கற்க கற்க கள்ளும் கற்க...

வெள்ளி, ஜூலை 22, 2011

காதருகே பெரும்மூச்சு! - அமானுஷ்ய தொடர் பகுதி - 5

பிரிட்டனில், லங்காஸ்டர் ஊரில் உள்ள ஜெயிலில் பல ஆண்டுகளுக்கு முன் தலைமை அதிகாரியாக இருந்த நீல் மௌன்சேய் விவரிக்கும் பேய் வேறு மாதிரியானது. கற்பனை சக்தி கொண்ட சற்று கலாட்டாவான ஆவி அது.

மௌன்சேய் விவரிக்கிறார்:

'முரட்டுத்தனமான குற்றவாளிகள் கூட விடுதலை ஆகும் நாளில் புன்சிரிப்போடு, மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிறைய கொள்ளைகளில், அடிதடிகளில் ஈடுபட்ட அதிரடியான கைதி மேக்ராய். அவனுக்கு அன்று விடுதலை. நானே நேரில் சென்று அவன் இருந்த அறைக் கதவைத் திறந்தேன். ஆனால், மேக்ராய் முகத்தில் மலர்ச்சியைக் காணோம். சீரியஸ் ஆன முகத்துடன், சைகை செய்து என்னை அறைக்குள்ளே வரச் சொன்னான். குரலைத் தாழ்த்தி என்னிடம் ரகசியமாக, 'இத்தனை நாள் உங்களிடம் சொல்லவில்லை. அதை அவ்வளவு பொருட்டாக நான் நினைக்காததுதான் காரணம். இங்கே ஒரு ஆவி இருக்கிறது. உண்மையில் ஜோடி ஆவிகள்!' என்றான். 'அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஏதாவது கதையடிக்காதே!' என்றதற்கு 'இல்லை சார், வராண்டாவிலிருந்து அவை வருகின்றன. எனக்குப் பத்தடி தொலைவில் சற்று நேரம் நின்றுவிட்டு மறைந்து விடுகின்றன. சில நேரங்களில் கம்பிகள் வழியாக உள்ளே நுழையும். பிறகு மறைந்துவிடும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பயந்த சுபாவம் உள்ள யாரையும் இங்கே உள்ளே போடாதீர்கள்!' என்று சொன்னான் அவன்.
நான் சிரித்தவாறு சரி சரி என்று சொல்லிவிட்டு அவனை விடுதலை செய்தேன். அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து அங்கே இன்னொரு கைதி அடைக்கப்பட்டான். அவனும் வந்த ஒரு வாரத்தில் இதே கதையைச் சொன்னான். அதே அனுபவம், ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பார்த்த அம்மா மிக அவலட்சணமாக, முகமெங்கும் சின்னச்சின்ன கொப்பளங்களுடன், சற்றுக் கொடூரமாக இருந்தாள்! முகம் வெளிறிப் போயிருந்த இந்த கைதியை அவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் வேறு அறைக்கு மாற்றினேன். ஒரு மாதத்துக்குப் பிறகு, அதே அறைக்கு வந்த இன்னொரு கைதி ராணுவத்தில் கமாண்டோவாக இருந்தவன். கோபத்தில் ஒரு இளைஞரைக் கையால் அடித்தே சாகடித்த அவன் எதற்கும் அஞ்சாத முரடான ஆள்.
ஒவ்வோர் அறையிலும், எமர்ஜன்சி ஏற்பட்டால் கைதிகள் உபயோகிக்க அலாரம் உண்டு. இரவு சுமார் பத்தரை மணிக்கு அந்த கமாண்டோ கைதியின் அறையிலிருந்து அலாரம் வீறிட்டது. நானும் இன்னொரு அதிகாரியும் ஓடிப்போய் பார்த்தபோது அந்தக் கைதி சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன் ஒரே ஜம்ப்பில் வெளியே வந்து என் அருகில் தடுமாறி விழுந்தான். அவனை ரிலாக்ஸ் பண்ணிப் பேச வைக்க அரைமணி நேரம் பிடித்தது. அவனும் அந்த (ஜோடி) ஆவிகளைப் பார்த்திருக்கிறான். இரண்டு மூன்று முறை. அன்று அந்த அம்மா ஆவி மேலும் முன்னேறி கம்பிகள் வழியாக உள்ளே வந்திருக்கிறது. பிறகு நடந்தது என்னவென்று அந்தக் கைதி சொன்னது இதுவே - 'நான் ரகசியமாக வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்த பிறகுதான் அதைப் பார்த்தேன். முகத்தில் கொப்பளங்களுடன் ஒரு பெண் ஆவி கம்பிகளுக்கு வெளியே பல நிமிஷங்கள் நின்று, பிறகு திடீர் என்று உள்ளே நுழைந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த உருவம் மேலும் மங்கலாக ஆனது. அதே சமயம், என் கையிலிருந்த சிகரெட் தானாகவே சுழன்று கொண்டு அந்தரத்தில் கொஞ்ச நேரம் மிதந்து கிழே விழுந்தது. மேலே உள்ள சிறிய ஜன்னல் வழியாக வீசும் காற்றினால் விழுந்திருக்கும் என்று நினைத்து, கட்டில் மீது நின்று டவலால் ஜன்னலை மூடப் பார்த்தேன். டவல் பிய்த்துக்கொண்டு வந்து சுமார் ஐந்தடி உயரத்தில் மிதக்க ஆரம்பித்தது.

பிறகு யாரோ எதோ ஒரு சக்தி என்னைப் பின்னுக்குத் தள்ளுவது போல உணர்ந்தேன். ஒரு கோட் ஹாங்கரில் என் பேன்ட்டையும், கூடவே என் சட்டையையும் தொங்கவிட்டு ஒரு ஆணியில் மாட்டியிருந்தேன். அந்த ஹாங்கர் அப்படியே வெளியே மிதந்து வந்து பெண்டுலம் போல அந்தரத்தில் ஆட ஆரம்பித்தது. என் பயம் அதிகரித்த அதே சமயம், சட்டையும் பேண்ட்டும் படுத்த வாக்கில் மாறி அகலமாக பட்டாக்கத்தி மாதிரி என் கழுத்தை நோக்கி வந்து சுழல ஆரம்பித்த போதுதான்... ரொம்பப் பயந்துபோய் அலற ஆரம்பித்தேன். பிறகு தொப்பென்று எல்லாம் கிழே விழ, ஒரு உருவம் சரேலென்று வெளியே வராண்டா கோடி வரை சென்று மறைந்தது!' - சொல்லி முடித்தான் அந்தக் கைதி.
'நான் விடவில்லை! அந்த ஆவி, போய் மறைந்த இடத்தை நோக்கி அது போன வழியே நடந்தேன்' என்கிறார் மௌன்செய். அந்த சிறை ஒரு பழைய கோட்டை. எத்தனையோஅநியாயங்களும் கொடூரங்களும் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடும். அதற்கேற்ப, அங்கே ஒரு பாதாளச் சிறை இருந்தது. படிகளில் இறங்கி அங்கே சென்ற மௌன்செய் பிற்பாடு சொன்னார்: 'குறுகலான அந்த பாதாளச் சிறையில் சுவரிலும் நிறைய இரும்பு வளையங்கள் இருந்தன. ஒவ்வொரு வளையமும் இரண்டு பவுண்ட் எடையிருக்கும். நான் சென்றவுடன் (நான் வந்ததை ஆவி விரும்பாதது போல!) என் காதருகே பெருமூச்சுகள் கேட்டன! அப்பறம் அறையின் டெம்பரேச்சர் குறைய ஆரம்பித்தது. தவிர அந்த வளையங்கள் தானாக அப்படியும் இப்படியுமாக ஆவேசமாக ஆடி ஒலி எழுப்பின. என்னால் அங்கு மேலும் நிற்க முடியாததற்கு முக்கிய காரணம் - திடிரென அங்கு கிளம்பிய மூச்சைத் தினறவைத்த பயங்கரத் துர்நாற்றம்!
உடனே வெளியே ஓடி என் அறைக்கு வந்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டு தூங்க முயற்சி செய்தேன். அப்போது தூக்கி வாரிப்போடும்படி இன்னொரு விபரீதம் நடந்தது. என் கட்டிலில், வெகு அருகில் மெலிதாகக் குறட்டைச்சத்தம்! எனக்குச் சட்டென்று வியர்த்தது. கண்களை விழித்து பக்கத்தில் பார்த்தால் யாரும் இல்லை. கவனித்ததில் அந்தக் குறட்டைச் சத்தம் கேட்டது என் கட்டிலுக்கு மேலே, ஓரடி உயரத்திலிருந்து - அந்தரத்திலிருந்து!

ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். அந்தக் குறட்டை - இறந்து போன என் தந்தையின் குறட்டை!'
நன்றி: மதனின் 'மனிதனும் மர்மங்களும்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

Post Comment

7 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயங்கரம்....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வித்தியாசமாக....

போளூர் தயாநிதி சொன்னது…

பயங்கரமாக வித்தியாசமாக...

N.H.பிரசாத் சொன்னது…

//இராஜராஜேஸ்வரி சொன்னது…
பயங்கரம்....//


பதிவர் இராஜராஜேஸ்வரியின் வருகைக்கு நன்றி.

N.H.பிரசாத் சொன்னது…

//# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
வித்தியாசமாக....//


நண்பர் சௌந்தரின் வருகைக்கு நன்றி.

N.H.பிரசாத் சொன்னது…

//போளூர் தயாநிதி சொன்னது…
பயங்கரமாக வித்தியாசமாக...//


நண்பர் போளூர் தயாநிதியின் வருகைக்கு நன்றி. அடுத்த தொடர் பகுதி இன்னும் பயங்கரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். காத்திருங்கள்.

gopipriyadarrsini சொன்னது…

திகிலாய் உள்ளது..... ! ஆவிகள் எப்போதுமே சுவாரசியம் தான்....

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

கருத்துரையிடுக