2009. இரவு ஒரு ஒன்பது மணிக்கு மேல் இருக்கும். ,மார்க்கெட்டிங் வேலை காரணமாக அம்பத்தூரில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு ஒருவரை வேலை நிமித்தமாக பார்க்கப் போயிருந்தேன். பார்த்துவிட்டு திரும்பி வெளியே வந்து என் வண்டியை ஸ்டார்ட் செய்தபோது, அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி என்னை கடந்து போய் சரியாக மருத்துவமனையின் வாசலுக்கு அருகே நின்றது. அந்த வண்டியிலிருந்து ஸ்டேச்சரில் ஒரு சிறுவனை இறக்குகிறார்கள். கூடவே அவனின் அம்மாவும் இறங்குகிறார். அந்த அம்மாவிற்கு நடுத்தர வயதிருக்கும். ஸ்டேச்சரில் படுத்திருந்த பையனுக்கு ஒரு பன்னிரண்டு வயதிருக்கும். உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் உறங்குவது போலவே படுத்திருந்தான் அவன். வண்டியின் முன்னாலிருந்து ஒரு நடுத்தர வயது ஆணும், இன்னொரு சிறுவனும் இறங்கினார்கள். அந்த மனிதர் சிறுவனின் அப்பாவோ, உறவினரோ அல்லது உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரரோ தெரியவில்லை.
அவருடன் வந்த சிறுவன், கண்டிப்பாக ஸ்டேச்சரில் படுத்திருந்த சிறுவனுக்கு சகோதரனாய் இருக்கக் கூடும். முகஜாடை ஒத்துப்போனது. ஒரு மருத்துவமனை நோயாளிக்குத் தேவையான அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய பையை அந்த அம்மா தன் கையோடு கொண்டு வந்திருந்தார். ஒரு சின்ன பரபரப்பு தொற்றிக்கொண்டது அந்த மருத்துவமனை வாசலில். வாட்பாய்கள் அவசரமாக ஸ்டெச்சரை நோக்கி வருவதும், மருத்துவமனைக்குள் போவதுமாக இருந்தார்கள். ஒரு டாக்டர் வெளியே வந்து அந்த சிறுவனை செக் செய்து விட்டு, அவனின் அம்மாவிடம் எதோ கேட்டுக்கொண்டிருக்கிறார். ஹைவே வண்டிகளின் சத்தங்கள் அவர்கள் பேச்சை மொத்தமாக Mute செய்தன. சில நொடிகளோ, சில நிமிடங்களோ தெரியவில்லை. அந்த டாக்டர் எதையோ சொன்னதை கேட்டு, அந்த அம்மா கதறி அழுகிறாள், இறந்து கிடந்த அந்த மகனை அணைத்தபடி. அதற்க்கு மேல் நிற்க எனக்கு மனமில்லை. வண்டியை உதைத்தேன். என் வண்டியை ஸ்டார்ட் செய்தது நானாக இருந்தாலும், என்னை பத்திரமாக வீடு வரை கொண்டு வந்து சேர்த்தது, ஒரு மரணம் தான்.
The hour of departure has arrived and we go our ways; I to die, and you to live. Which is better? Only God knows - சாக்ரெடீஸ் சொன்னது. மரணம் என்பது என்ன? வரமா? சாபமா? முடிவா? இல்லை ஏதாவது ஒன்றின் ஆரம்பமா? பதிலில்லாத இந்த கேள்விக்கு எப்போதுமே மதிப்பில்லாமல் இருந்ததில்லை. கல்யாண வீட்டிற்க்கு போகாமலும் கூட இருக்கலாம். ஆனால் இழவு வீட்டிற்கு கண்டிப்பாக போகவேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். காரணம், இது உன் வீட்டிலும் என்றாவது ஒரு நாள் நடக்கக் கூடும். அப்போது உன்னை தூக்கி சுமக்க சிலர் வேண்டாமா என்பதை தான் சூசகமாக சொல்லுவார்கள். இரண்டு வயது குழந்தை இறக்கிறான், பத்து வயது பாலகன் இறக்கிறான். எழுபது வயது முதியவர் இறக்கிறார், அதே சமயம் பதினாறு வயது பருவப் பெண்ணும் இறக்கிறாள். மரணத்திற்கு பேதமில்லை. அது வரும் வழிகளுக்கும் விதிவிலக்கில்லை.
மனித வாழ்வு நிலையற்றது. கண் மூடி உறங்கி நாம் விழித்தெழும்போது, நம் வாழ்நாளின் ஒரு நாள் கடந்து சென்றிருக்கும். விட்டதை பிடிப்பது சூதாட்டத்தில் தான் முடியுமே தவிர, கடந்து சென்ற மணித்துளிகளில் இல்லை. இறப்புக்குப் பின் என்ன நடக்கும் என்பதை பற்றி விஞ்ஞானமும், அஞ்ஞானமும் போட்டி போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. பூமியில் நாகரீகம் தொடங்கி இன்றுவரைக்கும் தேடியும் இந்த மரணத்திற்கான பதில் கிடைக்கவில்லை. காரணம், இறந்தவன் உயிர்தெழுந்து சொன்னால் நாம் நம்புவதில்லை, உயிரோடு இருப்பவன் சொன்னால் 'அனுமானித்த பதில் என்று புறம்தள்ள தவறியதும் இல்லை. நமக்கு ஆர்வமும் உண்டு, அவசரமும் உண்டு. நிதானம் மட்டும் இல்லை என்பதே உண்மை.
இறந்தவர் இறைவனுக்கு சமம். அது குப்பனாக இருந்தாலும் சரி, சுப்பனாக இறந்தாலும் சரி. ஆனால் இருக்கும்போது நாம் அனைவரும் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறோம். நம்முடைய வாழ்நாள் இவ்வளவு தான் என்று நாம் தெரிந்த பிறகு நாம் என்ன செய்வோம்? மீதி உள்ள வாழ்நாட்களை நிம்மதியாக வாழ்ந்திடுவோமா? இல்லையே. ஒன்று நாம் விஞ்ஞானத்தையோ இல்லை ஆன்மீகத்தையோ நம்பி நம் வாழ்நாளை பெருக்கிக்கொள்ள நினைப்போம். அல்லது சாகும் நாளுக்காக வாழும் நாளில் அழுதுகொண்டே இருப்போம். அதனால் தான் மரணம் நம்மை திடீரென்று எதிர்பாராமல் நம்மை சந்தித்து, அதிர்ச்சிக்குள்ளாக் கி , நம்மை கையோடு அழைத்து செல்கிறது. பூமியில் பிறந்து, வளர்ந்து, ஆண்டு, அனுபவித்து கிழப்பருவமெய்தி இறக்கும் மனிதன் உட்பட எல்லோரும் ஏதாவது ஒரு மனக்குறையோடு தான் இறக்கிறான். அதனால் எந்த ஒரு மனிதனும் நிறைவான மரணத்தை அடைந்ததேயில்லை என்பதே என் கருத்து.
எந்த ஒரு புதிருக்கும் ஒரு விடை உண்டு. அதே போல எந்த ஒரு பிறப்புக்கும் இறப்புண்டு. 'அடுத்த ஜென்மத்தில் நீ என்னவாக பிறக்க ஆசைப்படுகிறாய்?' என்று யாராவது நம்மை கேட்டால், உடனே நாம் 'அவராக பிறக்க வேண்டும், இவளாக பிறக்கவேண்டும், ஏன், நாமாகவே பிறக்க வேண்டும் என்று நம் ஆசையை சொல்வோம். காரணம், இறப்புக்கு பிறகு நமக்கு ஒரு பிறப்பு வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு தான் அது. ஆனால், வாழக்கூடாத வாழ்க்கையை வாழ்ந்த யாரும் இந்த ஜென்மம் கூட வேண்டாம் என்று தான் மரணத்தை நோக்கி அவர்களாகவே ஏதாவது ஒரு வகையில் சென்று சேர்கிறார்கள். பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன், 'உறக்கத்திலேயே உயிர் பிரியவேண்டுமென்று'. காரணம், மனிதனுக்கு வலியின் மீது தான் பயம் அதிகம். வலியுடன் மரணத்தை ஒப்பிடும்போது, மரணமே மேல் என்பதே 'மரண' உண்மை...
Thanks and Regards,
அருமையான பதிவு. ஆரம்பம் முதல் சிறிதும் தொய்வில்லாமல் மிக அழகாக எழுதியிள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு