வியாழன், ஜூலை 28, 2016

கபாலி - திரை விமர்சனம்...

கபாலி - திரை விமர்சனம் 1

கபாலியை இதுவரை மூன்று தடவை பார்த்து விட்டேன். பொதுவாகவே நான் புதுப்படங்களை பார்த்த உடனே விமர்சனம் எழுதிவிடுவேன். ஆனால் கபாலி படத்தை கொஞ்சம் புரிந்துகொண்டு எழுதலாம் என்று நேரம் எடுத்துக்கொண்டு எழுதவேண்டியதாகி விட்டது. சரி, நேரடியாகவே விமர்சனத்திற்கு போவோம்.
கபாலி - திரை விமர்சனம் 2
இருபத்தைந்து வருடங்கள் கழித்து கபாலி சிறையிலிருந்து விடுதலையாவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. ஒரு முன்னாள் மலேசிய டான், சிதறிப்போன தன் குடும்பத்தையும், தன் டான் சாம்ராஜ்யத்தையும் திரும்பப்பெறுவதே படத்தின் கதை. உண்மையில் படத்தை பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க வரும் ரசிகனுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்கத்தான் செய்திருக்கும். காரணம், இதுவரை நாம் பார்த்த ரஜினிகாந்த் படங்களில் சூப்பர் ஸ்டார் தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல் இத்தியாதி எல்லாம். ரஜினி என்ற மனிதர் ஒரு சூப்பர் மேனாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்போது, திடீரென்று அந்த ஹீரோவுக்கு வயதாகிவிட்டது என்ற தோற்றம் நம் மனது நினைக்கும்போது, அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக தான் தெரியும். ஆனால் படத்தை பார்த்து பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளை மனதில் அசை போட்டால் தான் படம் நல்ல படமா, குப்பை படமா என்று முடிவுக்கு வரமுடியும். படத்தை பற்றிய என் கருத்தை பிறகு சொல்கிறேன். முதலில் படத்தில் நடித்த நடிகர்களையும், மற்ற விஷயங்களையும் பார்ப்போம்.
கபாலி - திரை விமர்சனம் 3
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கண்டிப்பாக இப்படி ஒரு ரஜினியை நாம் எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனால் தன் வயதை உணர்ந்து, படத்தை சரியாக தேர்வு செய்து நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படத்தில் எனக்கு ஆக்ரோஷ ரஜினியை விட, மனைவி, மகளுக்காக உருகும் ரஜினியே அதிகம் கவர்கிறார். துப்பாக்கித் தோட்டா வெடிகளின் 'அப்பா' என்று மகள் அழைப்பதை பார்த்து, அந்த ஆனந்தத்தில் அசைவற்று நிற்பதும், 'இன்னொரு தடவை அப்பான்னு கூப்பிடும்மா' என்று மகளிடம் கேட்பதும், மனைவி உயிரோடு இருப்பது தெரிந்து கண்கலங்குவதும், பின்பு மனைவியை பார்த்த மாத்திரத்தில் கட்டிப்பிடித்து, கண் கலங்கி, பின்பு மனைவியை பார்த்து புன்னகைப்பதும் Awesome. ஆக்ரோஷ ரஜினியை பல படங்களில் பார்த்து விட்டதால் Action காட்சிகள் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அதுவும் இளம் கபாலியாக வரும் ரஜினியின் மேக்கப், உண்மையான வயதை கொஞ்சமும் மறைக்க உதவவில்லை. மற்றபடி ரஜினி கவரவே செய்கிறார். ரஜினிக்கு அப்பறம் திரையை ஆக்கிரமிப்பது, யோகியாக வரும் தன்ஷிகா. ப்பா, என்ன Performance. கலக்குகிறார் 'யோகி'. தன் அப்பாவை 'Gun னும் கருத்துமாக' பார்த்துக்கொள்வதாகட்டும், அம்மாவை பார்த்தவுடன் ஆனந்தக்கண்ணீர் வடித்து, அனைத்துக்கொள்வதாகட்டும் அப்பாவுக்கேற்ற மகள் போல இன்னொரு ரஜினி போலவே நடித்திருக்கிறார்.
கபாலி - திரை விமர்சனம் 4
'அட்டகத்தி' தினேஷுக்கு ரஜினியின் அடியாள் வேடம். ரஜினியின் கண்ணசைவிற்கு செயல்படும்போது தினேஷ் நம்மை கவர்ந்தாலும், 'விசாரணை' போன்ற படங்களில் நடித்த நடிகன், வெறும் அடியாள் வேடமேற்று நடிப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது. பல வருடங்கள் கழித்து கணவனையும், மகளையும் பார்த்த பிறகு ஆனந்தத்திலும், ஆச்சரியத்திலும் நெடுநாள் பிரிந்த வேதனையை கதறியழுது கண்ணீர் விடும் அந்த ஒரு காட்சியே போதும், 'ராதிகா ஆப்தே' என்ற நடிகையின் நடிப்பு வீரியம் எவ்வளவு பெரியது என்பதை நமக்கு புரியவைத்துவிடும். அதேபோல மீனாவாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இது போன்ற இளம் பெண்கள் பலர் சிறுவயதிலேயே காதலித்து, கர்ப்பமாகி, குழந்தை பெற்று, போதைக்கு அடிமையாகி வாழும் பலர் இன்றும் மலேசியாவில் உள்ளதாக கேள்விப்பட்டேன். மற்ற கதாபாத்திரங்களான ஜான் விஜய், கிஷோர், மெயின் வில்லனாக வரும் தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ் போன்றவர்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தாலும், கலையரசன் போன்றவர்கள் வீணடிக்கப்பட்டிருப்பதென்னவோ உண்மை. நடிகர்களை பெரிய ட்ரக்கில் அடைத்துக் கொண்டு வந்து படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள் போல. நாசர், மைம் கோபி, ரமேஷ் திலக் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.
கபாலி - திரை விமர்சனம் 5
ஜீ. முரளியின் ஒளிப்பதிவு பல இடங்களில் மலேசியாவை சிறப்பாகவும், கலர்புல்லாகவும் காட்டுகிறது. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அதிரவைத்தாலும், பாடல்கள் மனதில் மெலிதாக ஒலிக்கும்படியாகத்தான் இருக்கிறது. வசனங்கள் கொஞ்சமாக இருந்தாலும், நிறையவே கவர்கிறது. 'காலம் மாறிக்கிட்டிருக்கு, பிரச்சனைகள் அப்படியே தான் இருக்கு. ஆனா நமக்குள்ள இருக்கவேண்டிய ஒற்றுமை?', 'ஒவ்வொரு பறவைக்கும் ஒரு விதை இருக்கு, அந்த ஒவ்வொரு விதைக்குள்ளேயும் ஒரு காடு இருக்கு' போன்ற வசனங்கள் சிறப்பானவை. எனக்குத் தெரிந்து ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வசனங்களை கேட்க முடிந்தது. படத்தை தயாரித்தது, கலைப்புலி தாணு. எழுதி இயக்கியது பா. ரஞ்சித். மலேசியாவில் நடக்கும் கதைக்காக நிறையவே உழைத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் படத்தின் ஆரம்பம் தந்த விறுவிறுப்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததென்னவோ உண்மை. காரணம், ரஞ்சித்துக்கு கமர்ஷியல் ரஜினியையும் நல்ல கதையையும் ஒரே கோட்டில் இணைக்கத் தடுமாறியிருக்கிறார். அதுவும் இறுதி சண்டைக்காட்சிகள், Al Pacino நடித்த 'Scarface' படத்தின் கிளைமாக்ஸ் போலவே இருப்பது போல எனக்கு தோன்றியது. ஆனால் தடுமாறினாலும், கோட்டை விடவில்லை என்பதே ஆறுதல். எனக்கு தெரிந்து கண்டிப்பாக 'கபாலி' படம், பாட்ஷா அளவுக்கு இல்லை. ஆனால் நம் மனதில் இருந்து 'பாட்ஷா' ரஜினியை இறக்கிவைத்து விட்டு படம் பார்த்தால், 'கபாலி' ரஜினி நம்மை கண்டிப்பாக கவர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் கபாலி - 'மகிழ்ச்சி'.




Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக