செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நம் சிங்கார சென்னைக்கு வயது, 371 வருஷம்...


இந்த பதிவை நான் நேற்றே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் என் கணினி சற்று மக்கர் பண்ணி விட்டது. அதனால் தான் இன்று வெளியிடுகிறேன். எனக்கு சென்னையை பற்றி சில, பல அறிய தகவல்களோடு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். கடந்த ஞாயிறன்று விகடன்.காமில் இந்த கட்டுரையை திரு சி.சரவணன்
என்பவர் எழுதியிருந்தார். சென்னையை பற்றி மிக அழகான தகவல்களை தந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இந்த காப்பி & பேஸ்ட் பதிவு என் பதிவுலக நண்பர்களுக்காக...
தமிழகத்தின் தலைநகர் சென்னை, சரித்திரப் புகழ் வாய்ந்தது. அதன் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ம் தேதி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 'சென்னை தினம்' என்ற கொண்டாட்ட தினமாக மாறி இருக்கிறது.

ஒரு சாதாரண மீன்பிடி கிராமமாக தோன்றி இன்று இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை நகரின் வயது 371.

சென்னையின் ப்ளாஷ்பேக்:
1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதிதான் இப்போது சென்னை என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ்' உருவானது.

சென்னையில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறத் தொடங்கிய பின்னரே அது நகரமாக வளர ஆரம்பித்தது. இங்கு முதலில் குடியேறியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் 1552-ம் ஆண்டு சென்னையின் ஒரு பகுதியாகவும், கடற்கரை பகுதியாகவும் இருந்த சாந்தோமில் குடியேறி வணிகம் செய்து வந்தனர்.

தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் சென்னக்கேசவர் கோயில் இருந்தது. அந்த கோயிலைச் சுற்றி ஒரு குப்பம் இருந்தது. அதற்கு 'சென்ன கேசவப்புரம்' என்பது பெயர்.

1639 ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது.

சென்னப்பட்டினத்துக்கு தெற்கே உள்ள ஊர் 'மதராசு' என்று அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்று சேர்த்து 'மெட்ராஸ்' என்றும் தமிழர்கள் 'சென்னப்பட்டினம்' என்றும் அழைத்தனர்.

1997-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என்று மாற்றினார்.
சென்னையின் சிறப்புகள்:
பழைய சென்னப்பட்டினத்துக்கு அதிக பெருமைகள் இருக்கின்றன. இந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயம், முதல் மருத்துவமனை, முதல் பொழுதுபோக்கு மையம், முதல் நகராட்சி போன்றவை சென்னையில்தான் தோன்றின.

இன்று, சென்னை சாஃப்ட்வேர், உயிரி தொழில்நுட்பம், கார் உற்பத்தி, சுற்றுலா, கலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.

சுமார் 75 லட்சம் மக்கள் தொகையுடன் இந்தியாவின் 4 பெருநகரங்களில் முக்கிய பெருநகராக சென்னை இருக்கிறது.

மிகப் பெரிய மருத்துவமனைகள் நிறைந்து மருத்துவத் துறையின் தலைமையிடமாகவே சென்னை திகழ்கிறது. அப்பலோ, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், மியாட், ராமச்சந்திரா என பல புகழ் பெற்ற மருத்துவமனைகள் இங்கு இருக்கின்றன.

ஐ.டி. துறையில் பெங்களூருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மும்பைக்கு அடுத்து சினிமா தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் சென்னை இருக்கிறது.

அதே நேரத்தில், குடிநீர், வடிகால் வசதி, மின்வெட்டு, வாகன நெரிசல் போன்ற சிக்கல் நகரின் பெருமையை குறைக்கும் அம்சமாக இருக்கின்றன. உலகின் இரண்டாவது நீள அழகிய கடற்கரை இங்குள்ள மெரினாதான்.

அதிக குளிர், அதிக வெப்பம் இல்லாத நகரம் என்பதால் அதிகமானோர் இங்கேயே தங்கி விட விரும்புகிறார்கள். நாளுக்கு நாள் நகரின் மக்கள் தொகை அதிகரிக்க இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகம்:
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, சென்னை மாநகரம், மெட்ராஸ் பிரசிடென்சி என்கிற நிர்வாகத்தின் கீழ் இருந்தது. 1839-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தங்களுக்கு உயர்கல்வி கற்க சிறந்த அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்காக, 70,000 பேர் கையெழுத்துப் போட்டு ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஒரிசா, கேரளா, பெங்களூரு, மங்களூர், ஆந்திரா வரையில் இந்த இதன் எல்லை இருந்தது.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சில.
சென்னையின் சிறப்புமிக்க நூலகங்கள்:
சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம், தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதன் அடிக்கல் 1890-ம் ஆண்டு நாட்டப்பட்டு, 1896&ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. 3.75 லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 180 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
சென்னையின் மக்கள் தொகை:
சென்னையின் மக்கள் தொகை சுமார் 75 லட்சம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன.
சென்னையின் ஆடுகளம்:
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது.



நன்றி: சி.சரவணன், விகடன்.காம்




(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).




என்றும் அன்புடன



2 கருத்துகள்:

  1. சென்னை பற்றிய தெரியாத பல விசயங்களை பகிர்ந்துள்ளீர்கள் நன்று..

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் தல... நேற்றைக்கே உங்க பதிவை எதிர்பார்த்து ஏமாந்தேன்... இது புக்மார்க் செய்து வைக்கவேண்டிய இடுகை... நன்றி...

    பதிலளிநீக்கு