புதன், செப்டம்பர் 28, 2011

கே.பாக்யராஜின் 'தாவணிக் கனவுகள்' - திரை விமர்சனம்

ஒரு படத்திற்கு கதை முக்கியமா? அல்லது திரைக்கதை முக்கியமா? என்று பார்த்தால் என்னைப் பொறுத்தவரை திரைக்கதை தான் முக்கியம் என்று சொல்வேன். காரணம் ஒரு படத்தின் கதையை, படம் பார்க்கும் பார்வையாளருக்கு மிக அழகாக புரியவைத்து திருப்திபடுத்துவது திரைக்கதை தான். தமிழ் சினிமாவில் ஒரு சில மோசமான கதைகள் கூட
அருமையான திரைக்கதையால் வெற்றி பெற்றிருக்கின்றன. அதே சமயம் நல்ல கதைகள் கூட மோசமான திரைக்கதையால் திரைப்படங்கள் படு தோல்வியடைந்திருக்கின்றன. இந்த இரண்டு வகையான விஷயங்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறது நம் கே.பாக்யராஜ் படங்கள். இவர் இயக்கிய படங்களில் இது தான் சிறந்தது என்று ஒருவராலும் சரியாக சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் இயக்கிய அனைத்து படங்களும் மாஸ்டர் பீஸ். அவரின் மாஸ்டர் பீஸ் படங்களிலிருந்து நான் விமர்சிக்கப்போவது 'தாவணிக் கனவுகள்'.

ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த பட்டதாரி வாலிபனுக்கு ஐந்து தங்கைகள். படித்த படிப்புக்கு வேலையில்லை, குடும்ப சுமை, தங்கைகளின் திருமணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் இந்த படத்தின் நாயகன் என்பதே கதை. இது ஒரு சாதாரண கதை தான். ஆனால் இதை தன் திரைக்கதை யுக்தியால் காட்சிப்படுத்திய விதம், 'அது தான் கே.பாக்யராஜ்'. ரொம்ப எளிமையாக, அதிக செலவில்லாமல் படம் எடுத்து, அதுவும் அன்றாடம் நம் வீட்டிலே நடக்கும் சில சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறார் இந்த 'எம்.ஜி.ஆரின் கலை வாரிசு'.



சுப்ரமணியாக பாக்யராஜ். ஆரம்ப காட்சிகளிலிருந்தே படத்தை தன்னுடைய அப்பாவியான நடிப்பால் கொண்டு செல்கிறார் இவர். அதுவும் குடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து இவர் பண்ணும் அலப்பறை செம. தங்கைகளின் வாழ்க்கைக்காக கலங்கும் அண்ணனான இவரின் நடிப்பு இவருக்கு கச்சித பொருந்துகிறது. அதே சமயம் சென்னைக்கு வந்து கடத்தல், ரஜினி போல் சினிமாவில் நடிப்பது, லாட்டரி டிக்கெட் என்று லிஸ்ட் போட்டு முயற்சி செய்து கையை சுட்டுக்கொள்வது செம காமெடி.
இந்த படத்திற்கு இன்னொரு பெரிய பலம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மிலிட்டரியாக படத்தின் கதாநாயகன் கே.பாக்யராஜுக்கு உறுதுணையாக இருந்து அவரது குடும்பத்திற்க்காகவே உயிரை விடும் ஒரு உருக்கமான கதாப்பாத்திரம் அவருடையது. கதாநாயகியாக ராதிகா. முதல் படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்தியபோது 'யார் சார் இந்த பூசணிக்காய்?' என்று பாக்யராஜ் அவரை கிண்டல் செய்தாராம். ஆனால் அதே பாக்யராஜ் இன்று அவரை கதாநாயகியாக நடிக்கவைத்திருக்கும்போதே தெரிகிறது அவர் நடிப்பில் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்று. மற்ற கதாபாத்திரங்களான பார்த்திபன், பாக்யராஜின் கடைசி தங்கையாக வரும் இன்றைய டிவி நடிகை பிரியதர்ஷினி, குறிப்பாக பாரதிராஜா மற்றும் அவரின் குழுவினர் அனைவரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.



இந்த படத்திற்கு இசை நம் இசை ஞானி. மிக அருமையாக இசையமைத்துள்ளார். குறிப்பாக 'ஒரு நாயகன் உதயமாகிறான்' பாடல் இன்றும் கேட்க மற்றும் பார்க்கத்தூண்டும். 'நீங்களா எடுத்தா திருட்டு நானா கொடுத்தா திருப்தி', 'நான் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கேன், அந்த தேதியில வளைகாப்பு நடத்தலாம்னு சொல்லுறியே?' போன்ற வசனங்கள் எனக்குத் தெரிந்து பாக்யராஜால் மட்டுமே எழுதமுடியும். இவர் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதற்கு இது வெறும் சாம்பிள் மட்டும் தான். எந்த ஒரு இடத்திலும் சிறு தோய்வு கூட இல்லாமல் படத்தை அருமையாக எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்தது பாக்யராஜின் 'பிரவீனா பிலிம்ஸ் லிமிடெட்'. இந்த படம் 1984, செப்டம்பர் 14 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இன்று ரீமேக் செய்யலாம், ஆனால் பாக்யராஜ் போல் நடிப்பதற்கு இன்று எந்த நடிகரும் இல்லை. That is Bakyaraj Style...





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



10 கருத்துகள்:

  1. // அதே சமயம் சென்னைக்கு வந்து கடத்தல், ரஜினி போல் சினிமாவில் நடிப்பது, லாட்டரி டிக்கெட் என்று லிஸ்ட் போட்டு முயற்சி செய்து கையை சுட்டுக்கொள்வது செம காமெடி. //

    எனக்கும் பிடித்த காட்சி...

    பதிலளிநீக்கு
  2. // பாக்யராஜின் கடைசி தங்கையாக வரும் இன்றைய டிவி நடிகை பிரியதர்ஷினி //

    புதிய தகவல்...

    பதிலளிநீக்கு
  3. நிஜமா சொல்லுங்க பாஸ், இந்தப் படத்துக்கு சிவாஜி தேவையா? ஒரு தேங்காய் சீனிவாசன், நாகேஷ் யாராவது இருந்தா பத்தாதா?

    பதிலளிநீக்கு
  4. திரையரங்கில் படம் பார்க்கும்[போது காச உருட்டி விடுவாரே அந்தக் காட்சி.., அதில் முத்தாய்ப்பாக கடைசித்தங்கை அவருக்கு அண்ணே காச உருட்டிவிட மறந்திட்டீங்க என்று சொல்லும் காட்சி,,

    பதிலளிநீக்கு
  5. சார் எனக்கு ஃபைட் தெரியும் சார் என்று கண்கள் கலங்க கோபமாகச் சொல்லும் காட்சி

    பதிலளிநீக்கு
  6. கடைசிக் காட்சியில் ராதிகாவின் பேச்சைக் கேட்டு ம்லைத்துப் போய் நிற்கும் காட்சி

    பதிலளிநீக்கு
  7. பழைய நினைவுகள்...
    காலத்தால் அழியாத காவியம்..

    தங்கள் பார்வையில் அசத்தல்...

    பதிலளிநீக்கு