வெள்ளி, டிசம்பர் 25, 2020

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...
முன்பு போல பதிவுகள் நான் அதிகம் எழுதுவதில்லை. அதிலும் புத்தகங்களை பற்றிய பதிவெழுதி 3 வருடங்களுக்கு  மேல் ஆகிறது. சமீபத்தில் சில குறிப்பிடத்தக்க சுஜாதாவின் புத்தகங்களும் வாசிக்க கிடைத்தன. அதோடு சேர்த்து இன்னும் சில புத்தகங்களை வாசித்தேன். ஆனால் உடனுக்குடனே பதிவு எழுத நேரமில்லை. இப்போது கூட நானாக எதையும் எழுதவில்லை. www.goodreads.com இல் சில நண்பர்கள் எழுதிய பின்னூட்டங்களை தான் கொஞ்சம் மாற்றி பதிவேற்றி இருக்கிறேன். எதற்கு இந்த 'அட்லீத்தனம்' என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் நான் சொல்ல வந்த கருத்து, சில புத்தக வாசிப்பாளர்களின் கருத்தோடு ஒத்து போவதால் கொஞ்சம் காப்பி பேஸ்ட் செய்து கொண்டேன், ('வேலைக்கு வேலையும் ஆச்சி, அலமாரியும் வெள்ளையாச்சி' என்பது போல).

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா:
பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
இந்த கதை, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. 'ஆனந்த தாண்டவம்' என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக இப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு Typical and Triangle Love ஸ்டோரி by சுஜாதா என்று தான் சொல்ல வேண்டும். அதே போல சுஜாதாவின் அமெரிக்க மோகம் இதிலும் கொஞ்சம் அதிகமாகவே தென்படுகிறது. ஆனால் காதல் கதை, துள்ளலான நடை என நம்மை மொத்தமாக ஈர்க்கிறார் சுஜாதா.

பேசும் பொம்மைகள் - சுஜாதா:
பேசும் பொம்மைகள் - சுஜாதா
1991 ல் எழுதப்பட்ட நாவலை 29 வருடம் கழித்து படிக்கிறேன், ஆனாலும் சுவாரஸ்யத்துக்கும், அறிவியல் தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எதிர்பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத மர்மங்கள், திருப்பங்கள். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என்ன நடக்கும்? என்ன செய்வார்கள்? என்று எதிர்பார்ப்பை தூண்டிவிடும். எதிர்பார்த்தபடியே, ஒரு 140 பக்கங்கள் தாண்டிய பிறகு கணேஷ் மற்றும் வசந்தின் என்ட்ரி மகிழ்ச்சித் தந்தது. இந்த இரண்டு வக்கீல்கள் வந்தாலே இன்னும் விறுவிறுப்பாக செல்லும்.  

கடந்த செப்டம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ELON MUSK அவர்கள் மனித மூலையில் ஒரு சிப் பதித்து அதை செயற்கை நுண்ணறிவு கொண்டு கட்டுப்படுத்தும் அறிவியல் பற்றி ஒரு கருத்தரங்கில் பேசினார். ஆனால், சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னரே சுஜாதா இந்த புத்தகத்தில் downloading என்ற முறைப்படி மனித மூளையில் ஒரு சிப் பதித்து மனித மூளையை ஒரு பிரதி எடுத்து இயந்திரத்தில் கொடுத்து ஒரு மனிதனை மரணம் இல்லாதவனாக மாற்றும் நிகழ் கால பிரம்மாக்கள் பற்றின கதை எழுதியுள்ளார். ஒருவர் மூளையில் இருக்கும் தகவலை பிரதி எடுப்பது, இறந்த ஒருவரின் மூளையில் இருக்கும் தகவலை இன்னொருவர் மூளைக்கு மாற்றும் அறிவியல் என சுஜாதா தனது வழக்கமான அறிவியல் மூளையை த்ரில்லர் கதை களமாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு புத்தகத்திலும் புதிய தகவல்களை எழுதி வியக்க வைக்கிறார் சுஜாதா. என் கரன்ட் இல்லாத 2 நாட்களை நல்ல புத்தகத்துடன் கடந்து இருக்கிறேன். வழக்கமாக சுஜாதா நாவலுக்கு கூறும் அதே வரி, சுமார் 30 வருடங்களுக்கு முன் இப்படி சிந்தித்த அந்த மூளைக்கு ஒரு சபாஷ்.

14 நாட்கள் - சுஜாதா:
14 நாட்கள் - சுஜாதா
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார், கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான். இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் சிக்கிக்கொள்ளும் அவன் கதி என்னவாகிறது? இந்திய விமானப் படையின் டெக்னிக்கல் சமாசாரங்களைத் துல்லியமாக விவரிக்கும் இக்கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல. அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம். இது குமுதம் இதழில் தொடராக வந்தது. திரு. சுஜாதாவின் எழுத்து மேஜிக் நம்மை புத்தகத்தை கீழே வைக்க முடியாதபடி கட்டிப் போட்டு விடும். அதை இதிலும் நிகழ்த்தி இருக்கிறார். சுவாரஸ்யத்திற்கு ஒரு குறையும் இல்லை.


10 செகண்ட் முத்தம் - சுஜாதா:
10 செகண்ட் முத்தம் - சுஜாதா
எனக்கு ரொம்ப வருஷங்களாவே 'Favourite Author'ஆக இருப்பவர் சுஜாதா. ஆனாலும் இந்த புத்தகம் படிக்க எனக்கு பெரிதாக விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. 'சரி, படிச்சி தான் பார்ப்போமே' என்று கொஞ்சம் யோசனையோடு தான் இதை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவர், வழக்கம் போல தன் அக்மார்க் ரேஞ்ச் என்னன்னு காட்டிப் பின்னி பெடல் எடுத்திருக்கார். கொஞ்சம் எமோஷனல், கொஞ்சம் ஸ்போர்ட்ஸ், கொஞ்சம் காதல் என கலவையான கதை தான். ஆனாலும் இழுவை இல்லாமல், ஒவ்வொரு பாத்திரத்தையும் அற்புதமா செதுக்கி இருக்கார். கதையின் ஹீரோ, வில்லன் என கருப்பு, வெள்ளையா இல்லாமல் நிஜமான ஆட்கள், அதுல அவருக்கு தெரிந்த பல உண்மையான டீடெயில்கள், இயற்கையான வசனங்கள்'னு ரசிக்க நிறைய இருக்கு இந்தப் பத்து செகண்ட் முத்தத்தில்.

பிரியா - சுஜாதா:
பிரியா - சுஜாதா
வழக்கம் போல நம் சுஜாதா 'ப்ரியா' மூலம் மீண்டும் நம்மை ஈர்க்கிறார் என்று தான் சொல்வேன். ரொம்ப நாள் தேடிய புத்தகம் இது. எப்பொழுது படிக்க ஆரம்பித்தேன் என்று தெரியும், ஆனால் எப்பொழுது முடித்தேன் என்று தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பு,  சுஜாதாவின் எழுத்தில். அதே போல கதையின் நடையில் என்னை வேகமாக கூட்டிசென்றவர் கதையின் நாயகன் கணேஷ். இந்த கதையில் வசந்துக்கு கௌரவ தோற்றம். லண்டனுக்கு விசா கிடைக்கவில்லையோ, என்னவோ. அதனால் தான்  முதலிலும், இறுதியிலும் மட்டுமே வசந்த் வருகிறார். அதே சமயம் கணேஷ் தனியாக இருந்தும் ஒன்றும் செய்யவில்லை. இறுதிக்கட்டத்தில் தவிர மற்ற நேரம் தேமேவென்று இருக்கிறார். அல்லது யாரிடமாவது திட்டோ, அடியோ வாங்குகிறார். 'வசி, சிட்டிக்கு கோபம் வருது' என்பது போல கடைசியில் மட்டுமே கணேஷ் ஆக்க்ஷன் ஹீரோவாகிறார். அதை போல மற்ற கதாபாத்திரங்களான பப்பு @ பரத்குமார், ஜனார்தன்,  ஷா, ரோவான், ஹெண்டர்ஸன் அனைவரும் சுஜாதாவின் Touch. முக்கியமான கதாபாத்திரமான "ப்ரியா" A Typical Sujatha Heroine. ஆனால் ரசிக்கமுடிகிறது. சுஜாதா இலவசமாக லண்டனை சுற்றி காட்டுகிறார். கொஞ்சம் ஜவ்வாக இழுத்தாலும், வழக்கம் போல சுஜாதாவின் அற்புதமான Detailing. பொதுவாக புத்தகம் அல்லது படம் என எதை முதலில் பார்த்தாலும் ஒரு Comparison தோன்றும். ஆனால் ப்ரியா புத்தகமும் சரி, படமும் சரி இரண்டும் வெவ்வேறு ரகம்.

தேவ மோகினி - கோட்டயம் புஷ்பநாத்:
தேவ மோகினி - கோட்டயம் புஷ்பநாத்
அமானுஷ்ய நாவல்களின் விற்பன்னர் திரு. கோட்டயம் புஷ்பநாத் அவர்கள். இந்த 'தேவ மோகினியின்' கதை, 'மனிதனை மீறிய சக்திகளில் இருக்கும் நல்லவைகளும், தீயவைகளும் அம்மனிதர்களுக்காகவே ஒன்றுக்கொன்று போராடி நியமங்களின்படி நல்லதே இறுதியில் வெற்றிப் பெறுகிறது' என்பதே. அதை செம த்ரில்லாக சொல்லியிருக்கிறார் மனிதர். பெற்றவர்களை இழந்த பிறகு அமைதியான வாழ்வை வாழ இந்தியா வந்த சந்திரமோகன் தங்குவதற்குக் கட்டிய வீட்டில் அவன் கொண்ட கலையார்வத்தால் பல சிற்பங்களைத் தேடி வாங்கிக் குவித்து வைக்கிறான். சில தீயசக்திகளும் அங்கிருக்கும் சிற்பங்களில் குடிகொண்டிருக்கிறது. நல்சக்தியான மோகினியின் சிற்பமும் அங்கே இருப்பதால் சந்திரமோகனுக்கு இன்னல்கள் ஏற்படாமல் அவளின் மூலம் இன்பமே கிட்டுகிறது. தான் இருக்கும் ஊரில் தானே முதன்மையாளனாக இருக்கவேண்டும் என்று வெறிபிடித்த ராஜசேகரனுக்குப் புதுசாக வந்த சந்திரமோகனின் செல்வாக்கு தொல்லையாகுவதால் அவனை அழிக்க செய்யும் தந்திரங்களை எல்லாம் மோகினி முறியடிக்கிறாள். பல வருடங்களாகத் தன் மந்திரசக்தியால் இளமையாக இருக்கும் அம்பிகாதேவியை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த சந்திரமோகனுக்கு வெகுமதியாக அவள் அளித்த சக்தியின் துணை கொண்டு எதிரியை தோற்கடிக்கிறான். இவ்வளவு நாட்களாக சந்திரமோகனை காத்துவந்த மோகினி அவனுக்கு சக்தி வந்த பிறகு தன் இருப்பிடத்திற்கே சென்று சேர்கிறாள். மிகவும் விறுவிறுப்பாகவும், அமானுஷ்யமாகவும் நகர்கிறது இந்த நாவல்.


கடல் பயணங்கள் - மருதன்:
கடல் பயணங்கள் - மருதன்
இந்த நூலின் வழியே நாம் கற்றுக் கொள்ளும் முக்கியமான விஷயம், “பயணங்கள் ஒரு போதும் முடிவடைவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவை நாம் துரத்திப்போக வேண்டும். அந்த கனவை எப்படியாவது நனவாக்க வேண்டும். அதற்காக தோல்வியிலும் துவளாத பயணங்கள் நாம் மேற்கொள்ள வேண்டும்“. இது பயணங்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.  

மார்கோ போலோ, கொலம்பஸ், வாஸ்கோட காமா, சார்லஸ் டார்வின், செங் ஹே, மெகல்லன், இபின் பதூதா, பார்த்தலோமியா டயஸ், ஜேம்ஸ் குக், ஜான் கபோட், வால்டர் ராலே, சார்லஸ் பிபி என்று உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் கதை. சுட்டி விகடனில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம். மனிதனின் ஆசையே புதிய கண்டுபிடிப்புகளின் தொடக்கபுள்ளியாகிறது. கடல் என்று கேட்ட நொடியிலே பிரமாண்டம் என்ற வார்த்தை உள்ளுக்குள் அன்னிச்சையாக ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுவே கடல் பயணம் சார்ந்த புத்தகங்களைச் சாகசம் நிரம்பிய ஒன்றாக எண்ணத் தொடங்கிப் படிக்கும் ஆர்வத்தையும் உண்டுபண்ணிவிடுகிறது. ஆரம்பத்திலேயே இது சுட்டி விகடனில் எழுதப்பட்ட தொடர் என்று சொல்லப்பட்டிருப்பதால் இளம் வாசகர்களுக்கான திறவுகோலாக உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பதிமூன்று பயணிகளின் பயணங்கள் பற்றிச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில் ஆசிரியர் சீன பழமொழியை மேற்கொள் காட்டியிருப்பார், 'எல்லாப் பெரிய பயணங்களும் முதல் அடியில் இருந்தே தொடங்குகின்றன'. அது போலத் தான் மேம்போக்கான எளிய தகவல்களைக் கொடுத்து அதன் ஒவ்வொன்றின் ஆழத்தை நோக்கி செல்லும் பாதையைக் காட்டுகிறார். உண்மையில் ஆசியாவை நோக்கியே பெரும்பாலும் கடல்வழி பயணங்கள் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதைப் பேராசை என்ற வட்டத்திற்குள் மட்டும் அடைக்காமல் அதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சி எட்டிய உயரத்தை பார்த்தால் கடல் பயணங்களே மாபெரும் புரட்சியை உண்டாக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. அலுக்காத எழுத்து நடை, நாம் கேட்டிராத புதிய கடல் பயணிகளின் கண்டுபிடிப்புகளோடு, இன்றைய குழந்தைகளுக்கு கடல் பயணங்களைப் பற்றிய எண்ணத்திற்கு குறு அறிமுகத் தேடல் இந்த நூல்.

அகம், புறம், அந்தப்புரம் - முகில்:
அகம், புறம், அந்தப்புரம் - முகில்
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.

 இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.

1032 பக்கங்கள். 10 கும் மேற்பட்ட சமஸ்தானங்கள். புத்தகத்தின் பெயரை பார்த்து ராஜாக்களின் அந்தரங்க விஷயங்களை மட்டும் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மிகவு‌ம் சுவாரசியமாக தொய்வே இல்லாமல் 1032 பக்கங்கள். புத்தகத்தை படித்தால் தான் புரிகிறது. நம்மை சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல உள்ளூர் ராஜாக்களும் தான் என்று. வீட்டு கடன், குடும்ப செலவுகள், இன்னபிற இத்யாதிகள் என்று அன்றாட வாழ்க்கையை வாழவே நாம் திண்டாடி கொண்டிருக்கும் வேளையில் இதை போன்ற புத்தகத்தை படித்தால் உங்கள் வயிற்றில் எரிமலையே வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அடடா...! ஒவ்வொரு ராஜாவும் தனக்கென தனி பாணியில் செலவு செய்திருக்கிறார்கள். உதாரணமாக பூபிந்தரை எடுத்து கொள்வோம். தனது சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் இயந்திரங்களாக இவர் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பயன்படுத்தினார் மக்களே. மற்றொரு ராஜாவோ மஜாவாக இருப்பதற்கென்று தனி ஸ்விம்மிங் பூல் கட்டினார். பிரத்யேகமான பளிங்கு கற்கள், சந்தன மரங்களாலான 20 படிக்கட்டுகள், ஒவ்வொரு படியிலும் 2 அழகிகள் வீதம் 40 பெண்கள். இன்னும் இதை போன்று ஏராள சுவாரசியங்கள் புத்தகமே நெடுகே. புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது 1860 களில் ஒரு ராஜாவாக அடலீஸ்ட் ஒரு மந்திரியாவாச்சும் பிறந்திருக்கலாம் என்று ஏக்க பெருமூச்சு ஒன்றை கண்டிப்பாக வரவழைக்கும்.

வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்:
வெளிச்சத்தின் நிறம் கருப்பு - முகில்
என் மைத்துனனின் திருமணத்திற்காக மதுரை, திருமங்கலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கிருந்த ஒரு புக் ஸ்டாலில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் படித்ததென்னவோ விமான பயணத்தில் தான். எனக்கு முகிலின் எழுத்துக்கள் பிடிக்கும். சுவாரஸ்யத்திற்கு குறை வைக்காமல் விறுவிறுப்பாக வாசிப்பை கொண்டு செல்வார். இந்த புத்தகமும் மிஸ்டரி சம்மந்தமான நிஜக்கதைகளை தொகுத்து எழுதப்பட்டவை. ஒவ்வொன்றும் Extraordinary சம்பவங்கள். நான் பொதுவாக படித்த புத்தகத்தை திரும்ப படிக்க மாட்டேன். ஆனால் இந்த புத்தகத்தை இதுவரை மூன்று, நான்கு முறை படித்து விட்டேன். விமான கடத்தல் நபர் கூப்பர், சன் ஆப் சாம், நம்பர் 13 மீதான பயம், உண்மையான ஸோம்பிகள், கருப்பு தாஜ்மஹால் என பல விடைதெரியா கதைகள், அதுவும் உண்மையில் நடந்தவை. ஒவ்வொரு முறை புத்தகத்தை படித்து முடித்த பின்பு எனக்குள் தோன்றும் எண்ணம் 'ஹப்பா, உலகம் எவ்வளவு ரகசியங்களை தன்னுள் அடக்கியிருக்கிறது' என்று.                                                                                                                               Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக