirates (Dubai) தன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ரொம்ப பிஸியாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரித்து, வாணவேடிக்கைகள் வெடித்து ரொம்ப அழகாக தெரிந்தது துபாய்.
சரியாக 12.20 க்கு விமானம் துபாயை அடைந்து விட்டது. விமான தளத்திலிருந்து விமான நிலையத்திற்கு பஸ்ஸில் சென்றேன். Airport உள்ளே சென்று, என் Flight Platform எங்கே என்று கண்டுபிடித்த பிறகு தான் நான் கொஞ்சம் Relax ஆனேன். என்னுடைய Connecting Flight வருவதற்கு 2 மணி நேரம் இருந்ததால், பொறுமையாக Duty free கடைகளில் Shopping செய்ய ஆரம்பித்தேன். பலவகையான Chocolates வாங்கினேன். பிறகு Johnnie Walker Scotch வகையறாவான Green Label ஒரு பாட்டிலும், Black Label ஒரு பாட்டிலும் வாங்கினேன். இது என் அப்பாவுக்காக. அவருக்கு பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்தாலே சந்தோஷப்படுவார், வெளிநாட்டு சரக்கு என்றால் சொல்லவா வேணும்? நமக்கு மட்டும் 555 மற்றும் Marlboro சிகரெட்களை வாங்கிக் கொண்டேன்.
நான் சென்னைக்கு போக வேண்டிய platform வந்த பிறகு தான் 'நாம ஊர நெருங்கிட்டோம்' என்று தோன்றியது. வந்த ஜனம் எல்லாமே தமிழ் பேசியதால் தான் அப்படி. சென்னைக்கான Flight வந்து அதில் ஏறிய பிறகும் ரொம்ப நேரமாக விமானத்தை எடுக்கவில்லை. 2.50 க்கு எடுக்க வேண்டிய Flight, 3.25 க்கு எடுத்தார்கள். ஒரு வேளை பைலட் கூட இந்தியர் தானோ? என்ற சந்தேகம் வந்தது. சரி, தூங்கலாம் என்று பார்த்தால் நம்மாட்கள் போட்ட சத்தத்தில் அதுவும் போய் விட்டது. பிறகு கொஞ்சம் கண்ணயர்ந்து உறங்கி எழுந்து மணி பார்த்தபோது காலை 7.20. பிறகு அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டும், டிவி பார்த்துக் கொண்டும் நேரத்தை செலவழித்தேன். சென்னை விமான நிலையத்தை விமானம் நெருங்கியபோது மழை பெய்து கொண்டிருந்தது. சரியாக 8.50 க்கு விமானம் தரையிறங்கியபோது பெய்து கொண்டிருந்த மழை மொத்தமாக நின்று விட்டது. சென்னை விமான நிலையத்தில் Immigration, Checking எல்லாம் முடிந்து வெளியே வந்த போது மணி காலை 9.50. 'நம்மள கூட்டிட்டு போறதுக்கு யாராச்சும் வந்திருக்காங்களா' என்று பார்த்தால், ஒருத்தரும் இல்லை. Rolling Suitcase தள்ளிக்கொண்டு வெளியே வந்து, அங்கு உள்ள ஒரு டீ கடையில் நின்று ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்தேன். ஒரு டீ ஒன்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள டெலிபோன் பூத்தில் இருந்து அண்ணனுக்கு போன் செய்தால், 'என்னடா ரொம்ப சீக்கிரமே வந்திட்ட? நாங்க கிண்டி தாண்டிட்டோம். வந்துட்டே இருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணு' என்றார். சரியாக ஒரு 10.20 மணிக்கு அண்ணனையும், அப்பாவையும் பார்த்த சந்தோஷத்தில் கட்டியனைத்த பிறகு காரில் ஏறிப் புறப்பட்டோம். காரில் ஏறிய பிறகு நான் செய்த முதல் போன், என் காதலிக்கு. 'வந்துட்டிங்களா? என்று சிரித்து, 'எனக்கு ஏன் சொல்லல? என்று கோபித்து, பிறகு எங்க இருக்கீங்க? எப்ப வீட்டுக்கு வருவிங்க? என்று விசாரித்து விட்டு போனை வைத்தாள்.

வீட்டுக்கு போகும் வழியில் என் காதலியை வண்டியில் பிக்கப் செய்து கொண்டு, வீட்டில் இறங்கும் நேரத்தில் என் அண்ணன் 'வண்டியிலேயே இருடா. நான் சொன்ன பிறகு இறங்கு' என்று சொல்லி அவர் காரில் இருந்து இறங்கி ஒரு பெரிய பார்சலை எடுத்தார். 'என்ன இது?' என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அது 2000 வாலா பட்டாசு என்று தெரிந்தது. 'அண்ணா, இது ரொம்ப ஓவரா தெரியல?' என்று நான் கேட்க, அவரோ 'நீ என் தம்பி டா. நீ பாரின்ல இருந்து வந்திருக்கெல்ல?' என்று 'பாச மழை பொழிந்தார். நானோ 'இந்த அழகு தெய்வத்தின் மகனா அன்று என்னை அலாரம் வைத்து அடித்தது? நினைத்துக் கொண்டேன். பட்டாசு வெடித்து நான் காரில் இருந்து இறங்க, வீட்டில் பால்கனியில் இருந்து அம்மாவும் தங்கையும் 'ஹாய்' என்று சொல்லி ஆர்பரித்தார்கள். ஆரத்தி எடுத்த பிறகு வீட்டுக்குள் சென்றவுடன் அம்மா என்னை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தது, தங்கை என்னை கை குலுக்கி வரவேற்றது, நண்பன் என்னை கட்டியணைத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது என்று அன்றைய காலை பொழுது மிக நன்றாகவே போனது. ஆனால் ஒன்று, நான் பிறந்து இத்தனை வருடங்களில் பல புத்தாண்டுகளை பார்த்திருந்தாலும், இந்த புத்தாண்டு எனக்கு Very Best Happy New Year தினம் தான்...


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

  1. நீண்ட பயணம்...உங்களுடன் பயணித்தது போல் இருந்தது...

    பதிலளிநீக்கு
  2. பயண்ங்கள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. 'நான் எதுவும் சொல்லலையே?' எல்லாரையும் சாப்பாட்டுக்கு மட்டும் தான் கூப்பிட்டேன். இதிலென்ன இருக்கு?' இந்த டாடிங்களே இப்பிடித்தான் பாஸ். பார்ட்டி எப்ப பாஸ் மாப்பிளையானதை சொல்லவேயில்லை!

    பதிலளிநீக்கு