வெள்ளி, அக்டோபர் 31, 2014

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...

Sujatha Novels Tamil
கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது
Biography & Anti Biography புத்தகங்கள் மட்டும் தான். இருந்தாலும் நிறைய புத்தகங்களை PDF ஆக டவுன்லோட் செய்து என் Transcend Hard Disk இல் ரொம்ப நாளாக தூங்க வைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் என் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த HP Slate 6 Tab மூலமாக அந்த புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய புத்தகங்கள் இருந்ததனால் இப்போதைக்கு முக்கியமான மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். அந்த Top 3 எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தராஜன் & சுஜாதா. சரி, முதலில் சுஜாதா அவர்கள் எழுதிய 10 நாவல்களை இப்போது பார்ப்போம். மற்றவர்கள் பற்றிய நாவல்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Sujatha Novels Tamil - Kolaiyuthir kalam
கொலையுதிர் காலம்:
சுஜாதாவின் ஆஸ்தான டிடெக்டிவ் @ வக்கீல் கணேஷும், அவரின் அசிஸ்டன்ட் வசந்தும் துப்பறியும் கதை. கதையின் நாயகி பெரும் பணக்காரி. உரிய வயதை அடைந்ததும் தனது சொத்துக்களைத் தன் பாதுகாப்பாளர் ஆகிய சித்தப்பாவிடம் இருந்து பெற நினைக்கும் பருவப் பெண். அந்த பெண்ணின் சொத்தில் மறைந்துள்ள மர்மங்கள், அதன் பின்னணியில் நடக்கும் கொலைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் துப்புத் துலக்கும் கதை. ஒரு விமான பயணத்தில் இந்த நாவலை படித்தேன். ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததென்னவோ உண்மை. இந்த கதை குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. கதையில் நிறைய விஷயங்களை சுஜாதா சரிவர முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sujatha Novels Tamil - oru Nadupagal Maranam
ஒரு நடுப்பகல் மரணம்:
இந்தக் கதை, சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. திருமணமாகி இரண்டே நாளில் தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்படுகிறார் புது மாப்பிள்ளை. அவரைக் கொன்றது யார், அதன் காரணம் எனக் கண்டறியாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள் கொல்லப்பட்டவரின் மனைவி. போலீஸ் அதிகாரிகளும் கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொலை செய்தவன் யார் என்பது வெளிப்பட்டதா என்று செல்லும் சஸ்பென்ஸ் கதை. அந்த கொலையாளிகள் யார் என்பதை கடைசி பதினைந்து பக்கங்களில் சொன்ன விதம், அருமை. ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவலை தந்திருக்கிறார் சுஜாதா.

Sujatha Novels Tamil - Aathalinaal Kathal Seiveer
ஆதலினால் காதல் செய்வீர்:
ஜோமோ என்கிற ஜோலார்ப்பேட்டை மோகன், அரிஸ் (பூர்ணசந்திர ராவ் உண்மையான பெயர் - அரிஸ்ட்டாட்டில் என்பதின் சுருக்கம் அரிஸ்), கிட்டா என்கிற கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பிரம்மச்சாரிகளுடன், திருமணமான மாமா என்கிற பார்த்தசாரதியும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்த்தசாரதியின் மனைவி ஒரு தமிழ் விரும்பி. வேறு நகரத்தில் வசித்து வருகிறார். கதையின் நாயகன் ஜோமோ, அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக காவல்துறையில் வேலை செய்பவரை. அரீஸைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் பிணக்குகள், அல்லல்கள், குறுக்கீடுகள், போராட்டங்கள் உள்ளிட்டவைகளை தனக்கே உரிய ஹாஸ்ய பாணியில் எழுதியுள்ளார் சுஜாதா. நிறைய இடங்களில் சிரிப்பு வருவதை தவிர்க்கவே முடியாது. ரொம்பவே ரசித்துப் படித்தேன். இந்தக் கதையும் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Sujatha Novels Tamil - Odathey
ஓடாதே:
 சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. சென்னையில் இருந்து பெங்களுருக்கு திருமணமாகித் தேனிலவு செல்லும் தம்பதிகள் ஆனந்த், மீரா. இதில் ஆனந்தை காரணம் சொல்லாமல் போலீஸ் விரட்டுகிறது. ஏன் துரத்துகிறார்கள் என்று தெரியாமல் கிடைத்த வழியெல்லாம் ஓடி பயணம் செய்கிறார்கள். ஆனந்தின் மாமாவின் நண்பரிடம் தஞ்சம் புகுகிறார்கள். போலீஸ் துரத்துவதையும் நிறுத்திவிடுகிறது. அவர்களின் ஓட்டமும் நிற்கிறது. ஆனந்தும் மீராவும் சென்னை திரும்புகிறார்கள் ஆனந்தை எதற்காகத் துரத்தினார்கள் என்ற மர்மத்தை வக்கீல் கணேஷும், வசந்தும் கண்டறியும் கதை. கதையின் பாதியில் இருந்து தான் கணேஷும் வசந்தும் வருகிறார்கள். ஆனாலும் கதையின் ஆரம்பத்திலிருந்தே செம ஓட்டம். ஆனால் கதையின் முடிவு தான் சற்று ஏமாற்றம் அளிக்கிறது. மற்றபடி, ஒரு முறை படிக்கலாம்.

Sujatha Novels Tamil - Anitha ilam Manaivi
அனிதா இளம் மனைவி:
சுஜாதாவால் எழுதப்பட்டு 1971-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. மர்மமான முறையில் இறக்கும் ஒரு பெரும் பணக்காரரின் இரண்டாம் மனைவியைச் சுற்றி நிகழும் மர்ம சம்பவங்கள், அந்த பணக்காரரின் மகளுக்கும் இரண்டாம் மனைவிக்கும் வரும் பிரச்சினைகள், இவற்றால் வக்கீல் கணேஷை அணுகுகின்றனர். அந்த மர்மங்களின் முடிச்சை கணேஷ் விடுவித்தாரா என்று செல்லும் கதை. இந்தக் கதை, பின்னர் திரைப்படமாக 'இது எப்படி இருக்கு' என்ற பெயரில் வெளிவந்தது. வக்கீல் கணேஷ் இருந்தால், ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு சுஜாதாவின் நாவலில் காமமும், துப்பறிவும் இரண்டற கலந்திருக்கும். ஆனால் விரசமாக மட்டும் இருக்காது. அது தான் சுஜாதா.

Sujatha Novels Tamil - Innum oru Pen
இன்னும் ஒரு பெண்:
இது சற்று சின்னக் கதை தான். ஆனால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. தன் ஆபிஸில் வேலை செய்யும் தன் அந்தரங்க காரியதரிசியை திருமணம் செய்யத் நினைக்கிறார் கதையின் ஹீரோ. ஆனால் அவருக்கே திருமணமாகி செட்டிலாகி விட்ட மகள் இருக்கிறார். தன்னை கடவுளைப் போல பூஜிக்கும் நல்ல மனைவி இருந்தும், இவருக்கு காரியதரிசி மேல் காதல். ஆனால் அந்தப் பெண்ணோ, 'உங்கள் மனைவி சம்மதித்தால் தான் உங்களை திருமணம் செய்துகொள்வேன் ' என்று சொல்கிறாள். மனைவியிடம் சம்மதம் கிடைக்காமல் போக, ஒரு டாக்டர் மூலமாக 'ஸ்லோ பாய்சன்' மருந்து ஒன்றினை தெரிந்து கொண்டு, அதை மனைவிக்கு கொடுத்து கொல்ல நினைக்கிறார் அந்த செல்வந்தர். அவர் நினைத்தது போல நடந்ததா? கதையின் முடிவு என்ன என்பதை ஒரு அருமையான ட்விஸ்ட்டோடு முடித்திருக்கிறார் சுஜாதா.

Sujatha Novels Tamil - Nylon Kayiru
நைலான் கயிறு:
இந்தக்கதை, சுஜாதாவால் 1968-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்ட தொடர்கதை. சுஜாதாவின் முதல் நாவலான இக்கதை, 14 வாரங்கள் வெளிவந்தது. அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்க்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது. ஓய்வு பெறப் போகும் காவல்துறை உயர் அதிகாரி இந்த கொலை வழக்கை விசாரித்து உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். தன் முதல் நாவலிலேயே மிகவும் வித்தியாசமான நடையில் கதையை  சொல்லியிருக்கிறார் சுஜாதா. இந்த கதையில் தான் முதன்முதலில் சுஜாதாவின் ஆஸ்தான நாயகன் 'வக்கீல் கணேஷ்' அறிமுகமானார். இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடித்த பகுதி, கோர்ட்டில் கணேஷ் வாதாடும் பகுதி.

Sujatha Novels Tamil - Thanga Mudichu
தங்க முடிச்சு:
நிறைய சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவல்களை படிப்பதால் கதையின் ட்விஸ்ட் இதுவாகத்தான் இருக்கும் என்பதை நன்றாகவே இப்போது எளிதாக அனுமானிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்க்கு இந்தக் கதையும் விதிவிலக்கல்ல. ஒரு கதாசிரியனுக்கும் இளம் நடிகைக்கும் நட்பு ரீதியாக பழக்கம். ஒரு நாள் தன் கல்யாண விஷயங்களை பற்றி ரகசியமாக பேசுவதற்கு அந்த கதாசிரியனை தன் வீட்டிற்கு வரச் சொல்கிறாள் அந்த நடிகை. வந்து பார்த்தால், அவள் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள். பயப்பட்டு அவன் ஓட்டமெடுக்க, 'அது தற்கொலை அல்ல, கொலை' என்று கதாசிரியனை கைது செய்து விசாரிக்கிறது போலீஸ். அவன் இந்த கொலைப்பழியிலிருந்து எப்படி மீண்டான், யார் அவளை கொலை செய்தார்கள், என்ன Motive என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. கண்டிப்பாக திரும்பவும் ஒரு தடவை படிக்கலாம்.

Sujatha Novels Tamil - Sivantha Kaigal
சிவந்த கைகள்:
இந்த புத்தகத்தை சமீபத்தில் தான் படித்தேன். வழக்கம் போல சுஜாதாவின் Trade Mark எந்த இடத்திலும் மிஸ் ஆகவில்லை. ஒரு பெரிய Corporate கம்பெனியில் 'M.B.A' என்று பொய் Certificate மூலமாக வேலை சேரும் விக்ரம், ஒரே வருடத்திற்குள் கம்பெனியின் Director ஆக காலம் கனிந்து வரும் நேரத்தில், விக்ரமின் Degree Certificate மூலமாக திரும்பவும் பிரச்சனை அவனுக்கு வருகிறது. அதை அவன் எப்படி சமாளித்தான், மாட்டிக்கொண்டானா, மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்தான் என்று விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் சுஜாதா. இந்தக் கதையின் மனிதர்களிடம் ஒரு இயல்புத்தன்மை இருப்பதே சுஜாதா Style என்று சொல்வேன். குறிப்பாக கதையின் முடிவு ஒரு முடிவாக இல்லாமல், அடுத்த புதினத்திற்கு ஆரம்பமாக முடித்திருப்பது அழகு. 

கொலை அரங்கம்:
 சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது இந்த நாவல். பெரும்சொத்துக்கு வாரிசுகளான நால்வரில் இருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மூன்றாவது வாரிசு படுகொலை செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருக்கும் இருவரின் மீதும் தாக்குதல் முயற்சி நடைபெறுகிறது. கொலை முயற்சி செய்பவன் யார் என்பதை வக்கீல் கணேஷும், வசந்தும் இணைந்து துப்பறியும் கதை. இந்த கதையும் கொஞ்சம் சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த கதை. ஆனால் ஒரு முறைக்கு மேல் படிக்கமுடியாது என்பதே உண்மை.

கமர்ஷியல் கிக்:
என்ன தான் நாம் 'ஆந்திரா' பால கிருஷ்ணாவை ஓட்டு ஓட்டென்று ஓட்டினாலும், அவர் ஒரு நல்ல Dancer என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய யூத் ஹீரோக்களுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு இருக்கிறது அவரின் நடனங்கள். ஆனால் இந்த பாடல் பிடித்ததற்கு காரணம், நமீதாவோ, பால கிருஷ்ணாவோ அல்ல. பாடலை பாடிய ஸ்ராவனா பார்கவியின் கவர்ச்சியான குரல் தான் எனக்கு இந்த பாடலை பிடிக்க வைத்தது. இவரின் குரல், நமிதாவிற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. ஸ்ராவனாவிற்கு இந்த பாடல் தான் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.



Thanks & Regards

1 கருத்து:

  1. பாடல் அருமை பகிர்வுக்கு நன்றி.நாவல்கள் பகிர்வு பற்றி தொடருங்கள்

    பதிலளிநீக்கு