கற்க கற்க கள்ளும் கற்க...

செவ்வாய், ஏப்ரல் 05, 2016

குடியும் கூத்துக்களும்...


எனக்கு குடிக்கிறது பிடிக்காது. 'சரக்கடிக்கனும்னா செலவு பண்ணனும், குடிச்சா கஷ்டப்பட்டு கசப்பான டேஸ்ட் உள்ள சரக்கை முழுங்கனும், ஜீரணம் ஆகலேன்னா வாந்தி எடுக்கணும், போதையேறும், நம்ம கண்ணு முன்னாடி நடக்குற ஒவ்வொன்னும் ஏதோ அவுட் ஆப் போகஸ்ல நடக்குறமாதிரி தெரியும், நம்ம ஒடம்பு நம்ம கண்ட்ரோல்ல இருக்காது. முக்கியமா பொழுது விடிஞ்சி கண்ணாடியில நம்ம மொகத்த பார்த்தா, 'இது நம்ம மூஞ்சா, இல்ல நேத்து ராத்திரி போதையிலே பக்கத்து டேபிள்ல குடிச்சிக்கிட்டு இருந்தவன் மொகத்த மாத்தி எடுத்துட்டு வந்துட்டோமா' அப்படிண்ணு தோணுற அளவுக்கு நமக்கே ஓவர் நைட்ல அடையாளம் தெரியாம போகும். இந்த மாதிரி அறிவியல்(?) சார்ந்த காரணங்கள் இருக்குறதாலத்தான் எனக்கு குடி பழக்கமே இல்லாம போச்சி. ஆனா எனக்கு தெரிஞ்ச நெறைய பேரு சரக்கடிச்சி பண்ண அலும்பல்கள் இருக்கே, சொல்ல ஆரம்பிச்சா போய்கிட்டே இருக்கும். அப்படி சரக்கடிச்சி அவங்க ஆடுன சல்சா நடனங்களை தான் என் பதிவின் மூலமா அரங்கேத்தப் போறேன்.

எங்க சொந்தக்காரரு ஒருத்தரு, கொஞ்சம் தூரத்து சொந்தம்ன்னு வச்சிக்கோங்களேன். நான் இவரை சின்ன வயசுல இருந்தே கவனிச்சிகிட்டே தான் வர்றேன். இவரோட சரக்கு லெவல் வெறும் ஒரு குவாட்டர் மட்டும் தான். ஆனா அத குடிச்சிட்டு இவரு போடுற ஆட்டம் இருக்கு பாருங்க, அத கண்டுபுடிச்ச விஜய் மல்லையாவே இத பார்த்தா செம கடுப்பாகிடுவாரு (ஆமா, McDowell's No.1 பிராந்தியை கண்டுபுடிச்சது விஜய் மல்லையாவா, இல்ல விட்டல் மல்லையாவா? ஐயோ சரக்கடிக்காத நானே குழம்ப ஆரம்பிச்சிட்டேனே!). பொல்லாதவன் படத்துல நம்ம தனுஷ் வெளியே போதையில ஆடிகிட்டே வந்து, சரியா  வீட்டுக்குள்ள வரும்போது மட்டும் ஸ்டெடியா நடப்பாரே, அதே மாதிரி தான் இவரும். வெளியில 'அவ்வ அவ்வ' செந்தில் மாதிரி போதையில டான்ஸ் மூமெண்ட் போட்டுகிட்டே ரோட்டுல நடந்து வர்றது, சரியா வீடு கேட் கிட்ட வரும்போது மட்டும் திருவிளையாடல் சிவாஜி கணக்கா ஸ்டைலா நடந்து வீட்டுக்கு வர்றது. என்ன காரணம்னா வீட்டு ஓனருக்கு தெரியாம மெயின்டெயின் பன்றாராமா.

ஒரு வேளை வீட்டு ஒனரு வீட்டை காலி பண்ண சொன்னா, அப்போ தான் அவருக்குள்ள இருக்குற 'ரூல்ஸ்' ராமானுஜம் வெளிய வருவாரு. 'Rent Control Act னா என்னன்னு தெரியுமா? நான் குடுக்குற வாடகைக்கு ரசீது குடுத்திருக்கியா? உன் பணத்துக்கும் என் பணத்துக்கும் ஜோடி போட்டுப்போமா ஜோடி?' அப்படின்னு வீட்டு ஓனரையே கிறுக்கு புடிக்க வச்சிருவாரு. வீட்டு ஒனர ஓரண்டைக்கு இழுத்து, சண்டைய போட்டு, 'நாங்கல்லாம் யாரு தெரியும்ல?' அப்படி ஒரு ரகளைய ராத்திரியில பண்ணி, அக்கம்பக்கத்துக்காரங்களை தூங்கவிடாம பண்றது. ஏன் இப்படின்னு கேட்டா, 'இதென்ன பெருமையா? கடமை. ஒவ்வொரு 'குடி'மகனோட கடமை' அப்படின்னு தேவர் மகன் சிவாஜி மாதிரி சீன் போடுறது. ஆனா இந்த மாதிரி பெரிய லெவல் இம்சையெல்லாம் எப்பவாவது நடக்குறது தான். அடிக்கடி இவர் பண்ற இம்சைல மாட்டுறது அவரோட மனைவியும், பசங்களும் தான்.
அவருக்கு கல்யாணம் ஆன புதுசுல அவங்க மனைவி தெரியாத்தனமா ஒரு விஷயத்த சொல்லி இப்போ வரைக்கும் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. பெருசா ஒண்ணுமில்ல, அவங்க தாத்தா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அதைத்தான் சொல்லியிருக்காங்க. நம்மாளு சும்மாவே ஆடுவாரு, இதுல கால்ல சலங்கைய கட்டிட்டா கேக்கவா வேணும்? 'ஆமா, உங்க தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகின்னு சொன்னியே? எந்த போராட்டத்துல கலந்துகிட்டாரு? காந்தியோட உப்பு சத்திய க்ரகமா? நேதாஜியோட INA வா? வ.வு.சியோட சுதேசி இயக்கமா?' இப்படி பல கேள்விகளை கேட்டு கடுப்பெத்துவாரு. பாவம், அவங்களுக்கு தெரியாது போல. அவங்க திரும்பவும் 'அவரு ஒரு சுதந்திரப்போரட்டத் தியாகி' அப்படின்னு 'வரவு நல்ல உறவு' விசு மாதிரி சொல்ல, அவரும் திரும்ப 'இந்த பத்துமடை பட்டாபிராமன் யாரு?'ன்னு பூர்ணம் விஸ்வநாதன் ரேஞ்சுல கேள்வியை கேட்டு அந்தம்மாவை இம்சை பண்ணுவாரு. அவங்களும் எவ்வளவு நாள் தான் நல்லவங்களாவே நடிக்கிறது? அதே கேள்விய இப்ப அவரு கேட்டாருன்னு வையுங்க, அவங்க மனைவி அதுக்கு 'என்ன, சும்மா சும்மா அதே கேள்விய கேட்டுகிட்டு இருக்க? தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க' அப்படின்னு கேப்டன் மாதிரி ரிப்ளே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா ஒண்ணு, இந்த 'சுதந்திர போராட்ட' பஞ்சாயத்து ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருந்தது மட்டும் உண்மை.

சரக்கடிச்சாத்தான் சில விஷயம் எல்லாம் ஞாபகத்துக்கு வரும் போல. இவருக்கு அப்படி ஞாபகம் வர்ற விஷயம், சுத்தம். இவருக்கு போதையில தான் வீட்டை பெருக்கல, பாத்திரத்தை கழுவுல, அலமாரியில கிளீன் பண்ணல அப்படிங்கறதே கண்ணுக்குத் தெரியும். உடனே நானே சுத்தம் பண்றேன்னு களத்தல ஏறங்கிடுவாரு. சுத்தம் பண்றது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா அதை ராத்திரி பதினொன்றரை மணிக்கு பண்றது தான் கொடுமையிலும் கொடுமை. வீடு கிளீன் பண்றது மட்டுமில்ல, 'காது' கிளீன் கூட பண்ணுவாரு. இந்த காது கிளீனிங் விஷயத்துல அவங்க மனைவி, பையன், பொண்ணு, பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு, அவங்க வீட்டு நாய் உட்பட பல பேர் இதுல பாதிக்கப்பட்டிருக்காங்க. இப்போ பரவாயில்ல. முன்ன மாதிரி இல்ல. ஆனா இந்த 'வீட்டு கிளீன் இந்தியா' அலப்பறை மட்டும் இப்போ வரைக்கும் தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கு.

இவரு மாதிரியே என் மச்சானும் சரக்கடிச்சா ஒரு வேலைய ராத்திரியில பண்ணுவான். அவங்க வீட்டுல எலி தொல்லை ஜாஸ்தி. அதனால சரக்கடிச்சா மட்டும், மச்சான் எலி வேட்டைக்கு கெளம்பிடுவான். குடும்பமே தூங்குற சமயமா பார்த்து, 'இங்க தான் இருக்கியா? நான் உன்னை விட மாட்டேன். இன்னைக்கு ராத்திரி தாண்டுவ நீ? என்ன மீறி எப்படி தப்பிக்கிறேன்னு பாக்குறேன்' அப்படின்னு எலி கிட்ட பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பான். அந்த எலி தட்டு முட்டு சாமான்களுக்குள்ள புகுந்து ஒளிஞ்சிகிட்டா, 'அந்த பொட்டிய தூக்கு, அந்த அண்டாவை தூக்கு, அந்த குண்டானை தூக்கு' அப்படின்னு வீட்டுல இருக்குறவங்களுக்கு வேலை குடுத்து இவரு வேட்டையாடிகிட்டிருப்பாரு. அதனால பல சமயங்கள்ல அவங்க அக்கா, தங்கச்சிகிட்ட தர்ம அடி வாங்கினப் பிறகு தான் தூங்கவே போவான். அதுமட்டுமில்ல, முன்னயெல்லாம் என்னை பார்த்தா 'வாங்க, போங்க'ன்னு மட்டும் பேசுறவன், சரக்கடிச்சா மட்டும் 'ஹலோ மாமா' அப்படின்னு முறை வச்சி பேசுவான். இப்போ பரவாயில்ல. எல்லா நேரத்திலேயும் 'மாமா'ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டான். ஆனா எலி தேடும் படலம் மட்டும் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.
ஒரு தடவை எங்க வீட்டுல எல்லாரும் திருப்பதி போயிருந்தாங்க. அடியேன் மட்டும் தான் வீட்ல இருந்தேன். துணைக்கு என் நண்பன் ஒருத்தனை வீட்ல என்னோட தங்கிக்க வரச்சொன்னேன். அவனும் வந்தான், சரக்கோட. சரி, குடிச்சிட்டு சைலண்ட்டா தூங்கிடுவான்னு விட்டுட்டேன். ரெண்டு ரவுண்டு சரக்கு உள்ள போனதும் அவன் சொன்னான், 'மச்சான், நான் குளிக்க போறேன்' அப்படின்னு. ராத்திரி பதினோரு மணிக்கு இந்த மூதேவி குளிக்கனும்னு சொல்லுதே, ஏன் அப்படின்னு யோசிச்சி, 'ஏன்டா, காலைல குளிக்கலையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அவன் 'இல்ல மச்சான், லேட்டா எந்திரிச்சேன். அதனால குளிக்கல. இப்போ போய் குளிக்கிறேன்' அப்படின்னு சொன்னான். சரி நாயே, ஒழிஞ்சி போ. என்னை இம்சை பண்ணாமல் இருந்தால் சரி' அப்படின்னு விட்டுட்டேன். எங்க வீட்டு பாத்ரூமுக்கு போகணும்னா சமையல்கட்டை தாண்டித்தான் போகணும். இவனும் போனான். போய் ரொம்ப நேரம் ஆச்சி. போனவனை காணோம். என்ன ஆனான் அப்படின்னு டவுட்டு பட்டு நானும் அவனை பார்க்க போனேன்.

நான்: இங்க என்னடா பண்ற?

நண்பன்: குளிச்சிக்கிட்டு இருக்கேன்.

நான்: சோப்பு, ஷாம்பு இல்லாம குளிக்கிறியே, பரவாயில்லையா?

நண்பன்: இட்ஸ் ஓகே. ஆனா பாத்ரூம் தான் ரொம்ப சின்னதா இருக்கு.

நான்: ஏன் நாயே இருக்காது, நீ குளிச்சிக்கிட்டு இருக்குறது எங்க வீட்டு சமையற்கட்டு வாஷ்பேசின்ல டா அறிவு கெட்ட முண்டம். மொதல்ல வாஷ்பெசின்ல இருந்து கால எடுடா. உடைஞ்சி தொலையப்போகுது. அரை போதை நாயி, குடிச்சது குவாட்டர். இதுல சலம்பல் வேற.

இந்த ஒருத்தன் தான் இப்படின்னா, எனக்கு நண்பர்களா இருக்குற ஒவ்வொருத்தரும் சரக்கடிச்சி சலம்புறதுல ஒவ்வொரு ரகம். என் நண்பன் ஒருத்தன் ஒரு பெண்ணை லவ் பண்ணிகிட்டிருந்தான். என்ன காரணமோ தெரியல, அந்த பொண்ணு அவனை லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. பையன் ரொம்ப சோகமா எங்க வீட்ல உக்காந்துகிட்டிருந்தான். அப்போன்னு பார்த்து எங்க அப்பா, யாரோ ஒருத்தர் குடுத்த ஒயின் பாட்டில ஒப்பன் பண்ற குஷியில இருந்தாரு. என் நண்பனுக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. அதனால எங்க அப்பாவும் அவன் கிட்ட 'காதல் தோல்வியா? அப்ப ஒயின் குடிக்கிறியா?' அப்படின்னு சும்மா விளையாட்டுக்கு கேட்டு அவனை வெறுப்பேத்த, அவன் என்ன நினைச்சான்னே தெரியல, சடார்ன்னு எங்க அப்பா கையிலிருந்த ஒயின் பாட்டிலை புடுங்கி குடிக்க ஆரம்பிச்சிட்டான். எங்க அப்பா 'ஐயோ, என் ஒயின் பாட்டில்'ன்னு கதற, ஒயின் குடிச்ச அவன் என்னமோ நாலு புல் பாட்டில் சரக்கை ராவா குடிச்சமாதிரி புலம்ப ஆரம்பிச்சிட்டான். 'மச்சான், என்னை புடிக்கலேன்னு சொல்லிட்டாடா, தங்கச்சி, என்னை புடிக்கலேன்னு சொல்லிட்டா மா', இப்படி எங்க எல்லார்கிட்டேயும் அழ ஆரம்பிச்சிட்டான். அட எங்ககிட்ட சொல்லி அழுதா கூட பரவாயில்ல. வீட்டுக்கு தண்ணி கேன் போட வந்த மளிகைக்கடை அண்ணாச்ச்சிகிட்ட எல்லாம் சொல்லி அழுதது தான் செம காமெடி.
இவன் குடிச்சிட்டு பண்ண கலாட்டாகளைப் பத்தி கேள்விப்பட்ட இன்னொரு நண்பன் (அதாங்க, வாஷ்பேசினை பாத்ரூம்ன்னு நெனச்சவன்) அவனுக்கு அட்வைஸ் பண்ண வந்தான் (யாருக்கு யாரு அட்வைஸ் பண்றாங்க பாருங்க). ஆனா அன்னைக்கும் நம்ம காதல் தோல்வி நண்பன் யாருக்கும் தெரியாம எங்கேயோ போய் சரக்கடிச்சிட்டு வந்துட்டான். இவனுக்கு அட்வைஸ் பண்ண வந்தவன் இவன் குடிச்சிருந்ததை தெரிஞ்சி ஷாக்காகி அவன் கிட்ட 'குடிச்சிருக்கியா?' அப்படின்னு கேக்க, அவனும் 'ஆமாம்'ன்னு சொன்னான். உடனே வந்தவன், குடிச்சிருந்தவனை 'பளார்'ன்னு அவன் கன்னத்துல அறை விட்டான். பதிலுக்கு அவனும் திரும்பி அறைஞ்சிருந்தா கூட பரவாயில்ல. அடுத்து அவன் பண்ணினது தான் உச்ச பட்ச காமெடி. அடிச்சவன் கிட்ட தன்னோட  இன்னொரு கன்னத்தை காட்டி 'மச்சான், இங்க அடி மச்சான்' அப்படின்னு அவன் சொல்ல அடிச்சவனுக்கும் சிரிப்பு, வேடிக்கை பாத்துகிட்டு இருந்த எனக்கும் பயங்கர சிரிப்பு. தேவ தூதன் இயேசு பிரான் சொன்னதை யாரெல்லாம், எதுக்காகவேல்லாம் யூஸ் பண்றாங்க பாருங்க.

நான் வெளிநாட்டு வேலைக்காக உகாண்டால தங்கியிருந்த நாட்கள்ல என்னோட இன்னொரு நண்பரும் தங்கியிருந்தாரு. நான் பார்த்த மத்த குடிகாரங்க எல்லாம் 'G(C)lass குடிகாரங்கன்னா இவர் மாஸ் குடிகாரரு. இவரு காலைல சரக்கடிக்க ஆரம்பிச்சாருன்னா, ராத்திரி ரெண்டு மணிவரைக்கும் சரக்கு ஓடும். அடுத்த நாள் காலையில பாக்குற யாரும் 'இவரா நேத்து ராத்திரி புல் சரக்கடிச்சிட்டு தூங்க விடாம பண்ணது' அப்படின்னு நம்ப முடியாம போய்டுவாங்க. 'மிடில் கிளாஸ் மாதவன்' வடிவேலு மாதிரி சாந்தமா இருக்குற மனிதர், சரக்கை போட்டுட்டா சும்மா சிலம்பாட்டம் தான். இவரு சரக்கடிச்சி, சலம்பறதை பார்த்து எங்க முதலாளியே மெரண்டு ஓடியிருக்காரு. இவன் சரக்கடிச்சிட்டு ராத்திரியில தூங்கறதுக்காக கட்டில்ல படுத்தாலும், காலையில எந்திரிக்கும்போது தரையிலிருந்து தான் எந்திரிப்பான். அதே போல இவன் சரக்கடிச்சிருக்கான் அப்படிங்கிற விஷயம் எங்க நண்பர்கள் வட்டத்துக்கு தெரிஞ்சாலே பல பேர் தெறிச்சி ஓடுவாங்க. அவ்வளவு அட்ராசிட்டி பண்ணியிருக்கு இந்த பயபுள்ள.

So, இதனால் நான் சொல்ல வந்த கருத்து யாதெனில்:
'குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' அப்படிங்கறது எல்லாம் அரசாங்காம் சொல்றது, அதை நான் மறுக்கல. ஆனா சரக்கடிச்ச பிறகு நீங்க போதையில பண்ற ஒவ்வொரு விஷயமும் பின்னாள்ல கேலிக்குரியதா ஆகிடும். தெளிவா இருக்கும்போது, நம்ம 'தல' மாதிரி கெத்தா இருக்குற மனிதர், சரக்கடிச்ச பிறகு 'மயில்சாமி' ரேஞ்சுக்கு சலம்புனா நல்லாவா இருக்கும்? நீங்களே யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க...Thanks and Regards

Post Comment

2 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக